சமூக உள ஆற்றுப்படுத்தலில் மரபுத்தொடர்களும் தூசணங்களும்- கட்டுரை-க.பத்திநாதன்

க.பத்திநாதன்
க.பத்திநாதன்

உலக இயங்கியலிலே மனித வலுக்களின் பெறுதியானது மிகத் தேவைப்பாடானதாகும். தனியன்களின் கூட்டு வடிவமான சமூகமானது தனது உறுப்பினத் தனியன்களின் வாழ்க்கையோட்ட நடவடிக்கைகளிலும், நடைமுறைகளிலும் செவ்வனவாகச் செல்வாக்கைக் கொடுத்த வண்ணமே உள்ளது. அவ்வாறான வாய்ப்புகளையும், இருப்புகளையும் தக்கவாறு பயன்படுத்தியோர் பெற்ற பயன்வேறு, தகாதவாறு பயன்படுத்தியோர் பெற்ற பயன்வேறு. இவ்வாறு இரு நிலைப்பட்ட பன்முக மனிதத்தன்மைகளின் இடையே காணப்படுகின்ற உணர்வுகள் யாவும் ஒத்த தன்மையைக் கொண்டவைகளாயினும் வெளிப்படும் நியமங்களிலும், நேரங்களிலும் வேறுபட்டே அமையும் என்பது நியதி. உடல் தந்த உறவு முதல் உடல் சேர்ந்த உறவுவரைக்கும் இதே நிலமைதான் உண்டு. இவ்வாறு நிகரெதிரான, வேறுபாடுடைய, ஒட்டு மொத்த உலகவாழ் அங்கிகளின் கூட்டான சமூதாயத்திலே மனித மனங்களின் பாலான ஆற்றுப்படுத்தலின் தேவைக்கும், தன்மைக்கும் மரபுத்தொடர்களினதும் தூசணங்களினதும் தேவையானது மறைமுகமானதான இன்றியமையாத மொழிப்பிரயோகங்களாகக் காணப்படுகின்றது.

பாரெங்கும் மனித கூட்டங்கள் ஆனது தமது தேவையினையும், காலநிலைச் செல்வாக்கினையும் கருத்திற்கொண்டு இசைந்த தன்மைக்கமைய பற்பல பிரிவுகளாகவும் பல்சமூக அமைப்புகளாகவும் உருவெடுத்துள்ளன. அதுபோலவே ஈழத்தமிழ் சமுதாய மட்டங்களிடையே காணப்படுகின்ற மனிதக் கூட்டங்களின் உளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அவற்றில் இருந்து வெளிவருதற்கான ஓர் சீரிய வாய்ப்பினைக் கொடுப்பதாக அமைகின்ற மொழிப்பிரயோகங்களான மரபுத்தொடர்கள் மற்றும் தூசணங்களின் செல்வாக்கினைச் சற்றுப் பார்க்கலாம்.

மனிதக் கூட்டத்தினர் தாம் கண்ட ஒலி வடிவங்களுக்கு எழுத்துக்களின் மூலம் தூல வடிவம் கண்டனர். அவ்வகையிலேதான் மொழியானது தொடர்பாடலில் கருத்துப் பரவலுக்கான ஊடகம், வார்த்தைகளின் ஒழுங்கமைப்புக் கோர்வை, உள வெளிப்பாடுகளைக் கடத்தும் காவி என்றெல்லாம் அமையக் காணலாம். இம் மொழியானது எழுத்து, பேச்சு எனும் இரு வடிவங்களைக் கொண்டது. இவ்வாறான தன்மைகளையுடைய மொழிப் பிரயோகங்களின் வாயிலாகவே மனித மனதாழத்தின் அல்லோலகல்லோல நிலைமைகளை நயக்கச் சொல்வதாகவும், சொல்லாது சொல்லும் இரண்டற மொழிதல் தன்மையாகவும் வெளிப்படுத்தப் படுகின்றன.  இத்தகைய தன்மைகளுக்கு ஊடாகவே உளஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் காலந்தொட்டு வழங்கி வருகின்றதும், புது வரவுகளாக அமைகின்றதுமான மரபுத்தொடர்களும், தூசணங்களும் கூட அத்தகைய  மொழிப் பிரயோகங்களாக அமைகின்றன.

