ஈழத்து சிந்தனைவெளி மீதான கலகச்செயல்-பகுதி 02-அரசியல்-நேர்காணல்-மிஹாத்

நேர்காணலின் முதலாவது பாகத்தை வாசிக்காத வாசகர்களுக்காக :

https://naduweb.com/?p=11511

0000000000000000000000000

மிஹாத்
மிஹாத்

சமகாலத்தில் பெண்கள் அதுவும் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் கீழ் நிலை உயிரிகளாகப் பேணப்படுவது குறித்து…………? ஏனெனில் பொதுவெளியில் பெண்கள் மீதான அணுகுமுறை மிகவும் கிழத்தரமாக மாற்றப்பட்டத்தை என்னால் அவதானிக்க முடிந்தது.

சம காலத்தில் பெண்கள்,  குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் கீழ் நிலை உயிரிகளாக நடத்தப்படுவது குறித்து என்ற பதம் மூலம் நீங்கள் உணர்த்த முற்படும் அர்த்தங்களை நான் மறுதலிக்கிறேன். ஏனெனில் முஸ்லிம் பெண்கள்தான் உலகளவிலும், நமது சூழலிலும் கீழ் நிலை உயிரிகளாக நடத்தப்படுவதான ஒரு பிரச்சார தோற்றத்தை அது கொண்டிருக்கிறது.

முஸ்லிம் பெண்கள் என்றில்லை, உலகளவில் எல்லா பெண்களுக்கும் எதிரான அடக்குமுறைகளும், பாரபட்சங்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மதம்,  இனம், மொழி, நிறம், தேசம் என்பவை ஒரு பொருட்டல்ல. ஆனால் நீங்கள் இஸ்லாமிய பெண்கள் என்று முக்கியத்துவப்படுத்தி கேட்பதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. இன்று உலக அளவில் வலதுசாரி அரசியல் கருவியாக வளர்த்து விடப்பட்டிருக்கும் இஸ்லாமிய வெறுப்புவாதம் (Islamophobia) பெற்றிருக்கின்ற ஜனரஞ்சக வெளிச்சம் மூலமாக தோன்றியிருக்கும் கவனமே இதற்கு காரணமாகும்.

மதவாதத்தின் அடிப்படையில் இதற்கு பதிலளிப்பதை விடவும் தகவல்கள் வழியாக புரிதலை ஏற்படுத்துவதே பொருத்தமாகும். இஸ்லாமிய அடிப்படை நெறிகளின் படி பெண்களின் உரிமை குறித்து பாரபட்சங்கள் காட்டப்படவில்லை என பலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையகப்படுத்திக் கொண்ட ஆண்களினால் அடக்குமுறைப் பண்பாடுகள் நாளடைவில் இஸ்லாமிய நடைமுறைக்குள் உள்வாங்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மேலைத்தேய நாடுகளில் மிகையாக உள்ளது என்பதற்கான காரணங்களையும் நாம் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் விக்டோரியா மகாராணியின் காலத்தில் பிரிட்டனில் பெண்களுக்கான உரிமைகள் மிக கீழ் நிலையில் இருந்தது. பெண்கள் பொது இடங்களில் சகஜமாக பிறருடன் கூடி இருப்பதற்கான அனுமதி கூட இருக்கவில்லை. அங்கு1883 ம் வருடம் பெண் ஒழுக்கவியல் குறித்து Lady Huff என்பவர் எழுதிய Book Of Etiquette எனும் நூலில் புதுமையான கட்டுப்பாடுகள் பல இடம்பெற்றிருந்தன. அது அரச சபையிலும் செல்வாக்கு செலுத்தியது. நூலக அலுமாரிகளில் ஆண் எழுத்தாளர்களுடைய நூல்களும், பெண் எழுத்தாளர்களுடைய நூல்களும் அருகருகே உரசியபடி இருக்க கூடாது எனும் ஒழுங்கு அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது நடைமுறை செயல்பாட்டிற்கும் வந்திருந்தது. நூல்களுக்கே அப்போது இந்த நிலையென்றால் பெண்களுக்கான சுதந்திரம் அங்கு எவ்வாறு மட்டுப்பட்டிருக்கும் என்பதை சிந்திக்க முடியும்.

1770 ம் வருடம் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்களுக்கு எதிராக முட்டாள்தனமான சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. “சூனியக்காரிகளுக்கு எதிரான சட்டம்” என்று அதற்கு பெயரும் இடப்பட்டது. சூனியக்காரிகள் எனப்படுவோர் யாரெனில் நயவஞ்சகிகள், நறுமணம் பூசிக்கொள்ளும் பெண்கள், அலங்கார கேச ஒப்பனைகள் செய்து கொள்வோர், குதி உயர்ந்த காலணி அணிந்த பெண்கள், பிட்டங்களையும் மார்புகளையும் நிமிர்த்திய தோற்றம் கொண்ட பெண்கள் என ஒரு நீண்ட பட்டியல் கொண்டது. இந்தச் சூனியக்காரிகள் செய்யும் குற்றம் யாதெனில்,  இது போன்ற அலங்கார தந்திரங்களினால் மகாராஜாவின் பிரஜைகளை இந்த சூனியக்காரிகள் ஈர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்தக் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் குறித்த பெண்களுக்கு பிரத்தியேகமான தண்டனையும் வழங்கப்பட்டு திருமணமும் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இன்று மேலைத்தேய ஏகாதிபத்தியம் நவநாகரிகம் என்று கொண்டாடும் காரியங்கள் அனைத்தும் அன்று குற்றங்களாக காணப்பட்டிருக்கின்றன. இவ்வாறுதான் மேற்கில் ஒரு காலத்தில் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த பாரம்பரியத்தின் மாறுதல்கள் கொண்ட தொடர்ச்சிதான் இன்றும் மேற்கில் உள்ளது. ஏனெனில் இன்றுவரை பெண்ணியம் அங்கு தீவிரமான செயல்பாட்டில் உள்ளதற்கு அங்கு உரிமை மறுப்புகள் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

ஒரு காலத்தில் குற்றமாகக் கருதப்படுபவைகள் வேறொரு காலத்தில் மானுட நாகரிகமாகவும், சமூக விடுதலையாகவும் அர்த்தம் கற்பிக்கப் படுகின்றன. ஏகாதிபத்திய அதிகார மையங்களின் தேவைக்கேற்ப இந்த அர்த்தங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மேற்குலகம் தனது உள்ளக விடயங்களை மறைத்து விட்டு இஸ்லாமியர்களுக்குள் மட்டுமே பெண் அடக்குமுறை இருப்பது போன்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதை மூளையில் ஊற்றிக் கொண்ட கீழைத்தேய மக்களும் இந்தக் கதைகள் வழியே சிந்திக்கத் தொடங்கியமை அறிவுடமையாகாது.

மேற்கை ஒரு பக்கம் வைத்து விட்டு நமது இந்திய துணைக்கண்டத்தில் பெண்களின் நிலையை சிந்திப்போம். எல்லா சமூகங்களிலும் பெண்களுக்கு எதிரான பல்வேறு சமூக அடக்குமுறகள் ஒழுக்கம்,  சம்பிரதாயம் என்ற போர்வையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பை பிரதானப்படுத்திய சிந்தனையானது பெண்ணுடலை தனிச்சொத்தாக கையகப்படுத்திய வழிமுறைதானே. திருமணத்தின் பின்னர் முதல் உறவில் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் பாரம்பரியம் கொண்ட சமூகங்கள் இன்றும் உள்ளனவே. முறையான சொத்துப் பங்கீட்டில் பெண்களை முறைப்படி உள்ளடக்காத சமூகங்கள் உள்ளனவே. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய சமுதாயத்திற்கு வெளியில்தான் உள்ளன.

இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்களுக்கு ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்து பெண்கள் மேலாடை அணிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. தமது முலைகளை மறைத்து ஆடை அணிவதற்கு கூட ஒரு தரப்பு மக்கள் போராட வேண்டியிருந்தது. இன்றைய காலத்தில் பெண் உடலை திறந்து காட்டுவது நாகரிகம் என நம்ப வைக்கப்படும் சமூகங்கள் ஒரு காலத்தில் அடக்குமுறையினால் உடலை திறந்த படி வாழ்ந்தமையை சிந்திக்கத் தவறுகிறது.

ஒரு காலத்தில் சமூக அடக்குமுறையாக தீர்மானிக்கப்பட்டிருந்த அர்த்தங்கள் வேறொரு காலத்தில் பெண் சுதந்திரத்திற்கான அர்த்தங்களாக தீர்மானிக்கப்படுகின்றன.  இதனை தீர்மானிக்கும் கருத்தியல் அறம் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு நியாயம் கொண்டதாக ஏன் மாறுபடுகிறதென எவரும் சிந்திக்காமல் ஒரு சமூகத்தை இழிவு படுத்த துணிகிறோம்.

அந்தக் காலத்திலும் சரி, இப்போதும் சரி இஸ்லாமிய பெண்களுக்குள் இது போன்ற கண்ணியக் குறைவான வாழ்க்கை முறை செல்வாக்கு செலுத்த முடியவில்லை. ஏனெனில் அவர்களது இஸ்லாமிய நம்பிக்கை நெறியில் ஆண்களும், பெண்களும் எவ்வாறு ஆடை அணிதல் வேண்டும் என்பது பற்றிய தெளிவான பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்து வந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள்தான் கீழ்நிலை உயிரிகளாக நடத்தப் படுகிறார்கள் எனும் தர்க்கம் தவறானது. உலகளவில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு ஆண் மைய சிந்தனையின் அதிகார ஏகபோகமே காரணமானது. எல்லா சமூகங்களிலும் உள்ள ஆண் மைய சிந்தனையின் அதிகார வடிவமே பெண்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை கட்டமைத்து செயல்படுத்துகிறது என்ற கோணத்தில் சிந்திப்பதே நேர்மையானது.

இந்த வகையில் நோக்கும் போது இஸ்லாமிய பெண்கள் மனித உயிரிகளை விட கீழ்மையாக நடத்தப்படுகிறார்கள் என்பது பொருத்தமற்றது. இது தற்கால வெகுஜன அரசியல் சூழ்ச்சிகளினால் வெறுப்பை விதைக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் சில இஸ்லாமிய அடிப்படைவாத மூடர்களின் அநாகரிகமான பொதுவெளி நடத்தைகளும் இந்தக் குற்றச்சாட்டை உருவாக்குவதற்கு காரணமாகி விடுகின்றன.

90 களுக்கு முன்னர் இலங்கையில் இஸ்லாம் மதத்தை பின்பற்றிய ஆண்கள் பெண்கள் தமது பாரம்பரிய உடைகளையே அணிந்து வந்தனர். ஆனால் இன்று இந்த சூழல் முற்றுமுழுதாகவே மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக………..?

இலங்கையில் தொண்ணூறுக்கு முன்னர் ஆண்களும், பெண்களும்  பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்தனர் எனும் புரிதல் மிகவும் பொதுமைப்படுத்தல் கொண்டது. மேலோட்டமான பார்வை கொண்டது. பாரம்பரிய ஆடை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல. பாரம்பரிய ஆடைகளின் தன்மையோ, வடிவமோ மாற்றப்படக் கூடாததுமல்ல. இலங்கையிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் வெவ்வேறு வகையான பாரம்பரிய உடைகள் உள்ளன. காலவோட்டத்தில் அவற்றில் பல விதமான மாற்றங்கள் உருவாகி வந்துள்ளன. இலங்கைச் சமூகங்கள் அனைத்தும் பொதுவாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமது பாரம்பரிய அடையாளங்களுக்குப் புறம்பாக உடை அணியும் பழக்கங்களைக் கொண்டவைதான். அதேபோல முந்திய காலங்களில் இலங்கைச் சமூகங்கள் அணிந்து வந்த ஆடைகளின் தன்மைகள் படிப்படியாக வடிவமாற்றம் பெற்றே வந்துள்ளன. இந்த வகையாக ஆடைகளின் வடிவ மாற்றங்களை நோக்காமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் குறி வைத்து ஆடை தொடர்பில் அத்துமீறிச் சிந்திப்பது நிந்தனைத் தன்மையானது. இலங்கையில் முஸ்லிம்கள் தவிர்ந்த பிற சமூகங்களில் சென்ற நூற்றாண்டு வரை மேலாடை அணிவதற்கு பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் உடலின் மேல் பகுதியை மறைப்பதற்கான சுதந்திரத்தையும், உரிமையையும் அம்மக்கள் பெற்றார்கள்.

மனிதர்களின் உடலை மறைப்பதில் ஒவ்வொரு சமூகத்திடமும் வெவ்வேறு அளவுகள் பழக்கமாகி இருக்கிறது. அதனை அவரவரின் தனித்துவமான விருப்பு என சகித்துக் கொள்ளாமல் அரசியல் சார்ந்த வெறுப்புகளுடன் அணுகுவது சகவாழ்வுக்கு எதிரானது.

அபாயா, நிகாப், புர்கா போன்ற ஆடை வடிவங்களை முஸ்லிம்களுக்கு மட்டுமானது என்ற வரையறையுடன் நான் நோக்கவில்லை. இந்த ஆடையின் மீதான அவசியத் தேவையும் அது சார்ந்த நோக்கமும் உடைய எவரும் இதை அணிந்து கொள்ள முடியும் என்றே நான் நம்புகிறேன்.  இங்கு நான் கருதுகின்ற தேவையும், நோக்கமும் என்பது எந்த வகையான இறுக்கமான வற்புறுத்தலுக்கும் உட்படாதது. ஏனைய ஆடை வகைகள் மீதான தெரிவும் அவ்வாறானதே.

ஆடை குறித்த மேலைத்தேயத்தின் எண்ணப்பாட்டை விட மத்திய கிழக்கு அரபுகளின் மனநிலை வேறானது. ஆடை என்பது அதை அணிபவரது ஆளுமையை மட்டும் வெளித் தோற்றத்தில் சுட்டி நிற்பதில்லை, மாறாக அவரது பிராந்தியம், வாழ்க்கைச் சூழல், சமூகத் தரம், அறம் சார்ந்த நம்பிக்கைகள் என பலவிதமான தோற்றப்பாடுகளைக் கொண்டது. எடுத்துக்காட்டாக ஹிஜாப் என்னும் சீலை கொண்டு தலையை மூடாத பெண் வெளிப்படையான மன நிலை கொண்டவர் எனவும், தலையை மூடிய பெண் மத ஒழுக்கமும் மரியாதையும் கொண்டவர் எனவும் நம்பப் படுவதே அரேபிய ஆடைக் கலாசாரத்தின் தொனியாகும். இது அறிவியல் பரிசீலனைக்கு அப்பால் உள்ள போதும் நடைமுறைப் பழக்கமாக மாறி பல நூற்றாண்டுப் பின்தொடர்தலைக் கொண்டிருக்கிறது.

சனப் பரம்பலும் புதிய தேச நிர்மாணங்களும் உருவாகி வரும் உலக ஒழுங்கில் ஆடைக் கலாசாரம் குறித்த பார்வைகள் புது வகை நெருக்கடிகளையும் பிணக்குகளையும் தோற்றுவித்த படிதான் உள்ளன.

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கெடுபிடி மிக்க சூழலை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. இம்முறை அக்கெடுபிடியானது முஸ்லிம்களைக் குறி வைத்து நகர்த்தப் படுவதை உணர முடிகிறது. ஈஸ்டர் படுகொலையின் பின்னணியில் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதனால் இந்தக் கெடுபிடிக்குள் அவர்கள் நசுக்கப்படும் புதிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கின்ற உறவுகளில் தடையாக இருப்பதில் முக்கியமானது எதுவென்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசப்படுவது வழமை. ஆனால் அரசியல் ரீதியிலான பிரதிநிதித்துவ விடயங்கள் அல்லது தீர்வு முயற்சிகள் பற்றிய முக்கியமான தருணங்களில் ஒற்றுமை குறித்த சிந்தனைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. சாராம்சமாக சொன்னால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வரலாறு முழுவதும் ஒற்றுமை இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பொறுத்தவரையில் தமிழர்கள் ஓரளவு ஆதிக்கம் கூடியவர்களாக இருப்பதனால் அவர்கள் முஸ்லிம்கள் தமக்கு கீழ்ப்படிவானவர்களாக இருக்க வேண்டுமென எண்ணுகிறார்கள். இதுவே வரலாறு நெடுகிலுமான முரண்பாடுகளுக்கு காரணமாயிற்று.

சுதந்திரத்திற்கு முந்திய இலங்கையில் பொன்னம்பலம் இராமநாதன் தமிழ் பேசும் தமிழர்களினதும், தமிழ் பேசும் முஸ்லிம்களினதும் ஏக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஏக அரசியல் பிரதிநிதியாக இருந்த பொன்னம்பலம் இராமநாதன்1885 ல் Ceylon Legislative Council இலும், 1888 ல் Royal Asiatic Society இலங்கை கிளையிலும்  முஸ்லிம்களின் அரசியல் உரிமையை சிதைக்கும் விதமாக உரையாற்றினார். முஸ்லிம்கள் தனியான இனமல்ல அவர்களும் தமிழர்கள்தான் என இராமநாதன் எடுத்துரைத்தார். முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசிய போதிலும் தந்தைவழி பண்பாட்டின் அடிப்படையில் வேறொரு இனமாக வாழ்பவர்கள் என்பதை இராமநாதன் ஏற்க மறுத்தார்.

