சாவை நோக்கி -சிறுகதை-ஜெயகாந்தன்

 

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 “மச்சான் ஆராக்கள் புதுசாய் வந்திருக்கினம்”?

“பிள்ளையள் போலை இருக்கு. பொறு சாப்பாட்டுக்கார அப்பா வரட்டும்.” யாழ் செல்லும் படையணியைச் சேர்ந்த இந்த வாலிபர்கள் தமக்குள் குழம்பி ஒருவரையொருவர் குழப்பித் தடுமாறிக்கொண்டிருந்த விடயமானது,

முன்னொருபோது நிறைந்த மக்களுடன் கலகலப்பாக இருந்த அந்த நகரம்பின்னொருபோது இலங்கைப்படையினரின் பிரவேசத்தால் பொலிவிழந்து அவர்கள் காலடியில் வீழ்ந்துபட்டது. ஆயினும் பினொருபோது தமிழர்படையெடுத்து அப்படைகளைத் துவம்சம் செய்து அத்திடலினின்றும் விரட்டியடித்தனர். அதன்போது நூற்றுக்கணக்கான படையினர் இருதரப்பிலும் உயிரிழந்தனர்.

மழை விட்டபினாலும் மரங்கள் நீரைத்தெளிப்பது போல, இந்தப் போர் முடிந்து போனாலும் மக்கள் அங்கு குடியேற அச்சப்பட்டனர். காரணம் வில்லும், வேலும், வாளும், ஈட்டியும் போர் செய்த காலம் போல, வெடிப் பொருட்களால் நடத்திய போர் அமைந்ததில்லையாகையால் எறிகணைச்செலுத்திகளும், சன்னங்களும், கண்ணிகளும், ஆங்காங்கே மண்ணுள் மறைந்து கிடந்து தமது சகாக்களின் எதிரிகளை பழிவாங்கத் துடித்தன.

இப்போது அம்முல்லைத்தீவுத்திடலை கைப்பற்றிய தமிழர் படை அவற்றை தேடிவெளியே எடுத்து அழிப்பதில் ஈடுபட்டிருந்தது. அதேசமயம் சிலபல இரகசிய வேலைகளுக்கான பயிற்சிப் பாசறையாகவும் இந்த இடம் பயன்பட்டது.

பொதுவாகவே இராணுவம் நிலை கொண்டிருந்த யாழ்ப்பாணத்துக்குள் வேலை செய்வதற்காக, ஆண்களே பயிற்சி பெற்று வந்தனர். இந்தப்பெண் வாடையே வீசாத தீவுத்திடலில் நேற்றைய முன்தினம் கைவிடப்பட்ட ஒரு வீட்டில் வந்து இறங்கியது ஓர் மகளிர் படையணி. {மேலே நடந்த உரையாடலானது குறித்த மகளிர் படையணி பற்றியதாகும்.}

0000000000000000000000

காலைச்சூரியனின் கதிர்கள் வரமுன்பே அதன் ஒளி நிலத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருந்தது. பூமி தன்னைக் கிழக்கு நோக்கி உழட்டி சூரியனுக்கு ஒத்துழைத்தது. தீவின் கடற்கரை கிழக்கே அமைந்திருந்ததால்……….வெண்ணிற ஒளிக்கதிர்கள் கடல் நீரின் அந்தத்தில் ஆரவாரமில்லாது மிதந்து உயர்ந்தன.

பிள்ளைகள் இருள் விலக முன்னரே காலைக்கடன்களை முடித்து விட்டு மைதானத்தில் வரிசை கட்டினர்.

“மச்சான் அக்காக்களடா………….”

“என்ன விசயமாம்………”

“எங்கடை பயிற்சிதான் மச்சான் …….”

“அய்யோ ……இதுகளுக்கு என்ரா இந்த வினை……… யாழ்ப்பாணத்துக்க போய் வந்தவங்கள் சொன்னதைக் கேட்டா………”

“நாங்கள் ஆம்பிளையள், ஜட்டியோடையும் ஓடிடுவம். இதுகள் என்ன செய்யுங்கள்……?”

இவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருப்பதை கிணற்றடியில் பல் விளக்கிக் கொண்டிருந்த செல்வி கேட்க நேர்ந்தது.

“யாராக இருக்கும் …..?” வேலிப்பொட்டைப் பெரிதாக்கி எட்டிப்பார்த்தாள்.

