வாங்கோவன் பறைவம்-பாகம் 08-பிரம சத்தியள்-உழவாரப்பொன்னையர்

வெள்ளை வான் ஐம்பது ரூபாய்க்கு எள்ளெண்ணைச் சிட்டியும், நூறு ரூபாக்கு நெய் விளக்கும் கொழுத்தி ஏழு காணாதெண்டு ஒம்பது தரம் சுத்து சுத்தெண்டு சுத்தியும் என்ன பிரியோசனம் பாருங்கோ? திரும்பவும் தலையிலை வந்து கூடு கட்டீட்டுது காகம். இனியென்ன, ஏழரை ஏறி நிண்டு குதிச்சுக் கும்மாளமடிக்கப் போகுது போலை. அது தன்ரை வேலையைக் காட்ட முதலே, இஞ்சனை எங்கடையள் படுற பாட்டைப் பாக்கோணும். ஆசாரி சும்மா இருந்தாலும், நம்மடை பூசாரியள் உடுக்கடிச்சு அவனை உருவாடச் செய்யாமல் விட மாட்டினம் மாதிக் கிடக்கு. அவன் நெருப்புப் பெட்டியை தேடுறதுக்கு முதலே, எங்கடையள் அந்தா புகையுது. இந்தா மணக்குதெண்டு கத்திறதைப் பாக்கத் தான் உண்ணாணப் பயமாயிருக்கு.

அஞ்சினவன் கண்ணுக்கு, ஆகாயமெல்லாம் பேயெண்ட கணக்காய், அவன் ஒண்டுக்குப் போனாலும், ஒப்பாரி வைக்கப் போகுதுகள் எங்கடையள். ஒரு காலத்திலை, சிங்களச் சனம் கொட்டியா எண்டா, கிடுநடுங்கின மாதிரி, இப்ப எங்களுக்கு கோத்தா எண்டா, குலைப்பனடிக்குது பாருங்கோ. அவன் திருந்தினாலும், நாங்க திருந்த விட மாட்டம் போலை கிடக்கு. சனத்திலையும் பிழையில்லை. அப்பிடிக் கிலீரடிச்சுப் போய்க் கிடந்த காலங்களை மறக்கேலுமே! குண்டு தலைக்கு மேலை விழுகிறது வேறை. குண்டனுகள் எப்ப வந்து ஆரைத் தூக்கிக் கொண்டு போவாங்கள் எண்டு நெஞ்சிடிச்சுக் கொண்டிருக்கிறது வேறை. அனுபவிச்ச எங்களுக்குத் தான் அதின்ரை தார்ப்பரியம் தெரியும் பாருங்கோ.

புகட்டடியிலை மனிசி என்னவோ, கரிச்சுப் பொரிச்சுக் கொண்டிருந்தது. ”என்ன சாப்பாடு இண்டைக்கு, முடிஞ்சுதோ? ” எண்டு வெளிப் படியிலை இருந்து கொஞ்சம் பசிக் காந்தல்லை இறுக்கிச் சவுண்டை விட, மனிசி எண்ணைக் கரண்டியோட ஓடியந்து, ”என்னத்துக்கு இப்ப கத்திறியள்?” எண்டு ஏறி விழுகிறா. இவளவு நாளும் நல்லாயிருந்த என்ர சீமாட்டி, சிங்கன் வந்ததோடை திடீரெண்டு பயந்து சாகுது. இந்த அமளிக்குள்ளை அங்கை, அருமந்த முட்டைப் பொரியல் கருகிப் போச்சுது.

முந்தின மாதிரி, மடிக்கே இப்ப குமருகளுமில்லை. குத்தியனுகளுமில்லையெண்டாலும், மனிசிக்குப் பழைய பயங்கள் விடேல்லைக் கண்டியளோ! உந்த பிரம சத்தியளுக்குப் பயந்து தானே ஒண்டையும் வைச்சிருக்காம அனுப்பிப் போட்டு, இப்ப ஒண்டிக் கட்டையளா ரெண்டு பேரும் கிடந்து தவிக்கிறம் பாருங்கோ. இப்பிடித் தான் இஞ்சனை ஊரிப்பட்ட தாய் தேப்பனுகள் சீவிக்குதுகள். காசு வரும் பாருங்கோ. வயசான காலத்திலை பிள்ளையள்,பேரப்பிள்ளையள் பக்கத்திலை இருக்குமாப் போலை வருமே. என்னத்தை பறைஞ்சு? வரேக்கையே எழுதிக் கொண்டு வந்திட்டம். அவ்வளவும் தான்.

