வாங்கோவன் பறைவம் 06 -‘தாலியைக்கட்டு’-பத்தி -உழவாரப் பொன்னையர்

முகப் புத்தகத்திலை குந்தினா, மனிசன் மூத்திரமும் போக நேரமில்லாமலெல்லே குடி முழுகிக் கிடக்க வேண்டிக் கிடக்குப் பாருங்கோ. ஆடு,மாட்டுக்குத் தண்ணி வைக்கிறது, அஞ்சாறு புல்லைப் பிடுங்கிறது, அங்கனை வெளியலுவலுகளைப் பார்க்கிறது, நாலு சனத்தைக் கண்டு கதைக்கிறதெண்டு, ஒண்டையும் செய்ய விடாமல் ஒரேயடியாயெல்லே பூசாரி வேப்பிலை அடிச்சு கட்டிப் போட்ட மாதிரிப் பிடிச்சு வைச்சிருக்குது. இனிச் சில நேரம், கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாயிருக்குமெண்டு உதுகளுக்கை உள்

ளட்டா, கோதாரி விழுந்த மண்டை கழண்டதுகள் எடுத்துப் போடிற வீடியோக்களைப் பாத்தால் விடியக் காலத்தாலையே எழும்பி, விளக்கெண்ணையை விளுங்கினது மாதிரியெல்லே கிடக்கு.

மனிசருக்கிருக்கிற பிரச்சனையளுக்கை, தாலியக் கட்டின பிரச்சனையள் வேறை. ஒண்டு, தாலியைக் கட்ட ஒம்பது நிண்டு தவிலடிக்குது. இதுக்குள்ளை, ஆளாளுக்கு அநியாயத்துக்கு, கண்டவன் நிண்டவன், எல்லாம் இப்ப சட்டாம்பியள் தான். எங்க, கூத்து நடந்தாலும் கும்மாளம் தான் எங்களுக்கு. ஆருக்கும் அப்புக்காத்தர் வேலை பாக்கிறதெண்டா, நாங்கள் நம்பர் வண் ஆக்கள் கண்டியளோ!

பொடிச்சி, என்னைத்தை விளங்கி பொடியன்ரை கழுத்திலை தாலியைக் கட்டிச்சுதோ, என்னவோ, இதுக்குள்ளை பொங்கித் தள்ளிறாங்களைப் பாக்கவெல்லே கெடிக் கலங்குது. புதுமை செய்யிறம், புரட்சி செய்யிறம் எண்டு வெளிக்கிடுறது சரி. அது நல்ல விசயமா இருக்கோணும். செய்யிறதிலை முதல்லை, தாங்க என்னத்தை செய்யிறம் எண்டதிலை தெளிவிருக்கோணும். இல்லையெண்டா, கடைசியா, மண்டை கழண்ட விசர்க் கூத்தா தான் இருக்கும் கண்டியளோ!

பேஸ்புக்கிலை லைவ் போடோணும் எண்டிட்டு, விசுக்கோத்து வேலையள் செய்யக் கூடாது. “என்னவாவது டிவறன்ரா பண்ணணும் அங்கிள். ஒரு ஐடியாச் சொல்லுங்கோ. “ எண்டு அண்டைக்கொரு இளந்தாரிப் பெடி, முன் வழுக்கலிட்டை ஐடியா கேக்கிறார். பின்னை, இவரும் தான் பெரிய ஐடியா மணியெண்ட நினைப்பிலை, பூ வைக் கொட்டுவம், புளியைக் கொட்டுவம். உம்மைக் குதிரையிலை தூக்குவம். அவவை குரங்கிலை தூக்குவம் எண்டு குறளி வித்தை காட்டப் போற மாதிரிக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த தாடிச் சிறுவனோ, காதிலை தோட்டையும் குத்திக் கொண்டு மணி ஐடியா…மணி ஐடியா…எண்டு மண்டைணை மண்டையை ஆட்டுது.

நல்லாக் கழண்டு போனா, நாளைக்கு எல்லாத்தையும் கழட்டி விட்டிட்டும் நிண்டு செய்வீங்கள். நல்லாச் செய்யுங்கோ. ஆனா ஒண்டு பாருங்கோ. எப்பிடி, தலையையும் கட்டையா வெட்டி, அரைக் காச்சட்டையும், ரீசேட்டையும் எடுத்துக் கொழுவினாப் போலை பெண் சுதந்திரம் கிடைச்சிடாதோ, அதே போலத் தான் என்னத்தை மாறி மாறிக் கட்டினாலும், பெண் சுதந்திரம் கிடைச்சிடாது பாருங்கோ. தாலியைக் கட்டிப் போட்டு, வேலி தாண்டிறவனும் இருக்கிறான். தாலி கட்டாமல் ஏக பத்தினி விரதம் இருக்கிறவனும் இருக்கிறான். உந்த படங்காட்டிற வேலையளை விட்டுப் போட்டு, கலியாணத்துக்குப் பிறகு கடைசி வரைக்கும் எப்பிடி ஒற்றுமையா, வாழிறது எண்டிறதைப் பற்றி யோசியுங்க. ஏனெண்டா, முந்தி மாதிரியில்லை இப்ப. எவ்வளத்தை விசுக்கி எறிஞ்சு கலியாணம் செய்தவை, ஏழெட்டு வருசத்துக்குள்ளை “எடுத்தன் கவிட்டன்“ எண்டு தனித்தனிய திரியினம்.

நீங்க…எப்பிடியெண்டாலும் போங்கோ. பிள்ளையளைப் பெத்து நடுத்தெருவிலை விட்டிட்டுப் போயிடாதையுங்கோ. சனி, ஞாயிறிலை அப்பாவைப் பாக்கிறது, மற்ற நாளையிலை அம்மாவோடை இருக்கிறது எண்டிறதெல்லாம் சட்டத்துக்கு சந்தோசமா இருக்கலாம். சின்னப் பிஞ்சுகளுக்கு, சந்தோசமாய் இருக்குமெண்டா நினைக்கிறியள். அதுகளைப் பற்றி யோசியுங்கோ. கதையுங்கோ. எல்லாருக்கும் பிரியோசனமாயிருக்கும்.

உழவாரப் பொன்னையா

(Visited 54 times, 1 visits today)