படைப்புகளில் ஒலிக்கும் ஒரேயொரு குரல்-நந்தினிசேவியரின் நெல்லிமரப்பள்ளிக்கூடத்தின் ஊடான பார்வை-தருமராசா அஜந்தகுமார்

நந்தினி சேவியர்னித வாழ்வில் கலை, இலக்கியம் என்பதேன் முக்கியமானது? மனிதர்கள் ஏன் இலக்கியத்தைத் தெரிவுசெய்கின்றார்கள்? இக்கேள்விகளுக்கான பதில்கள் ஒவ்வொருவருக்கு  ஏற்றவாறு மாற்றமடையும். மனித வாழ்வின் மேன்மைக்கும், கீழ்மைகளிலிருந்து மானுடத்தை மீட்டெடுப்பதற்கும் பயன்படவேண்டிய இலக்கியம் உண்மையில் அதன் இயங்கியலில் உன்னதம் காண்கின்றதா என்ற கேள்வி மேலெழுவது வழமையானது. ஆயினும் சில படைப்பாளிகளுக்கு அது மானுடத்தேடலுக்கான கருவிதான்.  அந்த இலக்கியத்துக்குள்ளால் அந்த எழுத்தாளனின் ஆத்மாவைத் தரிசனம் செய்யவும் விசாரணை செய்யவும் முடியும்.  தனியே ஒரு பிரசாரகனாக வேடமணிந்து கொள்ளாமல் வீறார்ந்த மொழியுடனும் கலையளிக்கையுடனும் அழகியலின் வாளிப்புடனும் அவன் படைப்பைத் தரும்போது ஏற்படும் அபூர்வமான தருணங்கள் முக்கியமானவை.

எழுத்தையும் அவன் வாழ்வையும் பிரித்துவேறுபடுத்த முடியாததாக இருக்க வேண்டும். தீவிரமான அந்தக்குரலை படைப்புகளில் வெவ்வேறு கதைகளுக்குள்ளால் வெவ்வேறு பாத்திரங்களுக்குள்ளால் அவன் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளில் மிக முக்கியமான ஆளுமையாக நந்தினிசேவியர் அவர்களைக் குறிப்பிடலாம்.

தே.சேவியர் என்ற இயற்பெயரை உடைய இவர் 1967 இல் சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய ‘பாரம்’ என்ற சிறுகதை மூலமாக இலக்கிய உலகுக்கு நுழைந்தார். ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’(1993), நெல்லிமரப் பள்ளிக்கூடம்(2011)  நந்தினிசேவியர் படைப்புகள்(2014) ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அண்மைக்காலமாக ‘பிடித்த சிறுகதை’ என்ற தொடரை எழுதிவந்தார். வேறுபாடு பார்க்காமல் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு முதன்மைகொடுத்து பலரை அறிமுகப்படுத்தினார்;. அதன் முதலாவது பகுதி கொடகே வெளியீடாக வந்திருந்தது.(2019) அடுத்த தொகுதிகளையும் வெளியிடும் ஆர்வமும் கொண்டிருந்தார். இறப்பதற்கு ஒருவாரம் முன்பும் எழுதிக்கொண்டே இருந்தார்.

மார்க்சியத் தளத்தில் நின்று இயங்கிய ஒரு முற்போக்குப் படைப்பாளியாக விளங்கினார். ஆயினும் தனது படைப்புகளைச் சுலோகத்தைப் போலவோ சுவரொட்டியைப் போலவோ பிரசாரமாக்காமல் அவற்றைக் கலைத்துவம் மிக்கதாக வெளிக்கொணர்ந்தார். இதனைத்தான் ரவிக்குமார் அவர்கள் ‘ குரலை உயர்த்தாமலேயே கொதிப்பை வாசகனுக்குக் கடத்த முடியும் என நிரூபிப்பவை இவரது சிறுகதைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போலவே பேராசிரியர் செ.யோகராசா அவர்களும்,

‘ ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஓட்டம்பற்றிக் கவனிக்கும் ஒருவர் ஈழத்து முற்போக்கு அணிசார்ந்த எழுத்தாளர்கள் பலரும் பிரசாரப் பண்பு, வாய்ப்பாட்டுத்தன்மை, உருவம் அமைதி பேணப்படாமை  என்ற பண்புகள் பெற்றமைந்திருப்பதை அவதானித்திருப்பர். மாறாக அதே முற்போக்கு அணிசார்ந்த நந்தினிசேவியரது சிறுகதைகள் கலாபூர்வமான சிறுகதைளாகத் திகழ்ந்திருப்பதைக் கண்டிருப்பர்’

