நந்தினி சேவியர் கதைகள்-மானுடத்தின் கலை-நந்தினி சேவியர் நினைவுக்குறிப்புகள்-ஜிஃப்ரி ஹாசன்

ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான நந்தினி சேவியர் சென்ற மாதம் தன் வாழிடமான திருகோணமலையில் மறைந்தார். அவரது பிறந்த இடம் யாழ்ப்பாணம் மட்டுவில். ஒரு எழுத்தாளராக, இலக்கியச் செயற்பாட்டாளராக நீண்ட காலமாகவே ஈழ இலக்கிய வெளியில் செயற்பட்டு வந்தார். அவரது 72 வருட கால வாழ்க்கையில் பல்வேறு இலக்கியத் தலைமுறைகளை அவர் கடந்து வந்திருக்கிறார். இன்றைய முகநூல் இலக்கிய வெளியிலும் தனது முகநூல் பக்கத்தின் வழியே சமகால இலக்கிய உலகுடனும் வினைபுரிந்திருக்கிறார். அவரது மொத்த இயக்கமும் 16.09.2021 அன்றுடன் முடிவுற்றது.

நந்தினி சேவியர்
ஓவியம்: எஸ்.நளீம்

நந்தினி சேவியர் அதிகமும் சிறுகதைகளின் வழியே ஈழ இலக்கியத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு படைப்பாளி. அவரது அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நெல்லிமரப் பள்ளிக்கூடம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவை தவிர

நூல் வடிவம் பெறாத மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன, ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள் ஆகிய நாவல்களை அவர் எழுதி இருக்கிறார். அவை நூல் வடிவம் பெறவில்லை என்ற கவலை அவருக்குள் இறுதி வரை இருந்தது. அவர் ஈழ இலக்கியச் சூழல்மீது தன் இறுதிக் காலப்பகுதிகளில் கடுமையான எதிர்வினைகளை முன்வைத்தமைக்கு இந்த ஆழ்ந்த துக்கமும் ஒரு முக்கிய காரணமாகும். தான் கண்டுகொள்ளப்படவில்லை என்றெல்லாம் அவர் கடைசிக் காலங்களில் குரல் எழுப்பினார். அந்தக் குரல் வெறும் மனப்பிரமையிலிருந்தோ அல்லது வயோதிப நெருக்கடியிலிருந்தோ வந்ததல்ல. நமது புறக்கணிப்பின் அரசியலின் கொதிப்பிலிருந்து எழுந்த குரலாகவே அதைக் காண வேண்டும்.

நந்தினி சேவியர் பாரம் என்ற தன் முதல் கதையை 1967 இல் எழுதினார். அதிலிருந்து அவரது இலக்கியப் பயணம் தொடங்கியது. அவர் தன் இலக்கிய இயக்கத்தை ஈழத்தின் சிற்றிதழ்களில் ஆரம்பித்து தன் முழு படைப்பாற்றலையும் சிற்றிதழ்களினூடாகவே வெளிப்படுத்தி வந்தார். அலை, புதுசு, மல்லிகை, தாயகம் போன்ற சிற்றிதழ் சார்ந்தே அவரது இலக்கிய இயக்கம் இருந்தது. இந்த இதழ்களிலேயே அவர் அதிகம் எழுதினார். ஈழ இலக்கியம் சார்ந்து மிக முக்கிய உரையாடல்களை விவாதங்களை, பங்களிப்புகளை வழங்கிய ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் அவர் எழுதினார்.

அவர் எழுதத் தொடங்கிய காலப்பகுதி என்பது ஈழ இலக்கியத்தில் முற்போக்குச் செல்வாக்கு நிலவிக் கொண்டிருந்த காலப்பகுதி. சோவியத் யூனியன் அதன் சோஷலிச அரசையும், சோஷலிச சமூக கட்டுமானத்தையும் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுத் தேவையில் இருந்தது. அதன் ஒரு முயற்சியாக 1934 இல் சோஷலிச யதார்த்தவாத கலைக்கோட்பாடு அங்கு உதயமாகியது. இலக்கியப் படைப்புகள் அந்தக் கோட்பாட்டு எல்லைக்குள்ளேயே நிற்க வேண்டும் என அங்கு எதிர்பார்க்கப்பட்டன. எனினும் ரஷ்யப் படைப்பாளிகளின் நுண்ணோக்கும், ஆழ்ந்த புரிதலும், படைப்பாற்றலும் அந்த எல்லையை மேலும் விரித்துச் சென்று மானுட வாழ்க்கையை அவர்களால் தரிசிக்க முடிந்தது.

