களுவன்கேணி வேடுவர்களின் வழிபாட்டு முறைகளில் குணமாக்கல்-கட்டுரை- க பத்திநாதன்

க.பத்திநாதன்காலனீயத்தின் பிடிக்குள் சிக்குண்ட தற்கால மனிதத்திரளானது நோய்த்தாக்கங்களின் பிடிக்குள் சிக்கித்தவிக்கின்ற தினநாட்களிலே பூர்வ குடிகளானது இயற்கை மற்றும் செயற்கைத் தாக்கங்கள் அனைத்திற்கும் பிடி கொடுத்தும் அவற்றை தன்வயப்படுத்தி சிக்கலின்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலைமைகளின் போதுதான் உலகம் முழுவதும் பூர்வ குடிகள் பற்றிய சிந்தனைகள் எழுந்துள்ளன. அது போலவே அவர்களிடம் காணப்படுகின்ற நோய் நீக்கல் மற்றும் குணமாக்கல் விளைவுகள் என்பன அணு நேரமும் உளச்சிக்கலுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும், உடலியற் கோளாறுகளுடனும் யந்திரப் பிழைப்பை நடத்துகின்ற நரவாசிகளுக்குத் மாற்றில்லாத் தேவையாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை வேட மரபின் ஆதி வேட கிராமமான களுவன்கேணி கிராமத்தில் காணப்படுகின்ற வேட்டுவழிபாட்டின் குணமாக்கல் விளைவுகளை உய்த்தளிப்பதே இப்பதியின் பயன்.

களுவன்கேணி கிராமத்திலே தற்காலத்தில் வேடர் சமூக மரபில் வந்து தமது மூதாவிகளினால் கற்றுக்கொடுக்கப்பட்ட வேட வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருடா வருடம் சடங்கு வழிபாடுகளினைச் செய்து வருகின்ற வெ.கிருஸ்ணபிள்ளை என்னும் வேட மதகுரு ஒருவர் தனது வழிபாட்டின் ஆரம்ப காலத்தினை இவ்வாறு கூறுகின்றார். “ஆரம்பத்துல இதுக்கு முதல் இதுகல ஆதரிச்சு (வழிபட்டு) வந்தது முடமாரியர் தான். அவருக்கு முதல் அவங்கட அப்பாவங்க ஆதரிச்சிது வந்த. அதுக்கு பின்னுக்கு அம்மாட தமையன் (அண்ணன்) கந்தன் எண்டவர் செய்து வந்தவர். புறகு அதோட சேந்த ஆட்கள் எல்லாரையும் இந்த தெய்வங்கள் எல்லாம் எடுத்துத்து. (இறந்து விட்டனர்) அதோட அந்த கோயிலடி மங்கிப்பொயித்து. அதுக்குப் புறகு எனக்கு ஒரு கண் வருத்தம் வந்தது. அதோட தான் இந்த தெய்வங்கள் எல்லாம் என்னுல வந்தது. அதுல வந்தது தான் நான் இப்ப வைச்சிரிக்கிற வேட கலைக்குள்ள வாற பத்தினி அம்மன். (பத்தினி தெய்யோ) எங்களுக்கு எல்லாத்துக்கும் முதல் குடல்புரி அம்மாதான் இதுகல ஆதரிச்சு வந்தவ. அவகளுவர், பனிக்கர் ஆக்களுக்குப் புறகு வந்தவ. இஞ்ச இருந்த குமாரரத்தான் களுவர் ஆக்கள் தளவாய்க்குக் (களுவன்கேணிக்கு அருகிலுள்ள கிராமம்.) கொண்டு போனவங்க இஞ்ச இருக்குறவங்க அவர வழிபட மாட்டாங்க எண்டு.” இவருடைய ஆலய வழிபாட்டு முறைகளையும், இவரது கருத்துக்கள் மற்றும் அவரோடு இணைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே பின்வருக்கின்ற விடயங்கள் ஆய்வுகுட்படுத்தப்பட்டு பெறப்பட்டன.

