காடுலாவு காதை 3-பத்தி-தமிழ்க்கவி

காடுலாவு காதை 03துவக்கை எடுத்துக்கொண்டு கந்தப்பு காட்டுக்குள் நுழைந்த பின் மணியம் தன்னுடைய பக்கிள்  கழண்ட காற்சட்டையை ஒரு சணல் கயிறு போட்டு கட்டிக் கொண்டான். ‘திடீரெண்டு அத்தான் சத்தம் வச்சா ஓடோணும்’.

லெச்சிமி தனது மடியிலும் கையிலுமாக பறித்து வந்த பனங்கீரையை தாயிடம் கொடுத்தாள்.

“எங்கம்மா அப்பு?”

“கொப்பர் உந்தப்பக்கமா காட்டுக்கை போட்டார். நீ உந்த வெங்காயத்தை உரி.” என்ற பாக்கியத்தை இடைமறித்த லெச்சிமி,

“ஏன் உங்கட மூத்தமோள் என்ன வெட்டி முறிக்கிறாவே? அவவ உரிக்கச் சொல்லு. நான் மாட்டன்.” என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு ஓடினாள்.

அவள் ஓடிய அதே கணத்தில் காட்டுப்பக்கமிருந்து ‘படீர்’என துவக்கு வெடிச்சத்தம் கேட்டது. லெச்சிமி வெடுக்கெனத் திரும்பி,

“அப்புதான் அப்புதான்” என கத்தினாள். அவளைத்திரும்பிப் பார்த்த மணியன்,

“ஓமடி  நீ பப்பரிக்கம் போடாதை. அது பண்டார( இலக்குப்பிசகியது) வெடி.” என்றான்.

“பண்டாரமோ? அப்புவோ? இவர் கண்டார். அது ஏதோ பட்ட வெடிதான்.’ லெச்சிமி சொல்லும் போதே பாக்கியம்,

“டேய் மணியம்……… கொத்தான் ஏதோ வெடிவைச்சிட்டார். கூப்பிடப்போறார்” என்றாள்.

“சும்மா போ அக்காச்சி அது பண்டார வெடி.” என்;றான் மணியம்.

“இல்லடா வெடி படீரெண்டு கேட்டது. அது எஸ்எம்ஜீ தோட்டா. ஏதோ பெரிய மிறுகமாத்தான் இருக்கும் என்று சாதித்தாள் பாக்கியம்.

“அது மட்டும் சரியா இருந்தா நீ ஒரு வேட்டைக்காரன் பெஞ்சாதிதான். பாப்பம்.” மணியம் பேசும் போதே, காட்டுப்பகுதியிலிருந்து ‘கூ…’ வென்ற சத்தம் வந்தது. மணியன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினான். அவனைத் தொடர்ந்து லெச்சிமியும் ஓடினாள். இடையில் ஒரு மந்துக்காணி அதன் வழியே அடர்காட்டை நோக்கி அவர்கள் ஓடினாலும் காட்டுக்கு வெளியே கந்தப்பு நின்றான்.

“ஓடிப்போய் கொம்புக்கத்தியை எடுத்துக் கொண்டு தகரத்தட்டையும் கொண்டு வா.” என்று மணியனுக்கு கட்டளையிட்டான் கந்தப்பு.

‘ஏன் ஏதற்கு’ என்று கேட்காமல் மணியன் திரும்பி ஓடினான். லெச்சிமி தகப்பனை ஓடித் தொட்டவள் “என்ன பண்டியா மானா?” என்று கேட்டாள்.

“பண்டிதான். உதில உந்த படுமரத்த அண்டினாப்போல மூட்டத்தப் போடு.” என்றான். லெச்சிமி விட்டை நோக்கி “அ.. ம்மோய்…மாமாட்ட நெருப்பும் குடுத்துவிடூ…’ என்று இங்கிருந்தே கத்தினாள். அந்த சத்தமானது அவர்களுடைய வளவையும் கடந்த இன்னும் வெகு தூரத்துக்கு செல்லக்கூடியது. லெச்சிமியின் தொண்டை அவ்வளவு சக்தியுள்ளது. அவள் விரைவாக அதற்கான சுள்ளிகளையும் மேலாக பற்றக்கூடிய பெருங் கட்டைகளையும் சேகரித்தாள். பாறிப்போய்க் கிடந்த ஒரு கூமா மரத்தை அண்டியதாக அவள் தீயை மூட்டினாள். ஆதற்குள் சத்தம் கேட்டு சேனாதியும் துரைசிங்கமும் வந்திருந்தார்கள். கந்தப்பு தெகிழங் கொடிகளை வலித்து கொண்டு காட்டுக்குள் நுழைந்தான்.

