மதம் என்னை ஏன் பிடிக்கிறது ?-கட்டுரை-தமிழ்க்கவி

 

தமிழ்க்கவிமதம் என்றால் வெறி என்றொரு கருத்துண்டு . இன்னொரு வகையில் பார்த்தால் அது தான் சமயம் என்று பேசப்படுகிறது. இதன் அர்த்தம் தான் என்ன? சமயம் என்றால் ஒரு பெரியார் தோன்றி அந்நேரம் உலாவிய  காலம் என்பதே அதன் கருத்து. புத்தர் வந்தபோது பௌத்த சமயம். கிறீஸ்து பிறந்தநேரம் அவரது காலம் கிறீஸ்தவ சமயம். இந்துக்கள் பரவியபோது அது இந்து சமயம். காலத்துக்குக் காலம் உருவான சமயங்கள் அனைத்துமே மக்கள் வாழவேண்டிய அறநெறிகளைப் பரப்பவே தோற்றம் பெற்றன என்பதுடன் அந்தக் காலங்களில் அராஜகம் தலைவிரித்தாடியது என்பதும் இன்னொருபக்க நிதர்சனமாகும்.

உதாரணமாக, பிராமணர்கள் (இப்பபோல) முற்காலத்தில் காலத்துக்குக் காலம் மன்னனிடம் சென்று கிரக நிலை சரியில்லை உடனே யாகம் செய்யாது போனால் அரசுக்கு கேடுவிளையும் என்று அதை இதை சொல்லி யாகம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். இந்த யாகம் செய்ய ஆரம்பித்த காலமுதல் அது முடியும்வரை அவர்களை அரசன் கௌரவமாக நடத்துவான். அவர்களுக்குத் தேவையான பரிசில்கள் உணவு உடை என்பன கொடுத்து உபசரிப்பான். இதன்பொழுது யாகத்திற்கு தேவையான தானியங்கள் ஆடு மாடு கோழி எனப்பல பொருட்களும் மக்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இப்படி எடுத்ததற்கெல்லாம் யாகம் செய்து அதில் வாட்டிய மாமிசங்களை பிராமணர்கள் உண்டு களித்தார்கள். இதனால் மக்களே பெரிதும் வருந்தினர். அந்தக்காலத்தே தோற்றம் பெற்ற பௌத்தம், சமணம் போன்ற சமயங்கள் “பலியிடுதலை” தவறு என்றுகூறியும்  விலங்குகளைப்  பலியிடல் பாவம் எனவும் யாகத்தை செய்பவரே அதற்கான செலவையும் செய்யவேண்டும் எனவும் பிரச்சாரம் செய்தனர்.அதேவேளை இந்த மதங்கள் பிடித்ததோ இல்லையோ தமது சொத்துக்களை பாதுகாக்க மக்கள் பலர் மதம் மாறினர். சமணமும் பௌத்தமும் வளர்ந்தன. இதன்பொழுது பிராமணர்களும் மாற வேண்டியதாயிற்று. பின்னர் அறநெறிகளுக்கெல்லாம் தலைமையான சைவர்கள்  நூற்றுக்கணக்கான சமணர்களை கழுவிலேற்றிக் கொன்ற சம்பவங்களும் இன்றைய  கோயில் மோதல்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. இதெல்லாம் போகட்டும். மூட நம்பிக்கைகள் என்பது சமகாலத்தில் தலைவிரித்தாடுவது ஒருசாராருக்கு மிகமிக வாய்ப்பாக மாறிவிட்டது.

பராசக்தியில் கலைஞர் கருணாநிதி  எழுதிய ஒரு வசனம் “பக்தி பகல்வேசமாக மாறக்கூடாது”. அப்ப இப்ப என்னவாக மாறிவிட்டது ? இதை நான் எழுதப்புகும்பொழுது  ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுகின்றேன். நான் நாஸ்திகவாதியல்ல. நான் ஓர்  தேர்ந்த தெளிந்த தெய்வ பக்தியுள்ளவள். வாரந்தோறும் எமது அயலில் உள்ள கோவில்களில் தேவார பாசுரங்களை பாடியவள்தான். எனது அறிவு விழித்துக் கொண்டபிறகும் நான் அவற்றைப் பாடுகிறேன்,ஏனெனில் அவற்றிலுள்ள இலக்கிய நயத்துக்காக.