ஆனால் ஈழத்து முற்போக்குப் படைப்பாளிகள் அவ்வாறான அகல்விரிவான சித்தனையை நோக்கிச் செல்லவில்லை. சோஷலிச யதார்தவாதக் கலைக்கோட்பாட்டை வெறும் முதலாளி X தொழிலாளிப் பிரச்சினை என்ற எல்லைக்குள் மட்டுமே நின்று நோக்கினர்.

ஆனால் நந்தினி சேவியர் போன்றவர்கள் ஓரளவு ஈழத்துச் சமூக நிலைமைகளைப் புரிந்துகொண்டு எழுதினர். பொருளியல் தளத்தில் நிகழும் வர்க்க முரண்களின் பகடையாட்டமாக அவர்கள் மானுடப் பிரச்சினையை நோக்கவில்லை. நந்தினி சேவியர் தன் படைப்புலகை அந்தத் தளத்தில் மட்டுமே வைத்து நிறுவிக் கொள்ளவில்லை. இதனால், தீவிர முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கிடைத்த உடனடிக் கவனயீர்ப்பும், பரவலான அங்கீகாரமும் நந்தினி சேவியரை வந்தடையவில்லை. இலக்கியத்தை அவர் தனக்கான அங்கீகாரத்துக்கான தளமாக எடுத்துக்கொள்ளாது தனது வாழ்க்கைச் சூழலில் கிடைத்த அனுபவங்களை, தான் வாழும் சமூகத்தின் இயங்கியலை மெய்யாகப் பதிவுசெய்யவும் அந்தக் காலப்பகுதியின் உண்மையான வாழ்க்கைக் கோலத்தை படைப்புகளாக வாசகனுக்களிக்கவுமே அவர் விரும்பினார்.

நந்தினி சேவியரின் படைப்புலகு, படைப்புசார்ந்து இடதுசாரிக் கருத்தியல் நிலைப்பாட்டை தீவிரமாக ஆதரித்து எழுதிய ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புலகிலிருந்து வேறுபட்டது. அதாவது முதலாளி X தொழிலாளி என இரு துருவ வாழ்க்கையாக, பிரச்சினையாக மட்டுமே மனித வாழ்க்கையை முன்வைக்கும் சோஷலிச யதார்த்தவாதக் கலைக் கோட்பாட்டுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தீவிர இடதுசாரி முற்போக்காளராக தன் முகத்தை அவர் ஆக்கிக் கொள்ளவில்லை.

அவரிடம் சமூக யதார்த்தவாத நோக்கே மேலோங்கி இருந்தது. சமூகத்தில் ஏதோ ஒருவகையில் விளிம்புக்குள்ளாக்கப்பட்டவர்களின் வாழ்வும் துயரமும்தான் திரும்பத் திரும்ப அவரது படைப்புகளில் ஒலிக்கும் மய்யக் குரலாக இருக்கிறது.

இன்னொரு வகையில் சொன்னால், தமிழ்(க் கத்தோலிக்க) சமூகத்தின் பண்பாடு, தனிமனிதனின் சுயமரியாதை போன்றன அவரது படைப்புலகின் முக்கிய பரிமாணங்களாக உள்ளன. தமிழ்க் கத்தோலிக்க வாழ்வியல் என்பது அவரது கதைகளின் முக்கிய பரிமாணம். வ.அ. இராசரத்தினம் அளவுக்குத் தமிழ்க் கத்தோலிக்க வாழ்வியலை, அதன் பண்பாட்டுப் பரிமாணங்களைத் தன் கதைக்குள் கொண்டு வந்த இன்னுமொருவர் நந்தினி சேவியர்தான். தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் மத ஆசார இறுக்கத்தின் மீது அவர் கொண்டிருந்த புகார்களும், அதேநேரம் சில இடங்களில் அதன் மீதான கொண்டாட்டமும் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. அவரது மேய்ப்பன், ஒற்றைத் தென்னை போன்ற கதைகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டான கதைகள்.