போன கிழமை  எழுதிக் குறையிலை விட்டிட்டு, இண்டைக்குத் தான் மிச்சத்தை செதுக்கப் போறன். அதுகும் ஒண்டுக்கு நல்லதாப் போச்சு. அதுக்குள்ளை மனிசியின்ரை பம்பலுகள் கனக்க நடந்திட்டுது. அதையும் சொல்லிப் போடுவம். ரெண்டு நாளைக்கு முதல் உங்கை ஒரு அந்திரட்டிக்குப் போட்டு மத்தியானம் ரெண்டு மணி போல வாறன். வீட்டிலையிருந்து இருவது முப்பது முழம் தள்ளி தோட்ட வெளியிலை ஒரு வெள்ளை வானொண்டு நிக்குது. ஒரு பெடிப்பிள்ளை இறங்கி நிண்டு போண் கதைச்சுக் கொண்டு நிக்கிறார். நான் சாப்பிட்ட மப்பிலை, வந்து படுப்பமெண்டு கதவைத் தள்ளினா, மனிசி ஆமப் பூட்டாலை பூட்டி வைச்சிட்டு, யன்னல் இடைவெளிக்காலை ஆந்தை மாதிரி முழுசிக் கொண்டு நிக்குது. கெதியிலை உள்ளுக்கை வாங்கோ எண்டு பதறுது.

பிறகு விசாரிச்சா, அது யாரோ கலியாண வீட்டுக்காரராம், வன்னியிலையிருந்து வந்திருக்கினம். இடம் வலம் தெரியாமல் நிப்பாட்டிப் போட்டு போனிலை விசாரிச்சவையம். கோதாரி விழுந்தது. இனி வெள்ளை வானுகளையெல்லாம் கலர் மாத்தினாத் தான் மனிசர் நிம்மதியாயிருக்கலாம் போலை. சாமத்திலை நாயள் குலைச்சாலும், மனிசி பழைய படி விழுந்தடிச்சு எழும்பி லைற்றுகளைப் போட்டிட்டு கக்கூசுக்கை போயிருக்குது. சும்மா, இருக்கிற என்னையுமெல்லே இந்த மனிசி முழுசியடிக்கப் பண்ணுது. ””கொம்மான்ரை கூத்துக்களைக் கேளுங்கோவனடி”” எண்டு, வெளிநாட்டுக் காரருக்குச் சொல்ல அவை விழுந்து விழுந்து சிரிக்கினம். அவைக்கென்ன? இஞ்சையிருக்கிறவைக்கெல்லோ விழுவானுகளின்ரை கொடுமையள் தெரியும்.

பயம். ஒரு பொல்லாத சாமான் பிள்ளையள். எங்களை இப்பிடிப் பயப்பிடுத்தி வைச்சிருக்கிறது தான் அவனுகளின்ரை திட்டமும். பல்லுப் பிடுங்கின பாம்பு மாதிரி ஆயிட்டம். எங்கடை அரசியல்வாதியளை வைச்சு, நாங்கள் ஒரு பருப்பும் வேக வைக்கேலாது. உங்களாலை நான் வெல்லேல்லை எண்டு திமிர்க்கதை பறையிறார் அவர். எங்களைக் கொண்டு அழிச்சதாலை தான் உங்கடை சனங்கள் உனக்கு வாக்குப் போட்டது. இல்லையெண்டா நீர் அமெரிக்காவிலை இருந்திருப்பீர். இனி முள்ளி வாய்க்காலோடை  இன்னும் மூண்டு சீவியத்துக்கு காணக் கூடிய மாதிரி நல்லா காசு,பவுணுகளை முழுங்கீட்டினம். எப்பிடிப் பாத்தாலும் எங்களை வைச்சுத் தான் அவங்கடை பிழைப்பே ஒடுது. என்னவோ நடக்கட்டும். தர்மம் வெல்லும். சத்தியம் தோற்காது எண்டு நாங்க நம்பிக் கொண்டிருந்ததெல்லாம் முடிஞ்சு போச்சு. மனிசரை நிம்மதியாயெண்டாலாவது இருக்க விட்டாக் காணும்.

வெளிநாட்டுக்காரரும் சரி, தமிழநாட்டுக்காரரும் சரி, அங்கனை இருந்து ஏதும் செய்வினமெண்டு நம்பினது தான் ஒரு காலம். அப்டியும் ஒண்டும் நடவாது எண்டது தான் மெய். இனிமேல் காலத்திலை இஞ்சனை இருக்கிற குஞ்சு குருமனுகள் தான், என்ன செய்யப் போகுதுகளெண்டு தெரியேல்லை. தமிழ் மண்..தமிழினம்,தமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம் எண்டு போராடி தங்கடை உரிமையளை வாங்குதுகளோ, இல்லை, எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன எண்டு சிங்களமும், ஆங்கிலமும் பறைஞ்சு கொண்டு  நாளைக்குத் தமிழையே அடியோடு மறந்து போய் கைவிட்டிடுங்களோ ஆருக்குத் தெரியும்? படைச்சவனுக்குத் தான் எல்லாம் வெளிச்சம்.

– உழவாரப் பொன்னையா –

உழவாரப்பொன்னையா

உழவாரப் பொன்னையா

(Visited 57 times, 1 visits today)