முருகன் நாகசுந்தரம்- கவிதைகள்

முருகன் நாகசுந்தரம்

காகிதகூழ் பூசி முறக்கண்களை
அடைப்பதாய்
உன்னைக் கொண்டென்
தனிமைத்துவாரங்களை அடைக்க
காலத்தின் சூழ்ச்சியென நடந்தது நம்
முதல் சந்திப்பு.

கொடூம்பாம்பின் பல்லென
உடலெங்கும் விடம்பரப்பியது
உன் ஒற்றைப் பார்வை.

மெல்ல மெல்ல தான் உருமாறுவதை
கண்டும்
யாதும் செய்யயியலா
தொழுநோயாளியின்
சாட்சியாய் இருந்தேன்.

மாரிக்கால அந்திபொழுதில்
ஆரத்தழுவிடும் பெரும்மழையென
நனைத்த காதலில் உள்ளடங்கி
உள்ளடங்கி முச்சடைத்து திமிறி
ஈனஸ்வரத்தில் குளறினேன் உன்னிடம்.

வசந்தங்கள் பரிசளிக்க முடியாத
ஒரு சந்தோஷப்பூ கொடுத்தாய்.

பனங்கள் குளத்தில் வண்டாய் திளைத்து
தொடர்பற்ற சந்தோஷங்களில்
சலித்தலைந்தன தினங்கள்.

நொடிப்பொழுதில் சட்டென
அடையாளமிழந்தன எல்லா
அர்த்தங்களும்.

போர்த்திகொண்டிருந்த ப்ரியங்கள்
மெல்ல மெல்ல பாம்புகளாய் நெளிய
தொடங்கியப்பின் மயானத்தீயில்
எழுந்தடங்கும் பிணமென முறிந்தது
இறுதி வார்த்தைகள்.

எல்லாம் முடிந்தபின் இறுதியாய் இன்று
விரையும் அவசரத்தில்
மூளை தெறிக்க எனை நசுக்கி போன
நீ வரும் வழியில்
ஆராய்ச்சி மணியடித்து
என் இதயத்தின் இறுதிதுடிப்புகளை உன்
தேர்காலில் இடுகிறேன்.

00000000000000000000000

நிசிநேர நாடகம்

அன்றைய நாள் முற்றுமாய் பழுத்து உதிர்ந்தபிறகு
இரவு ஒரு பீடி துண்டென
கனன்று கொண்டிருந்த வேளையில்
ஒரு தாசியை போல அலங்கரித்து வந்து
நடனமிட தொடங்கியது வானம்.
குளிரும் அமைதியின் கதகதப்பில் நித்திரைக்குள் புகுந்தன பாதைகள்.
கிறுக்கத்தில் நிலவின் முலையருந்தி கொண்டிருந்தன நீர்நிலைகள்.
சில்வண்டுகளும் கூடடைந்த குருவிகளும் குலாவி குளித்தன தீராத இச்சைகளில்.
அவ்வழியாய் கடந்தேகும் காற்றின் மெல்லிசையில்
ஒதுக்குப்புற மரங்களின் ஆழ்ந்த தவங்கள்
மெல்ல கலைய தொடங்கின.

00000000000000000000000000000000000

துணை

இருளும் இருளும் புணர்ந்து கொண்டிருந்த இரவின்
ஒலியற்ற தனிமையில்
என்னுடன் வந்தமர்ந்தன உன் வார்த்தைகள்.
நிலவொளி மதுவிருந்தென ஏகாந்தமாய்
என்னை மெல்ல குடித்துக் கொண்டே
நடுநடுவே அர்த்தங்களை புகைத்து தள்ளியது.
கோப்பைகள் காலியானபிறகு
ஏதும் கூறாமல் அவைகள்
எழுந்து போய்விட்டபிறகும்
நான் மட்டும் அதே இடத்தில்
அமர்ந்திருந்து
வானம் நிலவையும் நட்சத்திரங்களையும்
களவு கொடுத்துவிட்டு
முழுதுமாய் வெளிறிவிடிந்த பிறகு
என் இடத்தில் தினத்தை அமர்த்திவிட்டு
நான் எனக்குள் திரும்பினேன்.

முருகன் நாகசுந்தரம் – இந்தியா

முருகன் நாகசுந்தரம்

(Visited 154 times, 1 visits today)
 
முருகன் நாகசுந்தரம்

பசி-கவிதை-முருகன் நாகசுந்தரம்

பசி   பலமாத பட்டினிக்குப்பின் ஓர்நாள் பசிமுற்றி என் விரல்களைத் தின்ன ஆரம்பித்தேன். ஒவ்வொரு விரலாய் எல்லா விரல்களையும் தின்று முடித்து பசியாறி உறங்கிவிட்டேன். வேறொரு நாள் எனக்கு உணவு […]

 

One thought on “முருகன் நாகசுந்தரம்- கவிதைகள்”

Comments are closed.