பெண்ணியம் பற்றி  ஆண்களும் பேசவேண்டும்… கட்டுரை-பவானி தம்பிராஜா

பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.

பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றைக் களைய முற்படும் இயக்கமாகும்.அதன்மூலம் உலகளவில் அரசியல், பண்பாடு,பொருளாதாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும்.  பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல, சமூகத்தையே மாற்றியமைக்க முயல்வதாகும்

தெற்காசிய நாடுகள், பெண்கள் சமூகம், அலுவலகம், குடும்பம் போன்றவற்றில் ஒடுக்கப்படுவது பற்றிய விழிப்புணர்ச்சியையும் அத்தகைய இழிவுபடுத்தும் போக்கினை மாற்றியமைக்க ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படும் தன்மையைப் பெண்ணியம் கொண்டுள்ளது.

சில நண்பர்கள், “பெண்ணியம்” குறித்து, அது ஏதோ பெண்கள், ஆண்களுக்கு எதிராக தேவையின்றி புகழுக்காக,பரபரப்புக்காக பண்ணும் அரசியலாக நினைக்கிறார்கள்.ஆணாதிக்க சமூகம் என்ற ஒன்றில்லை, பெண்களுக்கு ஆண்களை போல அத்தனை உரிமைகளும்… தேவைகளும் கிடைப்பதாகவும், தேவையின்றி “பெண்ணியம்” பேசுவதாகவும் பதிவுகளில் எழுதி வருகிறார்கள். அவர்களுக்கான ஒரு நீண்ட விளக்கம் இது.

பெண்ணியமானது பல்வேறு குறிக்கோள்களை உள்ளடக்கியதாக உள்ளது:

*பெண்ணியம் என்பது அனைத்து வகைப் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க போராடுதல்.

*ஆண், பெண் இருபாலரும் சமத்துவ உரிமைகளை ஒருங்கிணைந்து நிலைநாட்டுதல்.

*பெண்கள் தாம் மேற்கொள்ளும் அனைத்துவகை வாழ்க்கை முறைகளுக்கும்,பணிகளுக்கும் உரிமையுடைவர்களாக இருத்தல்.

*பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கட்டுப்படுத்துவனவற்றையும் அவர்களின் முன்னேற்றத்திற்கு கேடுவிளைவிப்பனவற்றையும் நீக்குதல்.

*பெண்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஒருங்கிணைத்து, இயக்கமாக்கி உரிமைகளுக்காகப் போராடச் செய்தல்.

*பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை நிலைநாட்டுதல்.

*ஆணாதிக்கத்தை அடையாளம்கண்டு அதனை அறவே களைதல்.

*பெண்களின் மீதான அனைத்துவகை ஒடுக்குமுறைகளையும் ஆராய்ந்து அவற்றைப் போக்குவதற்கான தீர்வுகள் மற்றும் விடுதலைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுதல்.

*பெண்களின் நலனைப் போற்றுதலும் அதனை அடைதலும் அடைந்தவற்றைக் காத்தலும்.

இயற்கை செய்த அற்புதம் பெண்மை என்பது வேறு ஆண்மை என்பது வேறு. ஆண் பெண் சமத்துவம் என்பது பெண்களும் ஆண்களும் தத்தமது வலிமைகளையும் பலவீனங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்து தத்தமது திறன்களை வளர்த்து செம்மையான முறையில் அந்தத் திறமைகளைப் பயன்படுத்துதலாகும்.

தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

பெண்ணியவாதி ஆணும் பெண்ணும் இணையாக ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுத்து, விட்டுகொடுத்து வாழும் இணையான வாழ்கை என்பது ஒரு குடும்பம் மற்றும் ஒரு சமூகத்தின் தேவை என்பதை நன்கு உணர்ந்தவள். ஆனால் அப்படிப்பட்ட வாழ்கை, நம் சமூகத்தில் எத்தனை பெண்களுக்கு வாய்க்கிறது ? ஏன் அப்படி அமைவதில்லை ? இங்கு தான்  “ஆணாதிக்க சமூகம் ” என்ற சிந்தனை வருகிறது.

பெண் ஆரம்ப கால நடைமுறைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, தடைகளைத் தாண்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி எப்போதும் முன்னேறியே வந்திருக்கிறாள். ஆனால், சில ஆண்கள் எவ்வளவு படித்தபோதும், அறிவியல் ரீதியான முன்னேற்றங்களை அடைந்தபோதும், மனதளவில் ஆரம்பப் புள்ளியில் நின்று கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஆதிக்க மனோபாவத்திலிருந்து முற்றிலும் விடுபடத் தயாராக இல்லை. அதனாலேயே, தன்னைவிட மேலானவளாகப் பெண் மாறும்போது அவளைக் கீழே தள்ளச் சற்றும் தயங்குவதில்லை.