மேய்ப்பன் கதையில், கடற்கரைக் கிராமத்தின் அடையாளமாக எழுந்து நிற்கும் புனித தோமையார் ஆலயத்துடன் அதன் பொறுப்பாளரான கிறகோரி கொண்டிருக்கும் ஆழமான உறவும், தனது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவலம் நிறைந்த அவரது வாழ்வும், ஏக்கமும், ஆலயம்குறித்து அவருக்குள் உருவாகும் உணர்ச்சிகளுமே கதையின் மய்யச் சரடாகத் திரள்கிறது. தனது மகனின் இறப்புக்குப் பின் அவனது மனைவியான தனது மருமகளை கந்தாசாமிக்கு மறுமணம் முடித்து வைக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர் கிறகொரி. அது அவரது சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் அவரது சமூக அந்தஸ்து மறுக்கப்படுகிறது. இழிவுபடுத்தப்படுகிறார். தனிமைப்படுத்தப்படுகிறார். கிறகோரியின் விசயத்தில் சமூகத் தளத்தில் அறம், சமூகநீதி போன்றன மீறப்பட்டதை கதை பேசுகிறது. கிறகோரி மீதான கோபத்தால் கடைசியில் கோயிலிலுக்கு வருவதையே மக்கள் நிறுத்திக் கொண்டனர். சாமான்ய மக்களின் ஆழ்ந்த மதப் பற்றும், மீறல்களை, மாற்றங்களைச் சகிக்க முடியாத அவர்களின் பிற்போக்கு மனப்பாங்கு என  இக்கதை ஒரு சமூகத்தின் முழுச் சித்திரமாகவே உருக்கொள்கிறது. கதையின் முடிவில், ஆலயப் பராமரிப்புக்காக நிதி வசதிகள் எதுவுமில்லாத நிலையில் அறுபது வயது முதியவரான கிறகோரியே பாய்மரம் ஏறிக் கடலுக்குச் செல்கிறார் புயலில் சிக்கி கடலிலேயே அவர் வாழ்வு முடிகிறது. இங்குக் கரையில் அவருடன் சேர்ந்து தோமையர் ஆலயமும் தன் இருப்பை முடித்துக் கொள்கிறது. இக்கதையில் வரும் கிறகோரி போன்ற முற்போக்கான கதாபாத்திரங்கள்மூலம் நந்தினி சேவியர் தன் சமூகத்தின் பிற்போக்குச் சிந்தனைகளையும் பலவீனங்களையும் தீவிரமான உரையாடல்வெளிக்குக் கொண்டு வந்தார்.

நந்தினி சேவியரின் சில கதைகளில் முதியவர்கள்தான் பிரதான கதாபாத்திரங்களாக வருகின்றனர். அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட முதியவர்கள். முதுமையின் பலவீனத்தால் சமூக வெளியிலிருந்து ஓரமாகி வாழும் சமூக அமைப்பிலிருந்து மிக வித்தியாசமான பார்வை அது. மேய்ப்பனில் வரும் கிறகோரி, ஒற்றைத் தென்னையில் வரும் சந்தியாக் கிழவன், அதிரியார், வேட்டை யில் வரும் தம்பர் போன்ற கதாபாத்திரங்கள் அறுபதைக் கடந்தவர்கள். ஆனால் முற்போக்கான பார்வை கொண்டவர்கள். “தம்பர் வயதுக்கு மீறிய செயல் செய்யும் ஒரு பிரகிருதிதான்” என்றுதான் தன் முதிய பாத்திரமான தம்பரை சேவியர் அறிமுகம் செய்கிறார் வேட்டை கதையில்.  இளைய தலைமுறை கூடப் பிற்போக்குச் சிந்தனைக்குள் கட்டுண்ட ஒரு சமூக அமைப்பில் நந்தினி சேவியர் உருவாக்கிய இத்தகைய முதியவர்கள் வாசகனுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்ககூடியவர்களாக இருக்கின்றனர். சமூத்தின் புரட்சிகரமான சிந்தனைகள், மீறல்கள் போன்றன புதிய தலைமுறையினரிடமிருந்து வருவதே முற்போக்குப் படைப்புலகின் வழக்கமாக இருக்க இவர் முதியவர்களைப் புரட்சிகரமானவர்களாக நிறுத்துகிறார்.

சேவியரது சொந்த வாழ்வின் மனவடு ஆறாத்துயரமாக அவரைப் பின்தொடர்வதை சில கதைகளில் காண முடியும். அவர் தன் சொந்த இளவயது மகனை இழந்திருந்தார். அந்தத் தவிப்பும் துக்கமும் கடைசிவரை அவரில் இருந்தது.

