சின்னமீன்கள்-சிறுகதை-ஜிஃப்ரி ஹாசன்

உன்மத்தங் கொண்டவனைப் போல் தன் உடல் சிலிர்த்துக் கொண்டிருப்பதை மொஹிதீன் உணர்ந்தான். மரியா பிரிலெழாயெவாவின் லெனினின் வாழ்க்கைச் சரிதம் கூறும் வரலாற்று நாவலான ‘லெனினுக்கு மரணமில்லை’ எனும் புத்தகம் அவன் கையில் வாசித்து முடிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதை வாசித்து முடித்த அந்தக் கணத்திலிருந்து அவனுக்குள் ஒரு பெரும் பிரளயம் புரண்டடித்தது. புரட்சித் தீ மூண்டெழுந்தது. அவன் உடலும் மனமும் சமநிலையில் அதிர்ந்தன. அந்த நாவல் அவனைப் புரட்டி எடுத்தது போல் அதுவரை வேறெந்தவொரு புத்தகமும் அப்படி அவனை உடைத்து வீசியதில்லை. மரியா பிரிலெழாயெவா அந்தப் புத்தகத்தில் காட்டிய லெனினைப் போல் தன்னையும் அவன் கற்பனை செய்து கொண்டான். தாய் நாடு அவனுக்கு ரஷ்யாவைப் போலவும், அவனது சொந்த ஊர் மாஸ்கோவைப் போலவும் தெரிந்தது. ஊரில் தானும் ஓர் அரசியல் புரட்சியை நடத்தி முடிப்பது என்ற உக்கிரமானதொரு முடிவுக்கு அந்தப் புத்தகம் அவனைக் கொண்டு சேர்த்திருந்தது. தன்னைச் சூழந்திருக்கும் ஊழல் அரசியல் எனும் இருட்டை விரட்டும் ஒரு மெழுகாக அவனையே உருக்கிக் கொள்ளும் ஒரு உந்துதல் அவனில் ஒட்டிக்கொண்டது. அந்த உந்துதல் அவனை ஓர் இயந்திரமாக உருமாற்றத் தொடங்கியது. சிந்தனைகள் வேறு எங்கோ நுரைத்து ஒதுங்கின. அவன் உடலில் அந்நிய ஆன்மாவொன்று வந்து உறைந்துவிட்டதைப் போல் அவன் பேச்சும் செயல்களும் உருக்கொண்டன.

ஜிஃப்ரி ஹாசன்
பிருந்தாஜினி பிரபாகரன்

இருபத்துநான்கு வயதே அவனுக்கு ஆகி இருந்தது. பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் பட்டம் பெற்று மாலைநேர வகுப்புகளில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் பாடம் கற்பித்து வருமானம் தேடும் மிக நலிந்த பொருளாதார நிலையிலிருந்தான். உணர்வெழுச்சிகளுக்கு அதிகம் ஆட்பட்டவன். முதிரா இளைஞன் என்பதால் உணர்ச்சிவசத்தால் உந்தப்பட்டு சடுதியான முடிவுகளை எடுக்கக்கூடியவன். வீட்டில் தந்தையின் உழைப்புதான் மையமாக இருந்தது. ஆனால் அதிலிருந்து புரட்சிக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடும் கிடையாது என்பதையும் அவன் நன்கறிந்திருந்தான். வீட்டுத் தேவைக்கே அது போதுமானதில்லை. அதனால் அவனும் அவசரமாக ஒரு உழைப்பாளியாக மாற எதிர்பார்க்கப்பட்டான்.

மொஹிதீனுக்கு லெனினின் வாழ்க்கையும், போராட்டமும் ஏற்படுத்திய உந்துதல் ஒரு மயக்கத்தை கொடுத்தது. லெனின் உலகுக்கானவர். நான் லெனினுக்கானவன் என்ற தட்டையான சிந்தனையின் மையத்தில் அவன் உறுதியாக அமர்ந்து கொண்டிருந்தான்.

ஒருவித மனவெழுச்சி கொண்டு இரண்டாவது முறையும் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தபோது சுற்றிலும் இருள் தடிப்பாகிக் கொண்டு வந்தது. மூடியிருந்த புத்தகத்தையும் வானத்தையும் ஒருவிதப் பதட்டத்துடன் மாறி மாறிப் பார்த்தான். தெளிவான வானத்தில் சில நட்சத்திரங்கள் அப்போதுதான் மின்னத் தொடங்கி இருந்தன. புரட்சியின் உத்வேகம் அவனை புரட்டியெடுக்க ஒவ்வொரு நட்சத்திரமும் அவன் கண்களுக்குத் தீப்பொறி போலவே தெறித்தன. புரட்சித் தீ அணையாமல் அவனுக்குள் எரிந்து கொண்டிருக்க லெனின் மேற்கோள்களை ஒரு காகிதத்தில் துணுக்குகள் போன்று உடைத்து எழுதிக்கொண்டான். அந்த துணுக்குகள் போதை மாத்திரை போல் அவனை அசைக்கக்கூடியது. அவனது இயல்பான சோம்பலையும், அலட்சியத்தையும் கலைப்பதற்கான ஓர் இலட்சியத்தடி போன்றது அந்தத் துணுக்குகள் என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