வெண்ணிலவன்………..கூடவே கண்ணன். அவள் எதுவும் பேசாமல் முகம் கழுவி விட்டு வரிசைக்கு வந்தாள். பயிற்சி ஆசிரியை வரிசையின் முன் வந்து நின்றாள்.

“வணக்கமக்கா ……..” பிள்ளைகள் குழுவாகக் குரல் கொடுத்தனர்.

“வணக்கம் ” என்றாள் சிவகலா. நாலாவது பயிற்சி முகாமில் பயின்றவள். கூடவே மாதவி.

“உங்களுக்கு தினமும் காலமை ஐஞ்சு மணிக்கு பயிற்சி ஆரம்பமாகும். ஒன்பது மணிக்கு காலை உணவு. பிறகு ஆயுதப்பயிற்சி வகுப்பு. மீண்டும் பதினோரு மணிக்குப் பயிற்சி. மத்தியான உணவுக்குப் பின் சிறப்புப் பயிற்சி. அதன் பின் இரவுப் பயிற்சி.

“பயிற்சி கடுமையாய் இருக்கும் ……………” என்றவள் ஒவ்வரு பெண்ணின் முகத்தையும் ஊடுருவிப் பார்த்தாள். பின்னர் ,

“இப்பவும் திரும்பிப்போக நினைக்கிறவை போகலாம்.போய் உங்கடை பழைய வேலைகளைப் பார்க்கலாம்.”

அடர்த்தியான மௌனம் நிலவியது. அதன் பின் பயிற்சி நடைபெறும் மைதானத்தை விட்டு வீதிக்கு வந்தனர். மூன்று வரிசையில் ஒருவர் பின் ஒருவராக முப்பத்தியாறு பேரும் நின்றனர். அனைவருக்கும் முன்னே மாதவி நின்றாள்.

சிவகலா தன் கழுத்தில் தொங்கிய ஊதலை எடுத்து ஊதினாள் “குய்ய்ய்ய்………………….”

மாதவி ஓடத்தொடங்கினாள். ஏனையோரும் அவளைத்தொடர்ந்து ஓடத்தொடங்கினர். அதிக வேகமில்லாமலும் மிக மெதுவாகவும் இல்லாமல் சுமார் ஒருமணிநேரமாக மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் திடீரென வேகமெடுத்தனர். இறுதிச் சுற்று வரும்பொழுது “லாஸ்ட் ரவுண்ட் ஃபாஸ்ட் ………”என்ற சிவகலா மாஸ்டரின் கூச்சலே அந்த வேகத்துக்குக் காரணம்.அனைவருமே அடிப்படைப் பயிற்சி எடுத்தவர்கள் தான். அதைவிடவும் இவர்கள் பருவகாலப் பயிற்சிக்காகவும் சென்று வருபவர்கள்தான். அதனால் பயிற்சி பற்றி எல்லோருமே தெரிந்து வைத்திருந்தனர். எனினும் காலை உணவுக்குப் பின்னர் அவர்களுக்காக சிறு சிறு மணல் மூட்டைகள் கட்டி வைக்கப் பட்டு இருந்தன. அவற்றை வேகமாகத் தூக்கி முதுகில் போட்டவாறே ஓடினார்கள். இது புதிதுதான் களைப்பில் நாக்குத் தள்ளியது. “ரண்” என்றதும் ஓட ஆரம்பித்து நூறு மீட்டர் செல்ல “பொஸிசன்” என்று கட்டளை வர நிலத்தில் விழுந்து நிலையெடுக்க, மீண்டும் “ரண்” என்றதும் மணல் மூட்டையைத் தூக்கியவாறே ஓடவுமாக இடுப்பு ஒடிந்து போனது போன்ற வலி. மதிய உணவின் பின் இரண்டு மணித்தியாலம் ஒய்வு என்றாள் பயிற்சி ஆசிரியர்.

“கவனம் ஓய்வுதானே எண்டிட்டு படுத்திடாதையுங்கோ. எப்பவும் எதிரி தாக்குவான் ………”

00000000000000000000000

சிவகலா மாதவியுடன் அவர்களுடைய விடுதியை நோக்கி நடந்தாள்.