மேய்ப்பன் கதையில் தோமையாரின் மகன் இறந்து போய் அதனால் அவர் துயரப்படுதல், அதிரியாரின் மகன் விக்ரர் இறந்ததனால் அவர் உருக்குலைந்து போதல், வேட்டை கதாபாத்திரமான தம்பர் குடும்பத்தை இழந்தவராகவே கதையில் இடம்பெறல் போன்ற மனிதர்களைச் சேவியர் தன்கதைகளில் உருவாக்கி அவரது மகனின் இறப்பு அவரில் ஏற்படுத்திய துயரத்தைத் தன் கதாபாத்திரங்கள் வழியே கடந்து விட எண்ணினார். தங்கள் மகன்களை, குடும்பத்தை இழந்த மூன்று வயோதிபத் தந்தைமாரின் தள்ளாட்டமான வாழ்க்கையையிலிருந்தும், அதைத் துணிச்சலாக அவர்கள் எதிர்கொள்ளும் முனைப்பிலிருந்தும் அவர் தனக்கான நம்பிக்கையைக் கண்டடைந்தார்.

ஒற்றைத் தென்னை கதையும் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய கதைதான். ஒற்றைத் தென்னை கம்பீரமாக ஊரில் நீண்ட காலமாக எழுந்து நிற்கிறது. அதனைப் படகுவிபத்தில் தன் குடும்பத்தை இழந்த சந்தியாக்கிழவரின் குறியீடாக ஆக்குகிறார்.

கடலோரத்துக் குடிசைகள் கதையும் தமிழ்க் கத்தோலிக்க பண்பாட்டின் அசைவுகளை அதன் சில பக்கங்களைப் பேசுகின்றன. பரந்த தமிழ் வாசகப்பரப்பில் அது அந்த மக்களின் வாழ்வியல் கோலங்களை, பல் கலாசாரத் தன்மையைப் புரிந்துகொள்வதற்கான திறப்பாக இருக்கிறது.

விருட்ஷம் கதை ஈழத்துப் போர்க் கதைகளிலேயே மிகத் தனித்துவமாகத் துலங்கக்கூடிய கதை. போர்த் தாக்கத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் பேசும் கதை. ஈழப் போர் எப்படி இயற்கையை, சுற்றாடலை சூறையாடியது என்பதுதான் கதையின் மய்யக்கரு. போரில் கொல்லப்பட்ட மனிதர்களைத்தான் நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம். போரில் அழிக்கப்பட்ட இயற்கையை, மரங்களை யார் கணக்கிட்டார்கள் என்ற கேள்வியை நோக்கி வாசகனை கதை நகர்த்திக் கொண்டு செல்கிறது.

சேவியரின் பெரும்பாலான கதைகள் செறிவற்ற, நீர்த்துப் போன தன்மையுடனேயே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக மனிதம், தவனம், வேட்டை போன்ற கதைகளைச் சொல்ல முடியும். மனிதம் கதை ஈழப் போர்க்கால சூழலில் கொலையுண்ட ஒரு குடும்பத்திலிருந்து தப்பிப்பிழைத்த ஒரு குழந்தையையும், அந்தக் குடும்பத்தில் வீட்டு வேலைக்கு நின்ற மலையகச் சிறுவன் ஒருவனையும் மய்யமாக வைத்து மனிதத்தைப் பேசும் மிகச் சராசரியான கதை. பொதுவாகவே மனிதத்தைப் போதிக்கும் கதைகள் தமிழில் ஏராளமாகவே எழுதப்பட்டுவிட்டன.

சிறார்களுக்கான நீதிக் கதைகள் போன்ற பண்பியல் கூறை வெளிப்படுத்தும் எளிய சூத்திரத்துக்கு உட்பட்டே இக்கதையும் இயங்குகிறது. இக்கதையிலும் ஒரு தேய் வழக்காகிப் போன கதைப்பொருளாகவே மனிதம் எஞ்சுகிறது. ஆனால் வேறுசில ஈழப்படைப்பாளிகள் போன்று மலையக கதாபாத்திரங்களைக் கீழ்மைப் பண்பேற்றம் செய்யாமல் மனிதத்தின் குறியீடாகச் சித்தரிப்பது அவரது முற்போக்கு மனநிலையின் மிக முக்கிய வெளிப்பாடு எனச் சொல்ல முடியும்.

