வாங்கோவன் பறைவம்- செமியாக்குணம்-பாகம் 10-பத்தி- உழவாரப்பொன்னையர்

வர வர இந்தச் சந்தைக்கு வாறாக்களின்ரை போக்குகள் சரியில்லாமல் கிடக்கு. கைப் பேச்சுகள் அவ்வளவு நல்லாயில்லைக் கண்டியளோ! என்ன உதவாத கிலிசறை கெட்ட ப

ழக்கங்கள் எண்டு தெரியேல்லை. நாலு பேர் வாற இடத்திலை, அதுவும் முன்னப் பின்னத் தெரியாத சனங்கள் புழங்கிற இடத்திலை ஒரு மரியாதையாக் கதைப்பமெண்டில்லை. எல்லையைத் தள்ளிப் போட்டிட்டு சறத்தையும் கட்டிக் கொண்டு…இந்தா வெட்டுவன் கொத்துவன் எண்டு அடிபடுமாப் போலை, ஆக்களும் அவையின்ரை தூசணங்களுமெண்டு படுகிற பாட்டைப் பாக்க என்னத்தைப் பறைஞ்சு, இவையள் என்னத்தைத் திருந்தியெண்டெல்லே கிடக்கு.

சரி. பிழையைச் செய்தா, “தெரியாமச் செய்து போட்டன். இனிமேப் பாத்துக் கொள்ளிறன்” எண்டிட்டுப் பெருந்தன்மையா நடக்கிறதை விட்டுப் போட்டு, அதைச் சரியெண்டு அழிச்சாட்டியம் பண்ணிறதுக்கு அவையளின்ரை விண்ணாணக் கதையள் வேறை. பாக்கப் பாக்க எரிச்சலாயெல்லே கிடக்குப் பாருங்கோ. இதென்ன நாய்ப் பழக்க வழக்கமெண்டு கேக்கிறன். குசினியடியிலை, கோடிக்குள்ளை, ஏதோ உங்களுக்குள்ளை என்னத்தையெண்டாலும் கத்திக் குளறிப் போட்டு, குண்டி மண்ணைத் தட்டிக் கொண்டு போறது சரி. அதையினி இதுவழிய கொண்டந்து எழுத்திலையும் கொட்டிப் போட்டு, நியாயம் பிளக்கிற வேலை உண்ணாணச் சரியோண்டு கேக்கிறன்? இதுக்கை வேறை, அது கோபத்திலை வாறது, கோமணத்திலை வாறதெண்டு கொண்டு புலுடாக் கதையள் வேறை.

உலகம் முழுக்கத் தான் எக்கச்சக்கம் பேர் உந்தச் சோம பானங்களைக் குடிக்கிறாங்கள். எங்கடை சனங்களை மாதிரியே நடக்கிறாங்களெண்டு கேக்கிறன்? இது ஏதோ குடிச்சா, தலை கீழாத் தான் நிண்டு குத்தி முறியோணுமெண்ட மாதிரி, சண்டித் தனம் செய்யிறது, சட்டி பானையை உடைக்கிறது, பெண்டுகளின்ரை தலைமயிரைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு ஒழுங்கேக்கை நிண்டு பரிசு கெடுத்திறது. தூசணம் பறையிறது, தவளை காவடியாடின மாதிரித் தள்ளாடி விழுகிறது. பிறகு பாவப்பட்ட குழந்தை குட்டியள், மரியாதை கெட்டுத் தூக்கிக் கொண்டு போறதெண்டு எங்கடை ஊர்ப்  பழக்க வழக்கங்கள் இன்னுந் தான் நம்ம விட்டு மாறேல்லையெண்டிறன்.