என்று குறிப்பிடுகின்றார். தான் சார்ந்த கொள்கைக்காகத் தொடர்ந்து சிந்தித்தவர். தனது காலத்தில் தான்கண்டவற்றை, அறிந்தவற்றை சிறந்த நினைவாற்றலுடன் எழுதியும் பேசியும் வந்தவர்.  இவரது ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதைத்தொகுதியூடாக இவரது ஆளுமையைத் தரிசிப்பதே எமது நோக்கமாகும்.

கொடகே வெளியீடாக 2011 இல் ‘நெல்லிமரப்பள்ளிக்கூடம்’ என்ற தொகுதி வெளிவந்தது.  கொல்லப்பட்ட அவரது மகனுக்கு இத்தொகுதியைச் சமர்ப்பித்துள்ளார். எட்டுச்சிறுகதைகளும் அவரது ஆத்மாவின் கீதங்களாக வாசகனை வந்தடைந்து அலைக்கழிக்கின்றன. 1970 – 2004 காலப்பகுதியில் எழுதப்பட்ட இச்சிறுகதைகளில் ஏதொவொரு நூலிழை பின்னிக்கிடப்பதையும் ஒரு கதையின் வெவ்வேறு தோற்றங்களாய் அவை மனதை வந்து சேருகின்றன. இலட்சியம் தவறாத ஒரு படைப்பாளியின் படைப்புகள் சுருதி மாறாமலே வெவ்வேறு அர்த்தங்களில் வந்தடைய முடியும் என்று இனங்காண முடிகின்றது.

‘மேய்ப்பன்;’ கதையில் மகன் காணாமல் போய்விட, தனது மருமகளை கந்தசாமிக்குத் திருமணம் செய்து வைப்பதால் ஒதுக்கப்பட்டாலும் தனித்துநிற்கும் சங்கிலித்தாம் கிறகோரி, படகுவிபத்தில் குடும்பத்தினரை முழுமையாக இழந்தாலும் ‘தனிச்சமையல், தனித்தொழில். எல்லாருக்கும் உதவி, தொழில் ஆசான், மதிப்பிற்குரிய சீவன்’ ஆக ஒற்றைத் தென்னையாக நிற்கும் சந்தியாக்கிழவன், சொர்க்கக்கதையை விட்டுவிட்டு நரகமாய் இருக்கும் வாழ்க்கையை மாற்றக் கொள்கை உறுதியுடன் – தமையனான சுவாமியாரையே எதிர்த்துக் கதைக்கும் எட்வேட், ‘தவனம்’ கதையில் இனவெறிச் சூழலுள் எதையும் எதிர்கொள்ளத் துணிவாக இருக்கும் ‘அந்தப் பாத்திரம்’, பல எதிர்ப்புகளைத் தாண்டியும் விமர்சனங்களைத் தாண்டியும் சரியான வழியில் செல்கின்றேன் என்று உறுதியுடன் இயங்கும் ‘எதிர்வு’ சிறுகதையில் வருபவரும், விருட்சங்களைப் பற்றிச் சொல்லும் ஞாபகமனிதனும் நந்தினிசேவியர் என்ற உறுதிகுலையாத படைப்பாளியின் வெவ்வேறு குரல்களே – முகங்களே.  அவை கட்சிக்காரனின் குரல்களாகத் தெரியவில்லை. சத்தியக்குரல்களாகவே தெளிவாக ஒலிக்கின்றன. ஒலிக்கின்றன என்பதைவிட மௌனத்தை உண்டாக்கி – எம்மை ஸ்தம்பிக்க வைத்து, அடுத்த கணம் துடித்து –  மீண்டும் இயங்கவைக்கின்றன. நாவலுக்கு இருக்கவேண்டிய தத்துவவிசாரங்கள் இவரது சிறுகதைகளில் தாராளமாக மினுங்கித் தம்முடன் கதையாட அழைக்கின்றன.

