நைல் நதிக்கரையோரம்-நூல் விமர்சனம்-ஜெயகாந்தன்

நடேசனின் நைல்நதிக்கரையோரம். கைக்கு அடக்கமாக களைத்திருக்கும் போதும் கையில் பிடித்தபடி படுத்திருந்து படிக்கு வசதியான அளவில் வந்திருக்கும் புத்தகம். அதன் உள்ளே பொதிந்திருப்பது எகிப்தின் வியத்தகு வரலாறுகளின் எச்சங்களே!

அவர் ஆரம்பத்தில் கூறுவது போல அது வரலாற்று நூல் அல்ல.பயணக் கட்டுரையும் அல்ல. என்று படிப்பவர்களால் ஒதுக்கிவிட முடியாது. பயணத்தின்போது அவரது அவதானங்களை மட்டுமன்றிப்  பல சுவையான தகவல்களையும் தந்து அசத்தியிருக்கிறார்.

எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது பாடசாலையில் சரித்திர பாடம் கற்பித்த ஆசிரியை பற்றி இப்போது எனக்கு நினைவு வருகிறது. அவருடைய பெயர் யோகமலர்.அவர் சரித்திரப்  பாடத்தைக் கற்பிக்கின்ற நேரத்தில் அதில் வரும் ஒரு சம்பவத்தை விளக்கும்போது பல உப கதைகளைக் கூறுவார், பொறுமையாக அவர்கூறிய அந்த சுவையான சம்பவங்களை எந்தப்புத்தகத்திலிருந்து தருகிறார் என்பதை நான் அப்போது ஆராயாவிட்டாலும், பின் பலதடவைகள் தேடியிருக்கிறேன். சிலவற்றை பாஸ்ஓவர் நிகழ்ச்சிகளில் பேசாத திரைஓவியங்களாக பார்த்திருக்கிறேன். அதன்பின் பத்துக்கட்டளைகள், பென்கர்போன்ற படங்களிலும் ஓடும் புளியம்பழமுமாகப் பல ஐதீகக் கதைகளை அறிந்திருக்கிறேன்.

இவையெல்லாம் எகிப்தின் வரலாற்றுடனும் மதங்களின் வளர்ச்சியுடனும் பின்னியுள்ளது என்ற விடயம் எனக்கு மகிழ்ச்சியைத்தந்தது. சில பல வரலாற்றுப் படிமங்களைக் குறிப்பிடும் ஆசிரியர் அவற்றுக்கான மூலம் எங்கேயுள்ளது என்பதை விபரமாகத்தரவில்லை என்பது குறைதான். ஆயினும், அவர் ஒரு பகுதிக்கான கொப்புநேரியை வெட்டித் திறந்துள்ளார்.அதன் வழியே நாம் அவருடன் கூடிச் சஞ்சரிக்கும் இடங்களில் அதன் அழகை வர்ணிக்க பெரும்பாலும் மறந்து போனவராக மம்மிகளையும் அவற்றின் பூர்வீகங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எகிப்தின் அரச பரம்பரையை விலாவாரியாக விளக்க முயல்கிறார். பல அரசர்கள் அவர்களது காலத்துடன் ஒருதடவையும், வாழ்க்கைமுறையில் ஒருதடவையும், மம்மியின் ஆய்வுகளில் ஒருதடவையுமாக வந்து போகின்றனர்.

கட்டுரையாக வெளிவந்து நூலாக்கம் செய்யப்பட்டது என்பதை அது தெரிவிக்கிறது. என்றாலும் நூலாக்கம் செய்யும் போது கூறியது கூறல் என்ற விதிமுறையை கொண்டிருப்பது நல்லதல்ல.வாசிக்கும் ஓவ்வொருவரையும் உள்ளிழுத்துச்செல்லும் கட்டுரைகள் புத்தகத்தை கீழே வைக்க அனுமதிக்கவில்லை. பரபரப்போ கிளர்ச்சியோ இல்லாமலே வாசகரைக் கட்டிப்போட்ட திறமை எழுத்தாளருடைய மிகப் பெரிய வித்தையாக இருக்கிறது. உதாரணமாக முதலாவது கட்டுரையே கட்டுரையின் முடிவை எமக்குத் தெரிவித்தாலும் அதில் சுவாரஸ்யம் குறையவில்லை. அந்த அனுபவம் ஒவ்வொருவரும் எங்காவது கோவில் திருவிழாவிலாவது அனுபவித்ததாக இருப்பதால். சம்பவத்தின் இறுதியில் குற்றவாளிகள் இவரைக்குற்றவாளியாக்கும்போது வாய்விட்டுச் சிரித்து விட்டேன் . இது ஒரு சின்ன சம்பவம் மிகைப்படுத்தல் இல்லை என்றாலும் மனதைத் தொட்டது.