மத்தியானப் பொழுதில் தண்ணீர் குடிப்பதற்காக வந்து அப்பாவியாக மாட்டி இன்னமும் ரத்தம் கசிய வீழ்ந்து கிடந்தது அந்த தனியன் பன்றி. கொண்டு போன தெகிழங் கொடிகளால் அதன் முன்னங்கால்கள் இரண்டையும் தனியாகவும் பின்னங்கால்கள் இரண்டையும் தனியாகவும் பிணைத்து இறுகக்கட்டினான் கந்தப்பு. பின்னர் வாகான கதிகால் தடியொன்றை வெட்டி அதன் கால்களின் ஊடாக செலுத்தி அதை இருவர் பற்ரித் தூக்கும் படியாக புரட்டினான். இப்போதுதான் வந்த சேனாதியும, துரைசிங்கமும் ஒருபுறமாகவும் மறுபுறத்தைக்  கந்தப்பு தன் கைகளிலுமாகப் பற்றித் தோளில் போட்டார்கள். தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த பண்றி சும்மாவல்ல நல்ல கனமான கொழுத்த பன்றிதான்.

மான் மரைகளைப் போல பன்றிக்கு தோல் உரிப்பதில்லை. அதை இப்படியே பெரு நெருப்பில் வாட்டி அதன் உரோமங்களை எரித்து வழித்துவிட்டு அப்படியே எடுக்கவேண்டும். அந்த காவுதடியுடனேயே லெச்சிமி மூட்டி விட்ட பெரு நெருப்பில் பன்றியை போட்டு அப்படியும் இப்படியும் திருப்பித்திருப்பி நன்கு வாட்டியபின் அதை குப்புற நெருப்பின்மீது படுக்கப் போட்டும் அடிவயிற்றுப் பகுதிகளையும் வாட்டி உரோமம் கருகக்கருக அதை தன் வில்லுக்கத்தியால் வழித்துக் கொட்டி அதன்பின் தகரத்தில் போட்டான் கந்தப்பு. பன்றியை கழுத்தில் கீறி பிரிக்க பெருகிய உதிரம் அதன் வயிற்றை நேக்கி கத்தியை விட்டு கிழிக்க அதன் வயியிற்றினுள் குளமாக தேங்கியது. அதை தன் கைகளால் கோலிக் கொலி பன்றியின் உலெங்கும் பூசி அதை சிவப்பாக மாற்றினான் கந்தப்பு லெச்சிமியும் சேனாதியும் கூட இந்த வேலையில் பங்கேற்றனர்.

பன்றியின் உடலைக்  கிழித்து அதன் இதயத்தையும் ஈரலையும் வெளியே எடுத்த கந்தப்பு திப்பட்டி இலைகளைப் பறித்து அதை ஒரு கல்லையாகச் செய்து அருகிலிருந்த பாறை மேல் வைத்து இந்த இதயத்தை நான்காகக்  கீறி அதையும் ஈரலையும் வைத்து படைத்தான். தனது வாய்க்குள் ஏதோ மந்திரம் சொல்லி சாமியை கும்பிட்டுக்கொண்டான். அந்த உதிரத்தை ஆட்காட்டி விரலில் தொட்டு பெரு விரலால் எடுத்து நாற்திசையும் சுண்டிவிட்டான். இந்தப்படையலில் துவக்குத் தோட்டா, கண்டங்கோடரி, வில்லுக்கத்தி அனைத்தும் வைக்கப்பட்டது. பின்னர் எல்லாவற்நையும் எடுத்துவிட்டு ஈரலில் ஒரு சிறு துண்டை அவ்விடத்திலெயே வைத்தபின் மீதி ஈரலை பன்றி வாட்டிய பெரு நெருப்பில் கனன்று கொண்டிருந்த தணலில் போட்டான். ஈரலைப்  பிரட்டிப்பிரட்டி சுடுகிற வெலையை துரைசிங்கமும் லெச்சிமியும் கவனித்தனர். கந்தப்பு பன்றியை நான்கு கால்காளாகப்  பிரித்து வெட்டி மறுபடி காவுதடியில் போட்டு வீட்டுக்கு எடுத்து செல்ல ஆயத்தமானான்.