இதுக்குள்ளை வேறை எல்லாக் கோமாளிக் கூத்தையும் நியாயப்படுத்திற கிரந்தக் கதையள்? வெளிநாடு வழிய போயிருந்து கொண்டும், கிழமைக்குக் கிழமை பாட்டி. அங்கனை போய் தண்ணியைப் போடிறது. எங்கனையன் யாரன் இளசுகள் ஏத்தி விடுவினம். உடனை எம்சியார் மாதிரி ஆடத் தொடங்கிறது. வண்டில் சில்லுக்கை நசிஞ்ச கொழக்கட்டை மாதிரி, வண்டியும் பிதுங்க அவையின்ரை வலிப்பு வந்த கணக்கான ஆட்டங்களைப் பாக்கோணும். கடைசியா மனிசிமார், பரிசு கெட்டுப் போய், வாங்கோப்பா…வாங்கோவெண்டு காருக்கை கொண்டே கதவைச் சாத்திப் போட்டு, பிறகு அதுகள் தான் காரை ஓடிக் கொண்டே சேர்க்கினம் பாருங்கோ. போகேக்கை, ஏதோ பெரிய அம்பாசிடர் மாதரிக், கோட் சூட்டென்ன….ரை என்ன எண்டு பாட்சா ரசினி நடந்த மாதிரி நடந்து போறது. பிறகு வரேக்கை, மோட்டச் சையிக்கிளுக்கை அடிபட்டு விழுந்த நாய் மாதிரியெல்லே வீடு வந்து சேர்க்றது. இந்த லட்சணங்களுக்குள்ளை, “தாங்க குடிச்சாலும் ஸ்ரெடியெண்டிறாக்கள்” கொஞ்சம்.

“பார்…குடிக்காதவனெல்லாம் கெதியிலை மண்டையைப் போடிறாங்கள். நான் இருக்கிறனெண்டிறாங்கள்” கொஞ்சம். குடிச்சுப் போட்டு, ஓட்டை போணுகளையும் கொண்டு திரிஞ்சு, வீடியோ எடுத்து லைவ் விடுறாக்கள் கொஞ்சமெண்டு, வயசுக்கு தக்க மாதிரியே நடக்கிறியளெண்டு கேக்கிறன்? பத்தாக்குறைக்கு, இஞ்சனை பேஸ்புக்கிலை சில குடிமகனுகளைப் பாக்கோணும். இரவிலை ஞானப்பால் போன உடனை என்னத்தையன் எழுதிறது. விடிய எல்லாம் தெளிஞ்சவுடனை ஒவ்வொண்டாய் இருந்து அழிக்கிறது எண்டு….நம்மடை ஆக்களின்ரை திருவிளையாடலுகளைப் பாக்கோணும்.

இந்த வள்ளலுக்குள்ளை, தூசணம் கதைச்சா என்னெண்டிறவையும், பொம்பிளை தூசணம் கதைச்சா, உடனை “புரட்சி புரட்சி” எண்டு கொக்கரிக்கிறவையும். பெரிய சோக்கிரட்டீஸ்…அரிசுதோத்தல் மாதிரி, எங்கனையெங்கனை ஆரார் தூசணங்கள் கதைச்சவங்கள் எண்டு தேடிப் பிடிச்சுக் கொண்டந்து எல்லாத்தையும் கடை பரப்பி, உந்த ஊத்தைப் பேச்சுகளுக்கு முட்டுக் கொடுக்கிற சட்டாம்பியளும். கடவுளே! எங்கடை “செமியாக்குணம்” எப்ப மாறப் போகுதெண்டு கேக்கிறன்? அட! நாலு நல்லதைப் பறைஞ்சு, நல்லதைக் கேட்டு, நல்லதைச் செஞ்சு, நல்லதுக்கு அடிபட்டால் பறவாயில்லை. அஞ்சு சதத்துக்கு பிரியோசனமில்லாமல் அலம்பிக் கொண்டு, பெரிய தத்துவ வித்துவர்கள் மாதிரி நினைப்பு.

நாங்க எப்ப திருந்தப் போறம்? சரி. திருந்தேல்லை. நம்மடை நாய் வாலை நிமித்த முடியாது. விட்டிடுவம். புண்ணியமாப் போகும். உந்த விரலுகளை வைச்சுக் கொண்டு சும்மா தன்னும் இருக்கலாம் தானே! இதுகளைத் தான் நாங்க எங்கடை கலாச்சாரம்..பண்பாடு எண்டு எங்கடை பிள்ளை குட்டியளுக்கும் காட்டிக் குடுக்கப் போறமே? அதுகள், இப்ப எங்களிலும் கெட்டிக்காரர் பாருங்கோ. எங்களை விட நல்ல பண்பான சனங்களா இருக்குங்கள். பயப்பிடவே தேவையில்லை. இன்னும் ஒண்டும் குடி முழுகேல்லை. குடி மக்கள் நல்ல குடிமக்களா நடக்கப் பாப்பம். அது தான் எங்களுக்கும் மரியாதை. எல்லாருக்கும் மரியாதை.

உழவாரப் பொன்னையா

உழவாரப் பொன்னையா

(Visited 95 times, 1 visits today)