காடுலாவு காதை-பாகம் 8-தமிழ்க்கவி

அவசர அவசரமாக வீட்டைக் கட்டினாலும் அதில் வரிச்சு வரிகிற வேலைகள் மிக தாமதமாகவே நடந்தது. காரணம் தமிழர்களின் வாழ்வை அரசியல் புகுந்து புரட்டிப்போட ஆரம்பித்தது.

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு நாடு முழுதும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ச்சியாக விடாமல் மூன்று மாதங்களாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது வெளிமாவட்டங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் அகதிகளாக வவனியாவில் தங்க வைக்கப்பட்டனர். சகல பாடசாலைகளும் நெற்களஞ்சியங்களும் அகதிகளின் தங்கிடமாயின. எனவே தைமாதம் பள்ளிக்கூடம் இல்லை. பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட பங்குனி மாதம் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

அவ்வருடம் விதைத்த வயல்கள் அனைத்தும் வரட்சியில் அழிந்து போனது. என்ன மழை வெள்ளத்தில் சகல குளங்களும் உடைத்துப்பாய்ந்து விட்டதால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. பள்ளமான வயல்கள் மட்டும் ஓன்றுகுத்தியாக விளைந்திருந்தன. அவற்றை பார்த்து ஓடுஞ்சுழியுமாக வெட்டி கையால கசக்கி நெல்லை சேகரித்து சாப்பாட்டுக்காக வைத்தனர்.. வருமானம் எதுவுமில்லை பாக்கியத்தின் நகை அடைவுக்குப் போனது.

இப்பதான் கட்டாயமாக கிணறு ஒன்றை வெட்டியே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. செல்லர் எடுத்திட்டு விட்ட நிலையத்தில ஒரு நல்லநாள் பாத்து கைவைக்கலாம் என்று கந்தப்பு திட்டம் போட்டான். பாக்கியத்துக்கு எட்டாவதாகப்பிறந்த ஆண்குழந்தை எட்டுமாதமாகி யிருந்தது. இந்தக்குழந்தை பிறப்பதற்கு முன்னரே அவள் மிகவும் நொந்து போயிருந்தாள். புருசனை விலக்கி வைக்க படாத பாடுபட்டாள். அவனெங்க,

‘என்னடியப்பா என்ர மனிசியோட நான் போறதுக்கு ஆரைக் கேக்கோணும். ஒரு அஞ்சு நிமிசம் பேசாமக்கிட பாப்பம்.’ என்பான்.

அவள் ஒரு நிரந்தர நோயாளியாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை குழந்தை பெறுவதை மறுக்க முடியாமலிருந்தது.  ஒரு தடவையல்ல அவள் இரண்டு மூன்று தடவைகள் தன் கருவை அழிக்கும் முயற்சியும் செய்திருக்கிறாள். இந்த குழந்தை பிறப்பதற்கு ஐந்து மாதங்கள் முன்னதாக ஒரு கரு அப்படி அழித்திருந்தாள்.

“மெய்யேப்பா இண்டைக்கு நல்லநாள் நான் கிணத்தை வெட்டுவமெண்டு பாக்கிறன்” காலையிலேயெ கந்தப்பு பாக்கியத்திடம் சொன்னான்.

“வெட்டினா தோட்டமெண்டாலும் செய்யலாம், வெட்டுவம்.” என்றாள் பாக்கியம். ஆனால் அவன் பதினைந்து இருபது நாட்களுக்கு முன செல்லரைக் கொண்டு எடுத்த நிலையத்தை போய்ப் பார்த்தபோது அங்கே அவர் இறுக்கிய கூனி காணாமல் போயிருந்தது. என்னப்பா இதில தானே இறுக்கினது. எப்பிடி காணாமப்போகும்?é லெச்சிமி பேசாமல் நின்றாள்.

‘அண்டைக்கொருக்கா மாட புறாவை அந்தத் தடியப் புடுங்கித்தானே கலைச்சனான்’ என அவள் நினைத்தாலும் இப்போதைக்கு சத்தமில்லாம நிக்கிறதுதான் பாதுகாப்பு என்று பேசாமல் நின்றாள்.

“வெறுவாய்க்கில கெட்டதுகள் ஒரு நல்லகாரியம் செய்யறதுக்கு வந்தா …தலையால தெறிச்ச வேல பாத்திருக்குதுகள். சைக், இனி எங்கயப்பா பண்டாரி குளமெங்க நானெங்க பத்துக்கட்டை நடக்க வச்சிட்டுதுகளே” கந்தப்பு புறுபுறுத்தான்.

பாக்கியம் “போனா போகட்டுமப்பா உதில குருநாதியப்பாவ கூப்பிடுவம் அவரும் பிழையில்லத்தானே “ என்றாள்.

