ஒரு குடிகாரனும் மகளும்-சிறுகதை மொழிபெயர்ப்பு-ரூபன் சிவராசா

ரூபன் சிவராசாமகளுக்கு ஐந்து வயது. அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டாள் அவள். ஒரு நாளையேனும் விட்டுவைக்காது தலைகால் புரியாமல் குடித்துக்கொண்டிருந்த அவனைச் சகித்துக்கொள்ள அவளால் முடிந்திருக்கவில்லை. சிவத்துப்பிதுங்கிய அவனது கண்களை பார்த்திருப்பது மனவுளைச்சலைக் கொடுத்தது.

விவாகரத்து சுலபமாகக் கிடைத்துவிட்டது. அற்வக்கேற்றிடம் சென்றுவந்த அதேநாள், தனி அறையொன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறினான். பெற்றோரின் மணமுறிவுச் சம்பவம் பற்றிய விளக்கம் மகளைப் பெரிதாகச் சென்றடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள் தகப்பனைப் பற்றி அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாள். நாட்கள் போகப்போக அவன் பற்றிய நினைகளை மறக்கத் தொடங்கியிருந்தாள். உருவத்தில் பெரிய ஒரு பலசாலி மனிதன் அவளைத் தன் மடியில் வைத்திருப்பதுபோன்ற காட்சிகள் அவளது கனவில் வருவதுண்டு. ஒவ்வொருமுறையும் தாய் இடையில் புகுந்து அதட்டி அதனைக் கெடுத்துவிடுவதாகவே கனவு கலைந்துமிருக்கிறது.

அவன், தன் புதிய இருப்பிடத்தில் இருந்தபடி நடந்த சம்பவங்களை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தான். கடை வியாபாரம் நட்டத்தில் வீழத்தொடங்கிய தறுவாயில்தான் அவனுக்குள் குடிப்பழக்கம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது.

அலுவலகமொன்றில் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தாள் தாய். பாடசாலைக்குப் போகும்போது நாடாவில் கோர்க்கப்பட்ட  வீட்டின் திறப்பு மகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். அலுவலகத்திலிருந்து தாய் வீட்டுக்கு வருவதற்கு முன்னர் பாடசாலையிலிருந்து அவள், வீடு வந்துவிடுவாள். உருளைக்கிழங்கு அவிப்பதற்குப் பழகியிருந்தாள். படிப்படியாக தொத்திறைச்சி பொரிக்கவும், பதப்படுத்திய மீன்துண்டினைச் சூடுகாட்டவும், பான்கேக் சுடவும் பழகியிருந்தாள். பதப்படுத்திய உணவுவகைகள் அடைக்கப்பட்ட ரின்களைத் திறக்கவும் தெரிந்திருந்து அவளுக்கு.

வாரத்தில் ஒருமுறை தகப்பனிடம் சென்று வந்துகொண்டிருந்தாள். அங்கு செல்லும்வேளைகளில் சின்னதாய் ஒருவிதப் பயம் அவளை எட்டிப்பார்ப்பதுண்டு. குப்பைகள் பரவி அருவருப்பாக இருந்தது அந்த வீடு. ஆஸ்ரேயில் சிகரெட் அடிக்கட்டைகளும் சாம்பலும் நிறைந்திருந்தன. அழுக்கு உடுப்புகள் எல்லா இடமும் பரவிக்கிடந்தன. தவிர எப்போதும் அங்கு ஒரு துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருந்தது. ஜன்னல்கள் அடிக்கடி திறக்கப்படுவதில்லை. எப்பொழுதாவது ஒருமுறை ஜன்னல்கள் திறக்கப்படும்போது மட்டும் தூய காற்று உள்வர அனுமதிக்கப்படுகிறது.