புத்தகத்தை மூடி வைக்க மனமில்லாமல் அசூரவெறிகொண்டவன் போல் மீண்டும் வாசிக்கத் தொடங்கினான். மூன்றாவது முறையும் புத்தகத்தை வாசித்து முடித்ததும் மீண்டும் வானத்தை வெறித்தான். இப்போது வானத்தில் நட்சத்திரங்கள் மேலும் பெருகி இருந்தன. அந்த நட்சத்திரங்கள் மின்னும் தங்களின் ஒளிநிறைந்த கண்களால் நம்பிக்கையான ஏதோ ஒரு செய்தியைத் தனக்குச் சொல்வதாக எண்ணிக் கொண்டான். இந்தப் புரட்சி சொற்ப தலைகளைக் கொண்டு தொடங்கப்பட்டு இறுதியில் வானத்தில் நட்சத்திரங்கள் பெருகுவதைப் போல் தோழர்கள் பெருகி புரட்சி இலக்கை அடையும் என்பதுதான் அந்தச்செய்தி என அவனுக்குள்ளிருந்து யாரோ ஒருவர் முழக்கமிடுவது போல் இருந்தது. திண்ணமான நம்பிக்கைக்கையின் குரல் போல் அது அவனை ஆசுவாசங் கொள்ளச் செய்தது. நம்பிக்கையின் உன்மத்தம் கொண்ட ஒருவன் துடுப்பு இல்லாமலே படகுச் சவாரி ஏறிவிடுவான். ஒரு புத்தகத்தால் இப்படியும் ஒருவனை முழுவதுமாகவே விழுங்கிக் கொள்ள முடியுமா என்பது அவனுக்கே ஆச்சரியமாகத்தானிருந்தது. லெனினைத் தவிர இப்போது அவன் மூளைக்குள் வேறு யாருமில்லை. அவன் நிகழ்த்தப் போகும் புரட்சிதான் அவனது பிறவிப்பயன் எனவும் அக்கணத்தில் நினைத்தான்.

அன்றிரவு முழுவதும் புரட்சிக் கனவால் அவன் தூக்கம் கெட்டது. தூக்கமற்ற அந்த இரவில் படுக்கையில் சும்மா புரண்டு கொண்டே புரட்சியை எங்கிருந்து தொடங்கி எங்கே கொண்டு நிறுத்துவது என ஓர் ஆழமான மனக்கணக்குப் போட்டுப் பார்த்தான். கணக்கு சரியாக அமையாமல் தாப்புக் காட்டிக் கொண்டே நழுவியது. கனவுகள் மண்டைக்குள் பெருக்கெடுத்தால் அவை முதலில் உறக்கத்தைத்தான் அடித்துக் கலைக்கின்றன. மோட்டு வளையில் கீச்சிட்டுக் கொண்டே ஓடும் எலிகளின் அசூசையான ஒலியும் புரட்சிக்கனவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் அன்றிரவு அவன் தூக்கத்தை வஞ்சித்துவிட்டன.

இரவு முழுவதும் தூக்கமின்றி உழன்றதால் காலையில் எழுந்திருக்க நேரமாகி இருந்தது. உழைப்பாளியான வாப்பா காலை உணவு தயாரானதும் மொஹிதீனிடம் கொடுத்தனுப்பும்படி சொல்லிவிட்டு சைக்கிளில் தன் கருவிகளுடன் சேனைக்கு மிக அதிகாலையிலேயே கிளம்பி விட்டிருந்தார். தேங்காய்ப்பூச் சம்பலுடன் உம்மா ரொட்டி சுட்டுவிட்டு மொஹிதீனை எழுப்பினார்.

“மொய்தீன் எழும்பு மனெ, வாப்பா சோதயன் காட்டுக்குப் பெயித்தாரு. இந்தா இதக்குடுத்துட்டு வா”

மொஹிதீன் தலையணையிலிருந்து தலையை வெறுப்பாக உயர்த்தி ரொட்டிப் பொதியை அரைக்கண்களால் நோட்டமிட்டான். பின் சடுதியாக அப்படியே தலை பணிந்தது. அனுங்கலான சத்தம் ஒன்று மட்டுமே அவனிடமிருந்து வெளிப்பட்டது. மீண்டும் கண்கள் சோர்ந்தன. உம்மா பக்கத்து வீட்டுப் பையன் ஒருவனை கூலி கொடுத்து உணவுப் பொதியுடன் சோதயன் காட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சரியாக பகலுணவு வேளைக்கு மொஹிதீனால் எழ முடியுமாக இருந்தது. முன் சுவற்றில் ஆணி அடித்துக் கொழுவப்பட்டிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொள்வது முகைதீனின் வழக்கமாக இருந்தது. நீண்ட உறக்கத்திலிருந்து விழித்ததால் முகம் சற்று ஊதி இருந்தது. புத்தகத்தின் அட்டையில் போட்டிருந்த லெனினின் ஒட்டிய கன்னங்கள் அவன் நினைவுக்கு வந்து அவனைத் தொந்தரவு செய்தன.

