காடுலாவு காதை-பத்தி-பாகம் 06-தமிழ்க்கவி

காடுலாவு காதை 06 நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று சொல்வார்கள். கந்தப்புவின் குடும்பமும் அவனோடு சேர்ந்து கோவில் குளத்தில் காணி கிடைத்து காடு வெட்டும் வேலைகளை செய்து கொண்டிருந்தது. பதினொரு குடும்பங்களுக்கும் துணையாக அவர்கள் வருகிற வழியிலிருந்து காடுகளும் மேலும் அம்பது குடும்பங்களுக்கு குடிநிலங்களாக பகிர்ந்து கொடுக்கப்பட்டுவிட்டதால் அந்த பெரு வீதியில் சனப்பிழக்கம் அங்கங்கே தென்படத்தொடங்கியிருந்தது.

இன்னும்கூட சின்னப்புதுக்குளத்தில் வசித்துக் கொண்டே வீடமைத்தும் கிணறு வெட்டவும் முயன்று
கொண்டிருந்தனர். முதலில் கந்தப்புவுக்கு மேற்கே குடியிருந்த பொன்னர் கிணறு வெட்டத் தொடங்கியிருந்தார். தெற்கே தம்பிராசாவும் கிணற்றுக்கு நிலையம் எடுத்திருந்தார். கந்தப்பு தன் காணியைப் பலப்படுத்திவிட்டு கிணறு வெட்ட முயன்றான். காரணம் அவனுக்கு வீட்டுக்கு முன்பாகவே குளம் இருந்தது. அதில் நீர்த்தேவை நிறைவேறி வந்தது. ஆயினும் ஊருக்குள் மக்கள்தொகை பெருகிவர குளத்தின் சுத்தம் பற்றிய கேள்வி பிறந்தது.

மலசலகூடங்கள் யார் வீட்டிலும் இல்லை என்பதுடன் யாரும் குடியிருக்கும் வளவுக்குள். மலங்கழிப்பதை விரும்பவில்லை. அருகில்தான் காடுகள் நிறைந்து கிடந்ததே. தொடர்ச்சியாக பொன்னர்,கந்தப்பு, தம்பிராசர் வேலுப்பிள்ளையர், ஆகியோருடைய நிலங்கள் பிரதான வீதியின் அருகில் அமைந்தும் கிழக்கிலிருந்து மேற்கு உயர்ந்த பூமியாகவும் அமைந்திருந்தது. பொன்னர் தனது நிலத்தில் கிணற்றை அமைத்து அங்கேயே பக்கத்தில் வீட்டையும் கட்டிக் கொண்டார். முட்டச்சுவர்வைத்த மண் வீடு நல்ல அகலமாக மண்குழைத்து வைக்கப்பட்டது. அந்த வீடு இரண்டு அறைளும் சுற்றிவர சிறு திண்ணையும் கொண்டது.

தம்பிராசா கிழக்கே பள்ளத்தில் கிணற்றை வெட்டினாலும் ஆறேழு அடிகளுக்கு மேலாக உயர்து போய்க் கொண்டிருந்த மேற்கு நிலத்துக்கு நீர்பாய்ச்ச பொருமளவு மண் கொட்டி குளக்கட்டு போல பெரிய வாய்க்கால் அமைக்க வேண்டியதாக இருந்தது. பெரும் பொருட்செலவும் இடச்சேதமும் பல நாட்களும் இதற்காக செலவிடவேண்டியிருந்தது. (இப்போதுள்ள கோஸ் பைப் அப்போதில்லை பொலித்தீனும் வரவில்லை)

இந்த வாய்க்காலமைப்பில் லெச்சிமி தம்பிராசாவுடைய பிள்ளைகளுடன் போய் விளையாடுவாள்.

“அப்பூ……….. மலையில நிக்கிறமாதிரி இருக்கு” என்பாள்.

அம்மன் கோயில் பூசாரி செல்லர் வந்து அவர்களுடைய நிலத்தில் கிணற்றுக்கு நிலையம்
பார்த்தார். கிழக்கில் ஒரு நிலையம் இருந்தது.

