ஆசிரியர் குறிப்பு

வணக்கம் நடு வாசகர்களே ,

நடுவின் 25-ஆவது இதழின் ஊடாக உங்களை சந்திப்பதில் பேருவுகை அடைகின்றோம். வாசிப்பும் எழுத்தும் நவீன இலத்திரனியல் ஒழுங்கின் தாக்கத்தினால் அருந்தலாக இருக்கிறது என்றும் எல்லோரும் சமூகவலைத்தளங்களையே நாடுகின்றார்கள் என்றும்  காட்டமான குற்றச்சாட்டுகள் இங்கு உண்டு. ஆனால், அதே நவீன இலத்திரனியல் ஒழுங்கில் எம்மை நாமே  தகவமைத்துக்கொண்டு முன்னேறும் பொழுது இந்தக் குற்றச்சாட்டுகள்  அனைத்தும் வலுவிழக்கின்றன என்பதற்கு தொடர்ச்சியானதும் குறித்த நேரத்திலும் வெளியாகிய நடுவின்  25 இதழ்களும் கண் முன் சாட்சிகளாகின்றன. ஏனெனில் வாசிப்பின் வடிவங்கள் தான் மனுகுல வரலாற்றில் மாறியிருக்கின்றனவே ஒழிய வாசிப்பு முற்றாக நின்றுபோய் விடவில்லை. ஆரம்ப காலத்தில் செய்திகளை குகைகளின் ஓவிய வடிவில் வாசித்த நாங்கள்,  தொடர்ந்து ஒலி வடிவில் மாறிப், பின்னர் தொழில் புரட்சியின் வழியாகக் காகிதத்திற்கு மாறி, மேலும் அச்சு வடிவில் முன்னேறிப்பாய்ந்து ,இன்று பைனரி வடிவில் வந்து நிற்கின்றோம். ஆகவே இந்த வாசிப்பு தொடரும் பொழுது எழுத்தும் தானாகவே வரிவடிவங்களில் தனது ஏற்ற இறக்கங்களுடன் அதனைப் பின்தொடருகின்றது.

ஆரம்பகாலத்தில் ஒரே நேரத்தில் வெளியாகிய அச்சு பத்திரிகைகள் மற்றும் இணைய சிற்றிதழ்களுடன் புதிதாக நாம் சேர்ந்து எதைக்கிழித்து விடப்போகின்றோம் என்றவொரு தயக்கம் எம்மிடையே இருந்தது. அத்துடன் பெரும் ஆளணி அடுக்குகளும் பின்புலங்களும் எமக்கு இல்லாது இருந்தது. ஆகவே துணிவை மட்டுமே முதலாக்கிக் கொண்டு நடுவிற்கான ஆணிவேரை பதியம் செய்தோம். நாங்கள் எப்பொழுதும் ‘நடு குழுமம்’ என்றே எம்மை முன்நிறுத்தி வந்திருக்கின்றோம். அப்பொழுதெல்லாம் நாங்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றோம். ஒரு பெரிய விருட்சத்தின் நிழலில்  பலதரப்பு மக்கள் இளைப்பாறியும் அந்த விருட்சத்தில் பலவிதமான பறவைகள் வாழ்ந்து வலசை செல்வதும், மீண்டும் அவை  வருவதும், தமது வரவினால் அந்த விருட்சம் பல்வேறுபட்ட ஒலிகளினால் திளைத்திருப்பதும் தான் வழமை. யாரும் அந்த விருட்சத்தின் ஆணிவேரையும் பக்க வேர்களையும் ஆராய முற்படுவதில்லை. ஒரு விருட்சத்திற்கு அதன் தாங்கிகளான வேர்கள் முன்னே துருத்திக்கொண்டு இருந்தால் பார்பதற்குச் சகிக்கத் தான் முடியுமா? அதே போல் நடு குழுமமாகிய நாம் எம்மை துருத்திக் கொள்ள விரும்பவில்லை. மாறாக, நடுவிற்கான விளைச்சலை மட்டுமே உங்கள் முன் தருவதில் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றோம்.