அன்று பின்னேர வகுப்பில் கற்பிக்க வேண்டிய விடயங்களை குறிப்பாக எடுத்துக் கொண்டான். கட்டாயம் லெனினின் வாழ்க்கைச் சரிதம் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஒரு உறுதி அவனுக்குள் திரண்டது.

தனது புரட்சிக்கான ஆரம்ப விதையை அதுவரை வாக்குரிமை பெற்றிராத அவனிடம் அரசறிவியல் கற்க வரும் மாணவர்களிடமிருந்தே தொடங்குவது என ஒரு மனக்கணக்குப் போட்டுக் கொண்டான். தவிர அவனுக்கு வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. லெனினின் வாழ்க்கைச் சரிதத்திலிருந்து அதற்கான அடி எடுத்து வைப்புகள் அவனுக்குக் கிடைத்திருந்தன. லெனின் தனது புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் தொண்டர்கள் சிலரை சிறியமீன்கள் என அழைத்தார். லெனினின் அந்தப் பிரயோகம்தான் மொஹிதீனையும் புரட்சியை சிறியமீன்களைக் கொண்டு ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது. அதுதான் இலகுவான மார்க்கமாகவும் அவனுக்குத் தோன்றியது. அன்றிலிருந்து ஒவ்வொரு வகுப்பிலும் பாடத்தோடு பாடமாக தன் புரட்சி விதைகளையும் மொஹிதீன் தூவத் தொடங்கினான். பாடம் கற்பிக்கும் போது நடைமுறை அரசியலில் இருக்கும் பலவீனங்களையும் புதிய அரசியல் நடைமுறைக்கான தேவையையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி சில மாணவர்களை சிந்திக்கப் பண்ணினான். நாளடைவில் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த சில மாணவர்கள் அவனது புரட்சித் திட்டத்தில் தோழர்களாக இணைந்தனர். இன்னும் வாக்குரிமை பெற்றிராத அவர்கள் மத்தியில் மொஹிதீன் ஒரு புரட்சித் தலைவனாக உயர்ந்தான்.

மொஹிதீனின் வீடு மாலையிலிருந்து இரவு வரை தோழர்கள் சங்கமிக்கும் மன்றமாக மாறியது. அந்த சின்னமீன் குஞ்சுகள் தேன்வதையில் ஒட்டியிருக்கும் தேன் பூச்சிகள் போல மொஹிதீனை ஒட்டிக் கொண்டன.

“பெரிய கரப்பானை விடச் சிறியமீனே மேல்” என்று மொஹிதீன் தன் மன்றத்தில் தினமும் கூடும் இளவட்டங்களைப் பார்த்து லெனினின் வார்த்தைகளில் பெருமிதமாகச் சொல்வான். இளவட்டங்களுக்கு அது ஒருவிதக் கிறக்கத்தைக் கொடுத்தது. உடல் சில்லிட்டு விறைக்க புரட்சிப் பாதையில் அவர்களது இருதயங்கள் மேலும் மேலும் திடமாகின. தங்களைக் குறித்து அவர்களுக்குள் பெருமிதமான எண்ணங்கள் இடையறாது எழுந்தன. மீண்டும் லெனினின் வார்த்தைகளில் அவர்களைப் பாராட்டுவதைப் போல்

“அளவில் சிறியது, ஆனால் பயனில் பெரியது” என்றான் மொஹிதீன்.

அவ்வப்போது சிறியமீன்களிடமிருந்து சிறிய கேள்விகளும் எழத்தொடங்கின. அது மொஹிதீனின் இலட்சியக் கனவுக்கு உரமூட்டுவது போல் அவனைச் செழிப்பூட்டின.

மொஹிதீன் வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி வைத்திருந்தான். அதில் அதிகமும் வரலாறு, தத்துவம், இலக்கியம், அரசியல் சார்ந்த புத்தகங்களே இருந்தன. ஏ.எல். படிக்கும் மாணவர்கள் அதை வாசித்து தங்கள் இலக்கைத் தவறவிட்டுவிடுவார்களே என்ற யோசனை எதுவுமின்றி மொஹிதீன் தன் புரட்சி மீதே சுயநலமான கவனங்கொண்டிருந்தான்.  மொஹிதீன் தன் வீட்டு நூலகத்தில் அவன் இல்லாவிட்டாலும் போயிருந்து வாசிக்குமாறு தனது தோழர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தான். சின்னமீன்களும் அங்கிருந்த மார்க்ஸிசம், அரசியல், ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையே அதிகமாகத் தேர்வுசெய்து வாசித்தனர். இலகுவில் உணர்ச்சிவசப்படக்கூடிய கலக உணர்வுகள் நிறைந்த இளம்பராயத்துப் பிள்ளைகளை ஒரு மாயக்கயிறு கொண்டு கட்டிப்போடும் இடமாக அந்த சிறிய நூலகம் நாளடைவில் மாறி இருந்தது.