தமது முகாமுக்கு ஓடிய பிள்ளைகள் ஆங்காங்கே பொத்துப் பொத்தென விழுந்து படுத்தனர். குழுத்தலைவி செல்வி அவர்களைக் கண்டிக்க வேண்டியவள், அவளும் ஓரிடத்தில் சோர்ந்து அமர்ந்தாள். உணவு வந்தது. கூடவே வெண்ணிலவனும் தீபனும் வந்தனர்.

“அக்கா ………..ஏனக்கா உங்களுக்கு இந்த வேலை, நீங்களெல்லாம் அங்கே நிண்டு பிடிக்கேலாது.” என்ற தீபனைக் கோபத்தோடு பார்த்த செல்வி

“அண்ணை …….. பொம்பிளையள் எண்டதை இன்னும் எத்தினை நாளைக்கு காவித்திரியப் போறியள்?”

” அக்கா …….. சாப்பாடே கஸ்டம், தங்கிடம், இனி குளிப்பு முழுக்கு ………… சனம் பாவமக்கா ……..”

“அண்ணை எங்களிலை நம்பிக்கை வைச்சுக் கேட்டிருக்கிறார். நாங்களும் முடியுமெண்டுதான் வந்திருக்கிறம்”.

“சரி அக்கா ………அப்ப வாறம்”. அவர்கள் போனதும் அனைவரும் உணவை மொய்த்தனர். கொண்டற்கடலை காலை உணவு. அது எதுவோ உணவை வெறுத்தால் உடல் முற்றாகப் பலவீனமாகி விடும். பிறகு பயிற்சி சண்டை எல்லாம் கனவாகிப் போகும்.

பின்னேரம் மூன்று மணிக்கு ஆயுத சம்பந்தமான வகுப்பு. பல தெரியாத புதிய ஆயுதங்கள் பற்றிய விளக்கங்கள் தந்தனர். மீண்டும் ஆறரைக்கு வரிசை கட்டிய பின் அவரவர் துப்பாக்கிகளுடன் ரோந்து செல்லும்படி பணிக்கப் பட்டனர். கண்டிப்பாகப் பாதைகளை பயன்படுத்தக் கூடாது. அதேசமயம் பற்றைகளையும் நீர் தேங்கி நிற்கும் குட்டைகளையும் ஓசையின்றி இறங்கிக்கடக்க வேண்டும்.

“மூவ் …………..” ஆணையைத் தொடர்ந்து ஓடிய செல்வியின் குழு ஒரு கழிவு மோட்டையில் இசகு பிசகாக இறங்கியது. “பொஸிசன்” மோட்டையில் நீர் கெண்டைக் காலளவே நின்றது. சட்டென விழுந்தனர். ‘களக்’ ’மளக்’எனச் சத்தம் வரவே செய்தது.

“அப் றண்…………….” எழுந்து காலடி வைக்குமுன் “பொஸிசன்” மீண்டும் தண்ணீர் ஒலியெழுப்பியது.

“சத்தமில்லாமல் விழும் வரைக்கும் உதுக்கத்தான்” என்றாள் மாஸ்டர்.

பதறி விழுந்த செல்வியின் கையில் சேற்றில் எதுவோ “மளக்” கென்று தட்டுப்பட்டது. தேய்பிறைச்சந்திரனின் மெல்லிய ஒளியில் தன்கையில் தட்டுப்பட்ட பொருளை

சத்தமின்றி நீரில் அலசி வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தாள்.

“ஓயாத அலைகள்” இல் செத்துப் போன ஒருவன் சிரித்துக் கொண்டிருந்தான். அந்த சாக்கடை நீரை வாய் தவிர ஏனைய உடலெங்கும் ஊறவைத்துக்கொண்டு அருவெறுத்தாலும் செல்வி தன் குழுவினருக்கு அதைக் காட்டவில்லை.

முகாமுக்குப் போனதில் இருந்து செல்வி வாந்தி எடுத்தாள். இளவழகி, ராதை, மனோ என மேலும் சிலர் அவளோடு சேர்ந்து வாந்தியெடுத்தனர். பின்னர் அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு படுக்க ஆயுத்தம் செய்கையில்……………

“அக்கா சென்றி ………..”என்றபடி வந்தனா வந்தாள். நேரம் இரவு ஒரு மணி.ம் …போ வாறன்” என்றவள் தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்றிக்குப் போனாள்.