இவர் தந்த தகவலின் பிரகாரம் மேலே கூறப்பட்டதன் படி களுவன்கேணி வரலாறு மற்றும் வேட வழிபாட்டு முறைகள் என்பன இருந்துள்ளமை சான்றாகின்றது. இவ்வாறான நடைமுறை மாற்றங்களுடன் காணப்படுகின்ற களுவன்கேணி வேடர் சமூகத்திலே வழிபாட்டு முறைகளில் பலவகையான தெய்வ வணக்க முறைகள் காணப்படுகின்றன. அவை ஆதிகால நடைமுறைகளுடன் காலத்திற்கு காலம் ஈடேறிய தெய்வ வணக்க முறைகளாகவும் காணப்படுகின்றன. அவ்வகையில் பின்வரும் தெய்வங்களை இன்றைய கால வழிபாட்டு முறைகளில் அடையாளம் காணமுடியும். அதாவது உத்தியாக்கள், மா தெடுத்தன், பாலைக்கா தெடுத்தன், குறுணாகல நெதத்தன், கடல் பகுதித்தெய்வம், குடா நீலி, மாதெலிக்காயே, வட்ட முகரி, கப்பல் தெய்வம், குறுமுந்தன, மாறா தெய்வம், கரை தெய்யா, கிரி அம்மா, பத்தினி தெய்யோ, குமாரர், கன்னிமார், கரடித்தெய்வம், பின்னைய கால இடைச்சேர்கைகளாக வந்த தமிழ்க் கலைகளான கெங்கை காளி, கெங்கை வைரவர், சுடலை வைரவர், மயானருத்ரர், காட்டேரி, சுடலைமாடன் முதலான தெய்வங்களுக்கான வணக்க முறைகளும், வழிபாட்டு ஆசாரங்களுமே இன்றைய களுவன்கேணி வேடர் வழிபாட்டில் இணைந்ததாகக் காணப்படுகின்றன.

உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாட்டு முறைகள் (Ancestress Ritual Process)

க.பத்திநாதன்

வேடுவர்களின் வழிபாட்டுச் சடங்குகளிலே முதலாவதாக வழிபாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுவது உத்தியாக்கள் வழிபாடு ஆகும். பாட்டுக்காரன் உத்தியாக்கள் தெய்வத்திற்குரிய பாடலை இசைக்க அதற்குரிய தாளத்தை கொட்டுக்காரன் கொட்டில் வாசிப்பார். அப்போது தெய்வமாடுபவர் இரண்டு கையாலும் லேஞ்சியைப்பிடித்து (துணியை) வானம் பூமி என சகல திசைகளிலும் மன்றாடுவார். அப்போது அவரிலே திடீரென தெய்வம் வெளிப்பட்டு “ஆய” என்ற சத்தமுடன் கையில் உள்ள லேஞ்சியை தலையில் கட்டும். அப்போது பந்தலின் முன் சுமார் ஏழு அடி நீளமான பொருத்தமானவில் இருக்கும். அந்த வில்லை நிலத்தில் ஊன்றி வில்லில் ஏறி இறங்கும். இறங்கியதும் ஈட்டியை கையில் எடுத்து மிகவேகமாக சடங்கு நடைபெறும் இடத்தை வளைத்து தண்ணீர் எறிந்து குற்றம் நீக்கியும், அதன் பின் மூன்று வெற்றிலை அல்லது தாமரை பூ இதள்களை தனது தலையை சுற்றி வானில் எறியும் அந்த மூன்று வெற்றிலையும் நேராக விழுந்தால் கட்டாடியார் “கொஞ்சி” என்பார் இதன் அர்த்தம் நல்லது என்பதாகும். அதன் பின் எவ்வாறு சடங்கு நடைபெற வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்பன போன்ற கட்டளைகளைச் சொல்லும் சொன்ன பின் அதே இடத்தில் ஈட்டியை நாட்டி காவலுக்கு நிறுத்தி விடும். இந்த உத்தியாக்கள் தெய்வத்திற்கு பாடப்படும் வேடுவ மொழிப்பாடல் வருமாறு.