ஒவ்வொரு மாலைப் பொழுதிலும் வீட்டு முன்றலில் ஓங்கிசந்து நின்ற வாகை மரத்தின் கீழ்தான் சொற்பொழிவுகள் பனிப் போல பொலிந்தன. லெனின் வாழ்க்கைச் சரிதம், பிடல் கஸ்ராவின் சரிதம், சேகுவேராவின் சரிதம், காந்தி, மால்கம் எக்ஸ், நெல்சன் மண்டேலா என மாபெரும் ஆளுமைகளின் வாழ்க்கைச் சரிதமும் சோதனையும் சாதனையும் உருக்கமாக மொஹிதீன் வாயிலிருந்து மடைதிறந்து பாய்ந்தன. உறைந்த மருட்சியான விழிகளோடு சின்னமீன்கள் மொஹிதீனைச் சுற்றி மொய்த்திருந்தனர். மொஹிதீன் அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் சுடர் ஒளி பிரகாசித்துக் கொண்டிருப்பதை தெளிவாகக் கண்டான். ஒவ்வொரு நாளும் சந்திப்பின் முடிவுரையாக கார்ல்மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்துவிடுவான்.

“கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அதுவே மாபெரும் சக்தி” அந்த வார்த்தைகள் சின்னமீன்களை நோக்கிப் பாயும் போது அவர்களின் தொண்டைக்குழிகள் ஏறி இறங்குவதை மொஹிதீன் அவதானித்தான்.

இப்படியே மன்றத்தில் புரட்சிகரமான கருத்துகளும், அனல் பறக்கும் விவாதங்களும் வீட்டின் முன்றலில் வெடித்துக் கொண்டிருந்தன. மொஹிதீனின் வயதான தாய் தொடர்ந்து தேனீர் ஊற்றியே சலிப்படைந்தாள். வாப்பா சற்று சத்தமாக எச்சில் காறித் துப்பத் தொடங்கினார். மாமரக் கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் சோர்வாக ஆடியபடி பீடி அடித்துக் கொண்டு வாப்பா எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தார். அவர்தான் அந்தப் புரட்சியின் முதல் பார்வையாளராக இருந்தார். உண்மையான ஒரு தொழிலாளியின் முன்னால் அந்தப் புரட்சிக் குழந்தை உதயமாகிக் கொண்டிருப்பதாக மொஹிதீன் தன் தோழர்களுக்கு மகிழ்ச்சியாகச் சொன்னான். அப்போது வாக்குரிமை பெற்றிராத தோழர்கள் அவனையும் வாப்பாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். ஆனால் வாப்பாவின் முகத்தில் வேறொரு ரேகை ஓடுவதை அவர்களால் மங்கிய ஒளிப் பொழுதுகளிலும் கூட துல்லியமாகக் காண முடிந்தது.

மொஹிதீன் தன் புரட்சிக்கனவின் முதல் அடியை தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் தேர்தல் காலத்திலிருந்தே தொடங்குவதற்கு முடிவு செய்தான். நெருங்கி வந்த மாகாணசபைத் தேர்தலும் அவனது புரட்சிக் கனவும் கிட்டத்தட்ட ஒரு சமகாலத்தில்தான் நிகழ்ந்தன.

மொஹிதீன் தன் சின்னமீன்களை அழைத்து லெனினைப் போலவே தன்னைப் பாவனை செய்துகொண்டு உரத்த குரலில் சொன்னான்.

“மாகாண சபத் தேர்தல் வருது. போர் முடிஞ்சி நடக்கிற முதல் மாகாணசபத் தேர்தல் இதுதான். அதால மக்களுக்கு இதெப்பத்தி பெரிசாத் தெரியா. அரசாங்கம் நம்மல நல்லா ஏமாத்தப் போகுது. யாருக்கு முதலமைச்சர் என்ட போட்டியும் நடக்குது. சுவரா முதலமைச்சர் நமக்கு கிடைக்காது. ஏனுண்டா அரசாங்கம் சர்வதேசத்துக்கு காட்ட வேண்டி இருக்கு. அப்ப நாம எப்புடி இந்த எலக்ஷன சந்திக்கிறண்டு மக்களுக்கு அறிவூட்டனும். அதுக்குப் பிரசுரம் ஒன்று வெளியிடனும். முத முதல்ல லெனினும் இப்புடித்தான் கிளர்ச்சிக்கான துண்டுப்பிரசுரத்த வெளியிட்டாரு. பிரசுரத்த நாளைக்கு அச்சுக்கு குடுக்கனும். வார வெள்ளிக் கிழம ஜூம்மாவுல மூணு பெரிய பள்ளிலயும் பிரசுரத்த குடுப்பம்”

அப்போது அவன் கழுத்து நரம்புகள் புடைத் தெழுந்ததையும், குரலில் ஒருவித முரட்டுத்தன்மை நிறைந்திருந்ததையும் சின்னமீன்கள் கவனித்தன. அது அவர்களை மேலும் திடப்படுத்திற்று. தோழர்கள் வேகமாகத் தலையசைத்து சம்மதம் கூறினர். யார் யார் எந்தப் பள்ளியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது என்ற தீர்மானமும் எட்டப்பட்டது.

