போருக்கு முன்பும் பின்னருமான மகளிர் இருப்பு -கட்டுரை-தமிழ்க்கவி

தமிழ்க்கவிபெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை உண்டு வேலைக்குப் போகும் உரிமை உண்டு. சில இடங்களில் உயர் பதவிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இன்னும் ஏன் பெண் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்,அவர்களுக்கு என்னகுறை என்ற குரல் பரவலாக பேசப்படுகிறது.

கையிலே விலங்கிட்டு, நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்து, தான் நினைத்ததைப் பேசவும் தனது கருத்தைச் சொல்லவும் பெண்களில் எத்தனைபேருக்கு சுதந்திரம் உள்ளது?அன்றாட வாழ்க்கையில் எல்லா பெண்களாலும் தாம் வரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறதா? வேலை செய்யும் இடங்களில், போக்குவரத்துக்களில், வீடுகளில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளில் எத்தனை சதவீதம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுகிறது? சம்பவங்களின் அடிப்படையிலும் சட்டரீதியான நடவடிக்கைகளிலும் எத்தனைவீதமான அடக்குமுறைகளையும் சந்திக்கிறோம்.

சமத்துவம் அன்று முதல் இன்றுவரை பெண்களுக்கு கனவுலகில்தான் சாத்தியமாகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியாக அமைந்துள்ள பலம் பலவீனம் என்பதே பெண்களை இன்றும் முடக்கிப் போடுகிறது. இன்றும் வீட்டு வன்முறைகளில் பெண்மீது ஆண்கள் காட்டும் வன்முறைகளில் பெரும்பாலானவை அவர்கள்மீது கையாளப்படும் பலப்பிரயோகமேயாகும். ஆவைபற்றி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களும் பரப்புரைகளும் யாருக்கு வழங்கப் படுகின்றன? அகில உலகமும் பெண்விடுதலை பற்றிய கருத்தரங்குகள் பெண்களுக்கே நடத்தப்படுகின்றன. இம்மாதிரியான கருத்தரங்குகளில் கருத்துரைகள் விரிவுரைகளை நடாத்த சில ஆண்கள் வருகின்றனர். மகளிர் முன்னேற்றத்திற்கான எந்த நிகழ்ச்சிகளிலும் இவர்களது மனைவி மகள் சகோதரி போன்றோர் இந்த நிகழ்சிகளில் பங்கெடுப்பதில்லை. காரணம் ‘ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லமகளே’ என்ற நிலைப்பாடுதான்.

பெரிய பெரியஅமைப்புகள் பெண்விடுதலை பற்றி பேசும் போது ‘மண் விடுதலையோடு பெண் விடுதலையையும், ஒடுக்குமுறைகளுக்கான விடுதலையையும் வென்றெடுப்போம்’ என்று அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறியப் புறப்பட்டவர்களால், இவர்களால் இவற்றுள் எதைத்தானும் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் அதற்காக அவர்கள் முயலவில்லை என்பதாகும்.

பெண்கள் நாடாளுகின்றனரே என்ற உதாரணம் எமக்கும் பேசப்பட்டது. சிறிமாவோ அம்மையார் பண்டாரநாயகா இருந்தவரையில் பவ்வியமான குடும்பப் பெண்தான். விஜயகுமாரணதுங்கவின் அருகே அடக்கமாக நின்றவரே சந்திரிகா. பெண்களின் பக்கத் தூண்களாக ஆண்கள் அவர்களை மறைத்தே நின்றார்கள். ராஜீவ் இறந்த பின்னர்தான் சோனியாவுக்கும் சிரிக்கத் தெரியும் என்பதை உலகம் அறிந்தது. பூட்டோ தூக்கிலிடப்பட்டதன் பின்னர்தான் பெனாசீரை உலகம் அறிந்தது. ஜியாவுல் ஹக் மறைந்தபின்தான் காலிதாவை உதயமானார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். விதி விலக்காக மேல்நாட்டில் கோல்டாமேறர், மாகிரட் தட்சர் என்போரைக் குறிப்பிடலாம்.

