எழுத்தாளர் எனப்படுபவர் ………..-கட்டுரை- பவானி தம்பிராஜா

பவானி தம்பிராஜாஎழுத்தாளர் என்பவர் அவருடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு பல்வேறு வகையான பாணிகளிலும் நுட்பங்களிலும் எழுதப்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் ஒரு நபர் ஆவார். நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள், நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு வகையான இலக்கியக் கலை வடிவங்களையும் மற்றும் படைப்பாக்க எழுத்துக்களையும் இவர் உருவாக்குகிறார். அத்துடன் பொதுமக்களுக்கு ஆர்வமாக இருக்கும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் செய்தி கட்டுரைகளையும் எழுதுபவராகவும் எழுத்தாளர் இருக்கிறார்.

பாடலாசிரியரையும் எழுத்தாளர் என்று சொல்வது போல வேறு கலைகள் பலவற்றிலும் எழுத்தாளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு முழுமையான ஓர் எழுத்தாளர் என்பவர் பொதுவாக எழுதப்பட்ட மொழியில் கலையை உருவாக்குபவரையே குறிக்கிறது. சில எழுத்தாளர்கள் வாய்வழி மரபில் இருந்தும் எழுத்து வேலை செய்கிறார்கள். எழுத்தாளர்களால் கற்பனையான அல்லது கற்பனையற்ற பல வகைகளில் ஒரு படைப்பை உருவாக்க முடியும். பிற எழுத்தாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளை வெளியிடுகிறார்கள். உதாரணமாக வரைகலை அல்லது விளக்கப்படம் ஆகியவற்றின் மூலம் தங்கள் சிந்தனையை அல்லது கருத்தை சமூகத்தில் பரப்புகிறார்கள். கற்பனை எதுவும் சேர்க்காமல் தொழில்நுட்ப ரீதியாக இயல்பாக அறிவு சார்ந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சேவை இன்றைய நவநாகரீக உலகில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர்களுடைய படைப்புத் திறமைகள் ஒரு நடைமுறையை அல்லது விஞ்ஞான இயல்பினை புரிந்துகொள்ளக்கூடிய விளக்க ஆவணங்களை உருவாக்குகின்றன. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் திறனை அதிகரித்துக் கொள்ள படங்கள், ஓவியம், வரைகலை, அல்லது பல்லூடகம் இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அரிதான நிகழ்வுகளில் படைப்பு உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை இசை மற்றும் சொற்கள் வழியாகவும் பரப்ப முடியும்.

எழுத்தாளர்கள் தங்களது சொந்த எழுதப்பட்ட படைப்புகளைத் தயாரிப்பதுடன் பெரும்பாலும் அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள், அதாவது எழுதுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் செயல்முறையைக் குறித்தும் எழுதுகிறார்கள் ஏன் எழுதுகிறார்கள், எந்த நோக்கத்திற்காக எழுதுகிறார்கள் என்பதையும் எழுதுகிறார்கள்  மற்ற எழுத்தாளர்களின் படைப்பு குறித்த விமர்சனத்தை எழுதுகிறார்கள்.

எழுத்தாளர்கள் தொழில் ரீதியாகவோ அல்லது தொழில் அல்லாமல் ஒரு பொழுதுபோக்கிற்காகவோ, அல்லது தொண்டர் அடிப்படையிலோ பணியாற்றுகிறார்கள். எழுத்தாளர் என்ற சொல் பெரும்பாலும் படைப்பாளி என்ற சொல்லை ஒத்த பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் பிந்தைய சொல் சற்றே பரந்த பொருளைக் கொண்டுள்ளது.

எழுத்தாளர் எழுதும் படைப்புகள் நூல்களாக பல ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. கருத்துக்களை நன்றாக வெளிப்படுத்தும் விதத்தில் மொழியைப் பயன்படுத்தக்கூடிய  திறமையான  எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அல்லது தெளிவுபடுத்த பல்வேறு வகையான இலக்கிய வகைகளில் இருந்து தமது கருத்துக்களை தேர்வு செய்கிறார்கள். எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் கலாச்சார உள்ளடக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்.

இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்  போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.

மூன்றாம்தர எழுத்தாளரை கலைஞரை முதல் தரமான எழுத்தாளராக கலைஞனாக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய ஒரு சமுதாயம் கலாச்சாரச் சீரழிவுகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும் அல்லது ஒதுக்கிவைத்துவிடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே இது ஒரு பெரிய கலாச்சார வீழ்ச்சி என்று நம்புகிறேன். நமது சான்றோர்களின் வியர்வையில் தியாகத்தில் மலர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்ட கலாச்சார விழுமியங்கள் படிப்படியாக சிதைக்கப்படுவது நமது சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆபத்து விளைவிக்கும் என்றே கருதுகிறேன்.

இதனால் நம்மவர் மத்தியில் கலாச்சாரம் பற்றிய ஒரு தெளிவின்மை ஏற்படுகிறது. எப்பொழுது ஒரு மனிதன் தனது கலாச்சாரம் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறானோ அப்பொழுது அவன் பிற கலாச்சாரம் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றலையும் ஆய்வு செய்யும் ஆற்றலையும் இழந்து விடுகிறான். இந்த நிலையில்த்தான் ஒரு மனிதன் தனது அடையாளத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

இப்படித்தான் வாழவேண்டும் என்ற நிலை மாறி எப்படியும் வாழலாம் என்ற நிலைக்கு மனிதன் மறுகிறான். ஒரு தனிமனிதனில் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் ஒரு சமுதாயத்தின் அடிப்படை அலகாகிய குடும்பத்தில் பிறழ்வுகளை ஏற்படுத்தி சமுதாயத்தைச் சீர்குலைக்கும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது என்று கூறலாம். இப்படிப் போனால் என்ன நடக்குமோ என்று பலரும் அச்சமுறுமளவிற்கு இந்த மாறுதல்கள் துரிதமாக நடைபெறுவது ஒரு கவலைக்குரிய விடயமாகவே தென்படுகிறது.

நாம் அனைவரும் இங்கு எழுத்தாளர்களாக ஒன்று கூடுவது தமிழார்வத்தினாலும், சமூகச்சீர்திருத்தத்திற்காகவும், மனதை இலேசாக்கி மகிழவும்தான். எனவே, முதலிடம், பரிசுகள், நண்பர்கள் என்னும் வட்டத்துக்குள் சிக்காமல், கருத்துகளையும், விருப்பங்களையும் நேர்மையாகப் பகிர்ந்து போலிகளை இனம்கண்டு வளர்வோமாக! எழுத்து எனும் அரும் பொக்கிசத்தில், புதியதோ பழையதோ எல்லாப்பக்கமும் நோக்கி, தமிழின்பம் பெருவோமாக!

பவானி தம்பிராஜா-நெதர்லாந்து

பவானி தம்பிராஜா

(Visited 1,033 times, 1 visits today)