கற்பெனப்படுவது-சிறுகதை-தமிழ்க்கவி

தமிழ்க்கவி“நான் என் கணவனல்லாத ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டேன்.”

“விரும்பியா விரும்பாமலா அதாவது தற்செயலா?

“அதுதான் சொன்னேனே ஈடுபட்டிருந்தேன்”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“ஈடுபாடு என்பது புரியவில்லையா?அது அக்கறையுடன் நடந்தது.”

“அது தவறு என்பது உங்களுக்கு தெரியாதா?”

“எது? ஈடுபாடா அல்லது உடலுறவா?”

“இரண்டும்தான்…ஏன் சிரிக்கிறீர்கள்?”

“இதில் தவறு எங்கே இருக்கிறது அவரை நான் என்னுடன் வாழ அனுமதிக்கவில்லை.  அவர் தனது விருப்பப்படி எங்கோ இருந்தார். எப்போதாவது வந்தார். அவர் வருமுன்: அறிவிப்பார். நான் அவருக்கான உணவை தயார் செய்து வைப்பேன். சிலவேளை இருவருக்குமான உணவை அவரே கொண்டுவருவார்.”

“அவருடன் மட்டும்தானா அல்லது…”

“ம்… சின்ன வயதில் இது போல பலர் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய உறவாக அதை என்னால் சொல்ல முடியாது. அதை நான் இப்போது சொல்வது அவர்களை பாதிக்கலாம். ஆனால் அவர்களது நடவடிக்கைகள் என்னை பாதித்ததில்லை. அங்கும் தவறு நடக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.”

“இது என்ன அசட்டுத்தனம். அவை எப்போது?”

“எனக்கு ஒரு ஏழெட்டு வயது இருக்கும்போது எனது பெற்றோர் எங்கள் அயலவரின் பாதுகாப்பில் என்னை விட்டுவிட்டு வேலைக்குப் போகிற நேரங்களில் நடந்தது. அந்த அயலவர் என்னை ஆடையின்றி நிற்கவைப்பார். என் உடலை நான் வெட்கப்படும்படி தொடுவார். எனக்கு கூச்சமாக இருக்கும் ஆனாலும் கூடவே ஒரு குறுகுறுப்பும், அதனால்தான் அதைப்பற்றி நான் அப்போது யாரிடமும் சொல்லவில்லை. அவர் இன்னும் குழந்தைகள் எப்படி அம்மாவின் வயிற்றுக்குள் போகிறது என்றும் சொல்லித்தந்தார் அப்போது நான் அதை நம்பவில்லை.”

“ம்…தியறி மட்டும்தானா? செய்முறை விளக்கமும் இருந்ததா?”

“செய்முறை…யும் இருந்தது. எனக்கு வலிக்காமல் கால்களுக்கு இடையில்.”

“அடி பாவி இது பாலியல் வன்முறையல்லவா? அப்பவும் ஏன் வெளியே சொல்ல வில்லை?”

“அது எனக்கு பிடித்திருந்ததே. பிறகு இதேபோல என் மாமா சித்தப்பா எல்லோரும்கூட நடந்து கொண்டார்களே. அதெல்லாம் அப்போதுமட்டுமல்ல இப்பவும் தப்பில்லை என்றுதானே சட்டம் சொல்கிறது.

“நீ என்ன சொல்கிறாய் சட்டத்தை எப்போது பார்த்தாய்?”

“நான் பெரியவளாகிய பின்னர்தான் பாலியல் உறவு என்றால்…”

“என்றால் சிறிதளவாவது உறுப்பினுள்ளே போயிருக்க வேண்டுமாம், இல்லாதபோது அது பாலியல் உறவு அல்ல”

நான் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். சட்டம் அப்படியா சொல்கிறது?

“இப்போது உள்ள உறவை அதாவது உன் கணவனல்லாத இவனைப்பற்றி உன் கணவன் அறிந்தால் என்ன நடக்கும்?”