கைகால்களை அசைக்க முடியவில்லை. வாந்தி எடுத்ததில் அடிவயிறு நொந்தது. தொண்டையில் எரிச்சலும் உண்டாகியிருந்தது. உடல் அப்படியே உறங்கத் துடித்தது. ஏனிந்தத் துன்பம் ………….?எம்முடைய இந்த வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து எமது மக்களின் சுபீட்சமான வாழ்க்கை இதில் உள்ளது. எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் இதைத் தாங்கித்தான் ஆகவேண்டும்.

நான் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக என் தாய் எவ்வளவு துன்பப்பட்டாள். இப்பொது போலவா?? அரிசியை ஊறவைத்து அதை உரலில் இடித்துதான் மாவாக்க வேண்டும்.அந்த மாவை கரைத்துப் புளிக்க வைத்து அதிகாலையில் எழுந்து தேங்காய் துருவி பால் எடுத்து நிலம் வெளுக்க முன்னம் அப்பம் சுட்டு சந்தைக்கு கொண்டு போகவேணும். அதன் பிறகு பனங்காய் பொறுக்கிப்பிசைந்து பனாட்டு ஊற்ற வேணும். மாலையில் மாவிடிப்பும் விறகு சேகரிப்பும் ….. அவள் எப்பொழுதுதான் உறங்குவாள்?

“அலேர்ட் …………………”திடீரென எழுந்த கூச்சலைத் தொடர்ந்து ஊதல் சத்தம் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தை உலுக்கியது. செல்வி எழுந்து விறைப்பாக நின்றாள். ஊதல் சத்தம் மும்முறை கீசி அடங்கியது. அந்த விசில் சத்தம் லீடர்களுக்கானது. செல்வி மைதானத்தை நோக்கி ஓடினாள். ஆண்கள் தரப்பில் இருந்தும் மூவர் வந்தனர்.வேவுப் பிரிவில் இருந்தும் இருவர் வந்திருந்தனர். சிவகலாவும் சந்தானமும் பயிற்சி ஆசிரியர்கள்.சந்தானம் பேசினான்.

“உடமைகளை எடுத்துக்கொண்டு ஒருநிமிடத்திலை இந்த இடத்துக்கு வாங்க, யாருடனும் பேச வேண்டாம்”. விரைந்து திரும்பிய செல்வி எப்போதும் தயார் நிலையில் இருந்த தனது உடமைப் பையை எடுத்துக்கொண்டு வந்தபோது வாகனத்தில் மற்றவர்கள் ஏறிக்கொண்டிருந்தனர். அவளும் பாய்ந்து ஏறினாள். வாகனம் இருளைக் கிழித்துக் கொண்டு பறந்தது. பெருங்காட்டிடையே வளர் பற்றைகளின் இலை குழை கொப்புகளைத் தட்டியும் தடவியும் ஊடுருவிய வாகனம் பெரும் பாசறை ஒன்றினுள் நுழைந்து நின்றது.

பெண்கள் ஒருபுறமாக சென்று தமது கூடாரத்துள் புகுந்தனர். ஆண்கள் வேறுபுறமாகச் சென்று மறைந்தனர்.

“என்ன பிரச்சனையாக்கா ………..” செல்விதான் கேட்டாள். அங்கிருந்த முக்கிய தளபதி அவளை பார்த்துப் புன்னகைத்து விட்டு,

“எங்கையோ இறங்கி அடிக்கப் போறாங்கள் போல ……..”

அப்ப திட்டப்படம் (map) பாக்கவே…………..?”

“ஓமெண்டுதான் நினைக்கிறன்………வழிகாட்டியளும் வந்திருக்கினம்.”

“எங்கையாய் இருக்கும் ?”

“அண்ணைக்கும் ஆண்டவனுக்கும்தான் தெரியும்”.

செல்வி மௌனமானாள். யாழ்ப்பாணத்துக்கு இப்ப படையெடுக்கிற அளவுக்கு ஏலாது .ஆனையிறவும் “ம்கும் …..”.

‘பயிற்சி முடிய அம்மாவைப் போய் பாக்க வேணும்’ என்று நினைத்திருந்தாள். அவள் கடுமையான சுகயீனம் காரணமாக மல்லாவி மருத்துவமனையில் படுத்திருந்தாள். செல்வியின் தங்கையும் வேறு ஒரு பிரிவில் போராளியாக இருந்தாள். ஆக, தாய் தனது சகோதரனது ஆதரவில் இருந்தாள். பிள்ளைகள் யாரும் அருகில் இல்லை என்பதே செல்வியின் வேதனை. அந்த வேதனையை அறவே மறக்கடித்தது இந்த செய்தி. எங்கையோ………. எங்கையோ……எங்கை அடிபாடு….என்பதிலேயே மனம் தவித்தது.