குறித்த மொழியைப் பேசுகின்ற கூட்டத்தினரின் கருத்தாளம் மிக்க அழகியல் வெளிப்பாடாகவும், பண்பாடு சார்ந்து காலந்தொட்டு வருவதாகவும், குறியீட்டுடன் இரண்டற மொழிதல் தன்மையானதாகவும், வார்த்தைகளின் அடைமொழிச் சேர்க்கைகளாகவும் என பல்வகைத் தன்மையுடையதாக மரபுத்தொடர்களும், தூசணங்களும் சமூக மட்டங்களிடையே பாவிக்கப் படுகின்றன. இது போன்ற மொழிப் பிரயோகங்களைப் பிரயோகிக்கும் ஒருவர் அல்லது கூட்டத்தினரின் உளநலநிலைமை, இறந்தகால ஞாபகங்களின் தொகுதி, நிகழ்கால நிகழ்வுகளின் நிதர்சனம், கருத்தியல் ரீதியான முருகியல் நிலை என்பவையே தனி நபர் சார்ந்தோ அல்லது கூட்டம் சார்ந்தோ அமைகின்ற உளவெளிப்படுத்துகைகளின் காரணங்களாக அமைகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை இன்னும் தெளிவுறச் சொன்னால், சிறந்த உளவியல் நிபுணரான சின்மன்ட் புரோய்ட்டின் சிந்தனை நிறுவுகைகளைக் கண்டு தெளியலாம். அவரின் கருத்துப்படி ‘மனமானது நனவிலி மனதிலே காணப்படுகின்ற துன்பதுயரங்களை, உளவடுக்களைக் களைவதற்கான  மன ஆற்றுப்படுத்தலைத் தானாக மேற்கொள்ள சிலவழிமுறைகளைக் கையாள்வதாகக் கூறுகின்றார்’. அதாவது, “ஆழ்மன எண்ணங்கள், நிறைவேறாத ஆசைகள் என்பன பெரும்பாலும் கனவுகளாக வெளிப்படுகின்றன. அதைப் போலவே கற்பனை கொள்ளல், கோபங் கொள்ளல், புறங்கூறல், பொய்கூறல் போன்ற வினை வடிவங்களாக வெளிப்படுகின்றன.” என்கின்றார். இதிலே கோபங் கொள்ளல், புறங்கூறல் போன்ற மொழித் தாக்கங்களின் வாயிலாகவே மரபுத்தொடர்களும், தூசணங்களும் சமூக மட்டங்களிடையே பெருவாரியாகப் பாவிக்கப் படுகின்றன.

தனிநபர் ஒருவருக்கு இன்னொருவரின் மீது கோபம் ஏற்பட்டு அவரை அங்கத் தீண்டல் செய்ய முடியாது போகின்ற போது பாதிப்புக்குள்ளானவர் மொழித் தீண்டலைப் பிரயோகிக்கின்றார் இதன்  போது அவரைப் பற்றி பிழைபட உரைத்தல், புறங்கூறல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல் (தூசணங்களில் திட்டுதல்) போன்ற வேலைகளைச் செய்கின்றார். இத்தருணம் பாதிக்கப்பட்டவரின் மனதிற்கு ஒருவித உளத்திருப்தி  தானாகவே உண்டாகின்றது. இவ்வாறான தருணங்களில் அவர் உபயோகிக்கின்ற மரபுத்தொடர்களோ, தூசணங்களோ கூறப்படுகின்ற அர்த்தத்தில் நேரடியான பொருள் விளைவை ஒருபோதும் கொள்வதில்லை. மாறாக  சொல்லாது சொல்லல் என்ற மறைமுக மொழிதல்களின் வாயிலாகவே பெரும்பாலும் அமைகின்றன. உதாரணமாக

“அவனுக்கு நான் என்ன செய்தாலும் வயித்தெரிச்சல் தான்….”

“கடும் ஆள்டா அவன். அவனுக்கு எப்ப தொப்பிபிரளும் எண்டே தெரியாது”

 மேற்கண்ட உரையாடலின் போது இரு வேறு வகையான  மரபுத்தொடர்கள்

மொழிக்கையாள்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. ஒன்று ‘வயித்தெரிச்சல்’ மற்றையது ‘தொப்பி பிரளுதல்’ இவற்றை ஆழ நோக்கினால் இவையிரண்டின் பேச்சுப் பொருள்களும் நேரடியாக அமையவில்லை. அங்கு எவருக்கும் வயிறு எரியவில்லை, எவரின் தொப்பியும் பிரளவில்லை(மாறவில்லை). அவ்வாறாயின் அங்கு சொல்லப்பட்ட மரபுத்தொடர்களின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? அவற்றைப் பிரயோகித்ததற்கான காரணம் என்ன? அதைப் பிரயோகித்த பிரயோகிக்கு உண்டான உளத்திருப்தி என்ன?

