ஆபாசப் படங்களும் பாலியல் கல்வியும்-கட்டுரை-க.பத்திநாதன்

க.பத்திநாதன்மேன்மைதகு  மனித நடத்தைகளைத் தகர்த்து ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்வியற் கூறுகளைத் தீர்மானிப்பதே, அவர்களை மீதாளடிமையாக்கி இருக்கும் ஆபாசப்படங்கள் தான் என்பதுண்மை. குறித்து நோக்கின் சினிமாப் படங்களை விட ஃபோர்னோகிராஃபி (இயல்பான மனித காம உணர்ச்சியை வெறியாக மாற்றி பல்வேறு வக்கிரங்களோடு மனதை ரணப்படுத்தும்  ஏனைய போதைகளை விட வலிமையா ஒரு போதை.) படங்களே “ஆண்மையை” வன்மமும், வக்கிரமும் நிறைந்ததாக மாற்றி விடுகின்றன. அவையே பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான மிகமோசமான பாலியல் பார்வையைத் தூண்டி விடுகின்றன. நிமிடத்திற்கு நிமிடம் இவ்வாறான தன்மைகளையுடைய படங்களும் கொடுமைகளும் ஈடேறிய வண்ணமே உள்ளன. நானிந்த  கட்டுரையை பதிகை செய்கின்ற இவ்வேளையிலே பல ஒளியூட்டல்கள் உயிர்ப்பு பெற்றிருக்கும். ஆணோ, பெண்ணோ இவ்வாறான போர்னோ படங்களுக்குள் தங்களை தக்க வைத்துக் கொண்டு இருந்தாலும் நாளாந்தம் நடை பெறுகின்ற வன்பாதகங்களுக்கு ஆண்களே பெருவாரியான காரணம் என்பதை ஆணென்ற ரீதியில் உறுதியாகச் சொல்லும் அதே வேளை வெட்கியும் குனிகிறேன்.

ஆய்வுகளின் படி பெரும்பாலான இளைஞர்கள் தங்களை அறியாமலேயே போர்னோ படங்களுடன் தம்மை இணைந்து கொள்வது அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவர் தனக்கு வேண்டிய விடயமொன்றை தேடல் பொறிகளில் அலசும் போது போர்னோப் படங்களைக் கொண்ட இனையப் பக்கங்கள் தானாக தோன்றுகின்றன. குறித்த நபர் அதை விட்டு வெளியேறச் சென்றாலும் அவைகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நாளடைவில் அந்நபர் தானாக அதனுள் அடிமையாகி விடுகின்றார். இது பதின்மப் பருவத்தினரை வெகுவாகப் பாதித்து விடுகின்றது. இன்று சமூகத்தில் பாலியல் வன் கொடுமைகள் கணக்கிட முடியாத வகையில் அதிகரித்த வண்ணமுள்ளன. இதற்குக் காரணம் என்ன?, பெருமளவில் தற்கால இளைஞர்களைப் பொறுத்த வரையில் காமம் என்பது பேசு பொருள் என்ற நிலையில் இருந்து மாறி  காட்சிப் பொருளாகி விட்டதே. இணையம், அலைபேசி, மடிக்கணினி என எதைத் தட்டினாலும் போர்னோப் படங்கள் கிடைப்பது சுலபமாகி விட்டது.

இவ்வாறான இலகு நிலைமைகளினால் தான் போர்னோ படங்கள் இளம் சமூகத்தை அடிமையாக்குகின்றது: இல்லை அடிமைப் படுத்துகின்றது. அடிமைப் படுத்துகின்றது என்பதை சற்று  உற்றுப்பார்க்க வேண்டும். போர்னோ படங்கள் என்பது இளைஞர்களுக்கு இல்லையில்லை ஆண்களுக்கு என்ன சொல்லித் தருகின்றது. “ நீயொரு ஆண்: களவியில் உன்னுடைய ஆண்குறியின் மதிப்பென்பது பெரிது. நீ யாரிடம் உறவு கொள்கிறாய் என்பது பெரிதல்ல. மேலும் நீ புணரக்கூடியவள் ஒரு பெண், உனக்குச் சமனான உயிர், அதற்கும் உணர்ச்சிகள் வலிகள் உண்டென்பதெல்லாம் பெரு விடயமே அல்ல. மாறாக நீ அவளுக்கு வேண்டிய எல்லாம் செய்து விடலாம். அவள் அவையனைத்தையும் விரும்பியே ஏற்கின்றாள் என்ற கேடுகெட்ட எண்ணப்பாய்ச்சலை உண்ணுள் புகுத்தி பெண்ணுக்கு எதிரான வன்முறைகளை வண்ண வண்ணமாக புரியும் மிருகத்திலும் கேடான செயலை செய்ய வைக்கின்றது.