நாட்கள் போகப்போக தகப்பனின் வீடு குப்பைகளால் நிறைந்திருக்கிறது என்பது பற்றி அக்கறைப்படுவதை அவள் நிறுத்திவிட்டாள். அங்கு செல்லும் தருணங்களிலெல்லாம் ஒருவிதச் சந்தோச ஒளி அவளுக்குள் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தது. ஓடோடிச் செல்லும் அவளைத் தன் கைகளுக்குள் அவன் ஏந்திக்கொள்வான். கன்னத்தில் அவள்  முத்தமிடுவாள். ஒருவரோடொருவர் பெரிதாக எதனையும் கதைப்பதில்லை. பள்ளிக்கூடம் எப்பிடிப் போகுது என்று அவன் கேட்பதும், நல்லாப் போகுது என்று அவள் பதில் சொல்வதும் வழமையாக நிகழும் சம்பாசனையாகிப் போனது. அவளுடைய கன்னத்தை மிருதுவாகத் வருடி, அவள் தனக்கு உண்மை சொல்கிறாள், அவள் சொல்வதை, தான் நம்புகிறேன் என்பதை அவளுக்கு உறுதிப்படுத்துவான்.

பாடசாலைத் மதிப்பீட்டு அறிக்கையில், ஒவ்வொருமுறையும் புதிய மதிப்பெண் பதிவு இடம்பெறும்போது தவறாமல் தகப்பனிடம் காண்பிப்பாள்.  அவள் அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் கடைக்குச் சென்று ஏதாவது இனிப்புப்பண்டங்களை வாங்கி வைத்திருந்து கொடுப்பான். சோடாவும் கிறீம்கேக்கும் நிச்சயம் கொள்வனவுப் பட்டியலில் இடம்பெறும். இனிப்புப் பண்டங்களை அவள் சுவைத்துச் சாப்பிடும்போது ஒரு குறும்புத்தனமான புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி அருகிலிருப்பான்.

இப்போ மகளுக்கு பன்னிரண்டு வயதாகிவிட்டது. அவன் துறைமுகத்தில் வேலை செய்துகொண்டிருந்தான்.

“அம்மா எப்பிடி இருக்கிறா?” மகளைக் கேட்டான்.

அவளுக்குச் சங்கடமாக இருந்தது. சுவரில் ஒரு புள்ளியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பரவாயில்லை என்று நினைக்கிறன். அவ வேலைக்குப் போறதத்தவிர பெரிசா வெளியில ஒண்டுக்கும் போறதில்ல. வீட்டுக்குள்ளதான் கூடுதலா இருக்கிறா.”

அவளின் கன்னத்தை ஒரு கையினால் வருடியபடி அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

“இன்னொரு கலியாணம் செய்யிற எண்ணமில்லையா அம்மாவுக்கு?”

அதற்குப் பின்னர் அவள் குறிப்பிட்ட சில காலங்கள் தகப்பனிடம் செல்லவில்லை. ஆரம்பத்தில் தாயும் அதைப்பற்றி வெளிப்படையாக அவளிடம் கேட்கவில்லை. தகப்பனிடம் செல்லாததையிட்டு ஒரு ஆச்சரியப் பார்வையை மட்டும் உதிர்த்துவந்தாள். பின்னர் ஒருநாள் அதற்கான காரணம் என்னவென்று கேட்கத் தோன்றியது.

“ஏன் இப்ப அங்க போறதில்லை? அப்பா ஏதாவது செய்தவரா?”

அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னாள்:

“அப்பா நல்லவர்!”

“இப்ப கனநாளா ஏன் நீ அங்க போறதில்லை? ” தாய் கேட்டாள்.

“நீ இன்னொரு கலியாணம் செய்யப் போறியா ? அப்பா கேட்டவர்.”

தாய்க்கு முகம் சிவந்து போனது.

“இல்லை.. எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் இல்லை.”

அடுத்தநாள் தகப்பனிடம் சென்ற அவள், “அம்மா வேறொரு கல்யாணம் செய்யமாட்டார்” என்றாள்.

ஒரு கையால் அவளது கன்னத்தை வருடியபடி, எதுவும் பேசாமல் அமைதியானான்.

வழமையைவிட அவனது கைகள் அதிகம் நடுங்குவதை உணர்ந்தாள். அரைவாசி நிரம்பிய இரண்டு மதுப்போத்தல்கள் மேசையில் இருந்தன.

நீண்ட நேரமாக இருவரும் ஒன்றுமே பேசாதிருந்தனர். தகப்பனின் முகத்தைப் பல தடவைகள் பார்த்தாள். பார்வைகள் சந்தித்துக்கொண்ட போதெல்லாம் கண்களை வேறு திசைக்குத் திருப்பினாள்.