இது ஒரு பெரிய கதை நான் கன்னியாக இருந்தபோது அதாவது படித்துக் கொண்டிருந்தபோது அவன் இந்த ஊருக்கு வந்தான். அந்த நேரம் என்னொட்டப் பெண்களுக்கெல்லாம் அவன்தான் ஜெமினி கணேசன். அத்தனை அழகு,படிப்பு, திறமை எல்லாம் இருந்தது. எனக்கும் அவனைப்பிடிக்கும் என்னோட அப்பாவின் குலம் கோத்திரம் எல்லாம் உங்களுக்கும் தெரியுமே அதை நினைத்தே நான் ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்று மறந்து விட்டேன். அவன் அப்படியொன்றும் நல்லவனல்ல. ஊருக்குள் இரண்டொரு பெண்கள் அவனுடைய நட்பைப் பெற்றிருந்தார்கள். என்னொட்ட வயதினர்தான். அவர்கள்மீது எனக்கு பொறாமையாக இருந்தது.

எனக்குக்  கலியாணம் திடீரெண்டுதான் நடந்தது. மணவறையில வச்சுத்தான் நான் மாப்பிளைய பாத்தன். எப்பிடி பக்கப்பார்வைதான். எனக்கு அவனை கொஞ்சங்கூட பிடிக்கயில்லை ,பிடிக்கவேயில்லை. மறுத்துப்பேசிற அளவுக்கு பொம்பிளையளுக்கு சுதந்திரம் கிடையாது. அண்டு ராராவா அழுததுதான். அவனை கிட்டயும் நெருங்க விடயில்லை. பிறகு பிறகு எப்பிடியோ அவன் என்னை தன்ர எண்ணத்துக்கு வளைச்சிட்டான். எனக்கும் வேற வழியில்லை. சின்ன வயசு அனுபவங்களுக்கும் இந்த வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒரு பாதிப்பும் இல்லாம என்னை கடந்து போயிற்றுது. இப்ப நான் உங்களட்ட சொல்லும் வரைக்கும் அது வேற ஆருக்கும் தெரியாது எண்டில்ல. எனனொட்டப் பிள்ளையள் ரெண்டு மூண்டு பேர் தங்கட வீடுகளிலயும் இப்பிடி மாமாக்கள் பக்கத்து வீட்டு கிழவர்கள் சொல்லித்தந்த கதையள சொல்லும் போது நானும் சொன்னதாக ஞாபகம். அதெல்லாம் ஒரு பகிடி விளையாட்டுப்போல, திருடித்திண்ட பணியாரம் போல கரைஞ்சு போச்சு.

“நீங்கள் அந்த ஜெமினிகணேசனப்பற்றி சொல்ல வந்தீங்கள்.”

“ஓ……… அவனுக்கு கலியாணமாகி பிள்ளைகுட்டியளும் பிறந்திட்டுது. எங்கட ஊரிலதான் இருந்தான். எங்களோட  அதாவது எங்கட குடும்பத்துக்கும் அவங்கட குடும்பத்துக்கும் எந்த உறவும் இல்லை. எனக்கும் மூண்டுநாலு பிள்ளையளாச்சே. இப்பதான் என்ர மனிசன் வெளியூரில வேலைகிடைச்சு போனார். அதில எனக்கு சந்தோசந்தான். என்ன வீட்டில நிண்டானென்டா தினமும் அவருக்கு பொம்பிளை வேணும். எனக்கும் சீயெண்டு போச்சு. ஒரு அன்பாதரவா கதைக்காது. எந்த வேலையிலயும் உதவி செய்யாது. ச்சொம்மா மூலையில கிடக்கிற சாக்கை எடுத்து விரிச்சுப்போட்டு படு எண்டா படுக்கோணும். ஒரு நாளையில வருத்தம் துன்பமெண்டு விடேலாது. நீங்க சொல்லுறியள் வீட்டுக்கு தூரமெண்டாலும் வந்தா என்னண்டு கேக்கும். நானும் மரக்கட்டைமாதிரி கிடந்து பழகிற்றன். அவ்வளவுதான்.