இராமநாதனின் கருத்துகளுக்கு எதிராக அப்போது முஸ்லிம்கள் மத்தியில் வலுவான எதிர்ப்புகள் உருவாகின. சித்திலெப்பை போன்ற அறிஞர்கள் அது குறித்து பல்வேறு மறுப்புரைகளை வழங்கினர். இராமநாதனின் பேச்சுக்கு பதவி நிலை குறித்த தனிப்பட்ட உள்நோக்கங்கள் இருந்தன என்பது வேறு விடயம்.

தமிழைத்  தாய் மொழியாக கொண்டும் தமிழ் பழக்கவழக்கங்களை தாராளமாக அனுசரித்த போதிலும் அரேபிய தந்தையரின் வம்சாவளி வந்த சோனகர்களுக்கு அவர்களுடைய இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள விசுவாசமும் பற்றும் அவர்களை விசேட தனித்துவமுள்ள இனமாக இலங்கையில் வாழ வழி வகுத்தது. இஸ்லாத்தின் தார்மீக கொள்கையும், சாதி வித்தியாசமற்ற சமூக நடைமுறையும் சோனகரின் தனித்துவத்திற்கும் இன அபிவிருத்திக்கும் பாரிய வாய்ப்பாகிப் போனது. தந்தை வழிச் சோனகரும், பெரும்பாலும் தாய் வழி தமிழரும் ஒன்றிணைந்த இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த எல்லோரும் இன ரீதியாக இலங்கைச் சோனகர் என்றும் பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் என்றும் அழைக்கப்படுவதே வரலாறு. தேசிய இனங்கள் குறித்த வரையறையானது எப்போதும் ஒன்றாகவே இருந்ததில்லை. பண்பாடு அடிப்படையிலும் தேசிய இனங்கள் உருவாக முடியும்.

பொன்னம்பலம் இராமநாதனின் முஸ்லிம் விரோத உள்நோக்கத்தை அறிந்த முஸ்லிம்கள் அவரது பிரதிநிதித்துவத்தை ஏற்க மறுத்தனர். வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவர் தங்களின் பிரதிநிதியாக ஆட்சி மன்றத்தில் பதவி வகிக்க முடியாது எனும் எதிர்ப்புகள் கிளம்பின. முஸ்லிம்களை முஸ்லிம்களே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதனால் 1889 அக்டோபர் 29 ம் திகதி எம்.சி. அப்துர் ரஹ்மான் முஸ்லிம் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் நவீன பிரதிநிதித்துவ அரசியல் களத்தில்  தனித்துவமான அரசியல் உரிமைகளை பெறுவதில் முஸ்லிம்களும், தமிழர்களும் வேறாகவே சிந்திக்கின்றனர் என்பதற்கான முதல் தோற்றம் உருவாகியது.

சுதந்திரத்திற்குப் பிறகான இலங்கையில் தமிழ், முஸ்லிம் அரசியல் முரண்பாடு என்பது வடக்கையும் கிழக்கையும் பிரதானப்படுத்தியதாகவே அமைந்தது. தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள தேசிய கட்சிகள் வழியாக அரசியலை அணுகினர். வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும் அது போலவே செயல்பட்டாலும் நாளடைவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளிலும் ஈர்க்கப்பட்டனர். ஆனால் செல்வநாயகம் முதல் அமிர்தலிங்கம் வரையான தலைவர்களின் அரசியல் காலத்திலும் கூட தமிழ், முஸ்லிம் அரசியல் என்பது சம அந்தஸ்து கொண்டதாக அமைந்திருக்கவில்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியை பயன்படுத்தியதும், முஸ்லிம்கள் தமக்கு கீழ்ப்படிவாக இருப்பார்கள் என தமிழ் தலைவர்கள் நம்பி மோசம் போனதுமே அக்காலத்து உள்ளூர் அரசியல் உறவாக இருந்தது. அப்போது கூட பொன்னம்பலம் இராமநாதன் காலத்து சிந்தனைகளே தமிழர்கள் மத்தியில் தொடர்ந்தன.

1978 அரசியலமைப்பு மாற்றத்தின் பிறகு அரசியல் சூழல் வெகுவாக மாறத் தொடங்கியது. தமிழ் மிதவாத அரசியல் செல்வாக்கிழந்து ஆயுதக்குழுக்களின் பிடியில் வடக்கு, கிழக்கின் அரசியல் சிக்கியது. போராடிய இயக்கங்கள் தமது ஆளணித் தேவைகளுக்கு முஸ்லிம் இளைஞர்களையும் உள்வாங்கிக் கொண்டனவே தவிர முஸ்லிம் சமூகம் குறித்து அவைகளிடம் கூட சமஅந்தஸ்து வழங்கும் சிந்தனைகள் உருவாகவேயில்லை. குறிப்பாக சொன்னால் தமிழ் மிதவாத அரசியலை விட ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகளே முஸ்லிம்களுக்கு பேராபத்தானதாக மாறியது.

எண்பதுகளுக்கு பிறகு தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்த ஆயுதபலம் முஸ்லிம்களை அச்சுறுத்தவும், பொருளாதார ரீதியாக நசுக்கவும், அவசியமானால் உயிர் பறிக்கவும் பயன்பட்டது. இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றன. அத்தோடு இனப்பிரச்சினை தீர்வு குறித்த பேச்சுவார்த்தை விடயங்களில் இருந்தும் முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை விடயத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்த சமூகமாக செயல்படுவதை தமிழர்கள் விரும்பாத நிலையில், சிங்கள அரசும் அதனை வழி மொழியும் நிலைதான் இருந்தது. திம்பு பேச்சுவார்த்தை, இந்திய – இலங்கை ஒப்பந்தம் போன்றவற்றில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப் பட்டனர். போராடிய சமூகங்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என்பதே தமிழ் ஆயுதக் குழுக்களின் அப்போதைய நியாயமாக இருந்தது. அத்தோடு தமிழ் ஆயுதக்குழுக்களும் பொன்னம்பலம் இராமநாதனின் கருத்துகளை விட்டும் புதிதாக சிந்திக்கவில்லை. முஸ்லிம்கள்  தனியான சமூகமான போதும், போரில் பாதிக்கப்பட்ட சமூகமான போதும் தீர்வு குறித்த தமது அபிலாஷையை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க விடாமல் தமிழர்கள் தடுத்தனர்.

இலங்கையில் நிகழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போரானது வர்க்க அடிப்படையில் நிகழவில்லை. அப்படியான எண்ணம் இயக்கங்களுக்கு இருந்திருந்தால் சகல சமூகங்களிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டமாக அது உருவெடுத்திருக்கும். வடக்கு, கிழக்கில் வாழும் பிற இரண்டு சமூகங்களையும் நீக்கம் செய்த போராட்டமாக அது இருந்தது. மட்டுமல்லாது பிற சமூகங்கள் மீது வெறுப்பைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது.

தொண்ணூறாம் ஆண்டு கிழக்கில் முஸ்லிம்களை படுகொலை செய்தும், வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியும் விட்டதன் மூலம் புலிகளின் போராட்டத் தன்மை எத்தகையது என்பது வரலாற்றில் நிரூபணமானது.  2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் ஒரு தரப்பாக செயல்பட புலிகள் எதிர்த்தனர் என்பதையும் இதனோடு இணைத்து சிந்திக்க வேண்டும். அப்போதும் கூட பொன்னம்பலம் இராமநாதன் கருத்தின் அடிப்படையிலேயே தமிழர்கள் சிந்தித்தனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம் ஒற்றுமை என்பது முஸ்லிம்கள் அவர்களுக்கு கீழ்ப்படிவானவர்களாக இருக்க வேண்டும் என்பதாகவே வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. சிங்களவர்களும் ஏனைய சிறுபான்மை சமூகங்களை இவ்வாறுதானே அடக்க எத்தனிக்கிறார்களென தமிழர்கள் உணர விரும்புவதில்லை. தமிழர்களின் இந்தச் சிந்தனைக்கு எதிரான அரசியல் உரையாடலை முஸ்லிம்கள் 140 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ் தரப்புகள் முஸ்லிம்களின் குரலை இதய சுத்தியுடன் இதுவரை செவிமடுக்கவேயில்லை. தமிழர்களை சக சிறுபான்மைச் சமூகமாக மதிக்கும் முஸ்லிம்கள் தம்மையும் தனித்துவமான சமூகமாகவும் அரசியல் இணக்கத்துடனும் அனுசரிக்கும்படி வேண்டுகிறார்கள். வேறான சமூகம் என்ற அடிப்படையில் சமமாக மதிக்கும் படி வேண்டுகிறார்கள்.

இதுவரைக்கும் இரண்டு சமூகங்களுக்குமிடையிலான நல்லுறவுக்குத் தடையாக இருப்பது மேலே குறிப்பிட்ட வரலாற்றுத் தொடர்ச்சியான தமிழ் அரசியல் மேலாதிக்கமேயன்றி வேறில்லை. சகல விதமான நம்பிக்கைகளும் இறுதிப் போரில் அழிந்து போய் விட்ட நிலையில்  இந்த மேலாதிக்க கடும் போக்கும் சிதைவடைய வேண்டிய தேவை இருக்கிறது. இந்தச் சிதைவின் உச்சியில் நின்ற படி இரு சமூகங்களும் சம அந்தஸ்து உள்ளவர்களாக கை கொடுக்கும் போதுதான் புதிய நம்பிக்கைகள் உருவாகும்.

உங்கள் உணர்வுகளையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆயினும், உங்கள் பதில் ஒற்றைப்படைத்தன்மையாக இருப்பதாகவே எனக்குப்படுகின்றது. அது எப்படியென்றால் :

“எண்பதுகளுக்கு பிறகு தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்த ஆயுத பலம் முஸ்லிம்களை அச்சுறுத்தவும், பொருளாதார ரீதியாக நசுக்கவும், அவசியமானால் உயிர் பறிக்கவும் பயன்பட்டது. இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றன.”

“தொண்ணூறாம் ஆண்டு கிழக்கில் முஸ்லிம்களை படுகொலை செய்தும்…………” என்று சொல்கின்ற நீங்கள், இதே காலப்பகுதிகளில் முஸ்லிம் தரப்பால் தமிழர்களுக்கு எதிராக எதுவுமே நடைபெறவில்லை என்று எப்படி சுலபமாகக் கடக்க முடிகின்றது?

முஸ்லிம் தரப்பால் தமிழர்களுக்கு எதிராக எந்தவித வெறியாட்டங்களும் செய்யப்படவில்லை என நான் கடந்து செல்லவில்லை. முதலில் முஸ்லிம் தரப்பு என்பது எதுவென புரிந்து கொள்ள வேண்டும். அது முஸ்லிம் பொதுமக்களா? அல்லது முஸ்லிம் ஆயுத இயக்கங்களா? அல்லது அரச அனுசரணையுடன் செயல்பட்ட இராணுவக் குழுக்களா என்பதில் தெளிவு வேண்டும்.

முஸ்லிம்களுக்குள் எந்த விதமான ஆயுதப் போராட்ட இயக்கங்களும் இருந்ததில்லை. அரசுக்கு எதிராகவோ அல்லது தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிராகவோ ஒரு போதும் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. முஸ்லிம் ஆயுத இயக்கங்கள் இருந்திருந்தால், அவை அரசுக்கு எதிராகவோ அல்லது தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிராகவோ சண்டையிட்டிருந்தால் அது வரலாற்றுப் பதிவாகியிருக்கும். அதற்கென ஒரு தலைமைத்துவமும், அங்கத்தவர் குழாமும், அதற்கான அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள்வெளிக்கு வந்திருக்கும். அவ்வாறு எந்த விதமான விடயங்களையும் இலங்கைச் சூழலில் அவதானிக்க முடிந்திருக்கவில்லை.

புலிகள் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களை தடை செய்து சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு வேட்டையாடிய போது அந்தக் குழுக்களில் இணைந்திருந்த முஸ்லிம்கள் தமது உயிருக்குப் பாதுகாப்பு தேடி பாதுகாப்பு பிரிவிடம் சரணடைவதற்கு முன்பான சிறிது காலம் மக்களுக்குள் பதுங்கி வாழ்ந்தனர். பின்னர் அவர்கள் இராணுவத்தின் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். அந்த காலப்பகுதியில் தமிழ் ஆயுதக் குழுக்களால் எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு எதிராக சில முஸ்லிம் இளைஞர்கள் தமது ஊர்ப்புறங்களில் பழிவாங்கலை மேற்கொண்டிருக்கலாம். அது கண்டனத்துக்குரிய ஈனச் செயல்தான். உயிர் பறிக்கும் தண்டனையை அரசாங்கம் வழங்குவது கூட ஏற்றுக்கொள்ள தகாதது என சிந்திக்கும் இடத்தில் இருந்து இதனை நோக்கினால் மிகுந்த வேதனை தருவதாகும்.

தொண்ணூறில் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு பயங்கரவாதத்தை மேற்கொண்ட போது படுகொலைக்குள்ளான முஸ்லிம்களின் ஊர்களில் எழுந்தமானமாக சில பழி தீர்க்கும் செயல்கள் இடம்பெற்றன. அப்போதும் அதனை முஸ்லிம் பொதுமக்கள் அனைவருமே கண்டித்தனர். அது போன்ற கொடூர தருணங்களில் புத்திசாலித்தனமற்ற உணர்சி வெறி கொண்டு பழிதீர்க்கும் எண்ணம் சில தனி நபர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடும். இப்படியான சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டு முனாஸ் கால்தீன் என்னும் மானுட நேயம் கொண்ட எழுத்தாளர் அக்காலத்தில் “வன்மம்” என்னும் கதை ஒன்றை எழுதினார். அதனை அண்மையில் றியாஸ் குரானா கூட தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வரலாற்றை மீண்டும் நினைவூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகளை ஒரு சமூகத்தினதோ அல்லது அந்த சமூகத்தின் நிறுவனத்தன்மையான பதில் நடவடிக்கையாகவோ கருத முடியாது.

இறுக்கமாக ஒழுங்கமைக்கப்பட்ட புலிகள் அமைப்பின் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும், அந்த இனச்சுத்திகரிப்பில் பாதிப்படைந்ததினால் ஆத்திரமடைந்து பழியுணர்ச்சியில் பிழை செய்த உதிரியான மக்களின் கொடுஞ் செயல்களையும் ஒரே வகையான  அரசியல் மதிப்பீடு கொண்ட வார்த்தைகளால் சுட்டிக்காட்ட முடியாது. அவ்வாறு தொடர்ச்சியாக பரப்புரை செய்வது முஸ்லிம் விரோத உள்நோக்கம் கொண்ட செயலாகவே பார்க்கப்படும்.

இதுவரைகாலமும் ஒரு இலக்கியனாலேயே இனங்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும் என நான் மனதார நம்பியிருந்தேன். எனது வருடாந்த விடுமுறையில் நான் தாயகம் வரும் பொழுதெல்லாம் இதனை முன்நிலைப்படுத்தி வந்திருக்கின்றேன். அந்த நம்பிக்கைகள் எல்லாம் இப்பொழுது தகர்ந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. நான் மதிப்பு வைத்திருந்த இலக்கியத்தோழர்களே காழ்ப்புணர்ச்சிகளைப் பொதுவெளியில் கொட்டுவதில் போட்டி போடுகின்றார்கள். கறுப்பு வெள்ளை , புனிதப்படுத்தல்கள் போன்றவற்றைத் தவிர்ந்து இதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உண்டா ?

