போய்வருக நீர்வை……… போய்வருக!! நீர்வைக்கு செவ் அஞ்சலி-நந்தினி சேவியர்

நீர்வை பொன்னையன் ஒரு வேடிக்கை.! இவருக்கு தன்னைத் தவிர வேறுயாருமே முற்போக்களர் இல்லை என்ற மமதை இருக்கிறது. இவரது இலக்கிய ஆரம்ப சகபாடிகளை வசை பாடுவதை அவர்களைப் பற்றி தூற்றி எழுதுவதை இவர் பின்நாட்களில் செய்து வந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தம்மோடு இருந்தவர்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. இவர் ஒன்றும் அப்பழுக்கற்றவர் இல்லை. என்னை விட்டு விடுங்கள். இவர் என்னை முற்போக்கு எழுத்தாளராக ஏற்றுக் கொள்ள வில்லை அது பற்றிப் பரவாயில்லை. ஆனால் மு.பொ. எ. சங்கத்தில் தொடர்ந்து இவரோடு பயணித்த சிலரையே இவர் அடையாளப் படுத்தாது புறக்கணித்தது மிக கண்டிக்கக் கூடிய ஒரு செயலாகும்.

மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள், வரலாற்றை ஒரு போதும் மறைக்கவோ, திரிபு படுத்தவோ மாட்டார்கள். அப்படி திரிபு படுத்துபவர்கள் மார்க்சிய போர்வை போர்த்தவர்கள் என்பதை நான் கண்டிப்பாக கூறுவேன்.

இவர் முற்போக்கு இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவரை நான் எனது துரோணாச்சாரியார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டவன். பிறரை விமர்சிக்கும் இவர் சுயவிமர்சனம் செய்யவேண்டும் இது எனது பேரவா.

00000000000000000000000

” ரத்தச் சுவட்டில் ஒரு அடி…….”

1969 ம் ஆண்டு. UNP ஆட்சி. அவ்வாண்டு மேதினமும், வெசாக் பூரணை தினமும் ஓரே நாளிலேயே வந்தது. அரசு அத்தினத்தை புனித நாளாக பிரகடனப் படுத்தி மே தின ஊர்வலத்திற்கும் கூட்டங்களுக்கும் தடைவிதித்திருந்தது. அது எங்களின் புனித தினம்! சிக்காக்கோ நகரதில் எட்டுமணி நேர வேலைக்காக ரத்தம் சிந்தி, உயிர்த்தியாகம் செய்து பெற்ற தினம். திரிபு வாதிகளும் மாற்றுக் கட்சிகளும் ஏப்ரல் 30 ம் திகதியே மே தினத்தை நடத்தினர். நமது புரட்சிகரக் கட்சி அந்த தடைகளை மீறி மே.1 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊர்வலத்தையும் கூட்டத்தையும் ரத்தம் சிந்தி நடத்தியது. அந்த தந்திரோபாய நிகழ்வை சுமார் 10 ஆண்டுகளின் பின்1979 ல் சற்று கற்பனை கலந்து வீரகேசரியில் இவர் எழுதிய கதைதான் இது.

00000000000000000000000

நீர்வேலியில் 1930 ல்பிறந்த இவர் மட்டக்களப்பில் ஆங்கில ஆசிரியராக இருந்து. பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளமானி பட்டம் பெற்றவர். அரச வேலை கிடைக்காத இவர் தொழிற்சங்க முழுநேர ஊழியரானார். இவரது முதற்கதை “புயல்” 60 ம் ஆண்டு ஈழநாட்டில் பிரசுரமானது. அதன் பிறகு, தேசாபிமானி,தினகரன்,வீரகேசரி,கலைமதி,தாமரை,தமிழன், வசந்தம் ஆகியவற்றில் நிறைய எழுதினார். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கதைகளை இவர் எழுதியிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

கட்சி பிளவடைந்தபோது சீனச் சார்பு எடுத்தவர். முற்போக்கு எ.சங்க உறுப்பினராக ரஸ்ய சார்பினருடன் செயற் பட்டவர்.

இலங்கையின் சீன ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றியவர். சிறிமா ஆட்சிகால 70-பதுகளில் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றியவர். யுத்தம் உக்கிரம் கொண்ட காலமான 90 களில் திருமதி கைலாசபதியுடன் இணைந்து ஒரு தன்னார்வ நிறுவனத்தில் கடைமையாற்றினார்.

