மேழி-கவிதைகள்

மேழி

கருவேலம் பூத்துக் குலுங்கும்
மஞ்சள் வரப்பில்
கிழக்குவான் பார்த்து
கையேந்தி நிற்கிறாள் பாட்டி.
விதைப்பிற்குத் தயாராய்
கூடை சுமந்தபடி அம்மா.
தலைக்குமேல் கைகூப்பி
என் குலச்சாமியென
எனைநோக்கி தாத்தா திரும்புகையில்
முட்டிக்கொண்டு வந்த அழுகை
கல்லாய்ச் சமைந்த கறுப்பசாமியை
ஓடிப்போய்க் கட்டிக்கொண்டது.
நழுவி விழுந்த தாத்தாவின் இடுப்புத்துண்டை
கழுத்துமாலையென சூடிக்கொண்டான் தம்பி.
உருமாலையுடன்
மினுங்கும் கைக்கடிகாரம் அணிந்து
அப்பா மேழி பிடிக்க
களைகட்டுகிறது ஏர்.
ஊர் கூடி வேடிக்கை பார்க்கிறது
தேர் மெல்ல திருவிழா காண்கிறது.

0000000000000000000000

உன்னத வயலின்

மருதாணிப் பூக்களின் நறுமணத்தில்
இசை பின்னிக்கொண்டிருந்த
வயலினொன்று
தன்னைத்தானே மென்மையாய்
இசைத்துக்கொண்டிருந்தது.
குருவிகளும்
மருதாணி மரத்தில் வந்தமர்ந்து
அதிகாலைக் கீர்த்தனையை
கீச்சுக்குரலில் பாடத் துவங்கின.
வாத்தியத்தின்
தொடர் வாசிப்புக்கேற்ப
அவைகளும் இடைவிடாமல் பாடின.
பக்கத்து வீட்டுப் பாத்திரமொன்று
பிடி நழுவி, தரையதிர இரைந்ததில்
சிறகசைத்துப் பறந்தன குருவிகளெல்லாம்.
தந்திகள் அறுபட்டு
தற்காலிக ஊமையானது
ஓயாதிசைத்த உன்னத வயலின்.

000000000000000000000

மீளவியலா மஞ்சள்
அவரை விதை ஒண்டிக்கொள்ளும்
அவரைத்தொலிபோல்
அந்த விடுதியறை.
ஒட்டிப்பிறந்த பிறவிகள்போல்
நாங்கள் 6 பேர்.
உடல் மஞ்சலேறிய குழந்தையென
அழுதுவடியும் அதன் சுவர்கள்
பார்க்க மிகவும் பரிதாபகரமானவை.
அந்த மங்கலுக்குள் நுழைந்ததும்
புருபுருவென சூழ்கிறது
ஒருவித மயமயப்பு .
கூடவே, ஒளிரும் தீக்கொளுந்து நிற
சீரோ-வாட்ஸ் பல்பு.
போர்வையைத் தலையோடு
போர்த்துக்கொண்டு
விடியலுக்கும், இரவுக்குமான
நிறங்களைத் தேடியபடியிருக்கிறேன்
முடிவிலியென.

00000000000000000000000

சுவர்ப்பல்லி

மழை ‘சோ’ வென இரைந்துகொண்டிருந்த
அந்தியில்தான்
எதிர்வீட்டின் நிசப்த சுவருடன்
கலவியில் லயித்திருந்தது
விஷமப் பல்லியொன்று.
முயக்கத்தின் அறிகுறியாய்
அவ்வப்போது வாலை மட்டும்
சர்ப்பம்போல் இப்படியும் அப்படியுமாய்
நெளித்துச் சுளித்தது.
திசைதிரும்பிய காற்றானது
திடுதிப்பென சாரல் தெளிக்கவே,
செய்வதறியாது
இங்குமங்கும் அலைமோதிய பல்லி
மேலிருந்து குதிக்கும் நீச்சல்காரன்போல்
தொபக்கென மழைநீரில் குதித்தது.
பின் சொட்டச்சொட்ட சுவரேறிய அப்பல்லியை
கலவியின் உச்சமாய் ‘லபக்’கென விழுங்கியது
அவ் விரிசலுற்ற சுவர்.

மேழி-இந்தியா

(Visited 288 times, 1 visits today)