போர்னோ படங்களிலே பெண்ணுக்கெதிரான உச்ச கட்ட ஆணாதிக்கம் வெளிப்படுவதைக் காணலாம். அப்படங்களிலே ஆண்கள் பார்ப்பது பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறையையே. 90 சதவீதமான இப்படங்களிலே ஆணும் பெண்ணும் தங்கள் கைகளைப் பயன் படுத்த அனுமதிக்கப் படுவதேயில்லை. பெண்ணுறுப்பை சகித்துக் கொள்ள முடியாத கெட்ட வார்த்தைகளில் வர்ணிப்பது, அவர்களைக் கட்டாயப்படுத்தி இயற்கைக்கு முரணான வகையில் அமரவோ, படுக்கவோ வைத்து காட்சிப்படுத்தப்படுவது, ஒரு பெண்ணோடு பல ஆண்கள் புனருவது போன்றனவே இடம்பெறுகின்றன. அவ்வாறு திணிக்கப்படும் போது ஒரு பெண் தன்னுடைய சிகையலங்காரத்திற்கு எதுவித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்;ள வேண்டும். காரணம் அப்பெண்ணிற்குப் போடப்படும் அனைத்து சிகையலங்காரங்களும் ஒரு முதலீடு. அது பார்ப்பவரைக் கவரும் படியாக அமைய வேண்டும். போர்னோ படங்களைப் பொறுத்தவரையில் பெண்ணுட்பட அனைத்துமே முதலீடுதான். என்னும் தகவல்களை ஓராய்வு வெளியிட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது பெண்களை மட்டுமே கடுமையாக கேவலப்படுத்துவது புலனாகின்றது.

மேற்கண்ட விடயங்களுடன் படமாக்கப்படுகின்ற படங்களைப் பார்க்கும் போது அது மிகுஇச்சையாகத் தான் தோன்றும். ஆனால் நிஜவாழ்வில் அது சாத்தியமே இல்லை என்பதை இளவயதினர் மறந்து விடுகின்றனர். இவ்வாறானவற்றைப் பார்த்து தமது அன்றாட வாழ்வில் அதைப் பிரயோகிக்கத் தூண்டப்படுகின்றனர். அங்குதான் மனித தன்மையே அற்ற மாபாதகச் செயல்கள் ஈடேறிவிடுகின்றன. மனித இனங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் இஸ்ரேல் நாட்டவரான ‘ரான் காவ்ரியேலி’ போர்னோப் படங்களை பார்க்கும் வழக்கமிருந்தும் அதன் பாதக நிலமைகளை உணர்ந்து பார்ப்பதை நிறுத்தி விட்டு அதனால் தனக்கு உண்டான தீய விளைவுகளை பின்வருமாறு கூறியுள்ளார். “ என்னுடைய சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக் குணமாக மாற்றியது. காதல், திருமணம், பாலுறவு குறித்து எனது சொந்த உறவிலே இது போன்ற எண்ணங்கள் வந்ததேயில்லை. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் நான் காதலிக்கும் பெண்ணிடம் என் காதலை எப்படிச் சொல்லப் போகிறேன், அதற்கு அவளை எங்கே சந்திக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் இவ்வாறுதான் எனது சிந்தனை இருந்தது. ஆனால் இவைகள் அனைத்தையும் போர்னோ படங்கள் வன்மமாக மாற்றியது. மேலும் நான் போர்னோ படங்களைப் பார்ப்பது அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கி காசு உழைப்பவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்துகின்றது..” இவ்வாறான அவரது அனுபவப் பகிர்வானது அனைத்து ஆண்களிடமும் பாதிப்பை உண்டுபண்ணக் கூடிய ஒன்றுதான்.

