போருக்குள்-சிறுகதை-தமிழ்க்கவி

தூரத்து மின்னல் இப்போது ஒளி மங்கிக் கொண்டிருந்தது. என்றாலும் விடியும் நேரம், அந்தப்பகுதி வானில் பென்னம் பெரிய அளவில் நிலத்திலிருந்து மேலெழும் கரும்புகை கீழே ஊசிமுனையும் மேலே பந்து போலவும் அலையும் காற்றில் சுருள்சுருளாக பரவிக் கொண்டிருந்தது.

“அக்கா இதுவரையில நாலு குண்டு போட்டிருக்கிறானக்கா.”

தமிழ்க்கவி
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

“விடிய விடிய செல்லடிச்சு துடைச்ச இடந்தானே எங்கயும் சந்தேகமான இடமா இருக்கும்” செல்வி தன் துப்பாக்கியின் பெரலை சுத்தம் செய்து கொண்டே சொன்னாள்.

“அக்கா பெரல் இழுக்க இதே நேரம்? முதல் ஏதாவது சாப்பிடுங்க. ரெண்டு நாளா நீங்க சாப்பிடயில்ல.” மதுரா தன் பொறுப்பாளரிடம் கெஞ்சுவது போல கூறினாள்.

“என்ர அம்மா ஒரு பழமொழி சொல்லுவா,”  செல்வி சிரித்துக்கொண்டாள். பின் தொடர்ந்து, “ இஞ்ச பார்பிள்ளை வேகிற உடலுக்கு வெள்ளியென்ன செவ்வாயென்ன” என்ன சொல்ல வருகிறாள்.

இருப்பது ஒன்றும் சமைத்த உணவல்ல. எங்கோ தொலைவிலிருந்து களமுனைக்கென மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட ‘உலர் உணவுகள்’ என்று அவர்கள் குறிப்பிடும் தட்டு வடை, லட்டு இறைச்சிப் பொரியல், பயற்றம்மாவு, முட்டைமா போன்ற உணவுகள்தான். சிறு சிறு பொதிகளாக்கி அதையும் கோல்சரில் ஒருபக்கமாக திணித்துக் கொண்டு முன்னரணுக்குப் போவார்கள். அப்பப்ப இடைவெளி கிடைத்தால் வாயில் போட்டுக் கொள்வதுதான்.

சண்டை நடக்கும்போது சாப்பாடு கொண்டு வரும் வாகனங்கள் ஏராளமான தடைகளைத்தாண்டி வரவேண்டும். அது சாத்தியமேயில்லை. சில நேரங்களில் அந்த வழங்கல் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதுண்டு. சண்டையில முன்னுக்கு நிக்கிறவர்களைவிட ‘சப்ளை’-க்கு நிக்கிற ‘டீம்’தான் அழிக்கப்படுவது அதிகம். பொதுவாக ‘சப்ளை’-யை துண்டிப்பதே வெற்றிக்கு வித்தாகும். ஆயுதமில்லாமல், சாக்குப்படுக்கைகளுடன் காயமடைந்தவர்களை தூக்கிச் செல்வது, உணவு கொண்டு வருவது, இறந்த உடல்களை எடுத்துச் செல்வது, ரவைகள், எறிகணைகளை முன்னரங்குக்கு நகர்த்துவது என ‘சப்ளை’டீம் முக்கிய கடமையாற்றினாலும், யுத்த முடிவில் அவர்களுக்கு எந்த கவுரவமும் கிடைக்காது. “நாங்க அடிபடக்க நீ சப்ளையில நிண்டநீதானே” என்ற கேலிப்பேச்சு அவர்களுக்கு.

செல்வி சாப்பிட முனையவில்லை. ‘இப்ப நாங்க முன்னுக்கு போறம். திரும்பி வராமப்போனா அந்த உணவு இருக்கிற பிள்ளையளுக்கு உதவும்’ என்று நினைத்தவாறே அவள் தன்னிடம் குறையாக இருந்த காரப்பொடியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள். அப்படியே துப்பாக்கியைப் பொருத்தி குறிகாட்டியை சரிபார்த்து பெரலை பூட்டி சேப்டியைத்தட்டி மடியில் வைத்துக் கொண்டாள்.