கெய்ரோ பற்றிய அறிமுகமும் பண்டைய எகிப்திய மக்களின் வாழ்வும் பின்னர் வரலாற்றுத்தடங்கள் நீக்கப்பட்டமையும் சாதாரணமாக அந்நியப்படையெடுப்புகளில் நடப்பவைதான். ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த ரோம சாம்ராஜ்ஜியமும் எகிப்து என்பவையும் எப்படி அழிக்கப்பட்டன என்பதுடன், படையெடுப்புகளின் வகைகள் என்பன விபரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒரு தொகுப்பு ஒழுங்கு காணப்படவில்லை. மன்னர்களுடைய மம்மிகளை வைத்து அதன் பின்னணியிலேயே இந்தப்படையெடுப்புக்ள் வருவதால் கால ஒழுங்கைக் காணவில்லை. .

000000000000000000000000000000000000000

ஜெயகாந்தன்நூலாசிரியர் முதலே சொல்லிவிட்டார், “நான் வரலாற்றையோ அல்லது பயணக்கட்டுரையோ எழுதவில்லை என் அனுபவங்களையே பதிவு செய்கிறேன்” என்று. அவருடைய அனுபங்களாக, அடிக்கடி மனைவியை கடைத்தெருவுகளில் தொலைப்பதும்  விடுதியில் புகைப்பதும் மதுபானப்போத்தல்களை லஞ்சம் கொடுத்துக் காப்பாற்றுவதுமாக சிற்சில இடங்களில் வந்தாலும் அவர் மிக்கரசனையுள்ளவர் என்பதை அவரது கலைத்தேடல்களிலும் ஆங்காங்கே காணக்கிடைத்த படங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கீசா பெரிய பிரமிட்டை கட்டவும் லக்சர் கோவில் என்பவை கட்டி முடிக்க இயந்திரங்கள் இல்லாத அந்தக்காலத்தில் மனிதர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என்று அவர் வியந்ததற்கும், நான் தஞ்சைப் பெரிய கோவிலைப்பார்த்து நான் வியந்ததற்கும் எவ்வித வேறுபாடும் இருக்காது.

ஆசிய நாடுகளிலிருந்து பெருமளவு யானைகள் மேல்நாடுகளுக்கு திறையாகவும் விலையாகவும் பெற்றுச் செல்லப்பட்டன. இவையும் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன. தஞ்சைக்கோவிலுக்கான கோபுரத்திற்கு திருச்சியிலிருந்து சாரம் அமைக்கப்பட்டதாகவும் ஒவ்வொரு கிராம மக்களுக்கு ஒருநாள் முறை வைத்து கற்றூண்களை மேலேற்றியதாகவும் தஞ்சையில் ஒரு பெரியவர், அவரது பாட்டனார் கூறியதாகச் சொன்னார். எனக்கு அந்தக்கதை இந்த தூண்கள் பற்றிய கதையிலும் நினைவுக்கு வருகிறது.

 

எந்த நாட்டையும் தன்வசப்படுத்தும் அந்நியர்கள் அந்நாட்டின் பண்பாடு நாகரீகம் கலாச்சார விழுமியங்களை மாற்றிவிட்டு தமது கலாச்சாரங்களை அங்கு விதைப்பது வரலாற்று உண்மை. இன்றும் எமது ஆண்கள் அணியும் ஆடைகளுடன் பேசும் மொழியிலும் மட்டுமல்ல எமது தனிப்பணபாட்டு நிகழ்ச்சிகளில்கூட பிரித்தானியா பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ புகுந்திருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இதே பண்பாட்டிழப்பு எகிப்திலும் வருகிறது. எப்படியோ அவர்கள் தம் பூர்வீகத்தைக் காப்பாற்ற மம்மிகளை பாதுகாக்கவும் கலைப்படைப்புகளைக் காப்பாற்றவும் அரும்பாடுபட்டிருக்கிறர்கள் என்பதை நூலாசிரியர் மிகக் கவலையோடு பரிமாறுகிறார்.

இராம்சி துட்டகாமன், நெபிரிட்டி, சீசர், கிளியோபாட்ரா இவர்களுக்கு முன் சலாடினின் தந்திரம், சாம்சனின் தலைமுடி என்பவை இன்றைய தலைமுறை அறியாத கதைகள் என்பதில் சந்தேகமில்லை. மதம் தொழில்நுட்பம், பொறியியல், மம்மியாக்கம் என்பவை எகிப்திலிருந்துதான் தோற்றம் பெற்றன என்கிறார் நூலாசிரியர் .ஐந்தாம் நூற்றாண்டின் சரித்திர நூலாசிரியரான  கெரடோடஸ் என்பவரை பின்வந்த வரலாற்றாய்வாளர்கள் முழுமையாக ஏற்கவில்லை என்றாலும் இங்கே அவருடைய ஆய்வுகள் பல முன்னோக்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பது நூலாசிரியரியரின் திறமையான ஆய்வு முயற்சிகளுக்கு(முயற்சிகளுக்கு மட்டும்) சான்றாகிறது.