சமகாலத்தில் நடு இணைய சிற்றிதழ் ஒன்றே தமிழ் எழுத்துப்பரப்பில் தொழில்நுட்பத்திலும் வடிவமைப்பிலும் குறித்த நேரத்தில் ஒழுங்காகத் தனது இதழ்களைக் கொண்டுவருவதிலும் முதலிடத்தில் இருக்கின்றது என்பதை அதன் ஒவ்வொரு இதழ் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் 500-க்கும் அதிகமான வாசகர்களைத் தொடுவதன் மூலம் நிரூபணம் செய்கின்றது. அதற்கு எமது வாசகர்களும் படைப்பாளிகளும் மிக முக்கிய காரணமென்றால் இந்த இணைய சஞ்சிகையை நேரிய வழியில் வழிநடாத்துகின்ற தலைமை ஆசிரியரை என்னவென்று சொல்ல ? இந்த 25 இதழ்களிலும் நாங்கள் படைப்பாளிகளில் பாராபட்சம் காட்டவில்லை. தமிழ்த் தேசிய ஆதரவு, மாற்றுக்கருத்து, தமிழகம், மலாயா என்று பல்வேறுபட்ட தளத்தில் இருக்கின்ற படைப்பாளிகளை உள்வாங்கியிருக்கின்றோம். பல இளைய ஓவியக் கலைஞர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றோம். அவர்களது சேவைகளை நாம் இலவசமாகப் பெற்றதில்லை. அவர்களுக்குரிய கௌரவத்தையும் சேர்த்தே வழங்கியிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நின்று சுற்றிக்கொண்டு வாசகர்களைக் கொட்டாவி விட வைக்காது ஒவ்வொரு இதழிலும் புதியவர்களையும் தொழிநுட்பத்தில் புதுமைகளையும் செய்தபடி முன்னேறினோம். நடுவில் வெளியாகின்ற ஆக்கங்கள் தரமானவையா இல்லையா என்பதில் எமது விருப்பு வெறுப்புகளைத் திணிப்புகளாகச் செலுத்தாது வாசகர்களையே அதில் முன்நிறுத்தினோம்.  அத்தகைய எமது நிலைப்பாடுதான் எம்மை இவ்வளவு தூரத்திற்கு வளரச்செய்தது. நாம் எமது இலக்கிய செயற்பாடுகளை சட்டகங்களில் அடைத்து வைத்து ஓரிரு தலைகளுடன் பரஸ்பரம் முதுகு சொறிந்து இன்பம் அடைவதை அடியோடு நிராகரிக்கின்றோம். இலக்கிய செயற்பாடு என்பது அனைத்து தரப்பு வாசகனுக்கும் படைப்பாளிக்கும் உரிய ஒரு பொதுவான இயங்குநிலை என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இதுவரை காலமும் காத்திரமான சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்த நாம் வருகின்ற வருடத்தில் மலாயா சிங்கப்பூர் சிறப்பிதழ் ஒன்றும் எமது சகோதர மொழியான சிங்கள மொழிக்கான சிறப்பிதழ் ஒன்றும் கொண்டுவருகின்ற திட்டத்தில் இருக்கின்றோம். நடுவின் 5 ஆவது வருட முடிவில் நடுவில் வெளியாகிய சிறுகதைகளை தொகுத்து வெளியிடுகின்ற எண்ணப்படும் எமக்கு உண்டு என்பதை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். சிறப்பிதழ் தொடர்பான அறிவித்தலை விரைவில் வெளியிடுகின்றோம். இதுவரை எம்மை வழிநடாத்திய வாசகர்கள் படைப்பாளிகள் இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் நாங்கள் என்றுமே கடமைப்பட்டவர்கள். நன்றி வணக்கம்.

கோமகன் – பிரதம ஆசிரியர்

நடு குழுமம்         

கோமகன்

              

(Visited 247 times, 1 visits today)
 

One thought on “ஆசிரியர் குறிப்பு”

Comments are closed.