மனித உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் இயலுமை நந்தினி சேவியருக்கு இயல்பாக வந்திருக்கிறது. ஒற்றைத் தென்னையில் சந்தியாக் கிழவன் அதிரியாருக்கு வாழ்வு பற்றிய தத்துவத்தைப் புகட்டும் தருணம் போன்ற மிகச்சில இடங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் சேவியரின் இந்தப் பலத்தைப் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

அவரது மொத்தக் கதைகளில் (20-30 க்கிடையில்) பெரும்பாலானவை மனித வாழ்வின் சிக்கல்களையும், மனச் சிடுக்குகளையும், இரண்டும் இணைந்து தனிமனிதனில், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்பவை என்று சொல்லிவிட முடியும். ஒரு படைப்பாளியின் விருப்புக்கும், சமூகத்தின் இருப்புக்கும் இடையிலான இடைவெளியை வாசகன் அறிந்துகொள்வதற்கான சாத்தியங்களை இயன்றவரை நந்தினி சேவியர் திறந்திருக்கிறார்.

அவரது சித்தரிப்பு மொழி அழகியல் தன்மையுடன் இருக்கிறது. புனித தோமையார் ஆலயத்துக்கும், அதன் பொறுப்பாளரான சங்கிலித்தாம் கிறகோரிக்குமிடையில் இருக்கும் உறவைப் பற்றிச் சொல்லும்போது “அவர் தான் கோவில், கோவில்தான் அவர்“ என்பார். வேட்டை கதையிலும் தம்பருக்கும் அவரது வளர்ப்பு நாய் வெள்ளையனுக்குமிடையிலான அன்பையும் உறவையும் “தம்பர்தான் நாய். நாய்தான் தம்பர்” என வர்ணிக்கிறார். இந்த அழகியல்சார்ந்த நுண் விபரணங்கள் நந்தினி சேவியரின் கதை மொழி நன்கு செப்பனிடப்பட்ட படிமம் போன்றது என்பதைக் காட்டுகின்றன.

நந்தினி சேவியர் தன் கதைகளுக்காக ஒரு தேர்ந்த கதைக்கரு மீது கவனம் செலுத்துவதில்லை. சமூகத்தின் மீது தான் கொண்டிருந்த புகார்களை, மறுபார்வைகளை விவரணமாகச் சொல்லிக் கொண்டு போகும் மிக எளிமையான கதை உத்தியையே பெரும்பாலான கதைகளில் கையாண்டிருக்கிறார். ஆனாலும், கதைநகர்வு, கதைமொழி, கதைமாந்தர்களின் வாழ்வியலைச் செப்பமாக வாசகன் முன் கொண்டு நிறுத்துதல் போன்ற கதைத்தொழில்நுட்பம் சார்ந்து அவரிடம் ஒரு வளர்ச்சி நிலை இருந்தது.

நந்தினி சேவியரின் கதாபாத்திர வார்ப்புகள் சமூகத்தின் சகல மட்டங்களில் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அடித்தட்டு வகுப்பார், வறியவர்கள், மீனவர்கள், மதச் சுரண்டலுக்குள்ளானவர்கள், சமூக, அரசியல், பொருளாதாரப் பொறிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், இழந்து நிற்பவர்கள், இரந்து நிற்பவர்கள் என அவரது கதைமாந்தர்கள் ஒரு குறித்த வரையறைக்குட்பட்டவர்கள்தான்.

இதற்கு வெளியில் உள்ள மத்திய தர வர்க்கம் மற்றும் மேல் தட்டினரின் வாழ்வும், அதன் சிக்கல்கள்மீதும் அவரது கவனம் அதிகம் விழவில்லை. சமூகத்தில் பேசப்பட வேண்டிய பிரச்சினைகளை அவர் தொடுகிற போதும் அவற்றுள் ஆழமாக அவர் இறங்கிச் செல்வதில்லை. முதலாளி X தொழிலாளி எனும் முரணுக்குப் பதிலாகப் பிற்போக்குத்தனம் X முற்போக்குத் தனம் எனும் சூத்திரத்தையே அவரும் சில கதைகளில் பதிலீடு செய்திருக்கிறார். அதேநேரம் மனித வாழ்க்கையை, பிரச்சினையை முன்தீர்வுகளின்றி அதன் போக்கில் அணுகுவது அவரது கதைகளின் பலமான பக்கமாகவுள்ளது. பிரச்சினைகளுக்குக் கோட்பாடுகள், நியதிகள் சார்ந்த தீர்வுகளை அவர் முன்வைப்பதில்லை என்பது இன்றைய தமிழ் வாசகனுக்கு சற்று ஆறுதலளிக்கக்கூடிய விசயம்தான்.

