புலம்பெயரியின் நினைவுக்குறிப்புகள்-கவிதை-நெடுந்தீவு முகிலன்

புலம்பெயரியின் நினைவுக்குறிப்புகள்

நெடுந்தீவு முகிலன்

மண்ணெய்ப்பீப்பாவில் வெட்டின
தகரத்தில் என் வீட்டு கேற்று – நாய்
மட்டும் கீழால பூந்து போக
இடைவெளியும் விட்டிருக்கு…
சவுக்காரம் நுரைச்ச தண்ணீரும்
வீண் போகாது – கிணற்றைச் சுற்றி
தென்னம் பிள்ளைகளும் வாழை குட்டிகளும்…

கோடிக்குப் பின்னால இருக்கிற
கொட்டிலுக்குள் பழைய சைக்கிள்
றிம்முகளும் மக்காட்டுகளும்
மூக்குக் கழன்ற மூக்குப் பேணி
கை பிடி கழன்ற லாம்பு
கறள் பிடித்த றங்குப் பெட்டி – கறையான்
அரித்த புத்தகங்கள் என  ஏகப்பட்டவை
கழிவறைக்கு வெளியே தேய்ஞ்சுபோன
ஒரு சோடி செருப்பு – உள்ளே
தண்ணீர் கொண்டு போக பெயின்ற் அப்பின வாளி
எலி தட்டி விட்டு முகம் பாக்கிற கண்ணாடி
எப்பவோ உடைஞ்சு போச்சு – உடைஞ்சு கிடந்ததில
பெரிய துண்டு திரும்பவும் பாவனைக்கு
மச்சம் தின்னா சாமி அறைக்குள்ள
போனதே இல்லை – ஆனால்
பல்லு தீட்டாம தேத்தண்ணி குடிச்சதுண்டு
குசினிக்குள்ள குனிஞ்சு போகாட்டி
வாசல்நிலை உச்சியில் அடிக்கும்
சப்பணம் கொட்டியிருந்து சாப்பிட்டிட்டு
எமும்பவே ஏவறை வந்திடும்.
சாணி மெழுகிய திண்ணை
சாய் ஓலைப் பாய் – தலைக்கு
வைக்க உடுப்பு பொட்டாளி
கதவருகில் கை விளக்கு – நிமிர்ந்து
பார்த்தால் கிடுகுத் துவாரம் வழியாக நிலா
சரிந்து படுத்தால் முற்றத்தில் மல்லிகை
குப்புறப் படுத்தால் கனவில் பக்கத்து வீட்டுச் செவ்வந்தி
எல்லாத்தையும் விட்டுத் தூர வந்து விட்டு – ஒவ்வொரு
நாளும் நினைவுகளை தூர் வாருகிறேன்.

நெடுந்தீவு முகிலன்-இலங்கை

நெடுந்தீவு முகிலன்

(Visited 118 times, 1 visits today)