“எத்தினை மீட்டருக்கை பிக்ஸ் வைச்சியள்?”

“வழக்கம்போல நூறுதான்.”

“அக்கா ரெடியாக இருக்கட்டாம். உங்கட வோக்கிய ஓன் பண்ணி வையுங்க.”

“ஆர் சொன்ன?”

“அக்கா மேல தண்ணிப்பக்கத்தால”

“நகரத்தால் செய்தி இல்லையே….?”

“நகரத்தில இன்னும் நடக்குதாம்? வித்ரோ பண்ணப் போற மாதிரி தெரியுதக்கா.”

செல்வி மௌனமானாள். அது சிறந்த முடிவுதான் அந்தப்பகுதியில சேதம் அதிகமா இருக்கிறதாக் கேள்வி. அதை கைவிட்டா……,

“கைவிட்டா கஸ்டமக்கா. அவங்கள் நிக்கிற இடம் பாலமோட்டை. அதைவிட்டா குஞ்சுக்குளம் வழியா பனங்காமம் வந்திடுவாங்கள்.” நந்தினி பதறினாள்.

“சூ….. பனங்காமம் எங்ககிடக்கு? ஆத்திமோட்டை எங்க கிடக்கு?”

“அக்கா பனங்காமம் மன்னர்காலத்து வீதி, இப்ப பாழ்பட்டுக்கிடக்கு. ஆனா அங்க வந்திட்டா அவன் எங்க திரும்புவான் எண்டத கண்டு பிடிக்கேலாது.” அவள் அந்தப் பிரதேசவாசி தன்னறிவுக்கு எட்டியதைப் பேசினாள்.

“சரிசரி எல்லாரும் திட்டம் போடுறத விட்டிட்டு மேலிடத்தால வாற திட்டத்தை செயற்படுத்துவம், எல்லாம் ரெடியா?” செல்வியின் கட்டளையை அறுபது போராளிகளும் ஏற்றுக் கொண்டு தயாராகினர்.

“எல்லாரும் சாப்பிட்டாச்சா’

“இல்லக்கா இன்னும் கொஞ்சப்பேர் …”

“ட்டா…….ய் ஆற்றா அது. போய்ச்சாப்பிடு……..அங்கவந்து மயங்கி விழப்போறியளே ?”

செல்வியின் அதட்டலைத் தொடர்ந்து உணவுப் பொட்டலங்கள் பிரிந்தன.

இது ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் சென்று மக்களோடு கலந்து வாழ்ந்து கொண்டு தாக்குதல்களை செய்வதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட குழு. இதற்கு பொதுவாக வழங்கி வந்த பெயர் “யாழ்செல்லும் படையணி” அல்லது ‘பிஸ்டல்டீம்’. கடந்த மூன்று  வருடங்களின் முன் பரந்தனைக்கைப்பற்றி சாதனை படைத்த படையணி. அதன்பின்னரே இவர்கள் கட்டம் கட்டமாக வலிகாமத்திலும், தென்மராட்சியிலும் களமிறக்கப்பட்டர்கள்.

இப்போது ஆட்பற்றாக்குறை நெருக்கடியில் இந்த தாக்குதலுக்குள் அவர்களும் இறங்கியுள்ளனர். பெரும்பாலும் வன்னிக்காடுகளையும் வன்னியையும் தெரிந்தவள்தான் செல்வி. அவள் வவுனியா மாவட்டத்தின் அரசியல் வேலைகளில் முன்று வருடங்கள் நின்றிருக்கிறாள். ஆனால் இந்த மன்னார் மாவட்டப் பாதைகளுக்கும் வவுனியாக் காட்டுபாதைகளுக்குமான தொடர்பு அவள் அறியாததுதான். இதேபிரச்சனைதான் கண்ணனுக்கும்,