மணல் வெளி, மண் அரண்கள், கட்டிடங்கள், நீர்க்கரைத் தெருக்கள் என அமைக்கப்பட்ட மாதிரிக்களத்தின் முன் திட்டவிளக்கம் செய்ய முக்கிய தளபதிகள் நின்றனர். இப்போது ஒரு பகுதியினருக்கான விளக்கம் நடந்தது. இரண்டு மணி நேரம் கழித்து செல்வி உள்ளே அழைக்கப் பட்டாள்.

“இருபத்திஒன்றில் நிலையெடுத்து காத்திருங்கள். சரியாக சாமம் ஒன்று முப்பதுக்கு வடக்கில் இருந்து வெடிச்சத்தம் கேட்கும். உடனேயே உள்ளிருந்து சமிக்ஞை கிடைக்கும்.உடனே இந்த அணி இருபத்தியாறை வளைத்து பெருவீதி கடந்து முப்பது முதல் நாற்பத்தெட்டு வரை சென்று பிரதான வீதியைத் தொட அதே சமயம் மேற்கில் இருந்து வரும் அணி உங்களுடன் இணையும். அவ்விடத்திலேயே தங்கி இருக்கவும்.”

மறுநாள் படைத்தளபதி செல்வியிடம்,

“அம்மாவுக்கு கடுமையாம்…. பாத்திட்டு வரப்போறிங்களா……..”என்றார் .

“இல்லை ………நான் போகேல்லை …”

களத்துக்கான திட்டங்களைப் பார்த்தவர்கள். வெளியே செல்வது ஆபத்தானது. முன்னர் ஒருதடவை கொக்கிளாய் தாக்குதல் திட்டத்தை விளக்கியபின் மூவர் காணாமற் போயினர். “சரி மூண்டு பேர்தானே……..சண்டைக்குப் பயந்து ஓடிற்றாங்கள்தானே” என்று அலட்சியமாக இருந்து விட்டனர். விளைவு மிகமோசமானது, நூற்றியெண்பது பெண்போராளிகளும் பல முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதன்பிறகே முக்கிய தளபதிகளுக்கு மட்டுமே களமுனை விளக்கப்படும். அதுவும் அவர்கள் பங்காற்றும் பகுதி மட்டுமே அவர்களுக்குத் தெரியும். களவிளக்கம் பார்த்தபின் வெளியே சென்று பிரச்சனையாகி விட்டால் துரோகிப்பட்டமே கிடைக்கும். ஊகும்……வேண்டாம்.

000000000000000000000

நான்காம் நாள் செல்வியும் அவள் அணியும் கண்டாவளை கடந்து குறு மோட்டைகள் மீது நடந்து சென்று வடலி மண்டிய பொட்டலில் நிலையெடுத்துக் கிடந்தனர். முன்புறம் காவலரணில் இருந்து பைலாப் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

” அக்கா ………அக்கா ….” செல்விக்கு அருகே மூன்று யார் தூரத்தில் கிடந்த ரூபி அனத்தினாள்.

செல்வி ஊர்ந்து அவளருகே போய் “என்ன ?” என்று கிசுகிசுத்தாள்.

“இப்பிடியேயா……….. யாழ்ப்பாணம் போறம்?”

“ம்………இதுவேறை , இதுவும் பயிற்சிதானே……..”

இந்தக் கும்மிருட்டில் இருவரும் குசுகுசுவெனப் பேசியதைக் கவனித்த பாமா,

“அக்கா ………அவங்கடை சுத்துச்சென்றி வாறானக்கா………”.