இலங்கை போன்ற கருத்துச் சுதந்திர மறுப்புக்கும், பலாத்காரத்திற்கும் பேர் போன நாட்டிற்கு வந்து இங்கிருக்கும் எழுத்தாளர்களுக்கு கடமை ரீதியான அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது. இலக்கியவாதிகள் எனப்படுவோர் விசேடமான பிறவிகள் அல்லர். அவர்கள் ஏனைய மனிதர்களைப் போல சாதாரணமானவர்களே. அவர்கள் சமூகத்தைப் பாதிக்கின்ற ஒரு பொது விடயம் தொடர்பாக ஏதாவது அபிப்பிராயம் வெளியிடுவதில் சுயாதீனமான நிலையைக் கொண்டுள்ளார்கள். அந்த நிலைப்பாடுகள் புத்திசாலித்தனமானதாகவோ அல்லது தர்க்க நியாயங்களுக்கு அமைவானதாகவோ இருக்க வேண்டுமென்று எந்த அவசியமான நிர்ப்பந்தமும் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சமூகத்தில் எழுத்தாளன் எனப்படுபவனுக்கு எந்தவொரு மதிப்புமில்லை. அவன் பொருளாதார ரீதியாக எவருக்கும் பிரயோசனமில்லாத பலமற்றவன். அதனால் இழி பிறவியாக நோக்கப்படுபவன். தன்னையும், தன்னைச் சுற்றியவர்களையும் பரிபாலிப்பதற்கே தயவற்றவன். பிறர் தயவில்லாமல் சிந்திப்பதற்கு அவன் எத்தனையோ தடைகளையும், பரிதாபங்களையும் கடக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எழுத்தாளர்களுக்கு மட்டும் சமூகம் குறித்த பொறுப்புணர்வும், அக்கறையும் இருக்க வேண்டுமென எமது பொதுப்புத்தி நம்ப வைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

எத்தனையோ அதிகார நிறுவனங்கள் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை சமூகத்தை அடக்கி ஆள்கின்றன. அவை சமூகத்தை சுரண்டிக் கொள்ளையிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு எந்த விதமான சமூகப் பொறுப்பும், அக்கறையும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு அது முக்கியம். ஏனெனில் அவன் ஒரு ஏமாளிக் கழுதையாக எல்லோர் அழுக்கையும் சுமப்பவன். இந்த விதமான முட்டாள் பரிதாபத்திலிருந்து எழுத்தாளர்களைக் காப்பாற்றியாக வேண்டிய சூழலில் அவர்களுக்கு மேலும் சமூக அக்கறைகளை சுமையாக்கி விட முடியாது. சமூகம் எந்த சீரழிவுகளை நோக்கியும் பயணிக்கட்டும். அவற்றைத் திருத்தி சிறப்புற வைக்கும் கடமையை எழுத்தாளர்கள் ஏற்க முடியாது.

எழுத்தாளர்கள் தமது மகிழ்வுக்கு ஏங்கித் தவிக்கும் பரபரப்புக்குள் சமூகத்துக்காகவும் சிந்திக்க வேண்டுமெனும் வற்புறுத்தல்கள் ஒழிக்கப்பட வேண்டும். எழுத்தாளர்களை அவர்களது போக்கில் எந்த அழுத்தங்களும் இல்லாமல் சுயாதீனமாக விட்டு விடுவதே எல்லோருக்கும் நல்லது. அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் எழுதிக்கொள்ளட்டும். அவர்கள் சமூகத்திற்கு பொறுப்புக் கூறுவதற்கும் யோக்கியதை அற்றவர்கள்.

இந்த கண்ணோட்டத்தில் இலக்கியவாதிகள் குறித்து சிந்தித்தால் அவர்களினால் இன நல்லுறவை ஏற்படுத்த முடியாதென்பது தெளிவு. பெரும்பாலான எழுத்தாளர்கள் எனப்படுவோர் ஏதோவொரு அழுத்தமான காரணத்தின் அடிப்படையில்  அபிப்பிராயத்தை வெளிப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். அது இன்னொரு தரப்புக்கு அநீதியாகவோ, ஆதரவானதாகவோ அமைந்து விடுகிறது. அதனால் எழுத்தாளர்கள் சமூக அமைதிக்கு எதிரானவர்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

சமூகத்தை நெறிப்படுத்தும் ஈடு இணையற்ற மேய்ப்பர்களாக எழுத்தாளர்களை கருத முடியாதது போலவே அவர்களுக்கு எந்தக் கடமையும் சுமத்தப்பட்டிருக்கவுமில்லை. அதனால் அவர்களின் செயல்பாடுகள் குறித்து பதட்டமடைய வேண்டியதில்லை.

எமக்கும் சரி முஸ்லிம்களுக்கும் சரி நடைபெற்று முடிந்த போரின் வலிகள் பொதுவானவை. இந்த நிலையில் ஒருவரை ஒருவர் சீண்டி வலிகளை மீள்கட்டுமானம் செய்யும் சாடிஸ போக்கு எதற்காக ? இதற்கு அண்மையில் நடந்த பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்……..

இந்தக் கேள்விக்கான பின்னணியானது கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகான சூழலில் பல்வேறு சமூகக்குழுக்களின் சமூகவலைத்தளங்களிலும் ஏனைய இலத்திரன் ஊடகங்களிலும் எழுந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகவே இருக்க முடியும் என எண்ணுகிறேன். இன்றைய நிலையில் தகவல் தொடர்புவெளியில் உருவாகியிருக்கும் கட்டற்ற சுதந்திரமும், கார்ப்பரேட் வணிக நோக்கம் கொண்ட இலத்திரன் ஊடகங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் சேர்ந்துதான் எமக்கான அன்றாட அரசியல் வடிவமைக்கப்படுகிறது. இதற்கென நேர்மையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறங்கள் எதுவுமில்லை.  இதில் தனி மனிதர்களால் உருவாகும் கருத்தம்சங்கள் நீண்ட கால ஆபத்துக்கள் அற்றவை. ஆனால் நிறுவனமயப்பட்ட கருத்தம்சங்கள் மிகவும் ஆபத்தானவை. தனி மனிதர்களின் உதிரியான கருத்துப் பரிமாறல்கள் வேறொரு சந்தர்ப்பத்தில் தீவிரம் தணிந்ததாக மாறி விடக் கூடும். ஆனால் நிறுவனமயப்பட்ட கருத்துக்கள் நீண்ட கால நோக்கங்களுக்காக திட்டமிடப்படுகின்றன.

இந்த விதமான சூழ்நிலைகளால் கட்டமைக்கப்படும் பொதுவெளிக்கான கருத்தம்சங்களை ஆய்வு செய்த பிரான்ஸ் சமூகவியல் பேராசிரியரான Pierre Bourdieu தனது Field Of Cultural Products எனும் நூலில் இவற்றை ‘புதிய பண்பாட்டு உற்பத்திகள்’  எனும் பதம் கொண்டு அழைக்கிறார்.

இன்று வெகுமக்களின் அபிப்பிராயத்தை வடிவமைப்பதில் இலத்திரன் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சமூக வலைத்தளங்கள் இந்த அபிப்பிராய திரட்சியை உலகளவில் பரவலாக்கம் செய்யவும் இதனை மீளவும் பரிணாமப் படுத்தவும் உதவுகின்றன. இதற்குள் நிலவுகின்ற சுதந்திரமானது எல்லை தாண்டிய வன்மமாகவும், அதீத உணர்ச்சிகளை எழுச்சி பெறச் செய்யக் கூடியதாகவும் உள்ளன. இதன் மூலம் மானுட அறம் பாதிக்கப்படுவதான ஒரு தோற்றமும் காட்டப்படுகிறது.

ஆனால் இன்று அரசியல் அதிகாரமும், கார்ப்பரேட் ஊடக அசுரர்களும் கை கோர்த்ததிருக்கும் சூழ்நிலையில் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கான கருத்துக்கள் பலமற்றவையாகவே இருக்கின்றன. உதிரியான கருத்துக்களை விடவும் ஊடக அசுரர்களின் கருத்துக்கள் வெகுமக்கள் நலன்களை சிதைப்பதற்கான பலமான கருவியாக அமைந்து விடுகின்றன. உண்மையில் உதிரிக் கருத்தாளர்களைக் கூட பிழையாக வழி நடத்துவதே இந்த அசுரர்களின் ஊடகங்கள்தான்.

மறுபுறம் நாம் இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.  சமூக வெறுப்பை விதைக்கும் சமூக வலைதள பிரச்சாரங்களை விடவும் சகவாழ்வை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானது. சகவாழ்வுக் கருத்துக்களை பலரும் சமூக வலைத்தளம் வழியாக வெளியிடுகிறார்கள்தான். ஆனால் அவை முக்கியப்படுத்தப்படாத நிலை உருவாகியிருக்கிறது.  சமூகங்களுக்கு இடையிலான வெறுப்பையும், துவேஷத்தையும் விதைப்பதை ஒரு ஃபேஷனாக கருதக் கூடிய மனநிலையை மைய ஓட்ட அசுர ஊடகங்கள் வேண்டுமென்றே கட்டமைப்பதனால் சகவாழ்வுக்கான பிரயத்தனங்கள் யாவும் கோளாறு மிக்க கருத்துக்களாக உருமாற்றப்பட்டிருக்கின்றன. எது தவிர்க்க பட வேண்டியது, எது கவனப்படுத்த வேண்டியது என்ற குழப்பங்களுக்கு மத்தியில் அனைத்தும் கொட்டப்படும் இடமாக சமூக வலைத்தளங்கள் அமைந்திருப்பதனால் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இன்று அதிகாரத்திற்கு வர விரும்புகின்ற அரசியல் கட்சிகளும், அதிகாரத்தை எதிர்க்கும் நிலையிலுள்ள அரசியல் கட்சிகளும் தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும், பிளவுகளையுமே நம்பியிருக்கின்றன. அவைகளின் நியாயப்படி புதுப்புது வடிவங்களில் பிரச்சினைகள் உருவாவது அவசியமாகிறது. அதற்கான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் வழியாகவும், ஆதரவு ஊடகங்கள் வழியாகவும் திட்டமிடுவது அவசியமாகிறது.

கட்சி அரசியல் என்ற வகைமைக்குப் புறம்பாகவும் சமூக அக்கறையாளர்கள் என்ற பெயரில் உலாவரும் பொது அமைதிக்கு எதிரான விஷமிகளும் முரண்பாடுகளை உருவாக்கும் விதத்தில் இலத்திரன் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செயல்படுகின்றனர். அத்துடன் பிரத்தியேகமாகவும் சுயாதீனமாகவும் தான்தோன்றியாக அபிப்பிராயங்களை வெளியிடுவோரும் சமூக வலைத்தள வெளியில் உலவுகின்றனர்.முன்பு மட்டுப்பட்ட ஊடகங்களின் காலத்தில் நிறுவனப்பட்ட தணிக்கையும், தமக்கு ஒவ்வாதவற்றை கழித்து விடும் வரன்முறையும் இருந்தது. ஆனால் இன்று கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் செய்தியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் மாறி விட்டனர். இவர்களின் கழிவுத்தரம் மிக்க தகவல்களும் சேர்ந்துதான் நமக்கான பண்பாட்டுத் தயாரிப்புகளாக வடிவமைந்து புதிய நெருக்கடிகளை தோற்றுவிக்கின்றன. இவைகளை சகித்துக் கொண்டு கடந்து செல்வதும், மதிநுட்பத்துடன் வெளிச்சூழலை அணுகுவதும்தான் இந்தப் பண்பாட்டிலிருந்து மீள்வதற்கான தெம்பைத் தரவல்லது.

முன்பு ஒரு விடயம் குறித்த கருத்து பகிர்வு என்பது அது தொடர்பாக பேசப்படுகின்ற குழுவினருக்குள் மட்டும் நிகழும். இன்று அவ்வாறல்ல. சமூக வலைத்தளங்களில்  நாம் பேசுகின்ற விடயம் உலகத்தின் கடைசி மூலை வரை வியாபித்துச் செல்லும் நிலையுள்ளது. இப்போது ஒரு கருத்தை முன்பு போல வெளியிட முடியாது. ஒரு கருத்து அது உருவாகும் சூழலில் அதற்கு ஏற்படும் பிரதிபலிப்பு போலவே எல்லா இடங்களிலும்  ஏற்பட்டு விடாது. ஒவ்வொரு சூழலிலும் அது வெவ்வேறு வகைப்பட்டதாக நோக்கப்படக் கூடும். இன்றைய சூழ்நிலையில் கருத்தை பகிர்வதும், கருத்தை உள்வாங்குவதும் முன்னைய கால அணுகுமுறையூடாக நிகழவே முடியாது. மற்றமைகளை நோக்கிய கரிசனை இல்லாமல் வெளிப்படும் கருத்துகள் வன்முறைக்கான அடித்தளம் கொண்டிருக்கும். வன்முறையை செலுத்துவதற்கு நாம் யார் என்ற சுய ஆய்வின் படி பிறருக்கான முக்கியத்துவத்தை வழங்குவதை பின்நவீன கால சிந்தனைகள் வலியுறுத்துகின்றன.

ஈஸ்ட்டர் தாக்குதலின் பொழுது பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு இருக்கின்றன. நோக்கம், இந்த தாக்குதலின் வலி தொடர்ந்து எதிர்காலத்துக்கு கடத்தப்படக்கூடாது என்பதே. ஆனால் காத்தான்குடி பள்ளிவாசலின் சேதாரங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனவே. இது உங்களுக்கு முரணாகத் தெரியவில்லையா ?

இதில் என்ன தவறு இருக்கிறது? இரண்டு சம்பவங்களிலும் உள்ள பிரச்சினைகள்  பற்றி சிந்திப்பதற்கான அவசியம் எதன்பாலானது? சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை கடந்தகால வலிகளை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வது அவசியமானதுதான். கடந்த கால நிகழ்வுகளை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வது ஒரு பொதுவான நடைமுறைதான். அது சிறுபான்மை மக்களுக்கு மட்டும் விதிவிலக்கானதல்ல.

ஈஸ்டர் தாக்குதலையும், காத்தான்குடி பள்ளி தாக்குதலையும் ஒரே வகையான பயங்கரவாத நிகழ்வுகளாகப் பார்ப்பதில் இருந்து இது போன்ற கேள்விகள் எழக் கூடும். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறான வகைப்பட்டவைகள் என்பதே சரியாகும்.

1990 ல் புலிகள் பலமாக இருந்து கொண்டு இலங்கை அரசுடன் ஒரு மரபு போருக்கு தயாராகிய சூழ்நிலையில் போர்க்களத்தின் இன்னொரு பகுதியில் கவனச் சிதறலை ஏற்படுத்தவும், அரசாங்கத்தை தொந்தரவு செய்யவும், தமது போர் நிலத்தில் வாழும் வேண்டப்படாத சமூகக் குழுவான முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்யவும் ஒரு தந்திரோபாயத்தை வகுத்தனர். அதன் மூலம் வடக்கிலிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றவும், கிழக்கிலுள்ள முஸ்லிம்களை படுகொலை செய்யவும் தீர்மானித்தனர். அதன் விளைவே காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். அந்த தாக்குதலில் பெரும் படுகொலை நிகழ்ந்த பள்ளிவாசலின் சேதங்களை முஸ்லிம்கள் பேணி வருவதனை சிலர் விமர்சித்தாலும் அதன் பின்னாலுள்ள காரணங்களை புறந்தள்ள முடியாது.

முஸ்லிம்களை புலிகள் எவ்வாறு கையாள நினைத்தனர் என்பதனை நினைவில் வைத்திருப்பதற்கும், ஏதிலியான ஒரு சமூகம் அதன் எதிர்ப்பை பண்பாட்டு வழியாக எடுத்துரைக்கவும் சிந்தித்திருக்கலாம். அதன் காரணமாக காத்தான்குடி பள்ளியின் தாக்குதல் வடுக்களை இன்றுவரை புனருத்தாரணம் செய்யாமல் விட்டிருக்கலாம். இது யாழ் நூலக எரிப்பையும், 1983 ஜூலை கலவரத்தையும் தமிழர்கள் நினைவு நாளாக இன்றும் அனுஷ்டிப்பதற்கு இணையானது. யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதன் பின்னர் எஞ்சியிருந்த காய வடுக்களை தமிழ் மக்கள் பல வருடங்களாக அதே தோற்றத்தில் வைத்திருந்தனர். ஆனால் 1994-ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசாங்கம் பலவந்தமாக அதனை புனருத்தாரணம் செய்து தோற்றத்தில் புதுப் பொலிவையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போலவே மஹிந்தவின் கடந்த அரசாங்கத்தில் பேருவளை பள்ளிவாசல் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகியது. அதனை நகர அபிவிருத்தி அதிகாரசபையானது தமது நிதியில் சில வாரங்களுக்குள் விரைவாக புனருத்தாரணம் செய்து காயங்களை மறைத்தது.

வடுக்களை நீண்ட காலமாக பேணி நினைவில் வைப்பது ஒரு அரசியல். அது போலவே ஞாபகங்களில் இருந்து ஒரு வடுவை நீக்கம் செய்வதும்  அரசியல்தான். பேருவளை பள்ளியை பொலிவூட்டவும், யாழ் நூலகத்தை பொலிவூட்டவும் எண்ணிய அரசாங்கத்திற்கு காத்தான்குடி பள்ளியை பலவந்தமாக பொலிவூட்டுவதற்கு எண்ணம் ஏற்படவில்லை என்பதும் ஒரு வகை அரசியல்தான். இவற்றையெல்லாம் அந்தந்த கால அதிகார செல்நெறியின் தேவைப்பாடுகளும் நியாயங்களுமே தீர்மானிக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான தேவாலயம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த தேவாலயத்தின் காயவடுக்களை விரைவாக மறைத்து விடுவதில் யார் யாருக்கெல்லாம் அக்கறை இருக்கிறதென்பது தெரியாது. அது போலவே அன்றைய தாக்குதல்கள் குறித்த தகவல்களும் வெவ்வேறு வகையாக பரப்புரை செய்யப்படுகின்றன. அது குறித்து பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதிய விடயம் ஆழ்ந்து யோசிக்கத் தக்கது. அந்த தாக்குதல் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்து நாடு தளுவிய பீதியை உருவாக்கி பின்னர் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலோடு தொடர்பு பட்டது எனும் செய்திகளை நாம் அவதானித்தோம். நாளடைவில் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் பூதாகரமாக பேசப்படும் அளவிற்கு குற்றவாளிகள் குறித்த புலனாய்வுகள் தீவிரப்படுத்த படவில்லை  அத்துடன் நீதி விசாரணைகளும் விரைவு படுத்தப்படவுமில்லை. ஊடகங்களில் மக்களின் கவனங்களை ஈர்ப்பதற்கான அளவில் மட்டுமே கையாளப்படுகிறது என்பதும் சிந்திக்க வேண்டியவையாகும்.