வயித்தெரிச்சல் என்பதன் மறைமுகப் பொருளர்த்தம் யாதெனில், குறித்தவோர்  நபரின் செயற்பாடுகள் அனைத்தும் இன்னொரு நபருக்குப் பிடிக்காத போது அவர் ஒருவித எதிர்த்தூண்டல் விளைவைப் பிரயோகிப்பார். அவ்வேளை அவரின் நடத்தைகளில் மாற்றம் உண்டாகி அவரின் பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு காணப்படும் சந்தர்ப்பம் உண்டாகும். அப்போது பாதிக்கப்பட்ட நபரினால் ‘வயித்தெரிச்சல்’ எனும் மரபுத்தொடர் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அது போலவேதான் ஒரு கூட்டத்தில் உள்ள நபர் அடிக்கடி தனது கருத்தை மாற்றி மாற்றி வினையாற்றும் போது ‘தொப்பி பிரளுதல்’ என்னும் மரபுத்தொடரானது பிரயோகிக்கப் படுகின்றது.

மேற்சொல்லப் பட்டதான தருணங்களைப் போலவே பல்தருணங்களில் பிரயோகிக்கப் படுகின்ற மரபுத்தொடர்கள் உளஆற்றுப்படுத்தலுக்காக மறைமுகமாகப் பயன் படுத்தப்படுவது பற்றி உளமருத்துவ நிபுணர் சா.சிவயோகன் அவர்கள் யாழ்ப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு ஓர் ஆய்வு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் போது கண்டுபிடிக்கப்பட்ட மரபுத்தொடர்கள் வருமாறு :

தலை வெடிக்குது, கழுத்தறுத்தல், வயித்தைப்பற்றிஎரியுது, இடிவிழுந்துபோச்சு, எல்லாம் தலையெழுத்து, வயிற்றில் அடித்தல், ஈரல்கருகுது, சனியன் பிடிச்சிட்டு, ஆப்பு வைத்தல் (புதுவரவு).

இவைகள் எல்லாம் ஆண், பெண், இளவட்டங்கள் என்ற ரீதியில் பயன்படுத்தப்படுவதாக தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார். இவற்றைப் போலவே கிழக்குப் பகுதிகளில் வயித்தெரிச்சல், தொப்பிபிரளுதல், வாளிவைத்தல், வால்ப்பிடித்தல், காலம்சரியில்ல, விளக்கம்வெள்ளப் பேப்பர், காத்துப்பொயித்து, உள்ளாலசெய்தல், நெஞ்சுவெடிச்சுத்து போன்றனவும் பயன்படுத்தப் படுகின்றன.

இதுபோலவேதான் மனங்களின் வெளிப்பாடாகத் தூசன வார்த்தைகளும் பயன் படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதே. அனைவராலும் பிரயோகித்தல் தவறு என்று சொல்லப்பட்டு ஆனால் தினமும் பிரயோகிக்கப் படுபவையாக தூசண வார்த்தைகள் அமைகின்றன. தனி நபரொருவர் பொதுவான இடத்தில் கோபத்தின் வெளிப்பாடாகவோ அல்லது நகைச்சுவைத் தன்மையாகவோ தூசண  வார்த்தை ஒன்றினைப் பிரயோகிக்கும் இடத்து குறித்த அந்நபர் நாகரிகமற்றவர், ஒழுக்கம் இல்லாதவர் என்று ஏனையோர் பட்டம் கொடுப்பர். ஆனால் அவர்களே தனிப்பட்ட ரீதியில் அவ்வார்த்தைகளை உரைப்பர். காரணம் அவர்களை அறியாமலே அவர்கட்கு அவ்வார்த்தைகளால் உண்டாகின்ற ஒரு வகை உளத்திருப்தியே.

இவ்வாறு பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற தூசண  வார்த்தைகளை பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களாக பெரும்பாலானவை அமைவது இரு தரப்பினரிடையே உண்டாகும் நேரடியான அல்லது மறைமுகமான முரண் நடவடிக்கைகளாகவே காணப்படுகின்றன. கிராமப் புறங்கள் வரை நகர்ப்புறங்கள் வரை, இளையோர் முதல் முதியோர் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இச் சொற்பிரயோகங்கள் பயன் படுத்தப்பட்ட வண்ணமே உள்ளன. இள வட்டங்களைப் பொறுத்த மட்டில் இவ்வார்த்ததைகள் நகைச்சுவை, பகிடிகளுக்காகவே பிரயோகிக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கதே.

சொல்லப்போனால் மரபுத்தொடர்களை விட தூசண  வார்த்தைகள்தான்  தனிமனித உள விடுபடுகைக்காக அதிகமாக சமூகங்களிடையே பிரயோகிக்கப் படுபவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக,

“அவள்ட சந்தப்பூழலுக்கு எனக்குக் கதைக்க வந்திட்டாள்..”