“அய்யோ அண்ணை வேண்டாம். கிணத்து வெட்டுக்கு மேலால வாய்க்காலுக்கு தேவைப்படும் மேட்டிலயே பாருங்க” என்றான் கந்தப்பு. மேற்கே ஒரு தவிட்டை மரத்தின் அருகே நிலையத்தை குறித்த செல்லர்,

‘பதினெட்டு முழத்தில தண்ணி காணலாம். அங்காலும் வெட்டலாம். ஒருபக்கமா பாறை வரும் தண்ணி சுத்தம். தருமக்கிணறுதான் நிறையப்பேரை ஆதரிக்கும்.’

“அய்யோ கடவுளே அதுதான் வேணும். நாலுசனம் தாகம் தீர்த்தா அது வம்மிசத்துக்கே
பாக்கியம் அண்ணை.”

பாக்கியம் விரால்மீன் கருவாடு போட்டு கத்தரிக்காய் குழம்பும் கீரைச் சுண்டலும். குருவித்தலைப் பாகற்காய் பிரட்டலும் செய்திருந்தாள். செல்லர் வயிறார சாப்பிட்டு விட்டு புறப்படும்போது, கந்தப்பு தினைஅரிசி முடிச் சொன்றையும் சலாதுக் கீரை ஒரு பிடியும் கொடுத்து வழியனுப்பி வைத்தான். பாக்கியம் அப்போதுதான் நினைவு வந்தவளாக மெய்யேப்பா கனக்க கொச்சிக்காய் கொஞ்சம் ஆஞ்சு வச்சிருக்கிறன். வட்டுக்காயும் கிடக்கு கொண்டு போறாரோ கேளுங்க”

“அதென்னடி கேக்கிறாய் கொண்டுவா.” என்ற கந்தப்பு அவற்றையும் ஒரு துணி முடிப்பாக கட்டிக்கொடுத்தான். செல்லர் பொடிநடையாக வைரவப் புளியங்குளம் நோக்கி புறப்பட்டார். அப்போது மிதிவண்டிகள் அந்த ஊருக்கு வரவில்லை.கொஞ்சம் பண வசதியுள்ளவர்கள் திருக்கல் வண்டி வைத்திருப்பார்கள். (ஒற்றை மாடு பூட்டிய இருவர் மட்டுமே உட்காரக்கூடிய உள் ஆசனமும் கூடாரம் போட்ட வண்டி செலுத்துபவருக்கும் முன்னதாக நீண்ட ஆசனமும் இருக்கும்.)

“மலருக்கு வயிற்றால போகேல்லயாம் . இவளுக்கும் இப்பான் சிரங்கு வந்து மாறினது
எல்லாப் பிள்ளையளுக்கும் ஒருக்கா வயித்தால போக குடுத்தா நல்லம் என்கிற தீர்மானம் வீட்டில் எடுத்ததும். லெச்சிமி,

“ நான்போய் டாக்குத்தரட்ட சொல்லீட்டு வரட்டா’ என்று துள்ளினாள்.

“சீக் பேசாம இருடி அந்தாள் இன்னும் வந்திருக்காது.”

“இல்ல வந்திட்டார் இப்பதான் சுந்தரமண்ண மாட்டுக்கு வைக்க தண்ணியள்ளிக் கொண்டு போறார்.”

சின்னப்புதுக்குளத்தில் அவர்கள் வசித்த அவர்கள் வீட்டுக்கு கொஞ்சம் முன்னாக ஒரு நாட்டு டாக்குத்தர் இருந்தார். அவர் வவுனியாவின் தொலைவுக் கிராமங்களுக்கான நடமாடும் சேவையாக வாரம் ஒருநாள் ஒவ்வொரு ஊருக்கு என்ற வகையில் மருந்து கொடுக்கப்போவார். இதற்காக அவருக்கு ஒரு மாட்டுவண்டியும் அதை ஓட்டவும் மாடுகளை பராமரிக்கவுமாக ஒரு வேலையாளை வைத்துக் கொள்ளவும் அரசாங்கம் அனுமதி கொடுத்திருந்தது. அந்த வேலையாள்தான் சுந்தரம்.

