பசி-கவிதை-முருகன் நாகசுந்தரம்

பசி

 

முருகன் நாகசுந்தரம்

பலமாத பட்டினிக்குப்பின்
ஓர்நாள் பசிமுற்றி
என் விரல்களைத் தின்ன ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு விரலாய்
எல்லா விரல்களையும்
தின்று முடித்து
பசியாறி உறங்கிவிட்டேன்.

வேறொரு நாள்
எனக்கு உணவு பரிமாறப்பட்டது,
உண்ண எத்தனித்தபோது
எடுத்து உன்ண விரல்கள் இல்லை.
யாராவது விரல்களை கடன் தாருங்களேன்…
யாராவது!!
ஒருவராவது?!
தயக்கத்துடன் எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள்
விரல்களற்ற கைகளை…

00000000000000000000000

தோண்டிவிடாதீர்கள்… புதையல்கள் இருக்கலாம்… ஜாக்கிரதை!

 

முருகன் நாகசுந்தரம்

நிம்மதியின் நிழலில் நித்தமும் இளைப்பாற
நிம்மதியின் செடியை நட தோண்டியபோது
புதையல் ஒன்றைக் கண்டெடுத்தேன்.

00000

அதிஷ்டலட்சுமி ஒருமுறை தான் கதவை தட்டுவாள்
சந்தர்ப்பம் தவறவிடாமல் அவளை வீட்டுக்குள்
அழைத்து பூட்டிகொள்ளவேண்டுமெனவும்
தவறவிட்டால் வாழ்வில் மீண்டும்
அதிஷ்டலட்சுமி வரவே வரமாட்டாள் எனவும்
அதிர்ஷ்டம் பற்றியும் புதையல்கள் பற்றியும்
உயர்வுநவிற்சி கதைகள் கேட்டே வளர்ந்த இந்த வாழ்வில்
கிடைத்ததை கைவிடாமல் இருத்திகொள்ள முடிவெடுத்தபோது
அருகில் யாருமில்லாமல் போனதும் வசதியானது.

00000

புதையலை வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்தேன்.
புதையல் பழுத்து வாசம்வந்துவிடும்
எனும் பயத்தில்
பதுக்கிய இடத்தைச் சுற்றியும்
சாணம் தெளித்துக்கொண்டே இருந்தேன்.
ஈரமுற்று புதையல் முளைவிட்டு
காம்பு வெளிப்பட்டுவிடும்
என்ற பயத்தில் நீர்படாமலும்
முழுதும் ஈரமற்று வாடிவதங்காமலும் காப்பது
என்ற இந்த என்நிலைக்கு சரியான பழமொழி
“இருதலைகொள்ளி எறும்பு போல”
அல்லது
“திருடனுக்கு தேள் கொட்டியது போல”
என்று இதில் ஏதோ ஒன்றுதானா அல்லது வேறா?
எது என தெரியாத ஏதோ ஒரு நிலை ஆனது
அரசாங்கத்தின் எல்லா பேரேடுகளிலிருந்து
என் பெயர் நீக்கிவிட்டபிறகும்
புதையல் கிடைத்த செய்தியறிந்தால்
அரசு உரிமைகோரி வந்துவிடும்
என்ற கேள்விஞானமிருப்பதால் எனைத்தேடி
எந்நேரத்திலும் அரசாங்கம் வந்துவிடுமெனத் தவித்தேன்.

00000

புதையல் ரகசியம் ஒரு குழந்தையைப்போல
முதலில் என் இடுப்பில் இருந்தது
பின் மெல்ல ஏறி ஒரு மண்மூட்டை போல
என் முதுகில் தொங்கியது
பின் மேலும் ஏறி ஒரு பாறையாய் மாறி
என் தலையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு
மெல்ல மெல்ல என் மொத்த உடலையும்
பூமிக்குள் அமிழ்த்திவிட அழுத்தியது.
ஏதேனுமிருவர் கூடி பேசினால்
அது என் புதையல் பற்றி இருக்குமோ என அச்சம் கொண்டேன்.
ஒட்டுமொத்த உலகமே எனக்கெதிராய்
என் புதையலை பிடுங்கிகொள்ளச் சதி செய்வதாய்
ஒரு அசரீரிக் குரல் ஒலித்துகொண்டே இருந்தது எனக்குள்.
என்னையறியாமல் என் செயல்கள்
புதையலை காட்டிகொடுத்துவிடுமென அஞ்சி பிறரிடம்
பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக்கொண்டேன்.
வெளிச்சமும் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது.
மெல்ல மெல்ல இருளுக்குள் பதுங்கிக் கொண்டேன்.
என் இயல்பை அழித்துக்கொண்டு
பெரும்சுமையானது இந்த புதையல்.

0000

என்னை வருடங்களாய் அறிந்தவர்கள்
என் இயல்புகள் சாயமழிந்து
முகம் வெளிறிப்போய் நான் வேறோருவனாய்
மாறிவிட்டதாய் சொன்னார்கள்

இதையே, ஊரார்கள் எனக்கு முன்பு கரிசனத்தோடும்
எனக்கு பின்பு பரிகாசத்தோடும் பேசிகொண்டார்கள்.
ஒவ்வொரு நாளும் புதையல் இடத்திற்கு
நேரமற்ற நேரங்களில் பயணப்பட்டு பார்வையிட்டு
மறைத்த இடத்தில்
தொட்டு பார்த்தும் உறுதிபடுத்திகொண்டும்
புதையல் கிடைத்த நாளிலிருந்தே எங்கே அது
என் கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில்
உறக்கமற்ற இரவுகளும்
அகால விழிப்புகளும் முடிவிலியாகி
புதையல் ஒரு சர்வாதிகாரியாய் எனையாழ்கிறது.
உலகோரே!
எக்காரணம் கொண்டும் மண்ணைத்தோண்டாதீர்கள்
ஒருவேளை புதையல் தட்டுபட்டால்
அப்படியே விட்டுவிடுங்கள்.
தோண்டி எடுக்காதீர்கள்.
நிம்மதியின்மையிலிருந்து தப்பிக்கலாம்.

முருகன் நாகசுந்தரம்-இந்தியா

முருகன் நாகசுந்தரம்

 

(Visited 329 times, 1 visits today)
 
முருகன் நாகசுந்தரம்

முருகன் நாகசுந்தரம்- கவிதைகள்

காகிதகூழ் பூசி முறக்கண்களை அடைப்பதாய் உன்னைக் கொண்டென்தனிமைத்துவாரங்களை அடைக்ககாலத்தின் சூழ்ச்சியென நடந்தது நம் முதல் சந்திப்பு. கொடூம்பாம்பின் பல்லென உடலெங்கும் விடம்பரப்பியது உன் ஒற்றைப் பார்வை. மெல்ல மெல்ல தான் […]