ஒரு கட்டத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள்.

“அப்பா, நீ ஏன் அதிகம் குடிக்கிறாய்? “

தனக்குள் ஒரு கணம் நிதானித்து யோசித்த பின்,

“சில வேளைகளில் அது எனக்கு அவசியமாய் இருக்கிறது,” என்று பதிலளித்தான்.

“அதுதான் குடிக்கவேண்டிய கட்டாயம் என்ன?” என்று மறுபடி ஊன்றிக் கேட்டாள்

“நடுக்கம் தொடங்கிற நேரங்கள்… நோவையும் உபாதையையும் போக்க என்ர உடம்புக்கு அது தேவைப்படுது.”

நீ பாவம் அப்பா!”

இல்லை என அவன் தீர்க்கமாக மறுத்தான். நான் சுகமாத்தான் இருக்கிறன் என அவளைச் சமாளிக்க முயன்றான்.

மற்றொரு நாள் சிநேகிதிகளுடன் வெளியில் உலாத்திக் கொண்டிருந்த போது, தாய் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது சட்டென நினைவுக்கு வர, ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தாள்.

தாயின் அருகில் அமர்ந்தாள். இருவரும் எதுவுமே பேசவில்லை. அடுத்தடுத்த பின்நேரப் பொழுதுகளையும் வீட்டில் தாயோடு செலவளித்தாள்.

ஒரு முன்மாலைப் பொழுது இருவரும் காட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது தாய் கேட்டாள்:

“நீ ஏன் இப்ப பிரண்ட்ஸ்சுகளோட வெளியில போறதில்லை? “

“உன்னோட இருக்கத்தான் விரும்புறன்,” என்று சொன்ன கணத்தில் கைகளுக்குள் முகம்புதைத்து ஆழத்தொடங்கிய தாயைத் தேற்ற முயன்றாள்.

ஒருசில மாதங்களுக்குப் பின் வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டும் வெளியில் போய்வரத் தொடங்கினாள்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு தருணம் தகப்பனிடம் செல்லவேண்டும் போல் இருந்தது. அங்கு சென்றபோது கட்டிலில் படுத்திருந்தவனது கண்கள் இரத்தச்சிவப்பாய் இருந்தன. மகளைக் கண்ட மாத்திரத்தில் கண்களிலிருந்து பொலபொலவென நீர் வழிந்தது. சற்றுநேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக அழுகையை நிறுத்தி நிதானத்திற்கு வந்தான்.

ஒரு காலில் கொஞ்சம் வலி இருக்கு. கெதியாய் சுகமாகிவிடும்.

அவள் அறையைக் கூட்டித்துடைத்துத் துப்புரவு செய்தாள்.

வெற்றுப்போத்தல்கள் அறைமுழுவதும் பரவிக்கிடந்தன. குறுணிக்கற்கள் அவளது சப்பாத்துக்குக் கீழ் நெரிபட்டன. கட்டிலின் விளிம்வில் அமர்ந்து கொண்டாள்.

“நீ குடிக்கிறதை நிப்பாட்ட மாட்டியா அப்பா?”

மெல்லிய புன்னகையால் அவளது கேள்வியை எதிர்கொண்டான்.

“குடிக்கிற நேரத்தில உன்ர அப்பன் சந்தோசமா இருக்கிறான்.”

என்று அவளின் கேள்வியைச் சமாளிக்க முயன்றான்.

000000000000000000000000000

சினிமாவுக்குப் போய்வந்த ஒரு மாலைப்பொழுது வீட்டில் புதிய ஒரு ஆண் தாயுடன் கதைத்துக்கொண்டிருந்ததைக் கண்டாள்.

“இவர்தான் இனி உனக்குப் புது அப்பா.”

அந்தப் புதிய மனிதரை இவளுக்கு அறிமுகம் செய்ய முயன்றாள் தாய்.

“எனக்கு ஒரேயொரு அப்பாதான்!”

கதவை அடித்துச் சாத்திவிட்டு வீட்டின் மேற்தளத்தில் தனது அறைக்குள் ஓடிச்சென்று கட்டிலில் முகம் புதைத்து அழுதாள்.