எண்ணிக்கை சார்ந்து அவரது கதைகள் குறைவாக இருப்பினும் ஒரு காலகட்ட தமிழ்ச் சமூக உளவியலை, சிந்தனை முறைமையை மேலோட்டமாகவேனும் பதிவு செய்பவை என்ற வகையில், அந்தக் காலகட்ட ஈழத் தமிழ்ச் சமூகம்குறித்த ஒரு கலைச்சித்திரமாகக் கருதுவதற்கு மிகத் தகுதியானவை அவரது கதைகள்.  சமரசங்கள் செய்துகொள்ளாது மானுட அவலத்தை, தனிமனித உணர்ச்சிகளை யதார்த்தமாக நந்தினி சேவியர் சித்தரித்தார். அவரது கதைகளில் வரும் மனிதர்கள் அவரது சமூகத்தின் நிஜபிம்பங்களாகவே பெரும்பாலும் தெரிகின்றனர். மறைக்கப்பட வேண்டிய அவர்களது அசிங்க முகங்களைக்கூட அவர் வெளிப்படையாக வாசகன் முன் நிறுத்தினார். மானுடத்தின் எந்த முகமும் மறைக்கப்பட வேண்டியதல்ல, எந்த உணர்ச்சியும் பூடகாமனதல்ல என்பது அவரது படைப்புலக நியதியாகும். அவரது கதைகள் அதன் நிரூபனமாக இருக்கின்றன.

மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாகக் கதை ஈழத்தில் சோஷலிச யதார்த்தவாதக் கலைக்கோட்பாட்டின் பொறுத்தப்பாட்டை உரசிப் பார்க்கும் ஒரு கதை. கதையின் பிரதான நாயகன் ரஷ்யாவின் இடது சாரி அரசுமீதும் சோஷலிச சித்தாந்தத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவன்.

“எவன் சுயநலத்தோட எங்கள விட்டு விலகினாலும் கவலையில்லை…எங்கடை கொள்கைதான் சரி…ரஷ்யா பிழைச்சிட்டுது எண்டதுக்காக எல்லாத்தையும் விட்டிட்டா இருந்தம்”

என்று அவன் (Protagonist) தன் தோழர் காந்தனைப் பார்த்துக் கேட்கிறான். எனினும் அந்தக் கதையில் வரும் காந்தன் சோஷலிசக் கருத்தியல் குறித்தும், சமூக அசைவியக்கத்தில் அதன் போதாமைகள் குறித்தும் விழிப்புணர்வு கொண்டவன். மாறும் சமூக புலக்காட்சிகளைக் கிரகித்து அடுத்த கட்டங்களை நோக்கி நகர்பவன். இக்கதையில் வரும் காந்தன் மூலம் சோஷலிச யதார்த்தத்திலிருந்தும் மனித குலம் இன்னும் மேலே செல்ல முடியும் என்ற தனது நம்பிக்கையை நந்தினி சேவியர் வெளிப்படுத்திக் காட்டினார்.

கதைகள் மிக எளிமையான சம்பவங்களை, மிகச்சாதாரன தருணங்களையே முன்வைக்கின்றன. அவரது இரண்டு தொகுதிகளிலுமுள்ள கதைகளில் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொகுப்பில் உள்ள சில கதைகளே இலக்கியத்தில் நின்று நிலைக்கத் தக்க வகையில் ஒரு சமூக வாழ்வியலை மிக ஆழமாக முன்வைக்கின்றன. பெரும்பாலான கதைகள் மிக எளிய சூத்திரங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றன. கதை இல்லாமலே சில கதைகள் சுருங்கிப் போய் இருக்கின்றன. ஆனால், ஒரு படைப்பாளியை அவனது ஒரு நல்ல படைப்பே என்றென்றும் இலக்கியவெளியில் தகவமைத்துக் கொள்ளும். அப்படிப் பார்த்தால், நந்தினி சேவியர் அவரது நல்ல கதைகளுக்காக மானுடத்தின் கலைஞனாகத் தமிழ் இலக்கியவெளியில் தனது இடத்தை உறுதி செய்கிறார்.

ஜிஃப்ரி ஹாசன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாசன்
ஓவியம்: எஸ்.நளீம்
(Visited 140 times, 1 visits today)