காடுலாவுகாதை-பாகம் 22-தமிழ்க்கவி

கிணறு கட்டி மிதி வைத்து ஏற்றத்தின் அத்திபாரத்தையும் சீமெந்திலேயே போட்டாயிற்று. ஏற்றத்தின் முகப்பில் கிணற்று வாயில் ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தாறாம் ஆண்டு ஆனி மாதம் பதினெட்டாம் திகதி என்பதை 1956.6.18 என இலக்கத்திலேயே காயாத சீமெந்துப் பூச்சின் மீது மலர் ஒரு ஆணியால் அதை எழுதிவிட்டாள்..

தமிழ்க்கவி பாக்கியத்தின் நகை போனது போனதுதான். ஒரு வருடம் வட்டி கட்டினார்கள். அடுத்த வருடம் முதலுக்கு மேலாக வட்டி வந்து விட்டது என்று தம்பிஐயா சொல்லிவிட்டார். அந்தவருடம் கந்தப்புவின் வாழ்க்கையில் அட அந்தக்குடும்பத்தின் வாழ்க்கையில் என்றே சொல்லலாம், பல மாற்றங்கள் நடந்தேறின. தமிழரசுக்கட்சி மாநாட்டுக்கு ஒரு தொண்டராக வேலை செய்தது. கிணறு வெட்டியது. அதேவருடம் கிணறு கட்டி முடித்தது.

அந்தவருடம் அவர்களுடைய ஊரில் கடும் வரட்சி நிலவியது. கந்தப்பு தன் வளவிலேயே ஒரு குடிசை போட்டு குடியிருக்க வைத்திருந்த அவனது தாய் பொன்னிப்பெத்தா…அவ்வூர் மக்களுக்கு ஒரு நாட்டுவைத்தியர். குழந்தைப் பேறில்லாத பெண்களுக்கு அவர் ஒரு மண்டலம் மருந்து கொடுத்து அவர்கள் குழந்தைப் பேறடைந்துள்ளனர். அந்த ஊர் மருத்துவிச்சியும் அவர்தான். கட்டு புண், சொறி, சிறுபிள்ளை வைத்தியம் என்று அவர் கைராசிக்கார மருத்துவராக இருந்தார். சிறந்த வாசிப்பு பழக்கமுள்ளவர். வாராந்தம்  முப்பதுசததுக்கு கலைமகள் புத்தகம் அவர்தான் வாங்குவார். கந்தப்பு இருபத்தைந்துசததுக்கு கல்கி வாங்குவான். இவைதவிர அவருக்கு எங்கேயோ சஞ்சீவி , பிவீஆர், தமிழ்வாணன் .”போன்றோர் எழுதும் நாவல்களும் கிடைத்து வந்தன. பொழுதுபடும் நேரத்திலும் கண்களை இடுக்கிக் கொண்டு வாசலுக்குள் இருந்து நாவல் படிக்கும் கிழவியை மருமகள் பாக்கியம் கிண்டல் செய்வாள். “கிழடு பார் எப்பிடி பூந்து பூந்து படிக்குது. ம்…நாவல். படிக்குது, வயது போயும் ஆசை”

“எடயெடி புத்தகம் படிக்கவும் வயசென்னடி கிடக்கு. எருமை மாடுகள். உலக அறிவிருந்தாத்தானே… உங்கட அறிவு முழுக்க சோத்திலும் கறியிலும்தான்” என்பான் கந்தப்பு.

தினமும் கிராமத்திலிருந்து பத்துப்பன்னிரண்டு முதியவர்கள் வருவார்கள்.விக்கிரமாதித்தன், ஜெகதலப்பிரதாபன். மதனகாமராஜன், சேதுபுராணம், என பலதரப்பட்ட புத்தகங்கள் அவர்களே ஒருவர்மாற்றி ஒருவர் எடுத்து வருவார்கள்.