காலம் மாறிவிட்டது, விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, ஆனால் மக்களிடையே மூட நம்பிக்கைகள் வளர்ந்துவிட்டது என்பதெல்லாம் வடிகட்டின பொய். எவருக்கும் மூட நம்பிக்கை இல்லை என்பதை அன்றாடம் கோயில்களுக்கு வரும் மக்கள் கூட்டம் நிரூபித்துக் கொண்டே வருகிறது. ஆடம்பரம், விளம்பரம், பெருமை, என்று தம்மைத்  தம்பட்டம் அடிக்கும் கூட்டமே இன்றைய கோவில்களில் பெருமளவு காணப்படுகிறது. தமது ஆடை அணிமணிகளை போட்டுக்காட்டும் மேடையாக இன்றைய கோவில்கள் மாறிவிட்டன. மேடையிலோ சினிமாவிலோ காணக்கூடிய கண்ட காட்சிகள் எல்லாம் கண்முன்னே கோயில்களில் அரங்கேறுகின்றன.

தமிழ் பிரதேசமெங்கும் கோயில்கள் புதிது புதிதாக முளைத்து, முளைத்தெழுந்த வேகத்திலேயே திருவிழாக்களும் கோலகலமாக நடப்பதை காணக்கூடியதாக உள்ளது. “தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அழுகையில்” கோடிக்கணக்கான பணம் கொட்டியழிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்களின் பெறுமதியும் கோடிக்கணக்கை எட்டிக்கொண்டிருக்கிறது. பெரும் திருவிழாக்களில் இளைஞர்களும்  இளம் பெண்களும்  போட்டிபோட்டுக் கொண்டு நெருக்குப்படுவதை காண்கிறோம். இது ஒரு ஏற்பாடு செய்து கொண்டு விளையாடும் விளையாட்டாக நடக்கிறது.

ஒலிபெருக்கியில் ஒருவர் உருக்கமாக பாடுகிறார் “கூற்றாயினவாறு விலக்ககலீர்”  எனக்கு அவரைத்தெரியும் ஆனால் அவருக்கு எப்ப சூலைநோய் வந்தது என்பதுதான் தெரியவில்லை. என்றைக்கோ ஒருவர் தன் நோய் தீரப் பாடிய பாடலை இப்ப பாடினால்  புண்ணியம் கிடைக்குமாம். அதுகூடப்பரவாயில்லை, அதிகாலையில் தியானம் யோகா என்று சிலர் ஈடுபட மாணவர்கள் படிப்பதில் தீவிரமாக ஈடுபடுவார்கள். அந்தநேரம் நாற்புறமும் உள்ள கோவில்களிலிருந்து பக்திப்பரவசமாகப் பெரும் சத்தமாகப் பாடல்கள் ஒலிபரப்பாகும். வைரவர் கோவில்பாட்டும் பிள்ளையார்கோவில்பாட்டும் ஒன்றுடன் ஒன்று மோதித்  திரும்பி அம்மன்கோவில் பாடலுடன் இடிபட்டு மிதந்து கந்தசுவாமி கோவிலில்வரும் கவசத்துடன் மோதி பெரிய இரைச்சல் மட்டுமே ஊரைக் கலக்கிக் கொண்டிருக்கும். பாடலை பக்தியோடு பாடுபவரை தாங்கலாம். அனால் , இந்த இடங்களுக்குக்  கிட்டப்போனால் இறுவட்டை மெசினில் திணித்துவிட்டு பக்திமான்கள் ஊர்புதினம் கதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பர்.

 

தமிழ்க்கவிகந்தையாவின் பூசை நாலுலட்சமாம் என்றால் செல்லையா ஐந்துலட்சம் செலவழித்தாக வேண்டும்.இல்லாவிட்டால் கௌரவம்  என்னாவது? அன்னதானம் இப்போது எல்லாக் கோவில்களிலும்  வழமையாகிவிட்டது. அன்னதானம் என்றால் பசித்தவருக்கு உணவளித்தல்தானே? இங்கே பட்டும் அரைவரை தொங்கும் ஆபரணங்களைப் போட்டுஅணிந்தவர்களே பந்தியில் இருக்கிறார்கள். நல்ல துணி அணிய வசதியற்ற ஏழைகள் மீதமாக  வரும் சோற்றுக்காக வேலியருகே காத்திருப்பதையும் இங்கே காணமுடிகிறது .