மொஹிதீன் சில நிமிடங்களிலேயே 15 பக்க சிறுபிரசுரமொன்றை எழுதி முடித்தான். “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அதுவே மாபெரும் சக்தி” என்ற கார்ல்மார்க்ஸின் கூற்றை பிரசுரம் மகுட வாசகமாகத் தாங்கி நின்றது. அசுரவேகத்தில் பணிகள் நடந்து முடிந்தன. உள்ளூர் அச்சகமொன்றில் 500 கொப்பிகள் அச்சடிக்கப்பட்டு மூன்று பள்ளிகளுக்கும் பிரிக்கப்பட்டு தோழர்கள் தொழுகையாளிகளோடு தொழுகையாளிகளாகக் கலந்தனர்.

சின்னமீன்கள் செட்டை அடித்துக்கொண்டு ஊரின் மூன்று பிரதான ஜும்மாப் பள்ளிகளின் முன்னால் நின்று கொண்டு தொழுகை முடிந்ததும் சிறுபிரசுரத்தை விநியோகிக்கத் தொடங்கியது. அதுதான் அவர்களின் முதல் அரசியல் பணி. முகங்களில் அத்தனை மலர்ச்சி. தேர்தல் காலமென்பதால் இது போன்ற பிரசுர விநியோகம் பள்ளிவாசல்களில் சூடுபிடிப்பது வழமையானதுதான். ஆனாலும் இந்த புத்தக வடிவிலான பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டவர்களின் முகங்களில் ஆழமான ஆர்வம் பெருகி இருந்ததை சின்னமீன்குஞ்சுகள் அவதானித்தன. அந்த ஆர்வம் சின்ன மீன்குஞ்சுகளை கொஞ்சம் அதிகமாகவே உற்சாகப்படுத்திற்று. பள்ளிக்கு வந்திருந்த ஊரைச் சேர்ந்த அமைச்சரின் கைகளுக்கும் சின்னமீன் குஞ்சொன்று தங்கள் பிரசுரத்தை தைரியமாக நெருங்கிச்சென்று சேர்ப்பித்துவிட்டிருந்தது. அமைச்சர் சின்னமீன் குஞ்சின் முகத்தை நிதானமாக உற்றுப் பார்த்துக் கொண்டே பிரசுரத்தை வாங்கிக் கொண்டார். தேசிய இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் ஊர்ப் பொறுப்பாளரான நாஸிமுக்கும் பிரசுரம் கொடுக்கப்பட்டது.

அன்று பின்னேரம் தோழர்கள் மொஹிதீனின் வீட்டில் கூடினர். தாங்கள் எப்படி எப்படியெல்லாம் பிரசுரங்களை விநியோகித்தோம் என சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அமைச்சருக்கும் கொடுத்து விட்டோம் என்பது சின்ன மீன்களுக்குப் பெருமிதமாக இருந்தது. மொஹிதீன் அவர்களது பேச்சுகளை இரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது மொஹிதீனுக்கு லெனின் தனது முதல் துண்டுப் பிரசுரங்களை தோழர் பாபுஷ்கியிடம் இரகசியமாக விநியோகிப்பதற்காக கொடுத்துவிட்டு சொன்ன வார்த்தைகளை யாரோ காதருகில் நெருங்கி நின்று சொல்வதைப் போல் உணர்ந்தான்.

“இதுதான் நமது முதலாவது கிளர்ச்சித் துண்டுப் பிரசுரம். நலமே ஆகுக, பாபுஷ்கின்!”

அந்த வார்த்தைகள் ஈர இலைகளைப்போல் அவனைத் தடவியபோது கண்கள் அநிச்சையாகத் தாழ்ந்தன. சிறிது நேரம் அவனால் எதுவும் பேசமுடியவில்லை. சூழல் குறித்த எந்தப் பிரக்ஞையுமற்று சில நிமிடங்கள் அப்படியே உறைந்திருந்தான்.

சின்னமீன்களின் கலகலப்பான குரல் ஒலிகள் அடங்கியதும் தாழ்ந்த குரலொன்று தன்னை நோக்கி கேள்வி ஒன்று கேட்பதை மொஹிதீன் திடீரென்று உணர்ந்தான்.

“பிரிண்டிங் செலவு எவ்வளவு சேர்?”

“5000 ரூபா” மொஹிதீன் கேள்வி கேட்ட மீனை உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னான்.

“ஆனா..வேறு யாரும் நிதி உதவி தந்தா நாம அத இப்ப ஏத்துக்கக் கூடாது” என்று திடீரென முளைத்த ஒரு மிடுக்கோடு மொஹிதீன் சொன்னான்.

“ஏன் சேர்?” சின்னமீன் குஞ்சுகள் மிகவும் நிதானமாகின.