“நீங்கள் அந்த ஜெமினி கணேசனைப்பத்தி…”

ஒ…அதுதான் வாறன். அந்தாள் இவரோட கூடித்தான் ஒருநாள் வீட்ட வந்தவன் என்னவோ மணல் ஏத்தப்போகவெண்டு கூடிப்போனவர். பார்த்தா நாளாவட்டத்தில அரைப்போத்தில் சாராயத்தை கொணந்து ரெண்டு பேருமா திண்ணையில வச்சு குடிச்சிட்டு அவன் போயிருவான். ஒரு நாள் சாப்பிடனப்பா எண்டு இவர் கேக்க அவனும் நிண்டிட்டான். நான் சோத்தப் போட்டன். திண்டு கொண்டிருக்கயுக்கயே அவன் சமையலை திறமா இருக்கெண்டு ருசிச்சு திண்டான். இது இது ஒருநாளயில என்ர மனிசன் சொன்னதில்லை. பிறகு ஒருநாள் இவை முற்றத்தில நிண்டு ஏதோ கேக்க எடுத்துக்கொண்டு நான் அவதிப்பட்டு ஓட தாவாரத்துப் பூட்டு நெத்தியில இடிச்சுப்போட்டுது. இந்தாளும் நிண்டதுதான். ஆனா அவன் துடிச்சுப் பதைச்சு பாருங்கோ ரத்தம் வருது அது இதெண்டு பரிதாபப்பட்டானோ எனக்கு அவன்ர அந்த …அந்த ஒரு இது பிடிச்சிட்டுது. பிறகு அப்பப்ப வருவான் போவான். இவரையும் வெளியூரில வேலைக்கு சேத்தது இவன்தானெண்டு எனக்கு அப்ப தெரியாது.

அவர் அங்க வேலை செய்ய காசு இஞ்ச இவன் கொணந்து தருவான். மெல்ல கொஞ்ச நேரம் இருந்து கதைக்க துவங்கினான். எப்பவும் என்னைப்பற்றி அன்பா விசாரிக்கிறது போய் வரக்க தின்பண்டம் கொண்டுவருவான். பிள்ளையள் இருக்குத்தானே. மெல்லமெல்ல நான் மூடி வச்சிருந்த என்ர இளவயது காதல்கோட்டை திறக்கிறது  துவங்கிச்சு. அவன ஒருநாளைக்கு காணாட்டி எனக்கு பதைப்பா இருக்கும். மனம் கொதிக்கும் ஏன்? இடையில என்ர மனிசன் ஒருக்கா ரெண்டுதரம் வந்தவர்தான் அவர் வழமைபோல தன்ர அலுவலப்பாத்திட்டு போயிற்றார். அப்பவும் இவன் வந்து தான் வந்து போறதை சொல்லுறான். இவர் அதை பெரிசா எடுக்கேல்ல. அவன் மெல்ல மெல்ல கதைச்சே என்ர மனசைக்கரைச்சு, நானே இப்பிடிப்பட்டவனோட வாழ வேணும் எண்ட நிலைக்கு வந்திட்டன். அந்த ஈடுபாட்டிலதான் அது நடந்தது.

“இது உங்கட கணவருக்கு தெரியுமா?”

“ஆரம்பத்தில தெரியாது. ஆனா ஒருநாள் அவன் வந்திட்டுப்போன கையோட இவரும் வந்திட்டார். ஒரு கதையுமில்ல சாக்கை எடுத்து விரிச்சிட்டார். எனக்கு மறுக்க முடியேல்ல மறுத்தாலும் விடுற ஆள் இல்லத்தானே”

“பிறகு…………,”

“பிறகும் இருவது வருசம் குடும்பம் குலையாமத்தான் இருந்தம். ஆனா…!”

“ஆனா என்ன ?”

“அண்டைக்குப்பிறகு…என்ர புருசன் என்னைத் தொடயில்ல”

“கேக்கிறனென்டு கோவியாதையுங்கோ ஜெமினிகணேசன்…?”

“அவன்ர கதை வேற, ஒருநாள் ஏதோ விளையாட்டா கதைச்சுக் கொண்டிருக்கயுக்க தான் தன்ர வீட்டுக்கு நண்பர்களை கூட்டிக்கொண்டு போறதில்லை எண்டான் ஏனெண்டு கேட்டன். தன்ர மனிசி அனுமதிக்கமாட்டாளாம் சுத்தமான பொம்பிளையாம். எண்டு சொன்னான்.  எனக்கு செருப்பால அடிச்சமாதிரி இருந்துது.”

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

 

(Visited 167 times, 1 visits today)
 

2 thoughts on “கற்பெனப்படுவது-சிறுகதை-தமிழ்க்கவி”

Comments are closed.