ஒரு ஆன்மீகப் பெரியார் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் ஒருதடவை இந்த விழாக்களைப்பற்றி பேசும்போது கூறினார் “கடவுள் தன்னை அலங்கரிக்கச் சொல்லியோ தன்னை தேரில் வைத்து இழுத்துச் செல்லும்படியோ கேட்டாரா ? இது மனிதன் தன் திருப்திக்காக செய்வதுதான் என்று. முற்காலத்தே படிப்பறிவு இல்லாத என் பூட்டி சொன்னதை நான் இதோடு ஒப்பிட்டுப்பார்த்தேன். எனது பூட்டி சொன்னதாவது, “பலர் நோய்வாய்ப்பட்டிருப்பர்.சிலர் சாதிகாரணமாக கோவிலுக்குள் செல்ல முடியாதிருப்பர்.பலர் ஏழ்மை காரணமாக நல்ல ஆடையின்றி கோவில் தரிசனம் செய்ய போகமாட்டார்கள். அவர்கள் எல்லோருக்குமாக சுவாமி வருடத்தில்  ஒருதடவை வீதியில் உலாவருகிறார்” . இந்த வருடத்தில் ஒரு நாளுக்காக ஊரே கூடி தெருக்களை சுத்தம் செய்வர் பற்றைகள் வெட்டி கூட்டி துப்பரவு செய்து ஊரே நீராடி மங்கலமாக சுவாமியை வரவேற்பர்.இது கோவில்களில் ஊரவரே பூசை செய்த காலம். அதனால் ஊர்நலம் பெற்றது. இப்பொழுது  சுவாமி கோவில் வளவுக்கு வெளியால் போவதற்கு  ஐயர்மார் அனுமதிப்பதில்லை .

இந்த ஐயர்கள் இல்லாமல் எந்தக்காரியமும் செய்வதில்லை என்ற நிலைக்கு பலர் மூழ்கிப்போயுள்ளனர். ஒரு புடவை வாங்கக்கூட “ஐயர் பட்டர்கலரிலதான் வாங்கச் சொன்னார்” என்பவர்கள் உள்ளனர். ‘நேரா நோன்பு சீராகாது’ என்பது முது மொழி. ஒவ்வொரு நோன்புக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. என்பது பொதுவாக சைவர்கள் அறிந்ததுதான். இன்றோ..? வாழ்க்கைத்துணை நலம்பெற பிடிக்கும் கௌரிக்காப்பு விரதத்தை பள்ளிச்சிறுவர்களும் பிடிக்கிறார்கள். ஒரு ஐந்தாம் ஆண்டுச்சிறுவன் சொன்னான் . “எங்கட கோயில் ஐயா சொன்னவர் ஸ்கொலர்சிப்பில பாஸ் பண்ண கெளிரிக்காப்பு பிடிக்கச்சொல்லி” என்று . பின்ன சும்மாவா ??ஒவ்வொரு காப்புக்கும் பணம் பொருள் தட்சணை எல்லாம் கிடைக்கிறதே. எனவே மாணவர்கள் படிப்தை விட்டுவிட்டு விரதம் பிடித்தால் போதும் என்ற மன நிலை வளர்க்கப்படுகிறது. இப்படியே ஒவ்வொரு விரதமும் மாறிவிட்டது.

முற்காலத்தே அறிமுகமற்ற ஊருக்குள் வரும் சிலர் கோவில்களிலேயே தங்குவர். இதற்கென சத்திரங்கள் இருந்தன. ஒருமன்னன் கோவில் கட்டும்போது மணி  மண்டபத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ஒருவர் கேட்டாராம்,

” இவ்வளவு  பெரிய மண்டபம் ஏன்” ?

“அவரவர் வீடு அவரவர்களுக்கு மட்டும்தான் உரியது. ஆனால் இது மக்கள் நன்கொடையில் மக்களுக்காக கட்டப்படுவது. யார் வேண்டுமானாலும் இங்கே தங்கலாம் படுத்தெழும்பிப் போகலாம்” என்று அதற்குப்  பதிலளித்தான் அந்த மன்னன்.

நான்  கேட்கிறேன், இப்போதுள்ள எந்தக் கோவிலிலாவது மக்களுக்கு இந்த உரிமை உள்ளதா? மக்களது நன்கொடையில் கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் பூசை நேரம் முடிந்ததும் பூட்டப்படுகிறதே? எங்காவது அங்கு  தங்கும் சத்திரம் உள்ளதா?