கந்தப்பு வேலை முடித்து வந்து எவ்வளவு அசதியாக இருந்தாலும்,அவர்களுக்காக ஒருமணிநேரம்  கதை படிக்க தவறுவதேயில்லை. ஒரு சிறு வெண்கல விளக்கை கையில் பிடித்து பார்த்து கதை வாசிப்பான். சில இளைஞர்களும் கதை கேட்க வருவதுண்டு.

பொன்னிப் பெத்தா மௌன வாசிப்புத்தான். மறுநாள் கூலிக்கு வேலை செய்பவர்கள் பிடுங்கிப் பிடுங்கி கேட்டால் தான் வாசித்த கதைகளை சொல்வாள். அதைவிட தியேட்டரில் செகண்ட் ஷோவில் வருகிற சினிமாப்படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவாள். மலரையும் லெச்சிமியையும் மணியனையும் கூட்டிக்கொண்தான் போவார். அதற்காகவே இவர்கள் மத்தியானம் சாப்பிட்டபின் நித்திரை கொள்ளுவார்கள். அப்படி நித்திரை செய்யாவிட்டால், அப்பாத்தை ஏசுவாள். போ…பகல்ல படுக்காட்டி அங்க வந்து நித்திரையாப்போவாய். நீ வரவேண்டாம்”

என்பாள். ‘டேய் மணியம் கொக்காட்ட போய் உனக்கும் லெச்சிமிக்கும் எழுவதுசதம் வாங்கிக் கொண்டுவா’. என்பாள், மலருக்கான் செலவை அவள் கொடுப்பாள். படம் பார்க்க முழு டிக்கற் ஐம்பத்தைஞ்சு சதம், அரை டிக்கற் முப்பத்தைந்துசதம்,  மணியம் ரெண்டு டிக்கற்று எழுவதுசதம். ரெண்டு கடலைச்சரைக்கு பத்துச்சேம். மணியம் எண்பது சதம் வாங்கி வருவான். செகண்ட் ஷோ தொடங்கு முன்பே லெச்சிமி தூங்க ஆரம்பித்து விடுவாள். அப்பாத்தை பொன்னிப் பெத்தா அவள் தலையில் குட்டிக் குட்டி விழிக்க வைப்பாள்.

கடும் வரட்சி பயிர்கள் வாடின. புதிதாக பயிர் எதுவும் செய்ய முடியவில்லை. உழுவதற்கே ஈரம் வேண்டுமே. பல கிணறுகள் வரண்டதால் மக்கள் குடிதண்ணீருக்காக நீருள்ள கிணறுகளை தேடி சென்றனர். குளங்களும் வரண்டு கால்நடைகள் வாடின.

இந்த நிலையில் பொன்னிப்பெத்தா வயிற்றோட்டம் வந்து படுக்கையில் விழுந்தாள். வயிற்றோட்டத்துடன் கூடவே வெள்ளைப்போக்கும் இருந்ததால் அவளை சூழ துர்நாற்றம் வீசியது. ஒரு மாதமாகியது அவளுடன் கூடி வேலை செய்யும் பெண்கள் வருத்தம் பார்க்க வந்து போனார்கள். சந்தனப்பிள்ளை கமக்காரனுடைய வைப்பாட்டியான மூக்காயி தென்னிந்தியாவிலிருந்து வந்த வெள்ளைச் சீலைக்காரி தான். சந்தனப்பிள்ளை அவளை விரும்பியதால் அவளும் அவருடன் கூடி வாழ்ந்தாள். இப்போது நிறச்சேலைகளை அணிந்தாலும். ரவிக்கை போடுவதில்லை. சந்தனப்பிள்ளையோடு தொடர்பு ஏற்பட்டபின், பல வருடங்கள் தனக்குமொரு குழந்தை வேண்டும் என விரும்பினாள்.