“அவளா? சரியான ஆட்டக்காரி தட்டுவாணி…”

“அவனே வம்புல புறந்த பு…. மகன்..”

போன்ற உரையாடல்களை நோக்கினால் இங்கு கூறப்பட்ட தூசண வார்த்தைகளுக்கான பொருள்கள் நேரடியாக அன்றி மறைமுகமாகவே கொள்ளப்படுகின்றன. ‘சந்தப்பூழல்;’ என்றால் செயலில் திடமில்லாத தன்மை என்றும், ‘தட்டுவாணி, ஆட்டக்காரி’ என்றால் நன்னடத்தை இல்லாதபெண் என்றும் பொளுள் கொள்ளப்படும். இவைகளை விட இன்னும் ஏராளமான தூசண  வார்த்தைகளுமுள. ஒருவரை பொல்லால் அடிப்பதை விட இவ்வாறான சொற்பிரயோகங்களால் அடிக்கும்போது தாக்கப்பட்டவர் அடைகின்ற பாதிப்பும், தாக்கியவர் அடைகின்ற திருப்தியும் சொல்லிலடங்காதவை. கூறப்படுகின்ற தூசண வார்த்தைகளை ஆழ நோக்கும் போது பெரும்பாலான வார்த்தைப் பிரயோகங்கள் பெண்பால் சார்ந்தவையாகவும், இலிங்க உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட ஆலிங்கனத்தைச் சுட்டுவதாகவும் அமைந்திருப்பதற்கான காரணத்தை சற்று விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளமை தெளிவாகின்றது. வேறு பிரதேசத்தவர், மாற்று மொழியாளர், ஒரே பிரதேசத்தில் மாறுபட்ட வட்டார வழக்குகளை உடையோர்களிடையே குறித்த பிரதேசம், மொழிகளை உடையவர்கள் தமக்குரியதான தூசண வார்த்தைகளைப் பேசும் போது அது அவர்களுக்கு சாதாரண ஒலிக்குறிப்பாகவேதான் தோன்றும். உதாரணமாக மட்டக்களப்பில் ‘ பணியாரம்’ என்றால் தூசண வார்த்தையாகக் கொள்ளப்படும். ஆனால் வடபுலத்தில் அது சாதாரண வார்த்தையாகக் கொள்ளப்படும். அது போல் வடபுலத்தில் ‘படுக்க’ என்றால் பாரதூரமான தூசண வார்த்தையாகக் கொள்ளப்படும் ஆனால் மட்டக்களப்பில் அது நித்திரைக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படும் சாதாரண வார்த்தையே. “நாவினால் சுட்ட புண் ஆறாது….” என்ற வள்ளுவக் கூற்றுக்கு மிகப் பொருத்தமான விளைவினை உண்டாக்கக் கூடிய பாரிய பங்கினை இத்தூசண உரையாடல்கள் கொண்டுள்ளன என்பதும் உண்மை. கேவலமான, கெட்ட வார்த்தை என்று தெரிந்தும் அவற்றை மரபிழக்காது பயன்படுத்துவதற்கான காரணம் என்ன? அதை பிரயோகிக்கும் தரபினருக்கு அவர்களை அறியாமல் கிடைக்கின்ற விடுபடல் திருப்தியே ஆகும் என்பது ஏற்க வேண்டியதே…

மரபுத்தொடர்களும் சரி தூசண வார்த்தைகளும் சரி பிரயோகிக்கப்படுகின்ற சமூகத்திலே அச்சமூகத்தின் துன்ப, துயரங்களுக்குரிய காரண காரியங்களாக, அவற்றின் அனுபவ வெளிப்பாடுகளாக, சாதாரண மெய்ப்பாட்டு உணர்வுகளுடன் தொடர்புபடுவனவாகப் பலவாறும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணமுடிகின்றது. மனிதஉளத்தின் தேவைகளையும், அதன் விடுபடுநிலைகளையும் மற்றவரால் முழுமையாக உணர முடியாது என்ற காரணத்தினாலோ, தனது நிலைகளை உரைத்து விடுபடுவதற்கான நல்ல வார்த்தைகள் என்று சொல்லத்தக்க தகுந்த வார்த்தைகள் தனது தாய் மொழியில் இல்லாத காரணத்தினாலோ இவ்வாறான சொற்பிரயோகங்கள் மறைமுகப் பொருளுடன் உரைக்கப் பட்டு, பொருத்தமான எதிர்த் தாக்கவன்மையை உடைய உள விடுபடு நிலைமையை உண்டு பண்ணுகின்றன போலும்.

க.பத்திநாதன்-இலங்கை  

சு.வி.அ.க நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்

க.பத்திநாதன்

 741 total views,  1 views today

(Visited 217 times, 1 visits today)