எல்லோரும் அமைதியாயினர். கைக்கடிகாரத்தை ஒருகையால் மறைத்து லைட்டைப் போட்டாள். ஒன்பது நாற்பது. அவர்களுக்கு மேலாகப் பெரிய ஒளி கடந்தது. கூடவே மழையும் சிலுசிலுவெனத் தூற ஆரம்பித்தது. மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மண் அணையைச் சுற்றி படுத்தார்கள்.வேலிக்கப்பால் எதோ அரவம் கேட்டதாக ஒருவன் சிங்களத்தில் கூவினான். “எங்கடா ………..எங்கை ” என்று பலர் ஓடி வந்தனர். நாற்புறமும் ரோச்லைற் ஒளி பாய்ந்தது. மூச்சு விடுவதையும் நிறுத்திப் பம்மிக் கிடந்தனர் பெண்கள். கூச்சலிட்டவனை திட்டியவாறே அங்கே கூடியவர்கள் கலைந்து சென்றனர்.

திடீரென மொழி முன்னேறி சுருட்கம்பிகளை தன் கொறடு கொண்டு நறுக்கி வழியமைத்தாள். தற்செயலாக வந்த மழை நின்று விட்டிருந்தாலும் நேரம் மிகப் பயங்கரமாக முன்னேறியது. ஒவ்வருவரும் தத்தம் அருகில் உள்ளவர்கள் காதில் முணுமுணுத்தனர். “சிக்னல் ஒன்றரைக்கு வரும். அதுவரைக்கும் தலை தூக்க வேண்டாம்”. மணி பன்னிரண்டு. நெடிய பனைமரங்கள் இருளில் பேய்கள் போல ஆடின. யாரோ தம்நிலத்தை மண்ணரிப்பிலிருந்து காப்பாற்ற நட்ட சவுக்கு மரங்கள் பேய்க்குரலில் பேசிக்கொண்டன. ஒரு மணி. மொழி தனது கடமையை நிறைவு செய்யும் நேரம்……….. ஒரு அல்ஷேசன் நாய் அவளை நோக்கிப் பாய்ந்து வந்தது.

மொழி தலையைத் தாழ்த்தினாள். சத்தம் போடக்கூடாது. இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு.

00000000000000000

செல்வியின் தாய்க்கு நேற்றிலிருந்தே சேடம் இழுத்தது. உறவினர்கள் அல்லாத ஊரவர்களும் வந்து போனார்கள்.

“பிள்ளையள் வரேல்லையே……” வந்த ஒவ்வொருவரும் கேட்ட கேள்வி இது. பிள்ளையள் வருவார்கள்…… அவள் மூச்சில் கேவல் எழுந்தது.

நேரம் ஒன்று பத்து. வடலியருகே நிலை கொண்டிருந்த கவிதா திடீரெனப் பதறி எழுந்தாள். பக்கத்தில் இருந்தவள் அவள் தலையை அமுக்கிக் கவிழ்த்தாள்.

“என்னடி ………?”

” பொக்கான் மேலை பாஞ்சிட்டுதக்கா……..”

“இப்ப அவன்ர புல்லட் பாஞ்சிருக்கும்…..”

அல்ஷேசன் நேராக மொழியை நோக்கிப் பாய்ந்துவந்தது. நேரம் ஒன்று பதினைந்து. மொழி நாயை இறுக்கிக் கட்டிப்பிடித்தாள். நாய் திமிறியது. அதன் வாயில் தன் ரைபிளின் பட்டைக் கொடுத்தாள் . ”சுடாதே” என அறிவு கட்டளையிட்டது. அவள் நாயுடன் மல்லுக்கட்டி பின்புறம் சாய்ந்தாள். எனினும் நாயைக் கைவிடவில்லை. இதை பார்த்த நாயகி மெதுவாக அவளை நோக்கி நகர்ந்து தன் ரீ 56சின் முனையிலிருந்த பயனைட்டை நாயின் உடலில் பாய்ச்சினாள், மொழி ஒரு முனகல் கூடவராமல் நாயின் வாயை இறுக்கினாள் அவளுடைய கை நாயின் பற்களுக்கிடையில் துடித்தது. நாயகி மேலும் இருதடவை கத்தியைப்பாச்சியதும் நாய்வாயைவிட்டதுடன் உயிரையும் விட்டது. மொழியின் உடலில் மேலும் சில இடங்களில் நாய் பிறாண்டியும் கடித்தும் விட்டது.

நேரம் ஒன்று இருபத்தைந்து. அனைவரின் இதயத்துடிப்பும் வேகமெடுத்தது உடல் முழுதும் குளிர்போல எதுவோ பரவி நடுக்கமெடுத்தது. ஒருமணி இருபத்துநாலு இருபத்திஐந்து இருபத்திஎட்டு… ஒன்று முப்பது, வடக்கிலிருந்து வரவேண்டிய ஒலி வரவில்லை.