மனிதர்கள், ஒழுக்கநெறிகளுக்கு உட்பட்டு வாழ்வது தான் கூட்டு வாழ்க்கைக்கு , சமூகத்திற்கு உகந்ததது. ஆனால் அத்தகைய வரையறைகள் ஆணுக்கு ஒன்றாகவும் பெண்ணுக்கு வேறாகவும் அமையும் போது தான், இந்த சமூகம் ஆண் – பெண் இருவரையும் சமமாக பார்க்கவில்லை என்ற நிலை எழுகிறது.

இன்னொன்று, பாலியல் வன்முறைகள் அரசியல் காரணமாக நடந்தாலும் சமூக சீர்கேட்டினால் நடந்தாலும் அத்தகைய குற்றங்கள் நிகழ காரணம் ஆணாதிக்க சூழல் என்பதை  மறைக்கின்றனர். ஒரு பெண் மீதான, அவளது உடல் மீது நிகழ்த்தும் வன்முறையில் வகை தொகை ஏன் பிரிக்கவேண்டும்?  ஒரு பாலியல் பெண்மீதான வன்முறைக்கு நியாயம் வேண்டி அந்தப்பெண் குரல் கொடுக்கிறாள். பாலியல் தொழில் செய்வது அவளது நிர்பந்தமாகவோ, இல்லை விருப்பமாகவோ இருந்துவிட்டு போகட்டும், அத்தகைய பெண்களின் மீது பாலியல் வன்முறைகள் நடத்துவது நியாயமா என்ன? ஒழுங்கான உடை உடுத்தும் பெண்களுக்கு மட்டும் தான் தன் மீது நிகழ்த்தும் பாலியல் கொடுமைகளுக்கு நியாயம் கேட்க முடியுமா ? ( இன்னொரு கேள்வியும் எழுகிறது அவள் தான் கவர்ச்சி காட்டவில்லையே  அந்த பெண் மீதும் ஏன் இந்த கொடுஞ்செயல் நிகழ்த்தப்படுகிறது ?) சட்டங்கள், பாதுகாப்பு , உரிமை எல்லோருக்கும் பொதுவானது தானே?

எத்தனை ஆண்கள் பாலியல்ரீதியான வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் ? ஒழுக்ககேடான ஆண்கள் எத்தனையோ பேரை பார்க்கிறோம். மதுவுக்கு அடிமையாகிறவர்கள் ,போதைக்கு அடிமையானவர்கள், மோசமாக உடை உடுத்துபவர்கள், அநாகரிகமாக நடப்பவர்கள் … எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஒரு கொலைக்குப் பின்னோ, வன்முறைக்கு பின்னோ பலியான ஆண்களின் நடத்தை குறித்த விவாதம் காரணமாக வைக்கப்பட்டு , அத்தகைய ஆண்கள் குற்றம் நடக்க தூண்டியதாக சொல்லப்பட்டிருக்கிறதா ? இரவில் தனியே நடந்து வந்தது ஒழுக்ககேடு, ஊர் சுற்றியது அதை விட கேடு…அதனால் தான் திருடன்,கொள்ளைக்காரன் தூண்டப்பட்டு, அவனை அடித்து கொன்றுவிட்டான் என்று சொல்லலாம் இல்லையா ? ஆண்களின் ஒழுக்கம் என்றுமே விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஏன் ?

தனிமனித ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானது. கற்பு நிலை எனில் அது இருவருக்கும் பொதுவில் வைக்க இந்த சமூகம் என்று முன்வருமோ அன்று சமமான நிலை என்று ஒத்துக்கொள்ள இயலும்.

பாலியல் வன்முறைகளை மேற்கொள்ளும் மனிதன் மனநிலையில் பிறழ்வு கொண்டவன், அத்தகைய மனிதனின் நடவடிக்கைகளை  உங்கள் ஆணாதிக்க சிந்தனைகள் மூலம் நியாயப்படுத்தாதீர்கள். அத்தகைய மனிதன் பெண்கள் எத்தனை ஆடைகளை கொண்டு உடலை மறைத்தாலும் பெண்கள் மீதும் ஏன், பெண்குழந்தைகள் மீதும் கூட பாலியல் வன்முறைகளை நிகழ்த்துகிறான். அவ்வாறான நிகழ்வுகளில் குற்றம் அந்த ஆணினுடையது.அத்தகைய பிறழ்வுகள் சமுதாயத்தில் பரவலாக நடந்தால் அந்த சமூகத்தின் அடிப்படையில் ஏதோ பிறழ்வு இருக்கிறது என்று பொருள். அந்த  பிறழ்வுகளை நியாயப்படுத்தும் நிலையை தான் “ஆணாதிக்க நிலை” என்கிறோம்.