“எனப்பு பண்டியின்ர ஈரலச் சுட்டுத்தான் தின்னிறது?” லெச்சிமி கேட்ட கேள்விக்கு அதுதான் வழமையாக வந்த பழக்கம் என்று சொல்ல நினைத்தவன் அதை விடுத்து,

“இந்தப்பண்டி கமக்காரனுக்கு எவ்வளவு அழிவை வைக்கிது. அதின்ர ஈரலைச் சுட்டுத்திண்டாத்தான் மனமாறும்.”

லெச்சிமிக்கு அப்புதான் வழிகாட்டி. தாயின் பாண்டறை கருத்துகளில் அவளுக்கு உடன்பாடில்லை. எப்ப பாத்தாலும்’ சத்தம் போட்டு சிரிக்காதை, இரைஞ்சு கதைக்காத, அடக்க ஒடுக்கமா இரு எண்டபடிதான். ஆம்பிளப்பிள்ளையளோட திரியாதை எண்டதும் சேத்துத்தான்.

அவர்களுடைய தெருவிலேயே அவளுடைய வயதொத்த பெடியங்கள் இருந்தார்கள். அவர்களோடு போளையடிக்கவும், கிட்டியடிக்கவும் கிளித்தட்டு மறிக்கவும் இவர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். இவர்களை என்றால் அவளுடைய முன் வீட்டு நண்பிகளான யோகா, பொன்மணி, அன்னலச்சுமி இவயளையும்தான். இதில் யோகாவின் அண்ணனும், அன்னலச்சுமியின் மச்சானும் இருந்தனர். பின்னர் இவர்கள் வார இறுதியில் கூட்டாஞ்சோறு காச்சும் போது அவனுகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.

இப்போது கந்தப்பு வேட்டையில் பெரிய மிருகம் கொண்டு வந்ததால் அதை வேடிக்கை பார்க்க அவர்களும் சில ஊரவர்களுடன் வந்திருந்தார்கள். இந்த மிருகத்தை எத்தனை நாள் வேவு பார்த்து எப்படி சுட்டேன் என்பதை கந்தப்பு விபரிப்பான். அவன்தானே இந்த வேட்டைக் கதையின் கதாநாயகன்.

மடியிலிருந்து கொட்டப்பெட்டியை எடுத்து ரெண்டு பாக்குப்பிளகுகளை வாயில் போட்டுக் கொண்டு சாவகாசமாக வெற்றிலையை எடுத்து அதன் காம்பைக் கிள்ளியவாறே தொண்டையைச் செருமிக்கொள்வான்.

“இது எத்தினநாளா எனக்கு போக்குக் காட்டிக் கொண்டு திரிஞ்சது. இப்ப ரெண்டு நாளா அசுமாத்தத்தை காணேல்ல. ச்சுக் .. வேசமோன்ர இதுக்க வந்து கிடந்திருக்கப்பா..!(அது எதிரியை அதன் பாசறையில் சந்திக்க வந்திருக்குமோ) பட்டப்பகல்ல மோட்டைக்கு வந்திருக்கெண்டாப் பாரன். மனிசிய உலைய வையப்பா எண்டிட்டு  கோட்டைப்போட்டுக் கொண்டு துவக்கை எடுத்துக் கொண்டு உவன் சந்தியாவின்ர காணிக்கால விழுந்து, சுடலைக்கு வச்ச கொப்புநேரிக்கால திரும்ப, சருகு பிரண்டிருக்கு. அப்பதான் நடந்து போயிருக்கு. காத்தும் எதிர்வளந்தானே. உவர் மோட்டைக்குத்தான் போயிருக்கிறாரெண்டு விளங்கீற்றுது. கோட்டுக்க ஒரு எஸ்எம்ஜீதான் கிடந்திது. துவக்க முறிச்சு சன்னத்த கழத்திப் போட்டு, எஸ்எம்ஜியக் கொழுவி மடக்கிப் போட்டு, வில்லை இழுத்துக் கொண்டு கூமா அணைவில நிக்க, குர்குர்ரெண்டு கேக்கிது. ஆள் தலையைச் சிலுப்பிக் கொண்டு நிமிர வளமாக்  கழுத்தாங்குத்தியில வச்சன்… அந்த இடத்தில….( கீறிட்ட இடத்தை கேட்பவர்கள் விழுந்தார் என நிரப்பிக் கொள்ள வேண்டும்.)

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

(Visited 176 times, 1 visits today)