பல இடங்களில் சிறுகதைக்குரிய பொதுப்பண்புகளை மீறும் கட்டுடைப்பும், சொல்லிற்கு அப்பால் அர்த்தத்தை விரிக்கும் பூடகமும், அனுபவத்தைச் செறிவான மொழியில் இலாவகமாகச் சொல்லிச் செல்லும் கலாபூர்வமும், தானே வரித்துக்கொண்ட தனது குரல் மாறாத தொனியும் இப்படைப்புகளில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கின்றன.  இவரது இதயத்திலிருந்து பிறந்த இந்தக்கதைகள், உடல்முழுவதும் ஓடித்திரியும் இரத்தம்போலத் தொகுதி முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த இயல்பே சேவியரின் பலமாகும்.

மதம், இனம், பிரதேசம், சாதி, போர் என்ற பல சூழமைவுகளில் கருக்கொண்டிருக்கும் இக்கதைகள் அநீயைப் பொறுக்கமுடியாத, எப்போதும் துணிவையே கவசமாய் அணிந்திருக்கும் படைப்பாளியின் குரல்கள்.  மன்னிக்கவும் குரல்கள் அல்ல குரல். அவை ஒருமையை அவாவும் ஒருவனின் சுருதி மாறாத இதயத்துடிப்புகள்.

‘மேய்ப்பன்’ என்ற சிறுகதை கடற்கரைப்பகுதியைச் சேர்ந்த புனித தோமையர் ஆலயத்தைக் கடினப்பட்டு கட்டியெழுப்பிய சங்கிலித்தாம் கிறகோரியின் கதை. அவரது மகன் காணாமல்போய்விட மருமகள் திரேசாவிற்கும் கந்தசாமிக்கும் இருந்த தொடர்பை அறிந்து அவராகவே துணிந்து மறுமணம் செய்துவைத்துவிடுகின்றார். மறுமணமும் அதைவிட மதம்மாறிய திருமணமும் ஊரவர்களிடம் எதிர்ப்பை உருவாக்கிவிட கோவிலில் பூசை இல்லாதபோதும் சுவாமியார் இல்லாதபோதும் ஆட்கள் வராதபோதும் தனித்து அங்கேயே இருந்து கோவிலைப் பற்றியே உறுதியோடு சிந்திக்கின்றவராகக் காட்டப்படுகின்றார். இறுதியில் கோவில் செலவுக்காகக் கடலுக்குப்போனவர் அப்படியே இறந்துவிடுகின்றார். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்போது தனிமனிதனுக்கு இந்தச் சமூகம்கொடுக்கும் தண்டனையையும் அதையும் மீறி அவனிடம் முனைப்புப்பெறும் உறுதியையும் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.

‘ஒற்றைத் தென்னை’ சிறுகதையில் – ஒற்றைத்தென்னையின் வழிகாட்டலும் உறுதியும் இச்சிறுகதையில் சந்தியாக்கிழவனைக் குறிக்கும் குறியீடாக இயல்பாகவே வெளிக்கொணர்கின்றார். இச்சிறுகதையில் வரும் சந்தியாக்கிழவனைப்போலவே பல இழப்புகள் – பிரச்சினைகள் நடுவே சேவியரும் இலக்கியத்துக்காகத் தனது இலட்சியத்துக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார். ‘எத்தனையோ மழை புயலுக்கும் அசையாது நிலைத்து நிற்கும் அத்தனிமரம்’ நந்தினிசேவியராகவே தெரிகின்றது.

வர்க்கவேறுபாடுகளுக்கு எதிராகத் தீவிரமாக ஈடுபட்ட சேவியர் அவர்களின் ‘கடலோரத்துக் குடிசைகள்’ என்ற சிறுகதை முக்கியமானது. தமையன் மரியசேவியர் வணத்துக்குரிய போதகராகவும், தம்பி எட்வேட் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் சாப்பிடும் உணவின் பேதமும் ஏற்ற இறக்கமும் காட்டப்படுகின்றது.  பைபிளில் வரும் ஒரேயொரு வசனம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றார் எட்வேட்.

‘மரங்களின் வேர்களின் அருகே கோடாலிகள் போடப்பட்டுள்ளன. நற்கனிகொடாத மரங்கள் அத்தனையும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.’