ஆணாதிக்க நிலையை, பல நிலைகளில் காணமுடியும். நமது சமூகம் தந்தைவழி சமுதாயமாக , நிலஉடமை சமுதாயமாக மாறிய பிறகு, பெண்கள், ஆண்களின் உடமைகளாக பார்க்க நேர்ந்ததால், நம் சமூகத்தில் ஆழமாய் ஆணாதிக்க நிலை பன்முகம் காட்டுகிறது. ஆண்களுக்கு , அவர்கள் விரும்பிய படிப்பு ,தொழில்,கலை, வாழ்க்கை, அன்றாட தேவைகள் ஆகியவற்றை அடைய பல தடைகள் இருக்கலாம், ஆனால் அவை அவனது பாலினத்தால் சாத்தப்படும் தடையாக ஒருபோதும் இருப்பதில்லை. ஆனால் ஒரு பெண் அவளது ஒவ்வொரு இயக்கத்திலும், இப்படி தான் இயங்கவேண்டும் என சமூகம் அவளை நிர்பந்தப்படுதுவது கண்கூடு.அந்த தடைகள் ,அவளது ஆசைகளை, கனவுகளை , இலட்சியங்களை, வாழ்கையை ஒரு கூட்டிற்குள் முடக்குவதை தான் “ஆணாதிக்க நிலை” என்கிறோம். இந்த ஆணாதிக்க மனநிலை ஆண், பெண் இருவரின் மனநிலையிலும் அழுத்தமாய் வளர்க்கப்படுகிறது.

குடும்பத்தில் ஆரம்பித்து, பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில், எண்ணங்களில்,விருப்பங்களில் என ஒவ்வொரு நிலையிலும் மறுக்கப்படும் உரிமைகளும் , சிதைக்கப்படும் நியாயமான உணர்வுகளும் எத்தனையோ உள்ளது. எடுத்துகாட்டாக, திருமணமின்றி தனித்து வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் சங்கடங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. அதே போல் திருமண முறிவு ஏற்படுத்தும் விளைவுகள் ( சமூகத்தின் எதிர்வினை ) இருபாலாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பெண்கள் இப்படிப்பட்ட சூழல்களில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், ஆணாதிக்க மனநிலை கொண்ட சமூகத்தால் நிகழ்பவை.

ஆண் ஆதிக்கம் என்பது சில சமூகங்களில் இரத்தத்திலேயே ஊறியிருப்பதும், தமக்கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயம் என்ற சமூகப் பொறுப்பில்லாத தன்மைகளும், சில பெண்களும் சுயநலன் கருதி இதை மூடி மறைப்பதும், அச்சம் காரணமாக வெளிப்படையாகத் தமது பிரச்சனைகளைக்  கூறாது இருப்பதும் ஆணாதிக்கத்தைக் களைந்தெறிவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுப்பது என்பது குடும்பத்திலும், சமூகத்திலும் இணக்கமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்தில்ல. ஆனால் அத்தகைய இணக்கமான சூழல் பெண்களின் கனவுகளை மிதித்துத்தான் நிகழவேண்டுமா ? ஒரு கவிஞராக, ஓவியராக, கதை ஆசிரியராக, அறிவியலாளராக  பரிணமிக்க, ஆண்கள் எதிர்கொள்ளும் விதம் போலல்ல பெண்கள் அவ்வாறான நிலைகளை அடைவது.

அவள் பெண் என்பதால் ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருசில பெண்கள்தான்  கவிஞராக,  அரசியல்வாதியாக, முகாமையாளராக மலர முடிகிறது. அவர்கள் எவ்வளவு எதிர்நீச்சல் போட்டு ஒருநிலையை அடைய வேண்டி உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. சில பெண்கள் அதற்கும் அவர்கள் வீடு தாண்டி வெளிவரவேண்டி இருக்கிறது. ஒருசில பெண்கள்தான் வெளியில் தெரிய முடிகிறது. எண்ணற்ற  பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் புதைக்கப்படுகிறார்கள்! பெண்கள் குடும்பத்திற்கு தோதான வேலைகளின்றி, வேறு விருப்பமிருந்தால் ஒழுக்கம் தவறியவளாகவும் பார்க்கும், இந்த சமூகத்தின் நிலையை “ஆணாதிக்கம்” என்று சொல்லாமல் எப்படி சொல்வது?