2000 ஆண்டு விபவி கலாச்சார மையத்தில் தமிழ் பிரிவில் இணைப்பாளராக இருந்து விபவி செய்திமடலை வெளிக்கொணர்ந்தார். இவற்றை எல்லாம் ஒரு சுயவிமர்சனத்தோடு இவர் திரும்பிப் பார்க்க வேண்டும். இன்னொரு விதத்தில் இவர் புறக்கணிப்புக்காளாகியிருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொண்டாகத்தான் வேண்டும்.

இவரது நூல்கள்:

01 மேடும் பள்ளமும் 1.ம் பதிப்பு 1961.(மக்கள் பிரசுராலயம்) 2ம் பதிப்பு 2003. மீரா பதிப்பகம்) . 1961 ல் சாகித்திய தேர்வில் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்காமல் தவிர்க்கப் பட்டது.

02 உதயம் 1970. இதுவும் JVP. சார்பானது என சாகித்திய இறுதிச் சுற்றுக்கு வந்தும் தவிர்க்கப்பட்டது. (இந் நூலின் அறிமுக நிகழ்வு.யாழ்/கே.கே.எஸ். வீதியிலுள்ள “கில்னர்”கல்லூரி மேல் மாடியில் நடந்தது. நீர்வை நிகழ்வுக்கு வரவில்லை. நான் பார்வையாளனாகக் கலந்து கொண்டேன். 70 ன் பிற்கூறு)

03 பாதை 1997.

04 வேட்கை 2000.

05 ஜென்மம். ( சகோதர சிங்கள ஒவியர் ஒருவரால் வரையப்பட்ட மூவர்கதைகள் அட்டைப் படமே இத்தொகுதிக்கும் பாவிக்கப்பட்டிருந்தது.)

06 உலகத்து நாட்டார் கதைகள் 2001.

07 மூவர் கதைகள் 1971.( நீர்வை, யோகநாதன்,கதிர்காமநாதன்)

08 நீர்வை பொன்னையன் சிறுகதைகள். 2007. (23 கதைகள்.)

09 முற்போக்கு இலக்கிய முன்னோடிகள். 2002.

10 நாம் ஏன் எழுதுகிறோம் 2004.

11 நினைவுகள், நினைவுகள் அழிவதில்லை 2012.( தனது மன வக்கிரத்தைக் கொட்டிய நூல்)

12 நீர்வை பொன்னையன் இலக்கியத் தடம். (Dr. M.K. முருகானந்தன்) 2008.

முற்போக்கு இலக்கியப் பேரவை சார்பாக தனது நூல்களை மாத்திரமல்ல முற்போக்கு சிறுகதைகள் ,போல ஏனையவர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார்.

எனக்கும் இவருக்கும் எதுவித தனிப்பட்ட கோபமும் இல்லை. ஒருவிதத்தில் 1961ல் இவரது ‘மேடும் பள்ளமும்’ இறுதித் தேர்வுக்கு வந்து நிராகரிக்கப்பட்டது போல் 1994 ல் இறுதிச் சுற்றுக்கு வந்த எனது ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ தேர்வுக்குழுவில் இருந்த நண்பர்களின் அசமந்தப் போக்கால் நிராகரிக்கப்பட்டது.

நீர்வை தன்னை நிராகரித்த அந்த தேர்வுக்குழு நண்பர்களோடு இன்றும் கோபமாக இருக்கிறார். நானோ உரத்த தொனியில் என்னை நிராகரித்த நண்பரோடும், மௌனம் காத்த நண்பரோடும் இன்றும் நட்பைப் பேணுகிறேன். யார் நிராகரித்தால் என்ன? 2014 ல் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம் ‘ தொகுப்புக்கு சாகித்தியப் பரிசை நான் பெற்றேன். அதே போல் நிராகரித்த அந்த நிறுவனம் சென்ற ஆண்டின் “சாகித்திய ரத்தினா” விருதை வழங்கியிருக்கிறதே இதைவிட பெரிய தகுதி என்ன வேண்டும்?

முற்போக்கு இலக்கிய முன்னோடியே, என் போன்றவர்களின் துரோணாச்சாரியே.! மீளவும் நான் கூறுகிறேன் தோழர் மா.ஓ. வின் மாணவர்கள் நாம் விமர்சனம்,சுயவிமர்சனம் எனும் ஆயுதத்தைப் பயன் படுத்துவோம்…………..உற்சாகமாக!!

நந்தினி சேவியர்-இலங்கை

நந்தினி சேவியர்

(Visited 73 times, 1 visits today)