எனவே பொன்னிப்பெத்தாவிடம் ஒரு மண்டலம் மருந்து சாப்பிட்டு ஒரு குழந்தையை பெறும் வாய்ப்புப் பெற்றாள். இப்போது அவளுடைய மகன் ஓடியாடி மழலை பேசிக் கொண்டிருந்தான். அவனை கண்ணோ புண்ணோ என்று கவனமாக பார்த்து வளர்க்கிறாள். இப்போது வருத்தம் பார்க்க வந்தவர்களுடன் அவளும் இருந்தாள். எல்லோருமே மூக்கைப் பொத்தியபடி இருப்பதை பார்த்து பொன்னிப் பெத்தாவின் இளைய மருமகளை ஏசினாள்.

“ஏட்டி…ஏண்டி இப்பிடியே போட்டு வச்சிருக்கிறீய. இந்த நாத்தத்தில ஏமன்கூட கிட்ட வரமாட்டாண்டி”

“சும்மா கெடக்கா அவதான் என்ன செய்யிவா,..ஒருமாசமா பீச்சீலை கழுவறா…கெழவி நல்ல இருந்தப்ப ஒழுங்கா சாப்பாடும் குடுக்கமாட்டா..” என்று வசந்தா எதிராக பேசினாள்.

“சரி சரி, த்தா………… சத்த வெந்நீர் போடு வெயிலேறட்டும். நா வர்றேன். நீங்களும் வாங்கடி குளிப்பாட்டி போடுவம்.” என்றாள் மூக்காயி.

“சின்னவா! ஐயாத்துரையண்ணன் வீட்டில சின்ன பீப்பா இருக்கும் எடுத்தாப்பா…”என்ற மூக்காயி வேலியோரமாக மூன்று கல்லை வைத்து அடுப்பை மூட்டினாள். சின்னவன் பாவக்குளம் போயிட்டான். அவனுடைய மனைவி போய் பீப்பா எடுத்து வந்தாள்.

“மெய்யேப்பா, அயலுச்சனம் வேலை செய்யுது. நானும் போய் கூடமாட உதவி செய்யவா” பாக்கியம் மாமியார் வீட்டுக்கு போக கந்தப்புவிடம் அனுமதி கேட்டாள்.

தன் தாய்க்கும் மனைவிக்கும் தகராறு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவளை அங்கே விடாமல் வைத்திருந்தான் கந்தப்பு.

“சரியப்பா போகில் போ…ஆனா தேவையில்லாத கதையள் வேண்டாம்”

“நானேனப்பா கதைக்கிறன். மனிசியும் பேச்சு மூச்சில்லாமத்தான் கிடக்கிதாம்.”

ஐம்பது யார் தொலைவில் அன்றாடம் படலைக்கு செல்லும் வழியில் கிடந்த அந்த குடிசைக்கு இப்போதுதான் பாக்கியம் போனாள். ஆறுவருடங்களுக்கு முன் ஒரு தடவை போயிருந்தாள்.

“த்தா….. பாக்கியம் பெரிய வாளி இருந்தா எடுத்துக்கிட்டு வாத்தா” என்றாள் மூக்காயி. மூக்காயியின் குரலுக்கு மாடுகளுக்கு தண்ணீர் வைக்கிற பெரிய வாளியை எடுத்துப்போனாள்.

வெளியே ஒரு வாங்கைப்போட்டு அதில் பொன்னிப் பெத்தாவை வளர்த்தி நீராட்டினார்கள். குட்டிக்கூரா சோப்பைப் போட்டு உடலெல்லாம் நாற்றம்போக குளிப்பாட்டினாள் மூக்காயி.

“ஆத்தா…இந்த ஊரே நடந்து எத்தின பொண்ணுங்க தீட்டழைஞ்ச கையி. மவராசி பத்துமாத தீட்டையும் கைபோட்டு கழுவி நீ இழுத்தெடுத்த புள்ளைங்கதானேம்மா ஊரே நெறைஞ்சிருக்கு”

மூக்காயி மனப்பூர்வமாக நன்றியோடு பேசிய வார்த்தைகள் லெச்சிமியின் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

 

 

(Visited 64 times, 1 visits today)