சிந்தனைச் சிடுக்கில் நந்தினி சேவியர்-நந்தினிசேவியர் நினைவுக்குறிப்புகள்-கோமகன்

நந்தினி சேவியர்சாதாரணப்பட்ட மக்கள் குழுமத்தை வழிநடத்த வேண்டிய சமூகப்பொறுப்பு எழுத்தாளர்களிடையே இருக்கவேண்டிய குறியீடுகளில் முக்கியமானதொன்று. ஒருவன் எத்தனையோ மாபெரும் படைப்புகளைக் கொடுத்திருக்கலாம். அந்தப்படைப்புகள் பல விருதுகளைத் தட்டிச்சென்று இருக்கலாம். ஆனால், அவன் எங்கே இருந்து இயங்குகின்றான் என்பதை வைத்தே அவனது இதர வினைத்திறன்கள் கணிக்கப்படுகின்றன.

எழுதுவது ஒன்றாகவும் இயங்குநிலையில்  கடும் பிற்போக்குவாதமாகவும் ஒரு எழுத்தாளனது நிலைப்பாடுகள் இருக்குமானால் அவனது படைப்புகள் அனைத்துமே வெறும் குப்பைகள் என்றே சொல்வேன்.

மக்கள் இலக்கியத்தை வழிநடாத்தியவர்களே எழுத்துப்பரப்பில் இன்றும் மறக்க முடியாதவர்களாக வரலாற்றில் தம்மை நிறுவியிருக்கின்றார்கள். மார்க்சிம் கோர்க்கியிலிருந்து இன்றய நந்தினிசேவியர் வரை வரலாறு இவ்வாறே தன்னைத் தகவமைத்துச் சென்றிருக்கின்றது. மிகுதி அனைத்துமே ‘காற்றில் கலையும் மேகங்களாகவே ‘இருந்து வந்திருக்கின்றன.

ஈழத்து எழுத்துப்பரப்பு என்பது பல சிக்கலான மடிப்புகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு அதிவிசேஷ இயங்குதளமாக இருந்து வந்திருக்கின்றது. அங்கே  ஒரு எழுத்தாளனது  செயற்பாடுகள்  கவனக்குவிப்புப் பெறுவதும், மௌனிக்கப்படுவதும் சட்டகங்களுக்குள் தம்மை இறுகப்பூட்டிய  ‘இலக்கியப்பூசாரிகளது’ கைகளிலேயே இருந்து வந்திருக்கின்றது. இவற்றை எல்லாம் முறியடிக்கப் பல முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும் அவைகள் தொடர் ஒதுக்குகைகளால் வலுவற்று இருந்ததையே அவதானிக்க முடிகின்றது. இந்த நடைமுறைகளையெல்லாம் முறியடித்தவர்களுள் மிகவும் முக்கியமானவர் யார் என்று என்னைக் கேட்டால் நந்தினிசேவியரையே சுட்டுவேன். ஏனெனில் அண்மையில் கொடகே வெளியீட்டில் வெளியாகிய அவரது ‘நந்தினிசேவியர் பிடித்த சிறுகதை’ நூல் எம்மிடையே வரலாற்று ஆவணமாக இருக்கின்றது. யாருமே செய்யத்துணியாத ஒரு செயலைத் தனது நூல் முலம் செய்து வரலாற்றில் தன்னை நிறுவியிருக்கின்றார்.

சகஎழுத்தாளனை /ஒரு சஞ்சிகை தொடர்பாக நான்கு வரி எழுதத்துணியாதவர்களிலிருந்து நந்தினி சேவியர் மறுத்தோடி ஏறத்தாழ 600 எழுத்தாளர்களையும் அவர்களது சிறுகதைகள் தொடர்பாகவும் எழுதி வெளியாகியதே’நந்தினிசேவியர் பிடித்த சிறுகதை’. இது ஒன்றே அவரை வரலாற்றில் நிலைநிறுத்தப்போதுமானது.

எனக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் சமூகவலைத்தளத்திலிலேயே கிடைத்தது. எனது முத்த சகோதரரது தம்பி என்று அறிந்தவுடன் என்னுடன் மிகவும் நெருக்கமானார். என்னுடன் நேர் அலைவரிசையில் அவர் பயணித்ததினால் அவரது தொடர்பு இறுகியது. அவ்வப்பொழுது உரையாடலில் பல இலக்கியசங்கதிகளை சமரசத்துக்கு இடமின்றி முன்வைப்பார். எழுத்துச் சமரசத்தையும் இயங்கு நிலையில் கூழைக்கும்பிடு போடுவதையும் அவர் அறவே வெறுத்தார். தனது அடையாளத்தை எங்கும் எந்த நிலையிலும் விட்டுத்தர அவர் முயலவில்லை. இதனால் அவருக்கும் சக எழுத்துப்பயணிகளுக்குமிடையில் ‘முழங்கைப் பிடி’ தொடர்பே இருந்து வந்தது.

‘ஒருவர் வாழும்பொழுதே கவனிக்கப்பட வேண்டும், கொண்டாடப்படல் வேண்டும். அவரது காலத்திற்குப் பின்னர் அவர் தொடர்பாக மூக்கைச் சிந்துவதை நிறுத்தப்படல் வேண்டும்’ என்ற கருத்துருவாக்கப் போக்கில் அவர் இறுதிவரை உறுதியாகவே நின்றார். 

எனக்கு அவரில் பிடித்ததே அவரது வித்தகச்செருக்குத்தான். இரண்டு வருடங்களுக்கு முதல் எனது இரண்டாவது நேர்காணல் தொகுப்பிற்காக அவரை நேர்காணல் செய்ய விரும்பி அவரைத் தொடர்பு கொண்டேன். நேர்காணலுக்கு அவர் அத்தனை இலவுகாகச் சம்மதம் சொல்ல வில்லை நானும் விடாது நல்லது கெட்டதுகளைச் சொல்லி இறுதியில் ‘தான் தருகின்ற பதிலில் எந்தவிதமான செம்மைப்படுத்தலும் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையின் அடிப்படையில் நேர்காணலைத்தர சம்மதம் சொல்லியிருந்தார். ஆனால் எனது ஆசை நிராசையாகவே போய் விட்டது.  அவர் இல்லாத இடத்தில் நாங்கள் எல்லோரும் செய்ய வேண்டியது என்னவென்றால் அவர் செய்தவற்றையெல்லாம் காயத்தால் உவத்தல்களுக்கப்பால் நாம் செய்வதே நாங்கள் அவருக்குகொடுக்கின்ற மரியாதையாகும்.

கோமகன்பிரான்ஸ்       

ஓவியம்: டீன் கபூர்

 

 

 

(Visited 61 times, 1 visits today)