இவ்வாறான பார்வையில் காத்தான்குடி பள்ளிவாசல் வடுக்களையும், ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களின் வடுக்களையும் ஒன்றாக அணுக முடியாது. இவற்றில் இருந்து ஒரு பொதுவான தொடர்பை உருவாக்க முடியுமானால் இரண்டும் இஸ்லாமிய வெறுப்புவாத அரசியலின் வெவ்வேறு செயல்பாடுகள் என்றே கொள்ள முடியும்.ஒன்றில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னொன்றில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உருவாக்குவதற்கு கொலையாளிகளாக முஸ்லிம்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதான விமர்சனங்களையும் நாம் ஊடகங்களில் காணமுடிந்தது.

மீண்டும் கூறுகிறேன்: ‘அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட துயரச் சம்பவங்களின் தடயங்களை அழியாமல் பேணுவதில் குறிப்பிட்ட வகை நியாயங்களும், பிரத்தியேக அரசியலும் இருப்பது போல தடயங்களை மறைப்பதிலும் இருக்கிறது.’

//”1990 ல் புலிகள் பலமாக இருந்து கொண்டு இலங்கை அரசுடன் ஒரு மரபு போருக்கு தயாராகிய சூழ்நிலையில் போர்க்களத்தின் இன்னொரு பகுதியில் கவனச் சிதறலை ஏற்படுத்தவும், அரசாங்கத்தை தொந்தரவு செய்யவும், தமது போர் நிலத்தில் வாழும் வேண்டப்படாத சமூகக் குழுவான முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்யவும் ஒரு தந்திரோபாயத்தை வகுத்தனர்”. //

எப்படி உங்களால் கிழக்கிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு வேலைகள் நடக்கவேயில்லை என்று சுலபமாகக் கடக்க முடிகின்றது? கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படையினர் எங்கிருந்து வந்தார்கள் ?  கிழக்கிலங்கையில் “கிழக்கில் சிந்திய இரத்தங்கள்” என்ற தலைப்பில் இரா.துரைரத்தினம் தினக்கதிரில் ஒரு கட்டுரை தொடராக எழுதியிருந்தாரே. அதில் ஊர்காவல் படையினர் செய்த இனச்சுத்திகரிப்புகளை விலாவரியாக சொல்லியிருக்கின்றார். இவைகள் யாவுமே 1990 முன்பு நடைபெற்றவை?  

/ / கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு //

// கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படை //

இந்த விதமான போலிப் பிரச்சாரங்களுக்கு வேறொரு கேள்வியில் பதிலளித்து விட்டதாகவே நினைக்கிறேன். எனினும் சில மேலதிக விடயங்களைக் கூறலாம் என்று தோன்றுகிறது.

கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்ததாக புலிகள் தரப்பு ஊடகங்களாலும், புலி ஆதரவு எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படும் தகவல்கள் மிகுந்த உள்நோக்கம் கொண்டவை. அது கிழக்கில் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலை வரலாற்றை அரசியல் அரங்கிலிருந்து மறைப்பதற்கு உருவாக்கப்பட்ட சதிப்பிரச்சாரமே.

புலிகளின் இனச்சுத்திகரிப்பில் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள், அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களுக்கு அண்மையில் இருந்த சில தமிழர்களின் மீது வன்முறைப் பிரயோகம் மேற்கொண்டனர். சிலர் கொல்லப்பட்டனர்.   அதனால் அப்போது அங்கிருந்து சில தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். ஆனால் நிலைமைகள் சீரடைந்ததும் தமிழர்கள்  தமது பழைய இடங்களுக்கு திரும்பி விட்டனர்.

கிழக்கில் ஒருபோதும் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் அளவுக்கு முஸ்லிம்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்ததுமில்லை. அவர்களிடம் அதற்கான வன்முறை நிறுவனங்கள் எதுவும் செயல்படவுமில்லை. ஒரு சமூகத்தை இனச்சுத்திகரிப்பு செய்வதும், வாழ்விடத்திலிருந்து வெளியேற்றுவதென்பதும் சாதாரண மக்களினால் முடியாத காரியம். அது அவ்வளவு எளிதானதல்ல.

யுத்த காலம் முழுவதும் கிழக்கு மக்களின் வாழ்வில் புலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாகவே இருந்தனர். அவர்களின் ஆதிக்கத்தினால் முஸ்லிம்கள்  எவ்வகையிலும் பாரியளவிலான படுகொலைகளை மேற்கொண்டு தமிழர்களை அந்த நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சூழ்நிலை அமைந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஒரு சில நபர்களினால் பழி தீர்க்கப்பட்ட கொலைச் சம்பவங்களை அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்தி புலிகளின் கொடுமைகளுக்கு இணையானதாக மாற்றி முஸ்லிம்களை வன்முறைச் சமூகமாக சித்தரிக்கவும், தீர்வு முயற்சிகளிலிருந்து தூரமாக்கவும் பிரயோகிக்கப்பட்ட பிரச்சார உபாயங்களை புலி ஆதரவாளர்கள் இன்றும் ஏந்தித் திரிவது கண்டனத்துக்குரியது. காசி ஆனந்தன் போன்ற குருட்டுக் காவிப் புலிகள் மற்றும் மேலைத்தேய புலிகளும் இன்றளவும் இது போன்ற போலித் திரிபுவாத வரலாறுகளை உருவாக்கி வருகின்றனர்.

கிழக்கில் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படை என்பதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் நிறுவனமயப்பட்ட தொடர்புகள் எதுவும் கிடையாது. அது இலங்கை அரசின் பாதுகாப்பு துறையின் ஓர் அங்கமாகும். அதன் உருவாக்கம் என்பது கூட புலிகளின் அச்சுறுத்தலை சமாளித்தல் எனும் நோக்கமாகவே இருந்தது.

எண்பதுகளின் பிற்பகுதியில் பொதுமக்களின் வாழ்விடங்களில் உள்ள அரச சொத்துக்களை அழித்து பொதுப்பணிகளை முடக்கும் புலிகளின் செயல்பாடுகளை தடுக்க ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது. தொண்ணூறில் முஸ்லிம்களை பெருமளவில் படுகொலை செய்ய புலிகள் தீர்மானித்த போது அதற்கு பாதுகாப்பு வியூகமாக முஸ்லிம் ஊர்களைச் சுற்றி ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவம் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் ஒவ்வொரு ஊரிலுமுள்ள முஸ்லிம் பொதுமக்களை பாதுகாக்க முடியாது என்பதனால் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு சாதாரண தோட்டாவினால் சுடும் துப்பாக்கிகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அது கூட பாதுகாப்பு துறையின் வழி காட்டுதலிலேயே இடம்பெற்றது. இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் எதுவென்றால், நவீன போர்த்தளபாடங்களுடன் ஒரு அரசாங்கத்தை எதிர்கொண்ட புலிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க ஊரக மட்டத்தில் மக்களுக்குள் சில இளைஞர்கள் சாதாரண துப்பாக்கிகளுடன் காவல் காத்தனர் என்பதுதான். புலிகள் அப்பாவி மக்களை படுகொலை செய்தும் அவர்களுக்கான பொதுச் சொத்துக்களை நாசம் செய்தும் இருக்காவிட்டால் ஊர்காவல் படை என்ற பிரிவு இராணுவத்தின் துணைக் குழுவாக தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் சில எதிர் விளைவுகள் உருவாவது போல சில தமிழ் கிராமங்களில் ஊர்காவல் படையினரால் விரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அதை முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்டுவதானது ஏற்றுக்கொள்ள முடியாதது.  ஏனெனில் இராணுவத்தின் நேரடி நெறியாள்கையிலும், வழிநடத்தலிலும் செயல்பட்ட சாதாரண துப்பாக்கிதாரிகளை முஸ்லிம்களின் அமைப்பாக வியாக்கியானப்படுத்த முடியாது. அத்தோடு இலங்கையின் பாதுகாப்பு துறையில் ஊர்காவல் படை எனும் பிரிவு நிரந்தரமாக உள்ளது. அதில் சமூகங்களின் பெயர் கொண்டு அழைக்கப்படும் அமைப்புகள் எதுவுமில்லை. அரச பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவு நெறி தவறி செயல்பட்டதன் விளைவுகளை முஸ்லிம்களோடு வலிந்து சம்பந்தப்படுத்த எத்தனிப்பது கீழ்மையான முஸ்லிம் விரோத வக்கிர நிலையாகும்.

“அந்த தாக்குதலில் பெரும் படுகொலை நிகழ்ந்த பள்ளிவாசலின் சேதங்களை முஸ்லிம்கள் பேணி வருவதனை சிலர் விமர்சித்தாலும் அதன் பின்னாலுள்ள காரணங்களை புறந்தள்ள முடியாது.”// அது என்ன புறந்தள்ள முடியாத காரணங்கள் …………?

புலிகள் மேற்கொண்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சம்பவத்தின் சேத வடுக்களை முஸ்லிம்கள் பேணி வருவதன் பின்னாலுள்ள நியாயங்கள் …..

புலிகள் ஒரு பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பைக் கொண்டிருந்த பயங்கரவாத இயக்கமாகும். அது இலங்கையின் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் விடுதலைக்காக போராடுவதாக பிரகடனம் செய்து கொண்டது. அவர்கள் பயன்படுத்திய “தமிழ் பேசும் ” என்ற சொல்லாடலினுள் முஸ்லிம் மக்களும் உள்ளடக்கப்பட்டதாக சிலர் கவர்ச்சிகர அர்த்தங்களை எடுத்துரைத்தனர். ஆனால் புலிகள் முஸ்லிம்களை அந்த அர்த்தத்தில் நோக்கவில்லை. தமது இராணுவ உத்திகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சூழ்நிலையிலும் முஸ்லிம்களை கையாள நினைத்தனர். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகம் என்பது சமரில் கையாள பயன்படுத்தும் கருவி. தமக்கு வேண்டிய தருணத்தில் அரவணைப்பது போல் பாசாங்கு செய்யவும், வேண்டாத தருணத்தில் படுகொலை செய்யவும், விரட்டி விடவும் செய்தனர். இந்த நடைமுறையானது புலிகளின் போராட்ட காலம் முழுவதும் தொடர்ந்தது.

இந்திய இராணுவத்தையும் அதனோடு இணைந்து செயல்பட்ட பிற இயக்கங்களையும் நாட்டை விட்டு வெளியேற்றியதும், ஜனாதிபதி பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்ட புலிகள் வடக்கில் உக்கிரமான யுத்தம் ஒன்றுக்கு ஆயத்தமாகினர். அதன் போது அவர்கள் புது வகையான உபாயம் ஒன்றினை மேற்கொண்டனர். தமது போராட்ட ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வசித்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றவும், தமது ஆளுகைக்கு உட்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்களை படுகொலை செய்யவும் தீர்மானித்தனர். அதன் மூலம் தமிழர்களை மட்டும் தாயகமாகக் கொண்ட தனிநாட்டை உருவாக்கலாம் என நினைத்தனர்.

அந்த முஸ்லிம் விரோத வெறித்தன செயல்பாட்டின் ஒரு வடிவமே காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். அதன் மூலம் புலிகள் தமது நிலைப்பாடு குறித்து தெளிவாக வெளியுலகத்துக்கு ஒரு சேதியை  முன்வைத்தனர். முஸ்லிம்கள் எனப்படுவோர் தமிழர்கள் கிடையாது என்பதேயது. தமது போராட்டம் முஸ்லிம்களுக்குமானதல்ல என்பதும் இன்னொரு சேதியாகும். அந்த வரலாற்றுத் திருப்பத்தை நினைவூட்டும் அரசியல் சுவடுகளில் காத்தான்குடி பள்ளிவாசல் சேதங்கள் முக்கிய ஆதாரமாகும்.

சிங்கள பெரும்பான்மையின் அடக்குமுறைக்குள்ளிருக்கும் சிறுபான்மை மக்களை விடுவிப்பதற்கான போராட்டம் என்ற கொள்கை விளக்கம் அளித்து வந்த புலிகள், அடக்குமுறைக்குள் சிக்கிய முஸ்லிம் சிறுபான்மையை கொன்று குவித்ததன் மூலம் அவர்கள் மக்களுக்காக போராடும் இயக்கம் அல்ல என்பது நிரூபணமான தருணமது. அவற்றின் மூலம் புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பது உறுதியானது. இவை போன்ற வரலாறுகளை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்தியம்பக் கூடிய நியாயங்களை காத்தான்குடி பள்ளிவாசல் சேதங்கள் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் எனப்படுவோர் தமிழ் சமூகத்திலிருந்து அரசியல் ரீதியாக வேறுபட்ட தனித்துவமான சமூகம் என்பதற்குமான நியாயப்பாடுகளையும் உணர்த்துவதற்கான அரசியல் முக்கியத்துவத்தை காத்தான்குடி பள்ளிவாசல் சேதங்கள் கொண்டிருக்கின்றன.

“யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதன் பின்னர் எஞ்சியிருந்த காய வடுக்களை தமிழ் மக்கள் பல வருடங்களாக அதே தோற்றத்தில் வைத்திருந்தனர்”. /// அன்று வடக்கில் அரசு இயந்திரம் என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் அன்றே யாழ் நூலகம் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கும் என்பதே யதார்த்தம் …….இந்தநிலையில் உங்கள் முடிச்சு வியப்பைத்தருகின்றது?

அரச இயந்திரம் முற்றாக செயல்படாமல் முடங்கியிருநந்தது என நீண்ட காலப்பகுதியை உங்களது சௌகரியத்துக்கு கூறுவதாகவே இதனை எடுத்துக் கொள்வேன். நீங்கள் கூறுவது போல் யாழ் மாவட்டத்தில் நீண்ட காலமாக அரச நிருவாகம் முடங்கியிருந்ததென்பது தவறான வாதமாகும்.

யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது 1981-ல் ஆகும். அதன் பிறகான காலத்தில் அங்கு பல்வேறு தேர்தல்கள் இடம்பெற்றுள்ளது. 1990 ஆரம்பம் வரை யாழ்ப்பாணத்துக்கு கொழும்பில் இருந்து புகையிரத சேவை இடம்பெற்று வந்தது. அரசாங்க பாடசாலைகள் யாவும் இயங்கின. அரச அலுவலகங்கள் அனைத்திலும் பொதுப்பணிகள் நடந்தன. அரச ஊழியர்கள் பணிகளை ஒழுங்கு முறையில் செய்தார்களோ இல்லையோ மாதச் சம்பளத்தை தவறாமல் பெற்றனர். இவை யாவும் அரச இயந்திரம் யாழில் முடங்காமல் செயல்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்.

1983 கலவரத்துக்குப் பிறகான சூழலில் தமிழ் ஆயுதக் குழுக்கள் விரைவாக செயல்படத் தொடங்கிய போதிலும் யாழில் அரச நிருவாகங்கள் முறைப்படி இயங்கியது. வங்கிகள், தபால் நிலையங்கள் அனைத்தும் இயங்கின. புலிகளும் ஏனைய இயக்கங்களும் பல்வேறு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட செய்திகளிலும் யாழில் அரச நிருவாகம் இயங்கியது என்பதற்கான ஆதாரமுண்டு.

1983 ஜூலை கலவரத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு நாட்டில் இருந்து வெளியேறினர். அதனால் தமிழ் பிரதேசங்களுக்கான மக்கள் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் இருந்த போதிலும் அதிகாரிகளின் துணையுடன் அது கிரமமாக நடந்தது என்பதே உண்மை. ஆனபோதும் அரச அதிகாரிகளை தமிழ் ஆயுத இயக்கங்கள் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கையாள முற்பட்டனர். அதன் அடிப்படையிலேயே யாழில் சிவில் நிருவாகம் தொடர்ந்தது. அவர்கள் நினைத்திருந்தால் யாழ் நூலகத்தை புதுப்பொலிவுடன் நிர்மாணித்து பேணியிருக்க முடியும். 1984 காலத்தில் யாழ் நூலகம் சிறிதளவு புனரமைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு தாக்குதல் சம்பவங்களால் அது மீண்டும் சேதமுற்றது. தமிழ் ஆயுத இயக்கம் ஒன்று யாழ் நூலக வளாகத்தினுள் முகாம் அமைத்திருந்ததும் இதற்கு காரணம் . எனவே யாழ் நூலகத்தின் சேத வடுக்களை பேணி அரசியல் செய்வதில் தமிழ் தரப்புகள் அக்கறை கொண்டிருந்தன என்பது உண்மை.