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தவரை அவரது இயக்கத்தை சாகாமல் காப்பாற்றி நெல்சனின் விடுதலைக்கு பாடுபட்டவர் வின்னி. நெல்சன் விடுதலையானதும், வின்னிமீது வன்முறைக் குற்றம் சுமத்தப்பட்டது.

இப்படி உலகம் முழுதும் ஆராய்ந்து வரும்போது தமிழீழப் பெண்கள்தான் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். சென்ற இடமெங்கும் வெற்றி வாகை சூடியுள்ளார்கள். களங்களில் எதிரிக்கு எதிராகஆயுதம் ஏந்தி சாதனை செய்தார்கள். இவர்களே விடுதலை பெற்ற பெண்கள். என்ற கோஷம் விண்ணை முட்டியது. உண்மை முக்காலும் உண்மை. போராடத்தில் இணைந்து தம்மை ஆகுதியாக்கிய பெண்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள்.

“பட்டுப்புடவைகள் கட்டும் அழகினை
விட்டு துறந்தவரே -ஒரு
சிட்டுக்குருவியைப்போல உயிரினை
தொட்டுப்பறந்தவரே என்றும்,

“உலகம் தாய்மையின் காலடியில் உருளுகிறது” என்றும் “ வானம் உன் கைகளில்” என்றும் வாழ்த்தப் பெற்ற பெண்கள், உண்மையில் பெண்விடுதலையை அனுபவித்தார்களா………? இது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே எழுந்து நிற்கிறது.

அவர்கள் தமது கருத்தை வெளிப்படையாக பேச முடிந்ததா? அவர்களால் தனியாக படை நடத்தி செல்ல முடிந்ததா? அவர்களுக்கான வாழ்க்கைத்துணையை பணம், குடும்பப் பின்னணி, உயர் பதவி, அழகு , இளமை, இவற்றின் செல்வாக்கில்லாமல் பெற முடிந்ததா? திருமணத்தின் பின் கணவன் அவனுடைய வீட்டாரின் தலையீடில்லாமல் வாழமுடிந்ததா? பெற்ற குழந்தையின் பராமரிப்பில் கணவனது ஒத்துழைப்பைப் பெறமுடிந்ததா?

கணவனது வன்முறையை எதிர் நோக்கியோர் எத்தனைபேர்? பெண்களை பெண்களே அடக்கி வைத்த சம்பவங்கள் எத்தனை எத்தனை? ஓவ்வொரு கேள்வியும் பதில் தேட வேண்டியவைதான். இது ஓர் இராணுவக் கட்டமைப்பு. இங்கே உத்தரவுக்கு கீழ்ப்படிதல் மட்டும்தான். இங்கே கட்டளை இடுபவர் மட்டுமே பேசலாம். என்ற நிலை படையணியில் இருந்தது. திருமணத்தின் பின்னும் இருவருக்கும் பொறுப்பாளர் தலைவர்தான் என்ற நிலை இருந்தது.

1992ல் பெண்கள் தனியாகப் படைநடத்திச் சென்று முதல் தாக்குதலாக கட்டைக்காட்டில் ஆயுதக்கிடங்கை அழித்து சாதனை படைத்தது. அதன்பின் அவர்களுக்கு அப்படிச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

1986ல் முதற் பெண்கள் படையணி பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இவர்களது முதற்களப்போர் விக்டர் தலைமையில் அடம்பனில் நடந்தது. இங்குதான் முதல்முதல் இரு ராணுவத்தினர் உயிருடன் கைது செய்யப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றனர்.