“அண்ணை கல்மடுப்பக்கமும் பாதுகாப்பில்லை. நாங்கள் குஞ்சுக்குளத்தை பலப்படுத்தியே ஆகவேணும். ஏனண்ணை நாங்கள் கிழக்கை திரும்பிறம்”

“டேய் கண்ணா, புளியங்குளத்தையும்…”

“அங்க அக்காக்கள் நிக்கினம்.. அவயளோட விடுங்க, அது இப்ப போற போக்கில முக்கியமில்லயண்ணை”

“நீ  இப்ப எனக்கு வகுப்பெடுக்கப்போறியா…..? சொன்னத செய்யுங்கடா. ஆளாளுக்கு கருத்து சொல்ல வாறியள்” சினந்து பேசினாலும், தான் இந்த நேரத்தில போராளியளின்ர நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று நினைத்த வாணன்,

“இதுக்குள்ள வாறவனுக்கு கொள்ளையடிக்க ஒண்டுமிருக்காது. புளியங்குளம் பட்டினமடா. அதை கட்டாயம் பிடிக்கப்பாப்பான். அதோட குஞ்சுக்குளம் வழியா நாங்கள் மூண்டுமுறிப்பை மறிச்சாலும், அவன் ஏன் சிறாட்டிக்குளம் வழியா இலுப்பைக்குளத்துக்க இறங்கேல?

“ஓருக்காலும் இல்லையண்ணை. பாலம்பிட்டிக்காறன் கண்டிப்பா விடத்தல் தீவத்தான் இலக்கு வைப்பான். அது எங்கட வழங்கல் தளமண்ணை.”

“இப்படி அண்ணாவித்தனமா கதைச்சா…அப்ப நீ நடத்தன். நான் போறன்.”என்ற வாணனுக்கு மனதுக்கு பெரிய எரிமலையே வெடித்துக் கொண்ருந்தது. ‘வன்னிக்காட்டான் தனக்குத்தான் எல்லாந் தெரியுமெண்டு கதைக்கிறான். நான் மேலயுள்ளவை சொல்லுறதக் கேக்கிறதோ இவங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறதோ?’ தளபதிகளிடையே இப்படி கருத்து மோதல்கள் இடம்பெறுவது சகஜம்தான் என்றாலும், அங்கே சண்டை நெருக்கடியாக நிற்கிற நேரம். சண்டைக்களத்தில் மட்டுமன்றி மக்கள் பிரதேசத்துக்குள்ளும் ஆழ ஊடுருவி கிளைமோர் வைக்கும் எதிரிகளை எதுவும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்த நேரம். இப்படி ஆழ ஊடுருவும்படை சில நாட்களுக்கு முன்தான் மன்னாரின் முன்னரங்க தளபதி ஒருவரை துல்லியமாக திட்டமிட்டு  கிளைமோரில் கொன்றிருந்தார்கள். சிறந்த தளபதி ‘நல்ல சண்டைக்காய்’ என தலைவராலேயே பாராட்டப்பட்டவர் நடந்து வரும்போதே நிலம் அதிரும் பெரிய ஆகிருதியான தோற்றம் மலை சாய்தது போல சாய்ந்து விட்டார்.

கிழக்கே புளியங்குளமும் மேற்கே ஆத்திமோட்டை எல்லையும் பெண்போராளிகளின் கையில் இருந்தது. ஆட்காட்டிவெளி, வட்டக்கண்டல், மாந்தை கிழக்குப்பகுதிகளில் ஆண் போராளிகளுடன் பெண் போராளிகளும் கலந்து  அங்கிருந்தனர். உள்ளே இந்த வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தது. கண்ணன் எதிர்பார்த்தபடி பனங்காம வீதியை எதிரிப்படை பிடித்தது, கதை கந்தலாகிப்போனது. அதே சமயம் பாலம்பிட்டியும் கைவிடப்பட்டது. இது எதையும் அறியாது, உள்ளே போர் நடந்து கொண்டிருந்தது.