“பணத்தால நம்மள யாரும் வாங்க இடமளிக்க ஏலாது” ஒரு முழக்கம் போல மொஹிதீனின் குரல் அதிர்ந்தது. சின்ன மீன்கள் ஒருவரை ஒருவர் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டனர். அவர்களின் கண்களிலும் அப்போது ஏதோ ஒரு ஒளி துலங்கியது.

“கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அதுவே மாபெரும் சக்தி என்று கார்ல்மார்க்ஸ் சொல்லிருக்காருலா. காச விட கருத்துக்குத்தான் வலிமை அதிகம்”

உணர்ச்சிகள் நிரம்பி இருந்த கண்களோடு சின்னமீன் குஞ்சுகள் மொஹிதீனின் குரலை நிதானமாக உள்வாங்கிக் கொண்டே இருந்தன. அவர்கள் முகங்களில் மொஹிதீன் ஒருபோதும் சலிப்பைக் கண்டதில்லை. அது மேலும் அவனை உற்சாகமான மனநிலைக்குக் கொண்டு சென்றது.

அப்போது வேண்டப்படாத குரலாக உம்மாவின் குரல் கூட்டத்தைக் கலைப்பது போல் ஒலித்தது.

“மொய்தீன் போய் கறி எண்ணையும்  வாங்கிட்டு வாவன். பகலும் ஒண்டும் ஆக்கல..”

இப்போ அதுவா முக்கியம் என்பதைப் போல மொஹிதீன் உம்மாவைப் பார்த்தான். உம்மாவுக்குக் கொஞ்சம் விவரம் குறைவுதான் என்பது மொஹிதீனுக்குத் தெரியும். இடமறிந்து அவளால் ஒருபோதும் பேச முடிந்ததே இல்லை. அதற்காக மொஹிதீன் அவர் மீது கோபப்பட்டதும் கிடையாது. ஏனென்றால் அவர் எதையும் வேண்டுமென்று செய்வதில்லை என்பது அவனுக்குத் தெரியும். தன் புரட்சிக்கு அவரால் எந்த இடையூறு நேரப்போவதில்லை என்பதையும் அவன் அறிவான். அதோடு முடித்துக் கொள்ளாமல் அங்கேயே நின்று கொண்டு மறுபடியும் “பகலும் ஒண்டும் ஆக்கல” என்று உம்மா சொன்ன போது ஒரு சின்ன மீன் குஞ்சு ‘க்ளுக்’ என்று சிரித்ததை மட்டும் சற்றுத் தாமதமாக மொஹிதீன் கவனித்தான்.

அடுத்த நாள் மொஹிதீன் புரட்சிக்கான முதல் விதையின் எதிர்வினையைக் காணலானான். பலரிடமிருந்தும் பாராட்டுகள் வந்தன. அவன் பிரசுரத்தில் சொல்லி இருப்பவைதான் உண்மை என்பதை தாங்களும் நம்புவதாக நேரிலும், தொலைபேசியிலும் அவனுக்கு புகழுரைகள் வந்தடைந்தன. மொஹிதீனுக்கும் சின்னமீன்களுக்கும் அது ஒரு நல்ல சகுணம் போல் தென்பட்டது. தேர்தல் முடிந்து அதிலுள்ள விசயங்கள் உண்மையில் நடந்து முடிந்தபோது இன்னும் ஆதரவு கூடியது. இப்போது தோழர்களை மேலும் விரிவுபடுத்தி தனது நண்பர்களையும் இணைத்துக்கொண்டு இயக்கமாக அதனைத் தொடங்கினான். மக்களுக்கான அரசியல் செயலியக்கம் என அது பெயர்சூட்டப்பட்டது. சிலநாட்களிலேயே அதன் இரண்டாவது பிரசுரமும் ளெியிடப்பட்டது.

மொஹிதீனின் புரட்சிகர அரசியல் இயக்கத்துக்கு ஆதரவுகளைப் போலவே எதிர்ப்புகளும் பெருகலாயின. இஸ்லாமிய இயக்க நாஸிமுக்கு மொஹிதீனின் இயக்கம் சற்று உறுத்தலாக மாறியது. தங்களது இயக்கத்தால் கூட இன்னும் ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்க முடியாமல் இருக்கும் போது மொஹிதீன் தொடங்கி இருப்பது அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. மனதுக்குள் காழ்ப்பு குமிழியிட்டது. இதயம் சுருங்கிச் சுருங்கி அடித்தது. இதனால் மொஹிதீனின் சின்னமீன் குஞ்சுகளை அழைத்து மூளைச் சலவை செய்தார்.

“தம்பிமார், இந்தக் கம்யூனிசப் புரட்சியெல்லாம் நம்மட ஊருக்குச் செரிவராது. நீங்க படிக்கிற வேலயப் பாருங்க. முதலாவது இது நம்மட மார்க்கத்துக்கே முரண். ஈமான் இல்லாதவங்கதான் அதிலெல்லாம் போவாங்க. அவங்களுக்கு கார்ல் மார்க்ஸ்தான் கடவுள். அல்லா இல்ல. மதமே கூடாதுண்டு சொல்வானுகள் இந்தக் கம்யூனிஸ்டுகள்”

“சேர் எங்களுக்கு மதம் கூடாண்டு சொல்லலேயே..” ஒரு சின்னமீன் குஞ்சு வாய் திறந்தது.