ஆடவர்களைத் தொடர்ந்து அடுத்த அணிக்கான ஆட்சேர்ப்பு நடந்தபோது யாழ்ப்பாணத்துப் பெண்களை உள்வாங்க தலைமை முடிவு செய்தது. முதல் அணியில் பயிற்சி பெற்ற இரண்டு பெண்கள் இதற்காக யாழ்ப்பாணம் சென்றனர். அங்கே கிட்டுவைச் சந்தித்து தமது விருப்பத்தைக் கூறிய போது அவர் தன் முன்னிருந்த மேசையில் ஓங்கிக் குத்தி,

“ என்ன? பெட்டையள் துவக்குத் தூக்கிறதா? நான் இருக்கும் வரைக்கும் யாழ்ப்பாணத்துப் பெட்டையள் சண்டைக்கு வரமாட்டாளவை நீங்கள் போகலாம்” என்று அதட்டினார். பெண்கள் அவமானத்துடன் திரும்ப,

“திலீபனுக்குப்பின்னால கொஞ்சம் பெட்டையள் திரியிறாளவை அங்க கேக்கச் சொல்லு”என்றொருவர் சொன்னார்.

படையணியின் முதற்குழு வன்னியைச்சேர்ந்த பெண்களுடன், யாழ் பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதமிருந்தவர்கள் கடத்திவரப்பட்டனரே. அவர்களில் மதிவதனி தவிர மற்றவர்கள் முதலாம் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

இரண்டாம் அணியில் திலீபனுடன் இயங்கிய சுதந்திரப் பறவைகள் அமைப்பினர் பலர் பெருவிருப்போடு சேர்ந்து கொண்டனர்.விடுதலைப்புலிகள் இயுக்கத்தில் இரண்டாம் மூன்றாம் அணியில் பெருமளவு பெண்கள் இணையவில்லை. எனினும் இரண்டாம் அணியில் பல தளபதிகள் உருவாகி சாதனை படைத்தனர்.

மூன்றாவதாக காதலிக்கவில்லை. மணமுடிப்பதில்லை என்ற கட்டுப்பாடு உடைந்த பின் முதலாவது தலைவருக்கு அடுத்தபடியாக ஒரு போராளிக்காதல் ஜோடி திருமணம் செய்தது. வரிப்புலிச் சீருடையில் மணமக்கள் திருமணம் செய்தனர். தொடர்ந்தும் சில திருமணங்கள் அப்படித்தான் நடந்தது. ஆனால் இதை ஒரு தளபதி தனது திருமணத்தின் போது மறுதலித்தார்.

“அண்ணை நான் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய விரும்புகிறேன். அவை மணமேடையிலாவது சேலை கட்டவேணும். நாங்களே எங்கட கலாச்சாரத்தை கைவிட்டா சனமும் மாறாதே…” என கேள்வி எழுப்பினார்.

சரி சேலை தான் என உறுதியாயிற்று. ஆனால் வசதியுள்ள மணமகள் வறிய குடும்பத்து மணமகள் என்பது மணமேடையில் வெளியாயிற்று. ஆக அதற்கு ஒரு “மீட்டிங்”போட்டோம் அதில் சில தீர்மானங்களை மகளிர் எடுத்தோம். அதாவது மணமகள் இரண்டாயிரத்து ஜநூறு பெறுமதியான காட்டன் சேலை மெல்லிய சரிகைக்கரையுடன் அணியலாம் ஒற்றைப்பட்டு சங்கிலி ஒரு சோடி காப்பு மட்டும் போடலாம். மணமகளை நாம் தான் (போராளி) அலங்கரிப்போம் இதில் பெற்றோர் தலையிட முடியாது. இதிலும் எங்களுக்கு தோல்வி தான்.

தாலி கட்டிய பின் மணமக்களுக்கு ஒருமாத விடுமுறை உண்டு. தாலி கட்டி அவள் வீட்டுக்கு போனதும் சர்வாலங்கார பூஜிதையாக நிறைய நகைகளும் விலை உயர்ந்த சேலைகளுமாக மணமகளை மாற்றினார். அது பெற்றோரது விருப்பமானது.