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் யாழ் நூலகம் புனரமைக்கப்பட்டதில் தமிழ் தரப்புகள் சிலவற்றுக்கு விருப்பம் இருக்கவில்லை என்பதும் உண்மை. அவர்கள் பல்வேறு இடர்பாடுகளை உருவாக்கியதும் உண்மை.

“வடுக்களை நீண்ட காலமாக பேணி நினைவில் வைப்பது ஒரு அரசியல். அது போலவே ஞாபகங்களில் இருந்து ஒரு வடுவை நீக்கம் செய்வதும்  அரசியல்தான்”. // ஒரு நாட்டில் போர் நடந்து முடிந்து பாதிப்படைந்த பகுதிகளை புனருத்தாரணம் செய்து மீள்கட்டுமானப்பணிகளை கோருகின்ற நாங்கள் வடுக்களை மட்டும் நீண்டகாலமாகப் பேணவேண்டும்  என்பது எந்தவிதத்தில் நியாயமானது /அறமானது ?

போரில் பாதிப்படைந்த பகுதிகளை புனருத்தாரணம் செய்வது ஒரு பொதுவான நடைமுறைதான். அழிவுகள் இடம்பெற்று சிதைவடைந்த பகுதிகளை அதே தோற்றத்துடன் நீண்ட காலம் வைத்திருக்க எண்ணுவது ஒரு வகையில் பிரச்சினைதான். அழிவுகளின் தடத்தை பேணுவதும் அல்லது புதுப் பொலிவை உருவாக்கி மறைத்து விடுவதும் வெவ்வேறு வகையான அரசியல் நோக்கங்களோடு சம்பந்தப்பட்டது.

ஆனால் அரசாங்கத்தின் வளங்களாக அறியப்படுகின்ற பொதுமக்களின் பாவனைக்கான இடங்களை இந்த விதமான அரசியல் விளையாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தின் பக்கமிருந்தும், மக்களின் பக்கமிருந்தும் வரும் அபிப்பிராயங்களுக்கு செவிமடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்தவகையில் யாழ் நூலகமானது அரசாங்கத்தின் பணியிடமாகும். அதனால் எல்லாக் காலத்திலும் அதனை ஒரு தரப்பு நினைப்பது போல் கையாள முடியாது போனது.

ஆனால் காத்தான்குடி பள்ளிவாசல் ஆனது அரசாங்க சொத்தல்ல. அந்த ஊர் முஸ்லிம் மக்களின் சொத்து. அதனை அம்மக்கள் நினைக்கும் விதத்தில் பேணுவதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. இது போல ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பாதிப்புக்குள்ளான தேவாலயங்களும் கிறிஸ்தவ மக்களின் சொத்தாகும். அதை எவ்வாறு பேண வேண்டும் என்பதில் அம்மக்களுக்கு அக்கறை இருக்கும். அந்த தேவாலயங்களின் வடுக்களையும், சேதங்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும் என்று அவர்கள் எடுத்த தீர்மானத்திற்கு வலுவான பின்னணிக் காரணங்கள் இருக்க முடியும்.

வளைகுடா நாடுகளுக்கான முஸ்லீம்களது பொருளீட்டல் புலப்பெயர்வும் வஹாபிஸம் இலங்கையில் வேரூன்ற ஒருகாரணமாயிற்று என்பது தொடர்பாக …..?

வஹாபிஸம் என்பது மக்கள் விரோதமானதா அல்லது அதுவும் ஒரு சமூக சீர்திருத்த முறை சார்பான கருத்தியலா என்ற விடய தெளிவு இல்லாமல் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறதா எனும் சந்தேகம் எனக்குண்டு. வஹாபிஸம் என்பது இஸ்லாமிய சமய சடங்குகளுக்குள் நிலவுகின்ற உள்ளக கருத்தியல்களில் உள்ள இஸ்லாமிய சிந்தனை மரபுகளில் ஒன்று. இது போல பல வகையான சிந்தனை மரபுகள் உள்ளன. இதனை இலங்கையில் வாழும் முஸ்லிம்களோடு பொத்தாம் பொதுவாக பொருத்தி ஒற்றையான ஒரு சடங்குச் சமூகமாக சித்தரிப்பதே இக் கேள்வியின் நோக்கமாக இருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் அரேபிய தொடர்பு என்பது எட்டாம் நூற்றாண்டுக்கும் முந்தியது. இலங்கையில் காலனித்துவ ஆதிக்கம் உருவான போது பண்பாட்டு ரீதியாகவும், கல்வி, பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஐந்நூறு ஆண்டு கால ஆதிக்கத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் சிதைவும்,  பின்னடைவும் ஏற்பட்டது.

இலங்கையில் ஐரோப்பிய ஆதிக்கத்தின் பிந்திய பகுதியில்  எகிப்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷாவின் வருகையோடுதான் மீண்டும் பண்பாட்டு தொடர்ச்சியும், கல்வியில் மறுமலர்ச்சியும் இங்கு முஸ்லிம்களுக்குள் துளிர்த்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  இதன் தொடர்ச்சியாக பல்வேறு அரேபிய முஸ்லிம் அறிஞர்களும், சமூக நலன்புரி அமைப்புகளும் இலங்கை முஸ்லிம்களோடு தொடர்புகளை உருவாக்கி பேணி வந்திருக்கின்றனர். இவைகளுக்குள் வஹாபிய சிந்தனை முகாம்களும் அடக்கம்.

அரேபிய சாம்ராஜ்யங்கள் வீழ்ந்ததன் பிறகான காலங்களில் இந்திய முஸ்லிம்களுடனான தொடர்புகள் வலுப்பெற தொடங்கியது. குறிப்பாக தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் தொடர்புகள் உருவாகியது. அது பொருளாதார அனுகூலங்களை ஏற்படுத்தாதது.

இலங்கை முஸ்லிம்களுக்குள் பல்வேறு இஸ்லாமிய சிந்தனை மரபுகளின் பின்னணிகளைக் கொண்ட அமைப்புகளின் தொடர்பானது சுதந்திரத்திற்கும் முந்திய வரலாறுகளைக் கொண்டது. இந்த சிந்தனை மரபுகள் சம்பந்தமான விடயங்கள் யாவும் சமய கல்வியுடன் தொடர்புடைய அறிஞர்கள் மூலமாகவும், கலாசாலைகள் மூலமாகவுமே இலங்கையில் பரவலடைந்தது.

வஹாபிய சிந்தனை மரபானது இறுக்கமான சீர்திருத்த நடைமுறைகளைக் கொண்டது. இது சவூதி அரேபியாவில் உருவானது. அங்கு இது போல இன்னும் பல சிந்தனை மரபுகள் உள்ள போதும் செல்வாக்கு மிக்கது. அங்குள்ள அரசின் துணையுடன் வளர்த்தெடுக்கப்பட்டது. அதனால் இலகுவாகப் பரவுவதற்கு ஏதுவாகியது.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜிய உறவானது ஆரம்பத்தில் இருந்தே தொடர்வதனால் இரு நாட்டு முஸ்லிம் மக்களுக்குமிடையிலான பரஸ்பர தொடர்பானது நெருக்கம் மிக்கது. இரு நாட்டு மக்களும் வெவ்வேறு இனம், மொழி ஆகிய பேதங்களைக் கொண்டிருந்தாலும் சமய ரீதியான உறவு வழியில் இறுக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கின்றனர். ஹஜ் போன்ற சமய நிகழ்வுகள் இங்குள்ள இஸ்லாமியரை சவூதியோடு நேரடியாகவே தொடர்பு படுத்துகிறது. இந்த வழிமுறையில் பல்வேறு நலத் திட்டங்களூடாக அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் இலங்கை மக்களுக்கு உதவுகின்றன. அவற்றுள் இஸ்லாமிய கல்விக்கான உதவிகளும் அடங்கும்.

சவூதி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் பல்வேறு வர்த்தக உறவுகள் தொடர்கின்றன. இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளில் சவூதியும் முக்கியமானது. இலங்கையின் இலட்சக் கணக்கான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நாடு. இவ்வாறான தொடர்பைக் கொண்ட ஒரு நாட்டின் பண்பாடானது இலங்கை போன்ற நாட்டில் வாழும் அதே சமய வழிமுறையைப் பின்பற்றும் மக்கள் வழியாக பெருகாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் வஹாபிய சிந்தனை மரபுக்கு மாற்றான பல்வேறு கருத்தியல்களும் இலங்கை இஸ்லாமியருக்குள் வளர்ச்சியடைந்துதான் இருக்கிறது.அண்மையில் காலமான ஈராக் நாட்டு இஸ்லாமிய அறிஞரான பேராசிரியர் தாஹா ஜாபிர் அல் அல்வாணி (Thaha Jabir Al Alwani) யின் கருத்தொன்று இங்கு சுட்டிக்காட்ட பட வேண்டியதாகும்.

“ஒரு சிந்தனை மரபின் பரவுதலானது ஒரு குறிப்பிட்ட தேசத்திற்குள் இடம்பெறும் போது அங்கு அதனை முழுவதுமாக எதிர்க்கும் குழுக்கள் அந்த பண்பாட்டை பின்பற்றும் மக்களுக்குள்ளேயே இருக்கக்கூடும். அச்சிந்தனை மரபை  எதுவித விமர்சனமும் இன்றி முழுவதுமாக ஏற்று அடிமைகள் போல பின்பற்றும் கூட்டமும் இருக்கும். வேறு தேசத்திலிருந்து நுழைகின்ற சிந்தனை மரபொன்றின் சிறந்த அம்சங்களை ஏற்றுக்கொண்டு, தமது தேசத்திற்கு பாதகங்களை உருவாக்கக் கூடிய அம்சங்களை புறக்கணித்து விட்டு தமது பண்பாட்டோடு சேர்த்து மேலதிக செழுமையை உருவாக்கும் குழுக்களும் இருக்கும். இந்த வகையான குழுவே ஆக்கபூர்வமானது” என்கிறார்.

இலங்கை போன்ற சிறுபான்மை முஸ்லிம்களை கொண்ட நாடுகளுக்கு இதுவே பொருத்தமானதும் கூட. இப்படியான நடைமுறையில்  இஸ்லாமிய சிந்தனை மரபுகள் இலங்கையில் செயல்படுத்தப்படக் கூடிய நிலை இருந்தாலும் இஸ்லாமிய வெறுப்புவாத பிரச்சாரங்கள் எல்லா முஸ்லிம்களையும் தீவிர அடிப்படைவாதிகளாகவே சித்தரிக்க முயல்கின்றன. அதற்கு வஹாபிஸத்தின் ஜனரஞ்சகமும் ஒரு காரணமாகிறது. அத்தோடு  வஹாபிய சிந்தனைகளை எதுவித விமர்சனங்களுமின்றி அரேபிய அடிமைகள் போல ஏற்றுக்கொண்டு வாழ முயற்சிப்பவர்களும் காரணமாகின்றனர்.

வஹாபிஸம் சவூதியின் சிந்தனைச் சரக்காகும் என்பதை அறிவோம். இலங்கை முஸ்லிம்கள் பொருளீட்டலுக்காக சவூதி அரேபியாவுக்கு மட்டுமே சென்று கொண்டிருப்பதான தோற்றமும் இந்த கேள்வியில் தொனிக்கிறது. அல்லது அனைத்து வளைகுடா நாடுகளும் வஹாபிஸத்தை பொதுவான கருத்தியலாக அனுசரிக்கின்றன எனும் அர்த்தமும் உருவாக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் உள்ள எல்லா நாடுகளுக்கும் இலங்கை முஸ்லிம்கள் பொருளீட்டலுக்காக செல்கின்றனர்.  அவர்கள் பணி புரியும் நாடுகளில் பொருளீட்டும் முஸ்லிம்கள் வழியாக சமய சிந்தனை மரபுகள் தருவிக்கப்பட வாய்ப்புகளில்லை. சமய சிந்தனை மரபுகளானவை கல்விப் புலமை கொண்ட அறிஞர்கள் வழியாகவும், கலாசாலைகள் வழியாகவும் மட்டுமே பரவ வாய்ப்பிருக்கிறது. மாறாக ஏழைத் தொழிலாளர்கள் வழியாக சமய சிந்தனை மரபுகள் பரவுதற்கு வாய்ப்புகளில்லை என்பதனால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகவும் தோற்றமளிக்கிறது.

இலங்கையில் உள்ள பிற சமூகங்களான தமிழர்களின் ஹிந்து சமய பண்பாடும், சிங்களவரின் பௌத்த சமய பண்பாடும் தென்னாசியாவின் பல்வேறு நாடுகளில் இருக்கிறது. தமிழர்களுக்கும் இந்திய தமிழ்நாடு தமிழர்களுக்கும் நீண்ட கால தொடர்பிருக்கிறது. அதேபோல இலங்கை பௌத்தர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாட்டு பௌத்தர்களுக்கும் சமய வழி தொடர்பிருக்கிறது. ஆனால் அது பண்பாடு வழியாக புனரமைக்கப்படாதது. ஆனால் அரேபிய நாடுகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமான தொடர்புகள் புனரமைப்புக்குட்படுபவையாக உள்ளது.

தமிழ்நாடானது சினிமா, இலக்கியம் போன்றவை வழியாக இலங்கைத் தமிழர்களை சுரண்டி தொடர்பை பேணுகின்றன. பௌத்த நாடுகள் இலங்கையோடும் சிங்கள மக்களோடும் தனித்துவமான நாடு என்ற வகையிலான தொடர்பை மட்டுமே பேணுகின்றன. இந்த வகை தொடர்பினால் முஸ்லிம்கள் போல இந்தச் சமூகங்கள் சமய, பொருளாதார அனுகூலங்களை பெறவில்லை. தமிழர்களை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது சுரண்டலுடன் கூடிய ஒரு வழிப்பாதை உறவுதான். இவை போன்ற காரணங்களால் முஸ்லிம்கள் மீது பிற சமூகத்தினருக்கு பொறாமையும், அச்சமும் ஏற்படக் கூடும்.

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் பொருளாதார பலம் மிக்கதாகவும், சமய வழியில் தொடர்புகளைப் பேணி உதவுபவையாகவும் உள்ளதனால் இலங்கை முஸ்லிம்களுக்கு அது சமய, பொருளாதார வாய்ப்பாக மாறியிருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் வஹாபிஸ கருத்தியலை முற்று முழுதாக முன்னெடுப்பதற்கான நிர்ப்பந்தங்களோடு அது இல்லை என்பதே உண்மை. ஆனால் இஸ்லாமிய விரோத மனநிலையை விதைக்க விரும்புபவர்கள் இதை மறுதலித்து மிகச் சிறிய அளவில் செயல்படும் கடும்போக்கு வஹாபிஸ கருத்தியலை அனைத்து முஸ்லிம்களினதும் நடவடிக்கைகளோடு தொடர்பு படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் எவ்வாறு ஜிகாத்தும் சர்வதேசப் பயங்கரவாத வலைப்பின்னலும் உருவாகிற்று?

இந்தக் கேள்வி இலங்கை முஸ்லிம்களை நோக்கி கேட்கப்படுவதாக அமைந்தால் அது உள்நோக்கம் கொண்டதாகவே இருக்க முடியும். மேலும் இந்தக் கேள்விக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கக் கூடியது இலங்கை  அரசாங்கமே. அதனால் இந்தக் கேள்வி இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட வேண்டியதாயினும் இதற்கான பதிலை நாமும் பல்வேறு தகவல்கள் வழியாக சிந்தித்து கண்டடைய முடியும்.

ஈஸ்டர் படுகொலைக்குப் பிறகு இலங்கையில் உருவாகியிருக்கும் முஸ்லிம் வெறுப்பு சூழலானது திடீரென பிறந்த ஒன்றல்ல. அது கடந்த மஹிந்த ஆட்சியின் நடுப்பகுதியில் திட்டமிட்டு உருவாக்கம் பெற்று படிப்படியாக நிறுவனமயப்பட்டதாகும்.

சமூக வலைதளங்களில் பரவலான அவதானத்தைப் பெற்றிருக்கும் தொழிற்சங்க பிரதானி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் கூறிய  பேச்சொன்று முக்கியமான விடயம் என கருதுகிறேன். அதில் ஈஸ்டர் தின பயங்கரவாத செயல்களுக்குப் பின்னால் உள்ள ஒரு தனி நபர் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்க அவர் எத்தனித்தார். வெவ்வேறு சமூகங்களிலும் தமக்கு வேண்டிய விதத்தில் மத விரோத வெறித்தனங்களைச் செய்யக் கூடிய குழுக்களின் மூலம் மக்களிடையே குரோதங்களை விதைத்து சமூகங்களைத் துண்டாடி விரிசலாக்கி விட்டு கடந்த  அரசாங்கத்தின் மீது பழி போட ஒருவர் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

அவராகவே மக்களுக்குள் வன்செயலைத் தூண்டுவார். அவராகவே சமூகங்கள் மீது வெறுப்பை விதைப்பார். அவராகவே சமூக அமைதியைக் குலைப்பார். இறுதியில் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டில் அமைதியை கொண்டு வர முடியும் என பிரச்சாரம் செய்வார் என்று 2019 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்த படி இருந்தது. மேற்படி குற்றச்சாட்டுகள் யாவும் முன்னாள் பாதுகாப்புக்கு பொறுப்பானவரை நோக்கியே முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் இலங்கையின் உள்நாட்டு அரசியலானது அரசியல் தீர்வு எனும் திசை நோக்கி செல்ல வேண்டிய அவசியப்பாடு இருந்தது. இலங்கையின் அப்போதைய சிறுபான்மை விரோத அரசாங்கமானது புலிகளை அழித்து விட்ட நிலையில் தீர்வு வழங்குவது அவசியமற்றது என நினைத்தது. அதனால் உள்நாட்டின் அமைதியான சூழலைச் சீர்குலைத்தால் மாத்திரமே தீர்வை விலக்கி வைத்து விட்டு மக்களின் கவனங்களையும் திசை திருப்பி வாழ்க்கைச் சுமை குறித்த விழிப்புணர்வையும் கலைத்து விட முடியும் என எண்ணியது. அந்த தந்திரோபாயத்தின் செயல் வடிவமாக கொண்டு வரப்பட்டதுதான் முஸ்லிம் வெறுப்பரசியல்.