“இப்ப சொல்லாட்டியும் புறகு சொல்லுவானுகள். அதோட இது நம்ம நாட்டுக்குப் பொருத்தமுமில்ல. அது ரஷ்யாக்குத்தான் செரி“ நாஸிம் சின்ன மீன்குஞ்சுகளை தந்திரமாகப் பேசி மொஹிதீனின் பிம்பத்தையும் கம்யூனிச சித்தாந்தத்தையும் மீன்குஞ்சுகளை விட்டும் அகற்ற முயன்றார். சின்னமீன்கள் எதுவும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் நேராக மொஹிதீனிடம் வந்து தகவல் சொன்னார்கள். மொஹிதீன் இதெல்லாம் அவன் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்பதைப் போல மிக அலட்சியமாக செவிமடுத்தான்.

“இதெல்லாம் நம்ம நாட்டுக்குச் செரிவராதாம் சேர். ரஷ்யாவுக்குத்தான் இது செரியாம் என்று சொல்றாரு நாஸிம்”

“அப்ப இஞ்ச எது செரி? எகிப்தில தோன்றுன இயக்கம் இஞ்ச செரியா? இல்லாட்டி பாகிஸ்தான்ல தோன்றுன இயக்கம் இஞ்ச பொருந்துமா? அதத்தான அவங்க இஞ்ச பேசிட்டிருங்காகங்க”

மொஹிதீன் சின்னமீன்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தான். மொஹிதீன் சொன்னவை சின்னமீன்களுக்கு பிடி எடுத்துக் கொடுப்பதாக இருந்தது. சீர்கெட்ட அரசியலில் நாஸிமின் இயக்கத்தால் ஒரு துளியளவு மாற்றத்தையேனும் ஏன் இதுவரை செய்ய முடியவில்லை என்று சின்னமீன்கள் தங்களையே ஒருமுறை கேட்டுப் பார்த்துக் கொண்டனர்.

“இதெல்லாம் புரட்சிப் பாதையில் சகஜம்தான். நாமதான் உறுதியா இரிக்கனும்” மொஹிதீன் உற்சாகமான வார்த்தைகளை விட்டு விட்டுப் பொழிந்தான். அது அவர்களின் எண்ணங்களை மேலும் திடப்படுத்திவிட்டன. நாஸிமுக்குச் சொல்வதற்கு இப்போது தங்களிடமும் விசயங்கள் உள்ளன என்பதைப் போல் அவர்கள் திரும்பிச்சென்றனர்.

மொஹிதீனுக்கு கலியாணப் பேச்சுகளும் வீட்டில் சாடைமாடையாய் தொடங்கின. எனினும் அவன் அதில் ஆர்வமற்றிருந்தான். புரட்சி பற்றிய உணர்வெழுச்சியின் உச்சத்தில் அவன் அப்போது இருந்தான். அதனால் வீட்டில் யாராலும் அவனை திருமணத்துக்கு இசையச் செய்ய முடியாமல் போனது. ஊரில் அவனை ஒத்தவர்கள் திருமணம் முடித்து மூன்று, நான்கு பிள்ளைகளோடு இருப்பதாக உம்மா ஒப்பாரி வைத்தாள். சின்னமீன்கள் உம்மாவின் ஒப்பாரியை விறைத்த மனதோடு எதிர்கொண்டனர்.

மொஹிதீன் தன் சின்னமீன்களுக்குச் சொன்னான் “நம்மட சித்தாந்தத்தின்படி குடும்பம் எல்லாம் தேவை இல்லாதது. அதெல்லாம் ஒழித்துக்கட்டணும்” அப்போது மொஹிதீனின் கையில் குடும்பம் அரசு தனிச்சொத்து எனும் புத்தகம் இருந்தது. மொஹிதீனுக்குக் கலியாணம் பேசி வந்த நண்பன் ஒருவன் எரிச்சலில் சொன்னான்.

“மொஹிதீன்ட மண்டைக்குள்ள புத்தகம் மட்டுந்தான் இரிக்கு. வேறொண்டுமில்ல“ அதைக் கிட்டத்தட்ட மொஹிதீனின் தந்தையும் தாயும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். சின்னமீன்கள் மௌனமாக இதை எல்லாம் கடந்து செல்லப் பழகி இருந்தனர். புரட்சிப் பாதையில் அவர்கள் கற்றுக்கொண்ட பெரும் பாடம் அது.