தமிழ்க்கவிஅருகிலிருப்பவரின் துயரம் நீக்க மனமற்றவர்கள் கோயில்களுக்கு அள்ளி வழங்குகிறார்கள். இவர்களால் இரு பாடசாலை கட்டமுடிந்தால் நாடு நலம் பெறுமே? கல்வி கற்க முடியாத சிறுவர்களையும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நசித்துக் கிடக்கும் குடும்பங்களையும் வாழவைக்க ஏன் இவர்கள் முன்வரவில்லை…..?  யாசகம் செய்து வாழும் வாழவேண்டியவர்களுக்கு, உருத்திராட்சங்கொட்டைக்கு தங்கக் கவசமிட பெருந் தொகையை நல்குவோர் பெருகியுள்ளமையானது மக்கள் மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதல்ல அவர்கள் தமது பெருமையை பறை சாற்ற இப்படியான கோவில்களே சரியான தேர்வாக உள்ளது.

அண்மையில் ஒரு கோவில்திருவிழா. சிறிய கொவில்தான். இரவு சுவாமி புறப்பாடு. அன்ன வாகனத்தில் சுவாமி வெளி வாசலுக்கு வந்தபோது எல்லோருடைய கமராக்களும் கைபேசிகளும் சுவாமியை சுட்டுத்தள்ளிக்கொண்டிருக்க மிக ஆடம்பரமாக  உடையணிந்திருந்த ஒரு பெண்மணி என்னருகே வந்து,

“வாகனம் எப்பிடியிருக்கு?” என்று கேட்டார்.

நான் திகைத்துப்போய் “வாகனமா ?” என்று கேட்க,

“சுவாமி வாற வாகனம்” என்றவர், “அது நாங்கதான் செய்து கொடுத்தது” என்றார்.

நான், “அப்படியா?” என்றதுடன் அவர் அதை வேறு பெண்களுக்கும் சொல்வதற்காக விலகிச் சென்றார். எனக்கு சப்பென்று போனது. கடவுளுக்கே அருளக்கூடிய பெரியவர்களாக இப்போது செல்வந்தர்கள் மாறிக்கொண்டிருக்க, கடவுள் பாவம் எங்களுக்கு அவரால் என்ன தரமுடியும்? எல்லாவற்றுக்கும் மேலாக சுவாமியை இறக்குமுன் சுவாமியின் சார்பாக அந்தப் பெண்ணுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும்  வழங்கனார்கள். இப்போது சொல்லுங்கள்……….. கோயிலுக்கு உவ்வளவு பெருந் தொகையான மக்கள் எதற்காக போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்?? அந்த கடவுளுக்கு இயன்றதை கொடுத்து தாங்கள் பெயரை நிலைநாட்டத்தான்.

“அன்பார்ந்த பக்த கோடிகளே கனடாவாழ் ஆறுமுகம் வள்ளிபுனத்தைச் சேர்ந்தவர். இந்த ஆலய கட்டிட   நிதிக்காக ஒருலட்சம் ரூபாய்களை அன்பளிப்பு செய்துள்ளார். அன்னாருக்கு பிள்ளையார் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” மறுபடி மறுபடி இந்தமாதிரி ஏராளமான அறிவித்தல்களை நான் சொல்லமுடியும். இந்தளவுக்குத்தான் எமது மக்களின் மனநிலை இருக்கிறது. இதை மூடநம்பிக்கை என்று சொல்ல முடியாது. இது பகட்டு  ஆடம்பர மோகம். நானே பெரியவர் என் நிரூபிக்கும் போராட்டக்களம். பக்தி பகல்வேசமாகிக் கொண்டிருக்க, உண்மையில் அதரவற்ற ஏதிலிகளும் ஆண்டவனே துணை என்று அரற்றிக் கொண்டிருக்கின்றனர்.  ‘அகதிக்கு ஆகாசந்துணை செட்டிகப்பலுக்கு தெய்வந்துணை’ என்பது முது மொழி. இப்ப தெய்வத்துக்கே வரமளிக்கும் அபயமளிக்கும் உபயமளிக்கும் அளவுக்கு மக்களால் முடிகிறது. அதைகொண்டு தான் கோவில்களிலும் கொடியேறுகிறது.

இங்கே வெறுத்துப்போகும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி தம்மோடு சேர்த்துக் கொள்ளும். மதங்களும் தாராளமாகவே உள்ளன. எப்படியோ போதைதரும் மதுவை விட மதங்களே இப்போது போதையேற்றும் சாதனமாகி வருகிறது. இப்படியான போக்குகள் எம்மிடையே அமைதியாக ஏறிக் கொண்டிருக்கும் நஞ்சு. சுயத்தை இழந்து தலைக்கனம் ஏறி இன்னமும் குதிக்காதவர்கள் விரைவில் குதிப்பர்.இது மூடநம்பிக்கையில் வழிவந்த ஒர் புது வடிவம்.

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 90 times, 1 visits today)