திருமண வயதில் பெண்கள் தேர்வு செய்யப் படாமல் முதிர்கன்னிகளாயினர். அழகும் இளமையும் உள்ள பெண்களை முப்பத்தைந்து வயது கடந்த ஆண் போராளிகள் தேடினர். அப்படி மூத்த ஆண்களை மணந்த இளம் பெண்களை அவர்கள் சந்தேகத்துடன் நடத்தியதும், சில பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டதும் உண்டு.

பொருத்தம், மதம், குடும்ப பிண்ணனி இவைகள் பெரும்பாலான திருமணங்களில் செல்வாக்கு செலுத்தின. பெரிய பொறுப்பாளர்களை மணந்த போராளிப் பெண்கள் முற்றாக மாறினர். அடக்க ஒடுக்கமாக பதிவிரதைகளாக வாழ்ந்தனர். அவர்கள் வெளியே வருவதே அருகிப்போனது. சாதாரண போராளிகளோ பிரசவத்தின் பின் முற்றாக பெற்றோரை நம்பி வாழவேண்டியதாயிற்று. குழந்தைக்காக ஒரு வருட விடுமுறை பெண்ணுக்கு இருந்தது. அதன் பின் அவள் கடமைக்கு வந்தாக வேண்டும். தன் பிள்ளைகளை யாரிடமும் விட்டுவிட்டு வர முடியாதவர்கள் பிள்ளைகளை முகாமுக்கே கொண்டு வரவேண்டியதாயிற்று. பெரிய விழாக்களிலோ கூட்டங்களிலோ பங்கு பற்றும் போது பிள்ளைகளை தம்முடன் வைத்திருக்க தளபதிகள் பொறுப்பாளர்கள் என்று பார்த்தால்…. தலைவரைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. குழந்தை பற்றிய எந்த பாதுகாப்பையும் தீர்மானத்தையும் தாயே எடுக்கவேண்டியிருந்தது. தந்தையர் வீடுகளிலிருந்து தொலைவான களங்களில் இருப்பதும் ஒரு காரணம்.

கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்தாலும், ஒரேயொரு பெண் தளபதிக்கணவனை தூக்கி யெறிந்து விட்டு வெளியேறி மீண்டும் களம் புகுந்து களப்பணியின் போது சாவடைந்தாள்.

திருமணம் செய்வதாக வாக்களித்து பழகிய பின் விலகுதல் சட்டப்படி குற்றமாகும் .தமிழீழச் சட்டமும் அதை எழுதியிருந்தது. ஆனால் தமிழிழ விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் பலர் அவ்வாறு ஏமாற்றமடைந்தனர். இவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப் படவில்லை. விசாரணை பேச்ச வார்த்தை என இழுத்தடிக்கப் பட்டாலும் பெண்களுக்கு நிவாரணங் கிடைத்ததில்லை. இவை தனிக் கதைகளாக எழுதப்பட வேண்டியவை.

பெண் போராளிகளின் வீர மிகு சாதனைகளும், கடற்புலியாய், களப்புலியாய், கரும்புலியாய் அவர்கள் ஆற்றிய பெரும் வீரதீரச் செயல்களும் உலகமே வியந்து நின்ற அரிய செயல்கள் பெண்ணால் எதுவும் முடியும் என நிரூபித்தனர் தமிழிழப் பெண்கள். சொந்த வாழ்க்கை என்று வந்த போது சாதாரணப் பெண்கள் எதிர் நோக்கிய அத்தனை பிரச்சனைகளையும் அவர்களும் எதிர் நோக்கினர் என்பது வெள்ளிடைமலை. இதுவரை போராளியாக இருந்து நாற்பது வயது கடந்து வெளியே வந்து இன்றும் தனியாக வாழ்கின்றனர் பல பெண்போராளிகள். பெண்விடுதலை என்பது இன்னும் வெகு தூரத்தில்தான் உள்ளது.

தமிழ்க்கவி- இலங்கை

தமிழ்க்கவி

 

(Visited 82 times, 1 visits today)