“நீ போய் சொல்லீட்டு வா” என்று கந்தப்பு அனுப்பினான் துள்ளிக் கொண்டு ஓடிய
லெச்சிமி டாக்குத்தர் வீட்டுக்கு போனதுமே அவருடைய மனைவியோடு பேச்சுக் கொடுத்தாள்.

“இண்டைக்கு எங்க போனவர்?”

“தெரியேல்லயே பொறு குளிக்கிறார். வந்தாபிறகு கேட்டுச் சொல்லுறன்.”

இந்த உரையாடலை கேட்டுக் கொண்டே வந்த நடராசா டொக்டர்,

“என்னவாம் பெரிய மனிசி?” என்றார் மனைவியிடம். அவள் சிரித்தபடியே,

“எங்க போனநீங்களாம்?” என்றாள். அவர் டவலால் தன் உலை துடைத்து முடித்துவிட்டு,

“ வா சொல்லுறன். என அவளை பக்கத்தில் அழைத்து,

“இண்டைக்கு கொக்கு வெளிக்கு போனனாங்கள் அங்கயும் உன்னப்போலதான் சிரங்கு பிடிச்ச பிள்ளையள் மருந்து குடுத்தன்.”

“சிரங்குக்கு மருந்தா……….?” என்று சிரித்தவள், அப்பு என்னைக் கொண்டே குளத்தில போட்டிட்டார்.”

“பிறகு…………..?”

“நான் குழறக்குழற மீனெல்லாம் என்ர சிரங்கத் திண்டிட்டுது.”

“ பிறகு அந்த மீனை நீங்கள் திண்டிருவியள்.”

“ நீங்களும் மீன் தின்னுவியள்தானே?”

“ நாங்கள் கடல்மீன்தான் தின்னுறது.”

“ கூய்..கடல் மீன்தானே கப்பலால கடல்லவிழுந்து செத்தவைய திண்டது?”

“மேதாவி வாய்க்குவாய் கதைக்கிறாய். கடல் உயிர்போன ஒரு பொருளையும் தனக்குள்ள வச்சிருக்காது. வெளியில தள்ளிரும்.”

“அப்ப வீரகேசரியில போட்டிருந்தது………..?”

“என்னெண்டு?”

“ கரையில ஒதுங்கின சடலத்தை மீன்கள் திண்டதால ஆரெண்டு தெரியேல்ல எண்டு”

“ ஓ…அப்ப நீங்க பேப்பரும் படிக்கிறியளோ?” லெச்சிமி வெட்கப்பட்டாள்.

“ சரிசரி நீ வந்த விசயத்தை சொல்லு.”

“எங்கட வீட்ட வயித்தால போக குடிக்கப்போறம்.”

“ஆரார் எத்தினபேர்?”

“ நாலு பேர்.”

“சரி காலம தேத்தண்ணி குடிக்கப்படாது வெறும் வயித்தோட வரவேணும் சுணங்கப்படாது.” சரியெனத் தலையை ஆட்டியவள் வீட்டைநோக்கி ஓடினாள்.

ஏனப்பு நாங்கள் வவுனியா ஆசுப்பத்திரியில மருந்தெடுக்கிறம் கனசனம் இருக்கிற
இடத்துக்கே டாக்குத்தர் போறார்.”

“அதெல்லாம் புதிசா மாத்தறை பலாங்கொட எண்டு சிங்கள நாட்டால வந்து குடியேறின சனம். அவையளுக்கு இந்த வசதியள செய்து குடுக்காட்டி அவை திரும்பவும் தங்கட ஊருக்க போயிருவினமே அதால எல்லா வசதியும் செய்துதான் குடுக்க வேணும்.”

காடு விரியும்………..

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 116 times, 1 visits today)