“வாங்கோவன் பறைவம்……….”01 -பத்தி-உழவாரப்பொன்னையா

உழவாரப் பொன்னையாநடுவுக்கை வந்து நிக்கிறவைக்கு வணக்கம் கண்டியளோ. நான் உழவாரப் பொன்னையாண்ணை. என்னைப் பெரிசா உங்களுக்குத் தெரியுமோ தெரியேல்லை. வரிசம் பிறந்து முதன் முதலா வந்திருக்கிறன். எப்பிடியெல்லாம் சுகமா இருக்கிறியள் தானே?

நெடுகலும் கரையாலை போகாமல், நடுவுக்குள்ளாலையும் கொஞ்சத்தைச் செருக்குவமெண்டு பாக்கிறன். ஊருழவாரம் பாக்கிறது தான் என்ரை வேலை பாருங்கோ. உடனை, எங்கடை பெண்டுகள் மாதிரி கிடுகுப் பொட்டுக்காலை பக்கத்து வீட்டுச் சண்டையைப் பூராயம் பாக்கிறதெண்டு மட்டும் நினைச்சுப் போடாதேங்கோ. சும்மா அங்கனேக்கை பின்னேரங்கள்ளை, நம்மடை வாய்க்கால் வரம்புகள்ளை கிடக்கிற புல் பூண்டுகளை மெல்லம் மெல்லமாச் செதுக்கிறன்.

சரி. நான் இப்ப நடுச்சென்ரரிலை வந்து நிக்கிறன். யாரடாப்பா இது? இப்பவும் இலக்கியச் சஞ்சிகை எல்லாம் நடாத்திறாங்கள் எண்டு எட்டிப் பார்த்தா, அடியிலை; குட்டிப் பெட்டிக்கை அடங்க முடியாமல் திமிறிக் கொண்டிருக்கிறார் ஒருதர். “கோமகனாம்”. பாக்க, எங்கடை அந்த நாளையை பெல்பொட்டம்ஸ் லோங்சுப் போட்ட,  இங்கிலீஸ் வாத்தியார் கணக்காக் கிடக்கு. ஆனா, தமிழ்ழை இப்பிடி அக்கறைப் பட்டு உழைக்கிறார். நல்லம். நல்லம். நடக்கட்டும்.

பின்னை, நடுவுக்குள்ளை இறங்கி நடுவாலை கொஞ்சம் கிண்டிப் பாத்தன் சும்மா. நல்ல நல்ல கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களும் கிடக்கு. வெளியிலை பெரிசா வாசமில்லாட்டியும், வைக்கலைக் கிளறிப் போட்டு எடுத்தொண்டைக் காந்திப் பாக்க நல்ல மணியாத்தானிருக்கு. ஆனா ஒண்டு, மனிசன் கெட்டித்தனமா ஆக்கங்களுக்கெல்லாம் ஆக்களாக்கள் தான் பொறுப்பு. என்னட்டை ஒருதரும் கொடுக்கைக் கட்டிக் கொண்டு, சண்டைக்கு வந்திடாதீங்கோ எண்டு சொல்லியிருக்கு. அதுவும் சரிதான். இப்பத்தையான் இலக்கியக் குஞ்சுகளின்ரை, கொதி காய்ச்சலுக்கெல்லாம், பரியாரீட்டை மருந்து கிடையாது பாருங்கோ. எழுத்தைப் பாக்கிறதுக்கு முதல் எழுதினவன்ரை பின்பக்கத்தைப் பாக்க வெளிக்கிட்டிடுவினம். என்ன செய்யிறது? உது தான் சரி. இதுக்குள்ளை ”இவர்கள் இப்பிடிச் சொல்கிறார்கள்” எண்டு கோள்மூட்டி விடுற பகுதியொண்டும் இருக்குது. வலு சுவாராசியம் தான்.

”அரிசிக்கே கல்லிருக்கு. கல்லெல்லாம் அரிசியில்லை ” எண்ட மாதிரி நடுவுக்கு ஒரு வாசகம். மனிசனுக்கு மண்டை காய்ச்சு போய்ச்சு, விளங்கிக் கொள்ளுறதுக்கிடையிலை. கலைக்குள்ளை பொய்யிருக்கா? இல்லையா? எண்டதைப் பற்றி ஒரு கதையும் இல்லை. உண்மையைப் பற்றி மட்டும் தான் சொல்லுது அந்த வாசகம். ”கலையில் உண்மையுண்டு. உண்மையெல்லாம் கலையில்லை.” அதுவும் சரிதான். கலையுக்குள்ளை உண்மை இருக்கோ இல்லையோ, பச்சைப் பொய்யெல்லாம் இருக்குத் தானே!  அதுவும் இப்ப, அரிச்சந்திரன்ரை வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் கூடிப் போச்சு. ஆளாளுக்கு ஒவ்வொரு கதை  சொல்லுவினம். எல்லாரும் இப்ப அப்புக்காத்தர் மார் தான். எது உண்மை? எது பொய்யெண்டு கண்டுபிடிக்க முடியாதபடி, ஈரைப் பேனாக்கி பேனைப் பேயாக்கி, கதை சொல்லிறாக்கள் இப்ப கனத்துப் போச்சு கண்டியளோ. திரும்பிப் பாக்கிறன்,குனிஞ்சு பாக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு, ஆளாளுக்கு தாங்கள் தான் வெள்ளையெண்டு அடிச்சடிச்சு விடுகினம்.

”நடு” எண்டோண்ணை, நான் ஏதோ நடுவுநிலைமையா இருக்கும் எண்டதுக்காண்டி வைச்ச பெயரோ எண்டு யோசிச்சன். ஏனென்டா நடுவுநிலைமை எண்டொரு சாமானும் ஒருதருட்டையும் இல்லைக் கண்டியளோ. இது அந்த ”நடு” இல்லை எண்டு இப்ப விளங்குது. இது நடுகிற வேலை பாருங்கோ. விளக்கமாச் சொல்லப் போனா, எழுத்து விதைகளை நடுகிற வேலையைச் செய்யுது இந்த ”நடு”. அப்பிடித்தானே ”நடு”நாயகன் கோமகன்?

உழவாரப் பொன்னையா

 

(Visited 156 times, 1 visits today)