தகப்பனுக்கு நீண்ட கடிதமொன்றை எழுதினாள்.

தாய் அவளது அறைக்கதவைத் தட்டி,

“இவருக்குக் குடிப்பழக்கம் இல்ல.”

உரத்துக் கத்திச் சொன்னாள்.

“அதப்பற்றி எனக்கு ஒரு மண்ணாங்கட்டி அக்கறையும் இல்ல.”

மகள் எரிச்சலுடன் கூச்சலிட்டாள். இதுதான் முதற்தரம் தான் இப்படி கெட்டவார்த்தை பேசியது எனத் தனக்குள் நினைத்தாள்.

தாய் வேறொரு கலியாணம் கட்டப்போவதைத் தகப்பனிடம் சொன்னபோது அவன் அதனை ஒரு புன்னகையுடன் உள்வாங்கிக்கொண்டான்.

“நல்லதுதான்…வாழ்க்கையின்ர தனிமையைக் குறுகச்செய்வதற்கு ஒரு துணை வேணும் அம்மாவுக்கு. “

“இப்ப நான் கொஞ்சமாத்தான் குடிக்கிறன்.”

“இப்ப உங்களுக்குச் சந்தோசம்தானே?”

அவனது கன்னத்தில் வாஞ்சையாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.

உனக்கு வேற ஒரு கல்யாணம் செய்யிறதுக்கு இஸ்ரமில்லையா அப்பா?

“எனக்கு இந்தத் தனிமையில சந்தோசம் இருக்கு. நீங்களும் இடைக்கிடை வந்து போறீங்க. அது போதும். ஆனா நீங்கள் இங்க வாறதை ஒரு கட்டாயமா நினைக்கத்தேவையில்லை..! ” என மேலதிக வார்த்தைகளையும் சட்டெனச் சேர்த்துச் சொன்னான்.

தாயும் அவருடைய புதிய காதலரான அந்தப் புதிய மனிதரும் திருமணம் செய்துகொண்டனர். தாயின் புதிய துணை, இவளுடன் சிநேகமாக நடந்துகொள்ள முயன்றபோதெல்லாம், முறைத்த பார்வைதான் இவளிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.

குடிப்பழக்கத்தை கிட்டவும் அண்டாத மனிதர் அவர். குடிகாரத் தந்தையிடம் இவள் சென்றுவருவது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. குடிப்பழக்கம் இவளுக்கும் தொற்றிவிடக்கூடும் என அஞ்சுவதாக மனைவியிடம் சொன்னான்.

அவளைப் பெத்த தகப்பன் அவர். அவள் தைரியசாலி.”

அவனது அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றாள்.

மகள் இப்பொழுது அதிகம் வெளியில் செல்வதில்லை.

வேறொரு நாள் தகப்பனிடம் சென்றபோது கதவில் ஒரு துண்டில் ஏதோ எழுதி ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். தகப்பன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிக்கப்பட்டிருந்தது.

உடனே பொதுத்தொலைபேசி மையத்திற்கு ஒடிச்சென்று வைத்தியசாலை இலக்கத்தை படபடவென அழுத்தினாள். நோய் பற்றிய தகவல் இரகசியமானது. அதனைப் பிறருடன் பகிரமுடியதென மறுமுனையின் குரல் சொல்லிற்று. தான் அவருடைய மகள் என்பதைத் தெளிவுபடுத்திய பிறகு, ஒருகாலில் குழிப்புண் தொற்றுநோய் என்று சொல்லப்பட்டது.

தாயிடம் ஓடினாள்.

“அப்பாக்கு கால்ல குழிப்புண்….!”

“ஐயோ…”

ஒரு வகை அதிர்ச்சி தாயிடமிருந்து வெளிப்பட்டது.

எல்லாம் அந்தக் இழவெடுத்த குடியால வந்த வினை, என்றான் தாயின் புதிய கணவன்.

அடுத்தநாள் தகப்பனைப் பார்க்க வைத்தியசாலைக்குப் போனாள்.

வெள்ளைநிறக் கட்டிலில் படுத்திருந்த அவனது உருவம் சிறுத்துப்போய், மிக நலிவடைந்தவனாய்த் தோற்றமளித்தான்.