 

மண்மூடிப்  போன சரித்திரச் சான்றுகளைக்  கண்மூடிப்போக மறைத்துவிடும் பண்பாடுள்ள அரசுகள் மத்தியில், எகிப்தின் மண்மூடிப்போன கோவில்களை தோண்டியெடுக்கும் முயற்சிக்கு பெருமளவு செலவும் முயற்சியும் நடப்பதை கேள்விப்பட அந்த மக்கள்மீது ஒரு அளப்பரிய பாசம் ஏற்படுவதை உணரமுடிகிறது. அவர்கள் தங்கள் வரலாற்றை மட்டும் மீட்கவில்லை, உலகுக்கேயுரிய பழைமையான வரலாற்றை உலக அதிசயத்தை காப்பவர்களாகிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்களுடன் வாழ்ந்த செல்லப்பிராணிகளுக்கும்கூட மம்மிகள் இருப்பது விநோதம்தான்.

00000000000000000000000000000000

ஜெயகாந்தன்காலத்தால் அழியாத பதிவு நடேசனின் நைல் நதிக்கரையோரம். என்றாலும் அங்கு செல்லவேண்டும் என விரும்புவோருக்கு அது வழிகாட்டவில்லை.உல்லாசப்பயணம் செல்வதும் நாட்கணக்கில் பழைமையான இடங்களை தரிசிப்பதும் உலகம் முழுதும் ஏராளமான மக்களால் செய்யப்படுவதுதான். அதை எல்லோரும் பதிவு செய்து மற்றவர்களுக்கு அளிப்பதில்லை. அப்படி அளித்தாலும் பெரும்பாலும் தம்மைப்பற்றிய பிரலாபங்களையே பெரிதும் கொட்டி நிரவுவார்கள். இங்கே அதற்குமாறாக பயணம் செய்யும் இடங்களின் வரலாறு, அதுபற்றிய  ஐதிகக் கதைகள்  அங்கு நடந்த படையெடுப்புக்கள், ஆட்சியாளர்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் பல மதங்களின் அடிவேரையும் அவற்றின் பரம்பற் காலத்தையும் இதிகாசங்களை வைத்து அலசுகிறார். இவற்றின் சாராம்சங்களிலிருந்து இவர் பெறும் தெளிவற்ற ஒரு நிலையை வாசகர்களிடம் திருப்பிவிடும் கட்டுரையாக பாலஸ்தீனிய இஸ்ரேலிய முரண்பாட்டையே சகோதர முரண்பாடா என்ற கேள்வியை எழுப்பிவிடுகிறார். அதற்கு அவர் மதங்களில் தோற்றுவாய்களிலிருந்து ஆதாரத்தை எடுக்கிறார். நம்புவதும் நம்பாமல் போவதும் அவரவர் உரிமை

இந்த நூலில் தர்க்கிப்பதற்கும் நிறைய விடயங்கள் இருக்கிறது. எல்லைகடந்து போய்விட்ட மம்மிகளைப்போல விரவி  நிற்கும் சந்தேகங்களாக மம்மிகள், கற்பகாலமுதல் உருவான மதங்கள் பற்றிய ஐதீகங்கள் என இட்டு நிரப்பிய எதுவும் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் என்பதற்கான உசாத்துணைகள் இல்லை.

எழுதப்பட்ட வரலாறு இல்லாத ஒரு இனமோ அல்லது நாடோ தனக்கான வரலாற்றை அங்குள்ள பழைய கிராமங்களில் வழக்கிலுள்ள நாட்டாரால் வழிவழி பேசப்படும் கதைகளை வைத்து உருவாக்கிக் கொள்ளலாம். அதுவே சாத்தியமானதும் சரியானதுமாகும் என்று வரலாறு  அறிஞர்களின கூற்றை ஏற்று இந்நுலையும் ஏற்கலாம் எனபதைவிட, நல்லதொரு எழுத்துநடை, தெளிவான பகுப்பாக்கம், இறுதிவரை சுவை குன்றாத விவரணம், இந்த நூலின் ஆசிரியர்க்கு இந்த நூல் படைக்கப்பட்டதின் திருப்தியை வெற்றிகரமாக வழங்கியுள்ளது என்பதுடன் வாசகருக்கும் திருப்தியான ஒரு நாட்டில் உலவிய மகிழ்ச்சியை தருகிறது என்பதே உண்மையாகும்.

நைல்நதிக்கரை ஏழில்மிகுந்தது மட்டுமல்ல வளம் மிகுந்ததுமாகும். என்பதை ஒரு பக்கப்பாடாக அள்ளித்தரும் நூலுக்காக நடேசனை பாராட்டலாம்.

ஜெயகாந்தன்-இலங்கை    

(Visited 186 times, 1 visits today)
 
இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016

சாவை நோக்கி -சிறுகதை-ஜெயகாந்தன்

  “மச்சான் ஆராக்கள் புதுசாய் வந்திருக்கினம்”? “பிள்ளையள் போலை இருக்கு. பொறு சாப்பாட்டுக்கார அப்பா வரட்டும்.” யாழ் செல்லும் படையணியைச் சேர்ந்த இந்த வாலிபர்கள் தமக்குள் குழம்பி ஒருவரையொருவர் குழப்பித் […]