அந்த முகாமின் நடுப்பகுதியில் ஏதோ இசை நிகழ்ச்சி நடப்பதுபோலசத்தமும் பாடலும் கூச்சலும் கேட்டுக்கொண்டிருந்தன. வடக்கே பயங்கர அமைதி நிலவியது. ஒன்று முப்பத்தொன்பது….

செல்வியின் தாய் வாய்புசத்தினாள் “ பிள்ளை ….கிட்டவாம்மா” நான் போகப்போறன்.”

கொஞ்சநேரம் விழிகளில் நீர்வடிந்தது. கண்களை மூடிக்கொண்டாள். ”செல்வி செல்வி” என அசைந்த உதடுகள் ஓய்ந்தன. பெண்கள் பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைத்தனர்.

எதிர்பார்த்தபடி வடக்கிலிருந்து வெடியோசை கேட்கவேயில்லை. எனினும் ஒன்று நாற்பதுக்கு முகாமின் மத்தியிலிருந்து வானைநோக்கிச் சில ரவைகள் பாய்ந்தன. முகாம் நிதானிப்பதற்குள் மொழி அமைத்த பாதைகளினூடாக மகளிர் படையணி உள்ளே பாய்ந்தது . தமக்குக் குறிக்கப்பட்ட இலக்குகளை அழித்து வெறிறிகரமாக முன்னேறி விடிகாலையில் பரந்தன் முல்லைச்சாலையின் முகப்பில் அவர்கள் வெற்றிச் சின்னத்தை நாட்டி மேற்கிலிருந்து வந்த அணியுடன் கைகோர்த்தனர். இந்தச்சமரில் மொழி யாமினி கீதா மாதவி ஆகியோர் விடைபெற்று மறைந்தனர்.செல்வியும் நாயகியும் பாதைமாறிப்போயிருந்தனர். முப்பத்தாறுபேர் கொண்ட யாழ் செல்லும் மகளிர் படையின் பயிற்சி அணி சிதைந்துவிட்டது.

ஒன்பது பேர், அந்த அணியில் இருந்து விலகி விட்டனர். மீண்டும் புதியவர்கள் மூவர் சேர்ந்தனர். வெற்றிக்கான சாவைநோக்கிய பயிற்சி தொடங்கலாயிற்று.

00000000000000000000000

செல்வி தாயின் மரணச்சடங்கு, எட்டு என எதிலும் பங்கேற்க முடியாமல் வீட்டிற்குப் போனாள். அவள் தங்கையால் அப்போதும் வரமுடியவில்லை.

“என்ன பிள்ளை பெத்த தாய் நாலு நாளாய் சேடமிழுத்து கிடந்தவா ……….வந்து பாத்தா என்ன ?”

செல்வி நிதானமாக மாமனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இண்டைக்கு எத்தினை தாய்மாருக்கு பிள்ளையள் இல்லை. நாங்கள் இருக்கிறம்தானே. ம்………… அமைப்பிருந்தால் நான் கெதியாய் போய் அம்மாவை பாப்பன்”.

“ச்சீ ……….. என்ன பேசிறாய்…….உந்த அறம் விழுந்த பேச்சு பேசாதை பிள்ளை.”

“மாமா……அதுதானே அறம். உவ்வளவு கஷ்டப்பட்டு பயிற்சி எடுக்கிறம். அதுக்குத்தானே “.

“பிள்ளை ….நான் சாகலாம் நீ சாகலாம்….. நாங்கள் சாககூடாது எண்டதை மறந்திட்டியா….”?

ஜெயகாந்தன்- இலங்கை

 

(Visited 88 times, 1 visits today)
 
வாசிகசாலை இதழ் 06 2017

நைல் நதிக்கரையோரம்-நூல் விமர்சனம்-ஜெயகாந்தன்

நடேசனின் நைல்நதிக்கரையோரம். கைக்கு அடக்கமாக களைத்திருக்கும் போதும் கையில் பிடித்தபடி படுத்திருந்து படிக்கு வசதியான அளவில் வந்திருக்கும் புத்தகம். அதன் உள்ளே பொதிந்திருப்பது எகிப்தின் வியத்தகு வரலாறுகளின் எச்சங்களே! அவர் […]