லெனினுக்கு மரணமில்லை புத்தகத்தின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மொஹிதீனுக்குள்ளிருந்து வழிந்திறங்கத் தொடங்கியது. அவனது வாசிப்பு விரிவடைந்து அனுபவங்கள் பலபல முகிழ்த்த போது ஒருவித முதிர்ச்சி அவனுக்குள் ஏற்பட்டதைப் போன்று உணர்ந்தான். அது அவனை சதாவும் ஆழமாக சிந்திக்கத்தூண்டிக் கொண்டே இருந்தது. இயக்க செயற்பாடுகளில் அவனுக்கு ஒரு திடீர் தளர்வு ஏற்பட்டுவிட்டது. அவன் பயணம் சரியானதுதானா? என்றொரு கேள்வியை அவனுக்குள்ளிருந்து யாரோ சதாவும் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான். உடனடியாகத் தாக்கும் சிந்தனைகளும், கோட்பாடுகளும் காலப்போக்கில் நடைமுறையில் முழுமைப்படுத்த முடியாத போதாமையுடன் தத்தளிப்பதாக இப்போது தீவிரமாக நம்பத் தலைப்பட்டான். முதிராத அவனின் இளவட்டத் தோழர்களான சின்னமீன்களையும் முரட்டுத்தனமாக இப்படி மூழ்கடித்துவிட்டேனே என்ற குற்றவுணர்ச்சி அவன் இருதயத்தில் ஓங்கி அறைந்தது. விளக்கொளியில் வந்து மோதும் விட்டில்களைப் போல இப்போது மொஹிதீனுக்கு அவர்கள் தோன்றினர். அவர்களுக்காக அந்த வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டவனுக்கு அதை மூடி விடுவதற்கான மார்க்கங்கள் எதுவும் தட்டுப்படாமல் தடுமாறினான்.

அந்த நாட்களில் மொஹிதீனுக்குத் திருமணமும் ஆனது. அவன் தன் தாய் வீட்டிலிருந்து திருமணம் முடித்துக்கொண்டு பள்ளிவாயல் தெருவுக்குச் சென்று விட்டான். சின்னமீன்களை சந்திக்கவும் நேரம் இல்லாதவனைப் போன்று மிக பிஸியாக உலாத்தினான். புரட்சிப்பால் குடித்து வளர்ந்த சின்னமீன்கள் தாகத்துடன் சில நாட்கள் மொஹிதீனைச் சுற்றி வந்தன. மொஹிதீனை பெரும்பாலான நாட்களில் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. புரட்சிக்கு ஒவ்வாத சூழ்நிலைமைகளால் மொஹதீன் சிறைப் பிடிக்கப்பட்டு விட்டான். சின்னமீன்களின் வரவு நாளடைவில் குறைந்து குறைந்து பின் இல்லாமலே ஆகிவிட்டது.

சின்னமீன்கள் இப்போது புரட்சிப்பாதையை விட்டு விலகி தன்னைப் போல் வாழ்க்கையை விளங்கிக் கொண்டு விட்டனர் என மொஹிதீன் எண்ணினான். அது அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. சின்ன மீன்களை அவன் கண்டே பல நாட்கள் கடந்து விட்டன.

அன்று வெள்ளிக்கிழமை மொஹிதீன் ஜும்மாப் பள்ளியை விட்டும் வெளியேறிய போது நுழைவாயிலில் சிறுகூட்டம் நின்றது. மொஹிதீன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளிவாயிலை நோக்கி மெதுவாக நடந்தான். வாயிலில் புதிய பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவன் கைகளுக்கும் ஒரு பிரசுரம். கொடுத்தவனை நிமிர்ந்து பார்தான். மொஹிதீன் தன்னை திடீரென்று ஒரு சுழிக்காற்று ஆவேசமாகத் தீண்டியதைப் போல் சில்லிட்டான். அது அவனது சின்னமீன் குஞ்சுகளுள் ஒன்று. அவன் ஒரு இளநகையுடன் மொஹிதீனின் முகத்தைச் சாதராணமாகப் பார்த்தான். கூட்டம் நெருக்கியது. மொஹிதீனால் அவனுடன் எதுவும் பேசிக் கொள்ள முடியவில்லை. ஒரு கனத்த மௌனம் குற்றவுணர்ச்சி போல் அவன் மீது கவிழ்ந்தது. தெருவில் இறங்கி வீடு நோக்கி நடந்தான். சற்றே நடந்ததும் அந்த சின்னமீன் குஞ்சைத் திரும்பிப்பார்க்க வேண்டும் என்றவொரு உணர்வில் திரும்பிப் பார்த்தான். அவன் பிரசுரங்களைக் கொடுத்து முடித்து விட்டு விருட்டென்று சைக்கிளில் கெந்தி ஏறி மிதிக்கத் தொடங்கினான்.

“கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அதுவே மாபெரும் சக்தி” மொஹிதீனின் உதடுகள் தானாகவே முணுமுணுத்துக் கொண்டன.

ஜிஃப்ரி ஹாசன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாசன்
எஸ் .நளீம்

 

 

(Visited 314 times, 1 visits today)
 

2 thoughts on “சின்னமீன்கள்-சிறுகதை-ஜிஃப்ரி ஹாசன்”

Comments are closed.