இடையறாது பொழிந்து கொண்டிருக்கும் எறிகணைகளை விலக்க அதன் வீச்செல்லைக்கு முன்னாக நகர்ந்த போராளிகள் நிலையெடுத்தனர். பெரும்பாலும் ஆர்.பி.ஜீ, எல். எம்.ஜீ, எயிற்றிவண் செல்களே களமுனையை அதிர வைத்துக் கொண்டிருந்தன. அன்று காலையிலிருந்து ஓயாமல் இருபுறமிருந்தும் சீறிக்கொண்டிருந்த ரவைகள் இரவு சற்று ஓய்ந்திருந்தன. தொடர்ச்சியாக போரில் உறக்கமின்றி கழித்திருந்த போராளிகளை ஓய்வுக்கனுப்பி, புதியவர்களை களமுனைக்கு எடுக்க முடியவில்லை. அவ்வளவுக்கு போராளிகள் கையிருப்பில் இல்லை. செம்மலைப் பக்கம் நாயாற்றிலிருந்து மன்னார் நாயாறுவரை போராளிகளைப் பரவி வைத்திருக்க வேண்டியிருந்தாலும் இடையிடையே வெற்றிடங்களேயிருந்தன.

பாடசாலைக் கட்டடத்தை அண்டியதாக அமைக்கப்பட்டிருந்த பாரிய பதுங்குழியில் சற்றே படுத்திருந்த ஆனந்திக்கு விழிப்பு வந்தபோது வானில் நட்சத்திரங்கள் அற்றுப்போயிருந்தன. அவள் அணிந்திருந்த ஒருவாரமாக மாற்றாத காற்சட்டையிலிருந்து ரத்தத்துளிகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. கழுவினால் நல்லது போல. பிசு பிசுப்பின் அருவருப்பு பெரிதாக அவளை தாக்க வில்லை அதைவிட களிமண்ணும் மணலும் நிறையவே அப்பியிருந்து உடைகள் கனமாக மாறியிருந்தது. அவள் நேற்று நின்ற “மூவிங்ரெஞ்”சில் நீர் ஊறி ஆங்காங்கு சேறாகிக் கிடந்தது. அதன்மீதே நின்றும் இருந்தும் கிடந்தும் அவள் போரிட்டாள். மாதவிடாய்க்கான பாதுகாப்பு எதுவும் அவர்களிடம் இல்லை. அவள் மட்டுமல்ல இன்னும் சில பெண்கள் அப்படித்தான் நின்றார்கள். போகிற போக்கில் அவர்களில் ஒருத்தியை கவனித்த ஆண் போராளியொருவன்,

“அக்கா காயம் பட்டிருக்கிறியள் போல, கவனிக்காம நிக்கிறியள்.” என்றான்.

அவள் புன்னகை மாறாமல், ‘அது பெரிய காயமில்ல அண்ணன்.’ என்று சமாளித்தாள். என்றாலும் யாரும் அறியாவண்ணம் அருகிலிருந்த மோட்டைக்கு நகர்ந்து போய் தன் உடையோடு நனைந்து, அதன் பாரத்தை கொஞ்சம் அலசினாள். மீண்டும் அவள் தன் பொயின்ருக்கு திரும்ப முனைய, பேரிரைச்சலோடு ஒரு யுத்த டாங்கி அவர்களை நோக்கி வருவதைக்கண்டாள்.விரைந்து சென்று மற்றவர்களை அருட்டினாள். அவர்கள் எழுவதன் முன் அந்த டாங்கி அவர்களைக்கடந்து அவர்களது எல்லைக்குள் பாய்ந்து சென்றது. அதில் இருந்தவன் இவர்களை கண்டதாவே தெரியவில்லை. டாங்கிப்படையை தொடர்ந்து காலாட்படை வருவதற்குள் இவர்கள் தப்பியோடியாக வேண்டும். எப்படி இது எப்படி நடந்தது? முன்னரங்கில் நின்ற போராளிகள் என்னவானார்கள்? எதுவும் தெரியவில்லை. இப்போதுள்ள ஒரே பிரச்சனை இவர்கள் சேதமில்லாமல் அதேசமயம் மாட்டிக்கொள்ளாமல் பின்வாங்கியே ஆக வேண்டும்.