ஒரு பெண்ணை விழுத்த முடியாத போது கோழைகள் எடுக்கும் பயங்கர ஆயுதம் அவளின் நடத்தையை விமர்சிப்பதுதான். பெண்ணென்பவள் மனச்சுமையுடன் அதையும் சிரித்துக் கடக்கவேண்டியவளாகிறாள். யாருக்காக அவள் பாடுபடுகிறாளோ அவர்களே அவளை விளங்கிக் கொள்ளாமல் எதிர்க்கும் போதும் அவள் தன் குறிக்கோளுக்காக தனித்து நின்று போராட வேண்டிய நிலைக்;;குத் தள்ளப்படுகிறாள்.

ஆணாதிக்கநிலை என்றால் ஆண்களை குறை சொல்வதாக கொடிபிடிக்கிறார்கள். ஆண் என்ற பாலினம் என்பதால் உங்களுக்கு வாழ்க்கை மறுக்கப்படுவதில்லை, ஆனால் பெண் என்ற பாலினத்தில் எங்கள் வாழ்கை சிக்கிக் கொள்கிறது. எனது குடும்பம் எனக்கு எல்லாவித உரிமைகளையும் தரலாம், ஆனால் இந்த ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் எனது கனவுகளை, வாழ்கையை வாழ போராடுகிறேன். அதற்கு இந்த சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையே காரணம்.

பெண்ணியம் என்பது ஆண்களின் கொள்கைகளை எதிர்ப்பது அல்ல. அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து, எடுத்துரைப்பது. பெண்ணியம் என்பது, ஆண்கள் செய்யும் தவறுகளில் பங்கெடுத்துக் கொள்வதல்ல. அதை தட்டிக்கேட்பது. பெண்ணியம் என்பது ஆண்களை வெறுப்பது அல்ல. பெண்மையை கொச்சைப்படுத்துபவர்களை வெறுப்பது. பெண்ணியம் என்பது பெண்கள் மட்டுமே பேச வேண்டும், போராட வேண்டும் என்றில்லை. ஆண்களும் பெண்ணியத்தை ஆதரிப்பவர்களாக இருக்கலாம். ஏனெனில் அந்த ஆணின் சகோதரியும் பெண்தான் மகளும் பெண்தான். அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அந்த ஆண்மகனும் போராடித்தான் ஆகவேண்டும்.

பெண்ணியம் என்பது ஆண்கள் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதல்ல, சமூகத்தில் பெண்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவது. பெண்ணியம் என்பது குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல்  தனித்து இருப்பதல்ல. குடும்பத்தில் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டு, அனைவரையும் ஒரே மாதிரி நேசிப்பது. பெண்ணியம் என்பது ஆண்களைவிட அதிக அதிகாரம், ஆதிக்கம் செலுத்துவது அல்ல. ஆண்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்ற கொள்கை கொண்டிருத்தல். பெண்ணியம் என்பது ஆண் போன்று நடந்து கொள்வதல்ல. ஆணும், பெண்ணும், பெண்ணை பெண்ணாக, சமூகத்தில் சமமாக மதிக்கவும், நடக்கவும் வழிவகுப்பது.

பெண்ணியவாதிகள் ஏதோ ஒரு மாயமான எண்ண ஓட்டத்தில் சிக்கிக்கொண்டு இருப்பதாக கருதுபவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். பெண்கள் தங்கள் வாழ்கைக்காக , கனவுகளுக்காக ,விருப்பத்திற்காக, திறனுக்காக , உரிமைக்காக, உழைப்பிற்காக ஆணாதிக்கம் என்ற தடையை ஒவ்வொரு நிலையிலும் எதிர்கொண்டு போராடுவதில் ஒரு பெண் இழப்பதை அளவிடமுடியாது. இனி உங்கள் சகோதரிகளுக்காக உங்கள் பெண் குழந்தைகளுக்காக உங்களின் வருங்கால சந்ததியினருக்காக ஆண்களும் பெண்ணியம் பற்றிப் பேசவேண்டும். அப்பொழுதுதான் இந்தச்சமூகம் அதை ஏற்றுக்கொள்ளும்.

உசாத்துணைகள்:

https://boldsky.com/relationship/beyond-love/2016/misconceptions-about-feminism/articlecontent-pf67320-011358.html

பவானி தம்பிராஜா-ஹொலண்ட்

பவானி தம்பிராஜா

(Visited 437 times, 1 visits today)
 

One thought on “பெண்ணியம் பற்றி  ஆண்களும் பேசவேண்டும்… கட்டுரை-பவானி தம்பிராஜா”

Comments are closed.