எவ்வளவு வடிவாய் இருக்கிறீங்க, தெரியுமா?”

என்ற தந்தையின் வார்த்தையால் அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது. பதிலொன்றும் சொல்ல எத்தனிக்கவில்லை.

தகப்பனிடமிருந்து புன்னகையும் கண்ணசைவும் ஒரேநேரத்தில் வெளிப்பட்டது.

“நோவு இருக்கா?”

“இல்ல…இப்ப இல்ல…ஒரு கால எடுத்திட்டினம்.”

மயக்கம் வருவது போல உணர்த்தியது அவளுக்கு. அங்கிருந்து வெளியே ஓடியவள், வெளிமதிலில் முதுகினை முண்டுகொடுத்தபடி வாந்தியெடுத்தாள்.

“இப்ப நான் வடிவா இருந்தா என்ன அசிங்கமா இருந்தா என்ன…மண்ணாங்கட்டி..! “

தனக்குள் சலித்துக்கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் தகப்பனிடம் செல்லும் போது அவனின் உடல் சிறுத்துக்கொண்டு போவதை உணர்ந்தாள். இப்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தகப்பனைச் சென்று பார்த்து வந்தாள். அவனது தோல் பழுப்பு நிறமாக மாறிக்கொண்டு வந்தது. உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகியபோதும் அவளைக் காணும் ஒவ்வொரு தடவையும் சந்தோசப் புன்னவை அவனிடமிருந்து வெளிப்படத் தவறுவதில்லை. மனம் புத்துயிர் பெறுவதுபோல் உணர்ந்தான்.

அவளிடம் பெரிதாக எதையும் கதைப்பதில்லை. பள்ளிக்கூடம் பற்றிக் கூறுமாறு கேட்பதுண்டு. தன் விசித்திரமான ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லும் போது கட்டிலில் படுத்திருந்தபடி அமைதியாகச் சிரித்துக் கேட்டுக்கொண்டிருப்பான்.

இப்பொழுதும் மதிப்பீட்டு அறிக்கையில் பாடமதிப்பீடுகள் புதிதாகப் பதியப்படும் போது அவனுக்குக் காண்பிப்பாள்.

என்ர மகள் உண்மையிலேயே ஒரு புத்திசாலிப் பெண்தான் என்று ஒவ்வொரு முறையும் சொல்லத்தவறுவதில்லை.

நாளுக்குநாள் அவனது தோல் சுருக்கம் அதிகரித்தது. தோலின் உட்பகுதிக்குப் பொருத்தமில்லாத அளவில் பெரியதாக வெளிப்பகுதி திரண்டு தோற்றமளித்தது. கைகளின் உரோமத்திற்கு மேலாக ஒருவித வெண்மைத்தன்மை படியத்தொடங்கியது.

“நீ கெதியாய் சுகமாகிடுவாய்!”

தகப்பனிடம் சொன்னாள். விழியசைவில் அவளோடு அவன் கதைத்தான். ஏதோ சொல்லவெனத் திறந்த அவனது வாய் எதையும் சொல்லாமல் மூடிக்கொண்டது.

இப்ப நான் அழக்கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அழுவது முட்டாள்தனம் என்று இப்பொழுது உறுதியாக நம்ப முற்பட்டாள்.

வெளிச்சமும் வெய்யிலுமான ஒரு வேனில் நாளில், பாடசாலை முடிந்த கையோடு அங்கிருந்து நேரடியாக வைத்தியசாலைக்குச் செல்லத் தீர்மானித்தாள். பூக்கள் கொய்து ஒன்றாகச் சேர்த்து அழகிய பூங்கொத்தாக்கினாள். வைத்தியசாலைத் தாதிகளில் யாராவது அதற்கு ஏற்ற ஒரு சாடியை ஒழுங்குபடுத்தித் தருவார்கள் என்று நினைத்தவாறு வைத்தியசாலைக்கு விரைந்தாள்.

தகப்பன் வழமையாகப் படுத்திருக்கும் கட்டிலை நெருங்கியபோது அது வெறுமையாக இருந்தது.

Gunnar Lunde (குன்னார் லுண்ட)

தமிழில்: ரூபன் சிவராசா 

ரூபன் சிவராசா

(Visited 104 times, 1 visits today)