நந்தினி, கட்டளைக்காக காத்திருந்த செல்வியை சந்தேகத்துடன் பார்த்தாள்.

“என்னக்கா ஒரு இடத்தாலும் செய்தி வரயில்லை.”

“உங்கள அரணா வச்சுத்தான் ஏனைய மகளிர் அணி உள்ளுக்க நிக்கிது அவர்களை பாதுகாத்து சப்போட்டா இருக்க வேண்டியது நீங்கதான். உங்களுக்கு நேரடி சண்டையில இடமில்லை. நீங்க பாதுகாப்பணிதான் காரணம், உங்கள வேற ஒரு தேவைக்காகத்தான்  உருவாக்கி வச்சிருக்கிறம். முன்னுள்ள அணிக்கு நீங்கதான் காப்பு” அவர்களை அனுப்புமுன் தலைமையிடமிருந்து வந்த செய்தி அது. சட்டென வட்டக்கண்டல் பகுதியிலிருந்து அழைப்பு.  அது. அவர்களுடைய போராளிகள்தான்.

“நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறம். ஏறக்குறைய இன்னும் கொஞ்ச நேரத்தில பொக்ஸ் அடிச்சிருவாங்கள். உடைக்க தயாரா இருங்க. அறுபத்து நாலில நிக்கிறம். எழுவத்து எட்டிலயிருந்து நூறு வரைக்கும் இடமிருக்கு, அவனும் கிட்ட நிக்கிறான்.”

“இல்ல, இதுவரை காலமும் எவ்வளவு சாதனையளைச் செய்து பேரெடுத்த நான். இப்ப இதை தவற விட்டிட்டு. ஒரு குற்றவாளியா தலைகுனிஞ்சு நிக்க முடியாது. உள்ளுக்கு நூற்றைம்பது பொம்பிளப்பிள்ளையள் நிக்கினம். அவைய நாங்க விட ஏலாது.”

‘வெற்றி அல்லது வீரமரணம்’ செல்வி புறப்பட தயாரானாள் விரைவாக அவர்கள் பொக்ஸை உடைத்து அதே வழியாக போராளிகளை காப்பாற்றுவது என்ற முடிவெடுத்தனர். ஆயினும் குறித்த பிக்ஸை அவர்கள் அடைய வெகு நேரமெடுக்கும் என்பதை கருத்தில் கொண்டு, எதிரி ஏற்கெனவே கைப்பற்றிய பிக்ஸை உடைத்து முன்னேற முடிவு செய்தனர். இருவர் இருவராக பிரிந்த அணியினர் உள்நகர, இடப்புறமாக நின்று காப்புச் சூடு வழங்க, மூவர் கொண்ட இரு அணிகள் ‘எல்.எம்.ஜீ’-யுடன் பக்க வாட்டாக ஓடினர். திடீரென ஏற்பட்ட குறுக்கீடுகளால் எதிரிப்படை சற்றே நிலைகுலைந்தாலும் கடலெனப் பெருகிவந்த காலாட்படையினர் இவர்களை சுற்றி வளைக்க வெகு நேரமெடுக்கவில்லை. பொக்ஸ் உடைக்கப்பட்டது. போராளிகள் பிசாசுகளைப் போல பாய்ந்தனர். அவர்கள் அறுபத்து நாலாவது பிக்ஸை நெருங்க இன்னும் சில மீட்டர்களே இருந்தபோது, அங்கிருந்த போராளிகளை காணவில்லை செல்வியின் குரல் ஓங்கி ஒலித்தது. ‘குப்பியைக் கடியுங்கோ’ நறிச்சென்ற சத்ததுடன் அவளுடைய குப்பி உயிர்விட்டு உயிரெடுத்தது. அறுபது பெண்களும் அவளைத் தொடர்ந்தனர்.

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 158 times, 1 visits today)