அதற்கென மூன்று வகையான குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு குழு தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த குரு மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் கலவரங்களையும் தூண்டி விடுவதாக அமைக்கப்பட்டது. மற்றொரு குழு முஸ்லிம் சமுதாயத்துக்குள்ளிருந்து தீவிரவாதத்தை முன்னிறுத்தும் வகையாக உருவாக்கப்பட்டது. இன்னொரு குழு முஸ்லிம் வெறுப்பையும் ஹிந்து மத வெறியையும் தூண்டும் சாயல் கொண்டதாகவும் அமையப் பெற்றது. புலிகளின் அழிவுக்குப் பிறகு அரசியல் அரங்கில் பேசு பொருளற்றிருந்த தரப்பினர் அனைவருக்கும் இதன் மூலம் விடயதானம் கிடைத்தது. ஆனால் மக்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் நிர்மூலமாகியது.

அக்காலத்தில் ஹலால் பிரச்சினை, கிறீஸ்மேன் பிரச்சினை, பேருவலை கலவரம், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அழிப்பு என பல அட்டூழியங்களின் பின்னணியில் இந்தக் குழுக்களின் பங்களிப்புகள் இருந்தன. அதன் பிறகு ஏற்பட்ட ரணிலின் ஆட்சி காலத்தில் நிலமைகள் ஓரளவு சீரடைந்தன.

அந்த புதிய சூழலை சமூகங்களுக்கு இடையிலான நட்புக் காலமாக மாற்றி விட பல்வேறு சிவில் அமைப்புகளும் விரும்பின. கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெருமளவான சிங்கள மக்களுக்கு பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் களத்தில் நின்று உதவி புரிந்தன. அதன் மூலம் முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு நேயம் உருவானது. ரணில் அரசாங்கம் அமைவதற்குத் துணை நின்ற பௌத்த மத குரு மாதுலுவாவே சோபித தேரரின் இறப்பின் போது அவரது இறுதிக் கிரியையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை கூட சிங்கள மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்கும் காரியமாக அமைந்தது. இவை ரணில் அரசாங்க காலத்தின் பாராட்டுக்குரிய சகவாழ்வு அம்சமாகத் திகழ்ந்தது.

ஆனால் சிறுபான்மை வெறுப்பில் அரசியல் அதிகாரத்தை அடைய திட்டமிட்டிருந்தவர்களுக்கு அந்தச் சூழல் அசௌகரியங்களை தரவல்லதாகவே இருந்தது. அதனால் திகன கலவரத்தை உருவாக்கி சமநிலைகள் குலைக்கப்பட்டது. அதன் பின்னர் கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டதான சம்பவங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட போது பெரும்பான்மை சமூகம் மீண்டும் உலகளவில் குற்றவாளிகளாக நோக்கப்பட்டனர். அந்த அவப் பெயரைத் துடைக்க வேண்டிய தருணத்தை முஸ்லிம் வெறுப்பாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சிறுபான்மை சமூகங்களோடு நல்லுறவுடன் நடந்து கொள்வது போன்ற ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். 2019 ன் ஜனாதிபதி வேட்பாளராக தான் வருவதை பெரும்பான்மை சமூகம் தீவிரமாக ஆதரிக்க வேண்டுமென்றால் தான் ஒரு மீட்பர் போன்ற தோற்றம் உருவாக்கப்பட வேண்டும் எனும் தேவையும் எழுந்தது. அது போலவே தன்னை ஆதரித்து வாக்களிக்காமல் விலகிச் செயல்படக் கூடிய முஸ்லிம் சமூகத்தை புதிய வெறுப்புச் சூழல் ஒன்றுக்குள் சிக்க வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனும் தேவையும் இருந்திருக்கக் கூடும். அந்த நோக்கங்களின் அறுவடைதான் ஈஸ்டர் படுகொலை என்பது போன்றதொரு மறைமுக வியாக்கியானத்தைத் தருவதாகவே குறிப்பிட்ட தொழிற்சங்க தலைவரின் உரை அமைந்திருந்தது.

குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெருமளவு பணமும், வேறு உதவிகளும் உள்நாட்டில் வைத்து பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டதற்கு சான்றுகள் இருப்பதாக தனது உரையில் தொழிற்சங்க பிரதானி கூறினார். இதனை முந்திய கால நிலவரங்களின் பின்னணியோடு உணரவும் முடியும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த வகையில் ஊர்ஜிதமானவை என்பதை உளவுத்துறைகள்தான் நிரூபிக்க வேண்டும். அண்மைய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதுவும் சந்தேகமே. ஆனாலும் இந்தக் கொடுஞ் செயலின் தன்மைகளை நோக்கும் போது உள்ளூர் அரசியல் தேவை ஒன்றுக்கான திட்டம் திரை மறைவில் இருந்திருக்காது என நம்ப இயலவில்லை. இந்த விதமான ஊகங்களை பலரும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக பேசி வரும் போது இன்னொரு புறம் முஸ்லிம்களுக்கு எதிரான குரல்கள் தீவிரமடையவும் செய்தது.

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்கள் குறித்து பயங்கரவாதத்திற்கு சாய்வான ஒரு மொத்தத்துவ புரிதலை உருவாக்குவதில் சில தரப்புகள் ஈடுபட்டன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதற்காக செயல்படுபவர்கள் உள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு குறித்த மேலைத்தேய ஊடகக் கருத்துக்கள் வழியாக சிந்திப்பவர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் பெருவாரியான அரசியல் விழிப்புணர்வு குறித்த தெளிவற்றவர்கள்.

பிரான்ஸ் நாட்டு அரசியல் ஆய்வாளரான ஒலிவியர் ரோய் ( Olivier Roy) எழுதிய Who Are The New Jihadis எனும் கட்டுரை சில வருடங்களுக்கு முன்னர் The Guardian பத்திரிகையில் வெளிவந்தது. அதனை

” மறுத்தோடி ” இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்திருந்தேன். அதில் அவர் இஸ்லாமிய ஜிஹாதிகள் மேலை நாடுகளில் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்திருந்தார். அதில் குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாத இழி செயலுக்கான முன் தயார்படுத்தல்கள் போன்ற எதனையும் இலங்கையில் அவதானிக்க முடியவில்லை.

இன்று பெரும்பாலான தமிழ், சிங்கள  ஊடகங்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப எத்தனிக்கின்றன. இந்த முயற்சிக்குள் மறைமுகமான முஸ்லிம் வெறுப்பு செயல்படுவதையும் மறுக்க முடியாது.

ஈஸ்டர் படுகொலையில் பெரும்பாலும் கொல்லப்பட்டவர்கள் தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும்  சேர்ந்தவர்கள் என்பதும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாகவும் இருப்பதனால் இந்த வெறுப்பு உருவாகியிருக்குமா என்றால் இதுவே ஒரு முக்கிய காரணமாய் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. அப்படியானால் படுகொலை நடத்திய பயங்கரவாதிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் விமர்சிப்பதாக மேற்குறித்தவர்களின் குற்றச்சாட்டுகள் அமைந்திருக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளியாக்குவதிலும் அவர்களை இனி பயங்கரவாதிகளாகவே கையாள வேண்டும் எனும் பெருவிருப்பத்திலும் பலர் செயல்பட  எத்தனிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தவல்லது.

இங்கு சில விடயங்கள் கோடிட்டு காட்டப்பட வேண்டியுள்ளது. அதாவது ஈஸ்டர் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளிலேயே இலங்கை முழுவதிலுமிருக்கும் முஸ்லிம்கள் அச்சம்பவத்தை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது முக்கியமாகும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்திருந்தும் அதற்கு முஸ்லிம்கள் காட்டிய பதில் நடவடிக்கைகள் சிந்திக்க வேண்டியவை.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்களுக்காக இரத்த தான பணிகளை முன்வந்து முன்னெடுத்தவர்கள் முஸ்லிம்களே. பயங்கரவாதிகளின் கொடுஞ் செயலை அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பகிரங்கமாக கண்டித்தனர். இஸ்லாமிய மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புகள், கழகங்கள் என அனைத்து முஸ்லிம் தரப்புகளும் சில மணி நேரத்திற்குள் தமது எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் பதிவு செய்தன. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முஸ்லிம்களின் கண்டனங்களும் எதிர் விமர்சனங்களும் எண்ணிலடங்காமல் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள், தாம் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பதை வலியுறுத்தினர். அது மட்டுமல்லாது சம்பவம் இடம்பெற்ற ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நாட்டின் பல பகுதிகளிலும் பதுங்கியிருந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்களை முஸ்லிம் மக்களே  பாதுகாப்பு தரப்பிடம் தகவல்களை வழங்கியதன் மூலம் கைது செய்யவும், தேடி அழிக்கவும் முடிந்தது. அத்துடன் அவர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் முஸ்லிம் மக்களே கண்டுபிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்கள் தமக்கு பயங்கரவாத செயல்களில் உடன்பாடில்லை என்பதை உலகறியச் செய்தனர். ஆனாலும், இந்த விடயங்கள் யாவற்றையும் மறைத்து முஸ்லிம்கள் மீது பயங்கரவாத ஒப்பனைகளை அணிவிக்க ஒரு தரப்பு முயன்றது. அதற்கென எழுத்தாளர்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை பலர் விறுவிறுப்புடன் செயல்பட்டார்கள்.

இன்று முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முனையும் அந்தத் தரப்பினருக்கு அதற்கான எந்தவித அருகதையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் யாவரும் இலங்கையில் ஏற்கனவே தமிழ் ஆயுததாரிகளால் நிகழ்த்தப்பட்ட மனிதகுல அழிவுகளின் போது மௌனம் காத்தவர்கள்தான். இலங்கையில் பல்லாயிரம் சிங்கள, தமிழ்,  முஸ்லிம்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட போது மௌனமாக இருந்து  சந்தோசம் அடைந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக காண்பிக்க முண்டியடிப்பது இழிவானது.

புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழர்களின் பக்கமிருந்து அதனை மனிதாபிமான அடிப்படையில் வெகுஜனங்கள் கண்டித்திருக்கவில்லை. பள்ளிவாசல்களுக்குள் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை புலிகள் படுகொலை செய்த போது தமிழர் பக்கமிருந்து சில மனிதாபிமான ஊடகவியலாளர்களையும், சில எழுத்தாளர்களையும் தவிர வேறு எவரும் பரிதவிக்கவில்லை. ஒப்பற்ற மௌனமே அந்த சமூகத்தின் பக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு அஞ்சி மௌனமாய் இருந்திருப்பார்கள் என்றுதான் முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டனர். அதனால் முஸ்லிம்களின் கண்டனங்கள் யாவும் அப்போது புலிகளை நோக்கியதாகவே இருந்தது. ஆனால் ஈஸ்டரின் பின்னர் நடந்தது அது போல இல்லை.

ஆனால் அன்று முஸ்லிம்கள் சிந்தித்தது போல தமிழர்கள் இன்று சிந்தித்தார்களா எனும் கேள்வி முக்கியமானது. அது போலவே தமிழர்கள் அன்று மௌனமாய் இருந்தது போல இன்று முஸ்லிம்கள் மௌனமாய் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் முக்கியமானது.

இந்த இரண்டு விதமான நடத்தைகளின் கோலத்தை வரலாற்றின் பின்னோக்கிய பரிசீலனைக்கு உட்படுத்திச் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது அன்று தமிழ் சமூகம் அரசியல் அபிலாஷை என்ற பெயரில் பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்து அழிவுகளை தன்னகத்தே அரவணைத்துக் கொண்டதேயொழிய தீர்வுகளைக் கண்டடையவில்லை. முஸ்லிம்கள் இன்று பயங்கரவாதத்தை வெறுத்து எதிர்க்குரல் எழுப்புவதன் மூலம் தமது எதிர்காலத்துக்கான அமைதியை வேண்டி நிற்கிறார்கள். வீராப்புடன் நின்று அழிவதை விட தலை தாழ்ந்து மன்னிப்பு கேட்பது தவறாகாது என்றும் கருதினர்.

இத்தனைக்கும் இந்நாசகார சூழ்ச்சிக்குள் தமது சமூகம் சிக்க வைக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு சமூகமானது செய்யாத குற்றம் ஒன்றுக்காக மன்னிப்புக் கேட்டு மண்டியிடுவதைப் போன்றதொரு இழிவான நிலைமையை அனுபவிக்க முடிந்தமை பேரவலம். அப்படியானதொரு அடக்குமுறை அழுத்தத்தைச் சுமந்துதான் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் இன்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு புறம் ஜிஹாத் பற்றிய பழங்கதைகளும் இன்றைய இலங்கைச் சூழலில் நிலவும் இறுக்கத்திற்கு முன்னோடியாக அமைந்து விட்டன.

எண்பதுகளில் தமிழ் பிரிவினைப் போராட்டம் உக்கிரமடைந்த போது அதை பல்வேறு வழிகளிலும் முடக்க இலங்கையின் பாதுகாப்புத்துறை முயற்சிகளை மேற்கொண்டது. இராணுவத்திற்கு புறம்பாக துணை இராணுவக் குழுக்களை உருவாக்கி தமிழ் பிரிவினைவாதத்தை தகர்க்க நினைத்தது. இதற்கென மூன்று சமூகங்களுக்குள்ளும் இருந்து தனியான துணை இராணுவக் குழுக்களை உருவாக்கியது. சிங்கள எல்லைக் கிராமங்களை பாதுகாத்தல், முஸ்லிம் கிராமங்களை பாதுகாத்தல் எனும் காரணங்களுக்காக ஊர்காவல் படைகளை உருவாக்கியது. புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இவை உருவாக்கப்பட்டன. இது போலவே புலிகளினால் அச்சுறுத்தப்பட்ட மாற்று இயக்கங்களை ஒருங்கிணைத்து வேறு துணை இராணுவக் குழுக்களையும் உருவாக்கியது. இவை மக்களைப் பாதுகாத்தனவா என்பதை விட அரசின் உள்ளடி நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அதிகம் உதவின என்பதே உண்மை.

இவை மூலம் சமூகங்களுக்கு இடையிலான உள்ளூர் பிணக்குகளும், துவேஷங்களும், பழிவாங்கல்களும் தூண்டி விடப்பட்டன. இந்த துணை இராணுவக் குழுக்களுக்கு அரசே ஊதியம் வழங்கியது. ஆனாவ் இவற்றின் நாசச் செயல்களுக்கு பாதுகாப்புத்துறை பொறுப்பேற்பதில்லை என்பது முக்கியமான சேதி. இது போன்ற துணை இராணுவக் குழுக்களில் செயல்பட்ட முஸ்லிம்களை தமிழ் மக்கள் அரசின் கூலிப்படை என பார்க்காமல் முஸ்லிம் தீவிரவாதிகள் என நோக்கும் படியான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.

முஸ்லிம்  கிராமங்களில் செயல்பட்ட ஊர்காவல் படையினர் தம்மை வழிநடத்துவது அரசுதான் என்று தெரிந்திருந்தாலும் ஜிஹாத் போராளி போல பெருமைப்பட்டுக் கொண்டனர். அப்போது பலஸ்தீன போராட்டமும், ஆப்கானிஸ்தான் போராளிகளின் போராட்டமும் முஸ்லிம்களுக்குள் கவர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது. அங்கிருந்த ஜிஹாத் போராளிகள் போல அவர்கள் தம்மை கற்பனை செய்து கொண்டதும் ஒரு காரணம். அதேநேரம் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்களை அச்சுறுத்தியதும் தமிழர்கள் மீது எதிர்ப்பு மனநிலை உருவாக காரணமாயிருக்கலாம். அதுவே முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு தீவிரவாத இயக்கம் செயல்படுவது போன்ற அவதூறு பிரச்சாரங்களுக்கும் காரணமாயிற்று.