இதுபோன்ற நிலைமைகளில் இருந்து மீண்டு வரவும், வருங்காலத்தவர்களை விழிப்படையச் செய்யவும் பாலியல் கல்வியை வலியுறுத்துவது மீளாத பொருத்தமாக அமையும் எனலாம். பாலியல் கல்வி என்பது வெறுமனே உடலுறவைப் பற்றி விளக்கும் ஓர் பாடமல்ல. மாறாக ஆண், பெண் உடலியல் சார்ந்த, சமூக உளவியலைப் புரிந்து கொள்வதற்கான, பண்பாட்டுத் தளங்களில் ஆண், பெண் சமத்துவங்களைப் பேணி பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைந்தெறிவதற்கான கல்வியே என்பதனை போதிப்பவர்களும், போதிக்கப் படுபவர்களும் நன்குணர வேண்டும். பாலியற் கல்வி என்று சொல்லி விட்டு எயிட்ஸ் பற்றியும், கருத்தடைக் கருவிகளை எப்படிப் பயன் படுத்துவது என்றும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாத்திரம் பாடமெடுப்பதல்ல. உறவுமுறைத் தாற்பரியங்கள், பாலின சமத்துவம், பாலியல் நடவடிக்கைகள், தொடுதல் வேறுபாடுகள், பதின்மப் பருவ உடலுள மாற்றங்கள் போன்ற விடயங்களை மரபின் அடிப்படையில் விளங்க வைத்தலே பாலியற் கல்வியாகும்.

யுனஸ்கோ தனது ஆய்வாதாரங்களின் படி “ பாலியற் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பதன் மூலம் சமுதாயத்தில் பாலியல் சமத்துவத்தை எட்ட முடியும்.” என்கின்றது. வெவ்வேறு வயதினரையுடைய 300 மாணவர்களிடம் ஆய்வொன்று நடத்தப்பட்ட போது அதிலொரு மாணவி  “ முதலில் இதைப் பற்றி பேசும்போதே எங்களில் சிலர் சங்கடமாக உணர்ந்தோம். இவை பற்றி தானாக நாம் கேட்டறிய முயன்றாலும் எம்மை ஒழுக்க சீர்கேடற்;றவர்கள் போலப் பார்க்கின்றனர்.” என்று கூறியுள்ளார். இவ்வாறான அறியாமைக்கும், பெண்களின் மீதான கொடுமைகளுக்கும் காரணமாக அமைவது பெற்றோர்களின் செயற்பாடுகள்தான். படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை இதே நிலமைதான். தங்களுக்குப் பின்னாலுள்ள அரசியல் காய் நகர்த்தல்களை அறியாமல் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணத்தில் வாழ்கின்றனர். இதைப்பற்றிதான் நாடகாசிரியரான பேர்ட்டோல் பிரக்ட் “அறியாமையில் மிகப்பெரிய அறியாமை அரசியல் மற்றும் சமூக அறியாமையே” என்கின்றார்.

பாலியல் கல்வியின் தேவையினை புகட்ட மறந்தாலும், வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள உளவியல்க்காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஃபிடோஃபிலியா (pநனழிhடையை)  என்பது வயதுவந்தோருக்கு சிறுவர்கள் மீது இச்சை கொண்ட மனநோயாகும். இவர்கள் சிறுவர்கள் மீது தவறான தொடுகைகளை பிரயோகித்தல், போர்னோப் படங்களைப் பார்க்கச் செய்தல் போன்ற வேளைகளைச் செய்வர். தம்மை அண்டிய சிறுவர்களே இவர்களது இலக்காக இருக்கும். இதற்கு உதாரணங்கள் நம்நாட்டில் பலவுண்டு. இவற்றை சீர் செய்து சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோர்களது மட்டுல்ல சமூகத்தின் ஒவ்வொருவருடைய கடமையுமாகும். பலவாறும் பெண்ணியம் பேசும் அமைப்புக்கள் இவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்தல் எவ்வளவு பெறுதியாக அமையும். சீர்கெட்ட தற்கால சமூக அமைப்பிலே பெண்களுக்கெதிரான பாலியல் அடிமைத்தனங்களையும் , கொடுமைகளையும் களைந்தெறிய போர்னோ படங்கள் பற்றிய விழிப்பும், பாலியற் கல்வியும் எண்ணில் மீளாத பலனைத்தரும்.

க.பத்திநாதன்-இலங்கை

க.பத்திநாதன்

 

(Visited 191 times, 1 visits today)
 

One thought on “ஆபாசப் படங்களும் பாலியல் கல்வியும்-கட்டுரை-க.பத்திநாதன்”

Comments are closed.