மறுபடி வெத்திலபாக்கு பழம் ஊதுபத்தி தெங்காய் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருகிலேயே வெளிக்குளத்தில் குடியிருந்த குருநாதியரை கூட்டி வந்தான் கந்தப்பு. அவரும் காணி முழுதும் நடந்து பார்த்துவிட்டு “கிழக்கை ஒரு நிலையம் இருக்கு மேற்கை ஒண்டிருக்கு கந்தப்பு நீ என்ன சொல்லுறாய்? கிணத்தை போட்டுத்தான் வீட்டு நிலையம் எடுக்கோணும் இல்லாட்டி வளம்  மாறிடக்கூடாது கண்டியோ” என்றார் குருநாதியப்பா.

“கிழக்கை நிலம் தாழ்ந்த பகுதி பிறகு வாய்க்கால்போட எட்டுப்பத்தடி உயத்த வேணும். எனக்கு மேற்கால எடண்ணை தண்ணி கீழ் நோக்கி ஓடும்.”

குருநாதியப்பா மீண்டும் தன்னை ஒரு சுற்று வட்டம் சுற்றிவிட்டு தேங்காயை கையிலெடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு பிரார்த்தனை செய்தபின் மேற்கு நோக்கி நடந்தார். நடுக்காணி கடந்து பதினைந்து யார் கடந்ததும், தவிட்டைமரத்தை கடந்து சில யார் முன்னும் பின்னுமாக நடந்தார். பின்,

“இஞ்ச வா கந்தப்பு. இதில ஒரு கூனி இறுக்கு.” என்றார். கந்தப்பு தயாராக வைத்திருந்த தரணிக்கூனியை அவர்காட்டிய அந்த இடத்தில் இறுக்கினான். அதுதான் செல்லர் காட்டிய இடமும் என்பது தெரிந்தது.

“பதினெட்டு முழத்தில தண்ணி. அதுக்கும் மேல ஒரு எட்டுமுழம் வெட்டினா எந்தக் கோடைக்கும் அசையாது.” குருநாதியப்பா தேங்காயை கூனியருகில் வைத்தார். பாக்கியம் தேநீர் கொண்டு வந்தாள். அனைவரும் மரநிழலில் அமர்ந்து தேநணீர் குடித்தனர்.

“நல்ல நேரம் முடியிறதுக்குள்ள ஒரு பொழி மண்ணை வெட்டிப் விடப்பா” என்றார் குருநாதியப்பா.  கந்தப்பு அந்த தேங்காயை எடுத்து கற்பூரங் கொழுத்தி கும்பிட்டபின் அதில் உடைத்து வைத்தான். எல்லோரும் பயபக்தியாக கும்பிட்டனர். பின் மண்வெட்டியை தொட்டுக்கும்பிட்ட பின். அதை எடுத்து ஒரு கூடை மண்ணை வெட்டிக் கோலி எடுத்து தவிட்டை மரத்துக்கு அப்பால் போட்டான்.

“மெய்யேப்பா………… வீட்டை பங்கை தெருக்கரையில் போட்டது சரியே ?”  என கேட்க,

“மெத்தச்சரி. பிள்ளைகுட்டியள் வருங்காலத்தில மாற்றங்கள் வருந்தானே?”

“என்னண்ணை உப்பிடி சொல்லுறியள் ?”கந்தப்பு வியந்தான்

“தம்பி காணியள் வளருறதில்லை. ஆனா பிள்ளையள் வளரும் பெருகும். இதத்தானே எல்லாரும் வாழ்விடமா வச்சிருப்பினம். இப்ப வெளிக்குளத்தக் காணேல்லயே என்ர காலத்தில ரெண்டேக்கர் இப்ப பெடியள்வளர ஆளுக்கு அரை ஏக்கராச்சே”  என்றவர் தன் பொக்கை வாயால் அழகாக சிரித்தார். வீட்டுக்கும் கிணத்துக்கும் வெகு தூரம். அடுத்த வளவுக்கு தண்ணிக்கு போற மாதிரித்தான். பாக்கியம் நொந்தாள்.

“ஆனா வீடு தெருக்கரை. வாற போறவை காணிக்குள்ள வரத்தேவையில்ல. தோட்டமும் கண்ணூறு படாம இருக்கும்.” குருநாதியப்பா புறப்பட தயாரானார், அவருக்கு இருந்த விளை பொருட்களை கட்டி ஒரு பொட்டலம் கொடுத்து அனுப்பினார்கள். பணம் வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.

தமிழ்க்கவி -இலங்கை

(Visited 89 times, 1 visits today)