காலப்போக்கில் புலிகளின் அழிவோடு இவை யாவும் முடிவுக்கு வந்திருந்தாலும் தற்போதைய முஸ்லிம் வெறுப்பு அரசியல் சூழலில், குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு முஸ்லிம்களுக்குள் ஜிஹாத் எனும் தீவிரவாத அமைப்பு இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பாகி விட்டது. இந்த வாய்ப்பை தமிழர்களும், சிங்களவர்களும் தமக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவே பார்க்கின்றனர

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் இலங்கையின் உள்நாட்டு அரசியலானது அரசியல் தீர்வு எனும் திசை நோக்கி செல்ல வேண்டிய அவசியப்பாடு இருந்தது.// விடுதலைப்புலிகள் மீது உங்களைப் போல் எனக்கும்  விமர்சனங்கள் உண்டு. ஆனால் , ஒரு இனத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டத்தை ‘நீங்கள் எப்படி புலிகளின் பயங்கரவாதம்’ என்று சிங்கள அரசு சொல்வது போல் சொல்ல முடியும் ? 

புலிகளின் பயங்கரவாதம் ஒரு இனத்துக்கான போராட்டமா?

என்று இந்த கேள்வியை திருத்தி புதிய விவாதம் ஒன்றை உருவாக்கலாம். ஆயினும் உங்கள் கேள்விக்கான பதில் கூறுவதை முதல் தெரிவாக கொள்கிறேன்.

தமிழ் இன விடுதலைப் போராட்டம் என்ற பதத்தினால் சுட்டப்படுகின்ற அபிலாஷைக்குட்பட்ட விடயங்கள் கூட பல்வேறு முனைகள் வழியான விவாத நியாயங்களோடு முட்டி மோத வேண்டியவை. அதை தவிர்த்து தமிழ் சமூகத்துக்கு நியாயமான விடுதலை ஒன்று அவசியம்தான் என உணரும் நிலையிலிருந்து தமிழ் ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை நோக்கினால் கூட அது விசனத்துக்குரியவை போலவே தோற்றமளிப்பவை.

ஆரம்பம் முதலே போராட எத்தனித்தவர்களுக்குள் விடுதலைக்கான நியாயங்கள் குறித்து தெளிவான பார்வைகள் இருந்ததா என்பது சந்தேகமே. போராட்டத்துக்குத் துணையான சித்தாந்த வெளிச்சம் தமிழ் விடுதலை உணர்வுக்கு கிடைத்ததா என்பதும் நிச்சயமில்லை. ஏனெனில் இயக்கங்களின் தலைவர்களுக்கு வெவ்வேறு நாடுகளோடு  சுயாதீனமான அரசியல் உறவை பேண வேண்டிய பொறுப்பில்லாமல் கைப்பாவைகளாக செயல்படுவதற்கு இருந்த ஆர்வத்தினால் சுதேச சமூக விடுதலை வேட்கையை உருவாக்கி தேசமாக திரள்வதற்கான எண்ணத்தை விதைப்பதற்கான தடங்கல்கள் இருந்தது.

அதனால் பல்வேறு குழுக்கள் உருவாக காரணமாயிற்று. அண்டை நாட்டின் கைக்கூலிகள், மேலை நாடுகளின் கைக்கூலிகள் என்னும் சர்வதேசப் பொறிக்குள் தமிழ் இயக்கங்கள் ஆரம்பத்திலேயே சிக்கிக் கொண்டதனால் முரண்பட்ட போராட்ட உபாயங்களும், பழியுணர்ச்சி மிக்க போட்டியும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் தமிழினத்தின் விடுதலையை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பை புலிகள் ஏகபோகமாக ஆக்கிக் கொண்டனர். அதன் பிறகான கால் நூற்றாண்டு கால  போராட்ட அரசியலின் பல்வேறு நெருகடிகளிலிருந்தும் மக்களையும் மண்ணையும் காப்பாற்றத் தவறி புலிகள் மேற்கொண்ட அணுகுமுறைகள் அவர்களுக்கான அழிவை உறுதி செய்தது. அந்தப் பாதையை இரு உலக அனுபவங்களுடன் பொருத்தி ஒப்பீடு செய்யு முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு நேபாளத்தில் ” பிரச்சண்டா ” ஆளும் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையே உருவான முரண்பாட்டினையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல நேபாளத்தில் அதிகாரச் சீர்திருத்தங்களுக்காக ஆயுத வழியில் போராடிய முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர். புஸ்பகமல் தல் என்ற இயற் பெயர் கொண்ட அவர்,  தான் ஏற்ற விடுதலைப் போராட்டத்தின் கடுமையான செயல்பாட்டின் காரணமாக ” பிரச்சண்டா ” (கடுமையாளன்) எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.

தலைநகர் காத்மண்டுவிலிருந்து நூற்றுக் கணக்கான கிலோ மீற்றர் தூரங்களுக்கு அப்பாலுள்ள கிராமத்தில் பிறந்தவர்.நேபாள மக்களின் வறுமைக்கான காரணங்களை அறிந்த அவர் அங்கு நிலவிய ஆட்சிக்கு எதிராகப் போராட முடிவெடுத்தார். மறைமுக அரசியலில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் 1981 ல் இணைந்தார். மாவோவாத வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். நிலப் பிரபுத்துவம், தொழில் துறையில் அந்நிய முதலீடு என்பவற்றுக்கு எதிரான சீர்திருத்த முழக்கங்களை அவர் முன்வைத்தார். 1989 காலப்பகுதியில் கட்சியின் தலைமைப் பதவியான செயலாளர் நாயகம் எனும் நிலையை அடைந்தார்.

ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டம் ஒரு கட்டத்தில் நியாயமான தீர்வு நோக்கி நகர்ந்த போது யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஜனநாயக வழிக்குத் திரும்பினார். இந்தியா, சீனா போன்ற அண்டை நாடுகளுடன் அவரது தொடர்புகள் நல்ல நிலையில் இருந்ததினால் தனது போராட்டத்தை பயனுள்ள காரியமாக மாற்றிக் கொள்ளும் ராஜதந்திரியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

மக்களுக்கான போராட்டம் என்பது யுத்தம் மட்டுமே செய்து கொண்டிருப்பதல்ல. சரியான தருணங்களில் மக்களின் நலன் சார்பாக சாமர்த்தியமான முடிவுகள் எடுப்பதன் மூலமும் அண்டை நாடுகளுடன் நியாயமாக நடந்து கொள்வதன் மூலமும் நாட்டு மக்களின் வாழ்வை சிறப்பாக்கலாம் என்பதுதான் பிரச்சண்டாவின் போராட்ட வாழ்க்கையிலிருந்து நாம் காணும் உண்மையாகும்.

அதேபோல அண்மித்த காலத்தில் நாம் கண்ட இன்னொரு அரசியல் விடுதலைக்கான முன்னுதாரணமாக கிழக்கு திமோரைக் குறிப்பிடலாம். இந்தோநேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் இச்சிறிய பிரதேசம் பதினாறாம் நூற்றாண்டில் போத்துக்கீய ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. பதினொரு லட்சம் மக்களைக் கொண்ட இந்நாடு போத்துக்கீய திமோர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. போத்துக்கீய மொழிதான் அங்கு பேசப்படுகிறது. உள்நாட்டில் சுயாட்சி கோரிப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் திமோர் புரட்சிகர விடுதலை முன்னணி 1975 ல் ஒருதலைப்பட்சமாகத் தமது சுதந்திரத்தை அறிவித்தது. அப்போது அந்நாட்டுக்குள் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்ட குழுக்கள் பல இருந்தன.

இது இடம்பெற்று சரியாக ஒன்பது நாட்களின் பின்னர் இந்தோநேசிய அரச இராணுவம் மேற்கின் துணையுடன் கிழக்கு திமோரை ஆக்கிரமித்துத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அத்தோடு கிழக்கு திமோரை இந்தோநேசியாவின் இருபத்தேழாவது மாகாணமாகவும் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு திமோரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. பிரிவினைவாத இயக்கமான FRETILIN தனது போராட்டங்களை பல்வேறு முனைகளிலும் தொடர்ந்தது.

Xanana Gusmao போராட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தக் காலப் பகுதியில் இந்தோநேசிய இராணுவத்தால் கடுமையான வன்முறைகளும் இன அழிப்புகளும் இடம்பெற்றன. ஆனாலும்

FRETILIN ன் போராட்டங்கள் ஓயாமல் தொடர்ந்தது. அவுஸ்திரேலியா, போத்துக்கல் போன்ற நாடுகள் போராளிகளின் நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தன.

இந்தோநேசியாவின் ஆதிக்கத்தை ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டது. சுஹாட்டோ இந்தோநேசிய உள் விவகார அரசியலில் செல்வாக்குச் சரிந்து பதவி விலகிய வேளையின் போது அண்டை நாடுகளும் போத்துக்கல்லும் தமது பலப் பிரயோகங்களையும் காண்பிக்க கிழக்கு திமோருக்கு விடிவு காலம் கனிந்தது.

1999 ல் இந்தோநேசியாவுக்கும் போத்துக்கல்லுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சில வருடங்களில் அங்கு ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் கிழக்கு திமோர் மக்களின் சுய நிர்ணய உரிமை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் அங்குள்ள மக்கள் வெற்றி பெறவே சுதந்திர நாடு உருவானது. இருபத்தைந்து வருட ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை வகித்த Xanana Gusmao நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மேற் சொன்ன இரண்டு போராட்டங்களும் வெவ்வேறானவை என்ற போதும் சாதகமான முடிவுகளை நோக்கி நகர்ந்தவை. இவற்றின் தலைவர்களின் அணுகுமுறைகள் உலக நாடுகள் சார்ந்தும் உள்நாட்டு மக்கள் சார்ந்தும் நேர்மையாக அணுகப்பட்டவை. இரண்டு போராட்டங்களிலும் உள்ளக அரசியல் முரண்பாடுகள் எதிர் நிறுவன வன்முறை நிலைப்பாடுகளாக வடிவம் கொள்ளவில்லை. இரண்டு சூழலிலும் போராட்ட பூமியின் எல்லைக்குள்ளிருந்த பொது மக்கள் படுகொலையாக்கப்படவோ அல்லது கேடயங்களாகவோ பயன்படுத்தப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டக் காரர்களுக்கு அண்டை நாடுகளோடு நல்ல உறவு இருந்தது.

இவை யாவும் நமது அனுபவங்களில் விடப்பட்ட அரசியல் தவறுகளை சுட்டிக் காட்டியபடி இருப்பதை உணரலாம். இது போன்ற சந்தர்ப்பம் 1987 ல் எமக்கும் ஏற்பட்டது. ஆனால் அதனை புறந்தள்ளி அழிவுப் பாதையை தேர்ந்தெடுத்தவர்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் இயக்கத்திடம் மக்களின் விடுதலைக்கான நேர்மையான உபாயங்கள் இருக்கவில்லை. ஆனால் பயங்கரவாதிகளுக்கான அத்தனை தகுதிகளும் இருந்தன.

அண்மைக்கால உலக போராட்ட வரலாறுகளை நாம் நோக்கும் போது சில விடயங்கள் முக்கியமானதாக புலப்படும். அது போராட்டத் தலைமைகளின் ஆளுமை பற்றியதாகும். அநேகமாக கடந்த நூற்றாண்டில் கெரில்லா போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்கள் பெரும்பாலும் உலக அரசியல் நிலவரங்களையும், அரசியல் ராஜதந்திரங்களையும் நுட்பமாக அணுகும் வல்லமை பெற்றவர்களாகவும் கல்வி அறிவில் மேம்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். தேர்தல் ஜனநாயக   அரசியல் தலைவர்களை விடவும் கெரில்லா தலைவர்களுக்கு இவை இன்றியமையாததாகும். அரசுகளின் ராஜதந்திரக் கணக்குகளையும், போர்க்களத்தின் வியூகங்களையும் ஒற்றை மனிதனாக இருந்து கணிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் அசாத்தியமான ஆளுமைத் திறன் வேண்டும். அந்த திறன் வாய்க்கப் பெற்ற தலைவர்களே கடந்த நூற்றாண்டில் பல்வேறு விடுதலைப் போராட்டங்களையும் முன்னெடுத்து மக்களுக்கான விடிவுகளைக் கண்டிருக்கின்றனர். அவர்களில் பிரபாகரன் பெயரை உள்ளடக்கவே முடியாது.

பிரபாகரனின் போராட்ட வாழ்வு என்பது அசட்டு உத்வேகத்தினால் உருவாக்கம் பெற்றதாகும். தமிழரசுக் கட்சியின் தேர்தல் கோஷங்களில் உணர்ச்சி வயப்பட்டு வாழ்வைத் தொலைத்த பல்லாயிரம் இளைஞர்களின் தளபதியாகவே பிரபாகரன் தென்படுகிறார். அவர் அரசியல் அடிப்படைகளையோ அல்லது போராட்ட அரசியலையோ துறை ரீதியாக கற்றுத் தேறியவருமில்லை. அது போல அனுபவ ரீதியாக பயின்றவருமில்லை. உலக விபரம் புரியாத பராயத்தில் ஏற்பட்ட உணர்ச்சியேற்றத்தில் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்று விட்டு காட்டுக்குள் தலைமறைவானதில் இருந்து ரகசிய வாழ்க்கையை ஆரம்பித்தவர் அதனையே தனது போராட்ட வாழ்வாக ஆக்கிக் கொண்டார்.

அரச நெருக்குவாரங்களுக்கு அஞ்சிப் பதுங்கத் தொடங்கிய வாழ்வு காலப்போக்கில் மெதுவாக போராளிப் பரிமாணம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து குற்றங்களை இலகுவாகச் செய்யவும், மனித குலத்திற்கு எதிரான தண்டனைகளை வழங்கவுமான அற நியாயங்களை பிரபாகரன் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார். அந்த விகார நிலைக்கு இன விடுதலையின் பெயரால் பாவ விமோசனம் பெற்றுக் கொள்வதற்கான தந்திரங்களை வகுத்தார். இந்த அடிப்படையில் மெருகேறிய பிரபாகரனின் விடுதலைப் போராட்டமானது இலக்குகளற்ற பாதையில் பயணமானது.

நாளடைவில் தமிழின விடுதலைக்காக தமது வாழ்வை போராட்ட நெருக்கடிகளில் செலவிட்ட மாற்று இயக்கங்களின் தலைவர்களையும், அந்த இயக்கங்களின் பிடியில் சிக்கியிருந்த போராளிகளையும் கொன்று குவிப்பதற்கான முடிவை பிரபாகரன் எடுத்த போது அவரது இன விடுதலைப் போராளி எனும் வேஷம் கலைந்து பயங்கரவாதிக்கான நிஜத் தோற்றம் மேலெழுந்தது.

ஒரு தேசத்தின் அரசியல் சூழல் என்பது பன்மைத்துவமான கருத்தியல் அம்சங்களைக் கொண்டது. இன விடுதலை என்ற இலக்கிற்காக ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு உபாயங்களையும் அணுகுமுறைகளையும் கைக்கொள்ளக் கூடும். அது அரசாங்கத்திற்கு சவாலான நெருக்கடிகளாகவே இருக்கும். ஆனால் அவை எல்லாவற்றையும் சிதைத்து அழித்து விட்டு ஒரேயொரு போராட்ட முகாமாக உருவாவதனை அரசு கையாள்வதற்கு இலகுவாகவே இருக்கும். அந்த வகையில் தமிழின விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததில் பிரபாகரனுக்கு பெரும் பங்குண்டு. தான் மட்டுமே போராட்டக் களத்தில் நிஜமான போராளியாக நிற்க வேண்டுமென அவர் சிந்தித்திருப்பாராக இருந்திருந்தால் அது முட்டாள்தனமான யோசனை என்பதை இறுதிப் போரின் போது நிச்சயம் உணர்ந்திருப்பார்.

தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் இந்திய அனுசரணையை நம்பி இலங்கையில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பித்ததில் ஒரு அரசியல் நியாயம் இருந்ததாக எடுத்துக்கொண்டால் அதன் உச்சப் பயன் 1987 அமைதி ஒப்பந்தமும், அதனோடு சாத்தியமான மாகாண சபை முறையும்தான். அதனை முன்கூட்டியே ஒரு தீர்வாகக் கணித்துச் செயல்பட்ட ஸ்ரீ சபாரத்னம், பத்மநாபா போன்ற விடுதலை இயக்கத் தலைவர்களை கொன்று அவர்களின் இயக்கங்களையும் தடை செய்து வடக்கு கிழக்கில் சகோதரப் படுகொலைகளை அரங்கேற்றியதன் மூலம் தன்னிடம் சாத்தியமான தீர்வு குறித்துச் சிந்திப்பதற்கான ஆற்றல் இல்லை என்பதை நிரூபித்த பிரபாகரன் கொலைகளின் கலைஞனாக அரசியல் அரங்கில் அம்பலமானார்.