பழைய ஞாபகங்களில் பயணம் செய்து நிகழ்காலத்தின் வெம்மைக்குள் அழைத்து வந்துவிடும் சிறுகதைகளாக நெல்லிமரப் பள்ளிக்கூடம், விருட்சம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அச்சொட்டான அழுத்தமான ஞாபகப்பதிவுகளுக்கு அப்பால் – விரிந்துசெல்லும் சிந்தனைச் சிதறல்கள் வாசகர்களிடம் வந்துசேர்கின்றன. ‘கிணத்துக்கட்டில ஏறித் துலாக்கயித்தைப் பிடிச்சதுக்காக’ காட்டிக்கொடுக்கப்படுவதும், அதைக் காட்டிக்கொடுத்த ஜீவகாருண்யம் என்ற பெயரின் முரணும், இரண்டாம் ஆண்டு படித்தவனுக்கு தும்பு பறக்க விழுந்த அடியும் அந்த அடிக்காகப் பாடசாலைக்குபோவதில்லையென உறுதியாக இருந்த கிராமமும்…இறுதியில் சிதைந்துபோன நெல்லிமரப்பள்ளிக்கூடமும் என்று  இவை உணர்த்தும் கிளர்த்தும் கதைகள் வழி, சொல்லப்படாதவை பலவற்றை அமைதியான தொனியில் சேவியர் எமக்குள் கொண்டுவந்து விடுகின்றார்.

நினைவுகளால் கிளைபரப்புகின்றது ‘விருட்சம்’ என்ற சிறுகதை. இந்த விருட்சம் கதை சமூகத்தின் கதையை, இனத்தின் கதையை, போராட்டத்தையெனப் பல விடயங்களைப் பேசுகின்றது. இந்த விருட்சம் கதை உருவாக்கும் நிழல்கள் படைப்பை இன்னொரு தளத்தில் வாசிக்கத் தூண்டுகின்றன. இச்சிறுகதை சேவியரின் எழுத்தின் இன்னொரு பரிணாமமாக மாற்றம் காண்கின்றது. விருட்சம் கதைகளுக்குப் பின்னால் பல நிழல்கதைகளை இட்டு நிரப்பும் இடைவெளிகள் வாசகனுக்குத் தாராளமாகவே கிடைக்கின்றன.

மூச்சுமுட்டப் பேசிக்கொண்டே இருக்கக் கூடியவர் சேவியர். அவரது படைப்புகளிலும் ஒருவேகம் இருக்கிறது. ஆனால் என்ன ஒரு ஆச்சரியம் அவை வாசகனின் சிந்தனைக்கான இடைவெளியை விட்டுக்கொண்டே நகர்ந்துசெல்கின்றன. வாசகனது புத்தியை அவமதிக்கவோ தனது பிரசாரக் குரலால் வாசகனை மூழ்கடிக்கவோ விரும்;பாது அவர் உருவாக்கும் மௌனங்களே அவரது பலமாக மேற்கிளம்புகின்றது.

படைப்பு என்பது தனியே, கதை கூறுவது அல்ல. அக்கதைக்குள்ளால் ஆழ்ந்த கவியுள்ளத்தையும் கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அடக்குமுறைகளுக்கு அடங்காது திமிறும், ஓலமிடா எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்துகின்றார் சேவியர்.

இந்தச்சிறுகதைகளை இனி எழுதாமல் இருக்க முடியாது என்ற கட்டத்திலேயே அவர் எழுதியிருக்க வேண்டும். எழுத வேண்டும் என்பதற்காக இவை எழுதப்பட்டவையாகத் தெரியவில்லை. ஒருவர் எம்மை அடக்கும்போது, அடிக்கும்போது, துன்புறுத்தும்போது தாங்க முடியாது திமிறி எமது கரங்கள் உயர்வதுபோலவே இவரது கரங்களும் எழுத்தாயுதத்தை ஏந்தியிருக்கின்றது.

ஒருகொள்கைக்காக வாழ்ந்த ஒருவன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களையும், இழப்புகளையும், அப்போது வெளிப்படும் உறுதியையும் இச்சிறுகதைகளில் காண்கின்றோம். நாம் சேவியர் என்ற படைப்பாளியை இழந்திருக்கலாம். ஆனால் உறுதிகுலையாத துணிச்சலான புன்னகையுடன் இக்கதைகளில் சேவியர் நடமாடித் திரிவதை நாம் கண்டுகொள்கின்றோமே. இது போதாதா அமரனாய் படைப்பாளி வாழ்வான் என்பதற்கு?

தருமராசா அஜந்தகுமார்இலங்கை

தருமராசா அஜந்தகுமார்

(Visited 295 times, 1 visits today)