1987 காலத்தில் போரினால் கொல்லப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். சொத்து இழப்புக்களும் குறைவாகும். அப்போது வடக்கு, கிழக்கு சிறுபான்மையினருக்கு மாகாண சபை என்பது முக்கியமான தீர்வுதான். அதில் போதியளவு அதிகாரங்கள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டாலும் அதை ஜனநாயக வழியில் சாத்தியப்படுத்துவதற்கான அரசியல் பண்பாடொன்றை சிறுபான்மையினர் கட்டியெழுப்பியிருக்க முடியும். சிங்கள தேசத்துடனான நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம் அதை அடைந்திருக்க முடியும். வடக்கு, கிழக்கின் நீண்ட கால பாதுகாப்புக்கு இந்திய இராணுவத்தின் ஒத்தாசைகளையும் பெற்றிருக்க முடியும். இவை எல்லாவற்றையும் நாசம் செய்தவர் பிரபாகரன். இதன் மூலம் மக்களுக்கான சாத்தியமான தீர்வில் நாட்டம் இல்லாமல் பயங்கரவாத அணுகுமுறையில் தனக்கிருக்கும் மோகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தினார் பிரபாகரன்.  ஏனெனில் அதன் பிறகான 22 வருடங்களிலும் தமிழ் மக்களுக்கு அழிவுகளையும், உயிரிழப்புகளையும் மட்டுமே பிரபாகரனால் வழங்க முடிந்தது.

ஆனால் 1987 ல் சாத்தியமான மாகாண சபை நடைமுறை இன்றும் அமுலில் இருக்கிறது. அதை அதிகாரமற்றதாக சிதைப்பதற்கு சிங்கள பேரினவாதம் முயல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியவர் பிரபாகரன்தான்.

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மீண்டுமொரு இரத்தக்களரிக்குள் நாட்டை தள்ளி விட்டதன் மூலம் சமாதானத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை உலகுக்கு உணர்த்திய பிரபாகரன் மாகாண சபை முறை இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக பல்வேறு பழி தீர்க்கும் தாக்குதல்களை மேற்கொண்டார். அதன் மூலம் இந்திய அரசோடும் நேரடியான மோதலை உருவாக்கினார். இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிரப்படுவதை தென்னிலங்கை கடும்போக்கு சிங்கள அமைப்புகள் விரும்பவில்லை. அத்தோடு ஜே.ஆர். அரசாங்கத்திற்குள் இருந்த மாற்றுத்தரப்பினரும் விரும்பியிருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மாகாண சபை முறையை ஏதாவது வகையில் சீர்குலைக்கவே எண்ணினர். அந்த எண்ணத்திற்கு வடக்கு, கிழக்கில் ஒத்தாசையாக பிரபாகரன் இயங்கினார். அவர் எண்ணப்படி வடக்கு, கிழக்கில் மாகாண சபை முறை அன்று உருவாகாமல் விட்டிருந்தால் இன்று சிறுபான்மையினருக்கு எதுவுமே இல்லாமல் போயிருக்கும். அதனால் அரசியல் தூர நோக்கற்ற அழிவுச் சக்தியின் பிரதிநிதியாகவே பிரபாகரன் செயல்பட்டார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அவரது புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தலாம்.

இந்த நிலையில்,  “நிரந்தர யுத்தத்தை விட தற்காலிக சமாதானம் மேலானது ” எனும் கோஷத்துடன் மாகாண சபை முறையை ஆதரித்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய போராட்டத் தலைவரான பத்மநாபாவின் வார்த்தைகளும், அரசியல் அணுகுமுறைகளும் ஓரளவு விடுதலைக்கான அர்த்தத்தை உணர்த்தி நின்றதாகவே எண்ண முடியும்.

தமிழ் பிரிவினைவாத போராட்டத்தின் எந்தவொரு காலகட்டத்திலும் புலிகள் மக்கள் நலன் சார்ந்து செயல்பட்ட அமைப்பாகக் கருதுவதற்குரிய எடுத்துக்காட்டுகள் கிடையாது. உலக நாடுகளின் ஒத்துழைப்புக்கள் எப்போதும் அரசுகளை நோக்கியதாகவே இருக்கின்றமையால் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள் காலத்துக்கேற்ற வகையில் போராட்ட உபாயங்களை மாற்ற வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது. இதனை சிந்தித்து கையாளத் தெரியாத அளவிற்கு நாசகாரச் செயல்களின் பக்கம் மட்டுமே கவனம் கொண்டிருந்த அமைப்பு பிரபாகரனின் புலிகள் இயக்கமாகும்.

பிரபாகரனும், புலிகள் இயக்கமும் மட்டுமே தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை குறித்து அக்கறை கொண்டிருந்ததாக பரப்பப்படும் கதைகள் அரசியல் பன்முகத் தன்மைக்கு எதிரானவை. அமிர்தலிங்கம் முதல் டக்ளஸ் வரையான எல்லா மிதவாத அரசியல்வாதிகளும் தமிழ் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர்கள்தான். சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் சமாதான தீர்வு குறித்த ஆவணத்தை வரைவதில் நீலன் திருச்செல்வம் பெரும் பங்காற்றினார். இவர் போல தமிழ் சமூகத்தின் மீட்சிக்காக சிந்தித்த எத்தனையோ தலைவர்களை கொன்றொழிப்பதில் தீவிரம் காட்டிய பிரபாகரனும்,  புலிகளும் தமிழ் சமூகத்திற்கு எதுவித தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்காமல், போர் வெற்றியையும் ஈட்ட முடியாமல் பெரும் அழிவுகளையும், அரசியல் பின்னடைவையும் மட்டுமே வழங்கி விட்டு மாண்டு போனமையானது பயங்கரவாதத்தின் முடிவு என்பதாகவே அர்த்தப்படுத்தக் கூடியதாகும்.

புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலங்காலமாக வாழ்ந்த நிராயுதபாணிகளான பிறிதொரு சமூகமான முஸ்லிம்களை தமது வாழ்விடங்களிலிருந்து துரத்தியதும், கொன்றொழித்ததும் புலிகளின் பயங்கரவாத நிலைப்பாடேயன்றி வேறில்லை.

போராட்டத்தில் யார் எதிரி, யார் நண்பன் என்ற வரையறை எதுவும் இல்லாமல் செயல்பட்ட புலிகள் அப்பாவி சிங்கள மக்களை பிரதான இலக்காக வைத்து பல்வேறு அழிவுகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களையெல்லாம் குண்டுவெடிப்புகள் மூலம் கொலைக்களமாக மாற்றிய புலிகளின் திட்டங்கள் பயங்கரவாத உபாயங்களன்றி வேறில்லை. 1995 ஜயசிகுறு இராணுவ நடவடிக்கையினால் ஏற்பட்ட பின்னடைவை சமாளிக்க யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு இடம்பெயர்ந்த புலிகள், தமது காவலுக்கு பல்லாயிரம் அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடயங்களாக்கிக் கொண்டு நகர்ந்தனர். அது கூட பயங்கரவாத செயல்பாடுதான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

அண்டை நாட்டு தலைவரான ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் சர்வதேச அளவில் தமது பயங்கரவாத செயல்பாடுகளை விஸ்தரித்த புலிகள், உலக அரங்கில் கடுமையான கெடுபிடிகளுக்கு உள்ளாகினர். பல்வேறு நாடுகளும் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி தடை செய்தன.

இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் அப்பாவி பொதுமக்களை போர்க்களத்தில் மனித கேடயங்களாக பாவித்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கான கடைசி முயற்சிகளையும் மேற்கொண்ட புலிகளை வரலாறானது விடுதலைப் போராளிகள் என்ற அடைமொழி கொண்டு அழைக்க விரும்பாது என்பதே உண்மை.

இறுதியாக, தமிழ் மொழியைப் பேசுகின்ற எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர்  முடிவடைந்து 10 வருடங்களை கடந்து விட்டோம். இந்தப் போர் எங்களை மாற்றியமைத்து இருக்கின்றதா ? ஆம் என்றால் எப்படியாக ? இல்லையென்றால் எந்தவிதத்தில் ?

போர்ச் சூழல் எவ்வாறு உருவானது, போரை தொடுத்தவர்கள் யார், போரின் நேரடியான பங்குதாரர்கள் யார், போருக்கு நீண்ட காலமாக ஆதரவு வழங்கியவர்கள் யார், போரை எதிர்த்து நின்றவர்கள் யார், செய்வதறியாது போர் வாழ்வினுள் சிதைந்தவர்கள் யார், போர் மூலம் அதிகார நிறுவனத்தன்மையை உருவாக்கிக் கொண்டவர்கள் யார் போன்ற விடயங்களில் தெளிவான புரிதலைப் பெறாமல் இதற்கு பதிலளிப்பது சிரமமாகும்.

தமிழ் பிரிவினைவாதம் என்பதன் தோற்றமும் அதன் இறுதி நிலையும் பற்றிய விரிவான பார்வை இல்லாமல் போர் கட்டவிழ்க்கப்பட்ட ஒன்றா அல்லது தவிர்க்க முடியாமல் உருவானதா என்ற கருத்துகளுக்கு பதில் தேட முடியாது.

சுதந்திரத்திற்குப் பிறகான இலங்கையின் அரசியல் சூழலில் உருவான தமிழ் அரசியல் நெருக்கடியானது ஆரம்பத்தில் பிரிவினைவாதமாக உருப்பெற்றிருக்கவில்லை. வளங்கள் மீதான பங்கிடுதலில் ஏற்பட்ட பாரபட்சங்களும் அதனை நிறைவேற்றுவதற்கு தடையான அதிகாரத்திலும் உருவான நிருவாகச் சிக்கல்களே அரசியல் பிரச்சினைகளாக எழுந்தன. சுதந்திரத்திற்கு முந்திய இலங்கையின் அரச நிருவாக சேவைகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தவர்களே நிறைந்திருந்தனர். சிங்களவர்களின் வீதத்தோடு ஒப்பிடுகையில் இது அதிகமாகும். சுதந்திரத்திற்குப் பிறகான காலங்களில் இது சீர்படுத்தப்பட்ட போது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக போராட்டங்கள் தொடங்கின. ஆரம்பத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை, மொழிப் பிரச்சினை, இட ஒதுக்கீடு என முன்னெடுக்கப்பட்ட பிரச்சினைகள் காலப்போக்கில் தனிநாட்டுக் கோரிக்கையாக வளர்த்தெடுக்கப்பட்டு வன்முறை வடிவம் பெற்றது. அதன் பிறகு கெரில்லா போர், மரபு ரீதியான போர் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்ட பிரிவினைவாதம் இறுதியாக 2009-ல் மாபெரும் அழிவுடன் முடிவுற்றது.

அந்தப் போர் எவ்வாறு உருவாக்கம் பெற்றது. அதன் பின்னால் இருந்த மறைவான அரசியல் நோக்கங்கள் என்ன என்பதையெல்லாம் தமிழர்கள் சிந்திக்கத் தவறினர். கடந்த நூற்றாண்டில் உலகமெல்லாம் தொடங்கிய விடுதலைப் போராட்டங்களில் பெரும்பாலானவை தீர்வுகளுடன் நிறைவு பெற்றாலும் தமிழ் பிரிவினைவாதம் அழிவுகளுடன் முடிவுற்றதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். உண்மையில் 1987 ல் தமிழ் பிரிவினைவாதப் போர் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகான யுத்தம் தமிழ் மக்களை நிரந்தரமான அழிவுக்கும், பின்னடைவுக்கும் இட்டுச் செல்வதற்கான யுத்தமே என்பதை எங்களைப் போன்ற தரப்பினர் கூறிய போது பலரும் அதை ஏற்கவில்லை. 2009 ற்கு பிறகுதான் அது புரிந்தது.

தமிழர்கள் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளில் இருந்து இதுவரைக்கும் பாடங்களைக் கற்றிருக்கிறார்களா எனும் கேள்வி மிக முக்கியமானது. அவர்கள் 1980 களுக்கு பிறகு ஏதாவது காலகட்டத்தில் பாடங்களைக் கற்றிருந்தால் இன்றுள்ளதைப் போன்றதொரு நாசமான நிலையை அடைந்திருக்க வாய்ப்பில்லை.  1987-ல் கிடைத்த தீர்வின் கணிசமான பகுதியைத்தான் நாம் இன்றும் கூட அனுபவிக்க முடிகிறது. இதை முறையான ஜனநாயக அரசியல் போராட்டங்களூடாக வளர்த்தெடுக்காமல் நிரந்தர யுத்தத்தை தெரிவு செய்ததே தமிழர்களின் மிகப்பெரும் தவறாகும். அரசியல் வரலாற்றின் முக்கியமான தருணங்களில் தமிழ் தலைமைகள் விடுகின்ற தவறுகளால் இங்கு நிரந்தர அமைதி பாதிப்படைந்தது உண்மை. தமிழ் மக்களை வழிநடத்திய தலைமைகள் மக்களின் மனங்களில் நியாயமான அபிலாஷைகளை விதைக்காமல் இனவிரிசலையும் அவநம்பிக்கைகளையும், அதீத கனவுகளையும் குரூர அரசியல் ஆசையாக விதைத்ததின் விளைவே இங்கு அமைதி திரும்பாமல் போனதற்கு காரணமாயிற்று. இந்த வெகுஜன உளவியல் இன்றுவரை தொடர்வதுதான் கொடுமையானது.

தமிழ் பிரிவினைவாதமானது முதலில் சிங்கள அதிகார வர்க்கத்தை எதிரியாக நோக்கியது. பிறகு சிங்கள பொதுமக்களையும் எதிரியாக உருவகித்துக் கொண்டது. இதனால் போராட்ட நியாயங்கள் மாசுபட்டன. பின்னர் முஸ்லிம் சிறுபான்மையினரையும் தமது அக்கறைகளுக்குள் இருந்து வெளியேற்றியதன் மூலம் ‘ஒடுக்கப்படும் சமூகம் ஒன்றின் போராட்டம்’ எனும் அந்தஸ்தை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று வெறுப்புடன் அணுகும் நிலை தோன்றியது என்பதே உண்மை.

இறுதிப் போருக்குப் பிறகு சிறுபான்மைச் சமூகங்கள் ஒருங்கிணைந்து தமக்கான அரசியலை முன்னெடுப்பதே பாதுகாப்பானது என்ற நிலை இருந்தும் அதை நிகழ விடாமல் தடுப்பதற்கான அரசியல் திட்டங்களை அதிகார வர்க்கம் அமுல்படுத்தி வருகிறது.

இந்த அடிப்படையில் நோக்கினால்:

// எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் // என்ற வார்த்தையானது நியாயமற்ற அர்த்தங்களைக் கொண்டதாகவே அமையக் கூடும்.

முஸ்லிம் மக்கள் போரை எக்காலத்திலும் விரும்பியிருக்கவில்லை. அதேநேரம் எந்தவொரு இனக்குழுவோடும் அரசியல் ரீதியாகப்  பகையையும், வெறுப்பையும் கொண்டிருக்கவுமில்லை என்பதே உண்மை. அதனால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்களை தமிழர்களுக்கு எதிரான இராணுவத்தின் யுத்தத்தோடு ஒன்றாக நிரல்படுத்தி அர்த்தம் கற்பித்து விட முடியாது.

ஆனால், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் என்பது அவர்களின் பெரும்பாலான தரப்பினரால் விரும்பி ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு சிங்கள அரசோ அல்லது இராணுவமோ தமிழர்கள் மீதான போரை தாமாகவே கட்டவிழ்த்து விட்டதாக உறுதியாக கூறவும் முடியாது. அது நீண்ட விவாதத்துக்குரிய விடயமாகும்.

இலங்கையில் சிறுபான்மைகள் என்ற அடிப்படையில் தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்துணர்வோடு ஒருங்கிணைந்து செயல்படுவதன் ஊடாகவே ஆக்கபூர்வமான வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது வெளிப்படை. இது போர் காலத்திலும் தமிழ் ஆயுதக்குழுக்களின் அதிகார மமதையினால் தவற விடப்பட்டது. இன்று  போருக்கு பிந்திய சூழலிலும் மிதவாத அரசியலின் சமூக விரோத சூழ்ச்சிகளினால் தவிர்க்கப்படுகிறது. சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பது ஏதோவொரு வகையில் தேர்தல் அரசியலுக்கு பயன்படும் காரணியாக இருப்பதனால் இதனை சரி செய்வதற்கு அரசியல்வாதிகள் முயற்சிப்பதில்லை.

தமிழ் அரசியல் தரப்புகள் எப்போதும் முஸ்லிம்களை மனம் திறந்த நிலையில் அனுசரித்த வரலாறுகளில்லை. வளங்களை சமூகங்களுக்கு இடையில் பங்கிடுவதில் சிங்களவர்களைப் போல தமிழர்களும் பாரபட்சம் காட்டுவதாக முஸ்லிம்களுக்குள் அதிருப்தியுண்டு. அதேபோல முஸ்லிம்கள் மீது விசுவாசம் கொள்வதில் தமிழர்களுக்கு சந்தேகங்களுமுண்டு. இவையனைத்தும் அரசியல் நோக்கங்களால் உருவாக்கி வளர்க்கப்படுபவை. இவைகளைக் கடந்துதான் நமக்கான எதிர்காலம் இருக்கிறது.

மிஹாத்- இலங்கை

மிஹாத்
மிஹாத்
கோமகன்
கோமகன்

கோமகன்-பிரான்ஸ்

(Visited 296 times, 1 visits today)