கன்டா பெடியாப்பா கமகமளு பனுவனளு ஏக் மந்த்ரயே ரயனமோ
ரயனமல் ஏ….கமந்த் வெல்லாயன் வெல்லம்பாளன் வெரிகடிகத்தோ
உஸட சாயனட உன்னும் பாணன் கட்டாங்கரியோ
ஓ….கமர்தரயோ தயங்

அதாவது இவ்வழிபாட்டு முறை பற்றி “ஆரம்பத்துல ஆசுவாதிகள் (மூதாதையர்) தான் இந்த நடைமுறை எல்லாம் செய்து வந்தவங்க. அவங்க செத்ததுக்குப் புறகு இந்த உலகத்துல இருந்து அந்த உலகத்துக்குப் பொயித்தாங்க. அதாலதான் அவங்க எல்லாம் இப்ப தெய்வங்கள். நாங்க ஒரு சடங்கச் செய்யக்குள்ள அவங்களுக்கு ஒரு பூ வைக்கத்தான் வேணும். அவங்க வந்து உடம்புல ஆடின புறகு தான் எங்களுக்கு மத்த தெய்வமெல்லாம் வரும்.

“இந்தா பெடியப்பா வடபலவலோ
நொதியம்பலோ ஆயியே…… நாயோ… நாகனம்மாயா….”

எண்டு கூப்புட உத்தியாக்கள் வரும். புறகு பனுவள சீயா (அவர்களது வேட குடிவழமை). அவர் ஒரு கட்டாடி. இப்புடி நாங்க பனிக்கர், களுவர், குடல்புரி ஆச்சி, ரெட்டையர், பால்குடியா, சியா, முடமாரி, களுக்கொட்டா, இங்குலு கொட்டா (இவர்களுடைய மூதாயையர்கள்.) எல்லாரையும் கூப்புடுவம்.” என்கிறார் அவ்வேட்டுவ மதகுரு.

வேடர்களின் வழிபாட்டு முறைகளில் உத்தியாக்களின் வழிபாடு என்பது மிகத் தோழமையுடனும், உறவுமுறையுடனும் ஆற்றுகை செய்யப்படுகின்றதோர் வழிபாடு ஆகும். இச்சடங்கிலே காணப்படுகின்ற குணமாக்கல் தன்மை என்பதும் மிகவும் தனித்திறம் கொண்ட இயல்புகளினைக் கட்டமைத்துக் காணப்படுகின்றது. அதாவது இவர்களின் கடவுளர் என்பது கண்ணுக்குத் தெரியாத மாயை உருவங்களோ அல்லது உண்மையற்ற கருத்துத் திரிபுகளோ கிடையாது, மாறாக தாம் ஒன்றாகக்கூடி வாழ்ந்த, வளர்ந்த, நல்ல கெட்ட நிகழ்வுகளுடன் ஒன்றித்துப்போன தமக்கு முந்தைய உறவுகளினை, அவர்களின் ஆவிகளினையே கடவுளராக வழிபாடு செய்பவையாகவே காணப்படுகின்றனர்.

குணமாக்கல் செயன்முறையில் மிகவும் இன்றியமையாத ஒரு யுக்தி முறையாக குணமாக்கல் உறவுமுறை என்பது காணப்படுவதையும் கூறவேண்டியுள்ளது. அதாவது ஒருவர் தான்சார் சமூகத்தில் ஏதாவது ஓர் மன அழுத்தத்திற்கு உள்ளாகிப் பாதிப்புறும் போது, குறித்த அந்நபரினை முதற்கட்டமாக குணப்படுத்தும் ஆறுதல் நடவடிக்கைக்கு இட்டுச் செல்வதாக அமைகின்ற விடயமாக அவருடன் தொர்பு கொள்கின்ற, தொடர்பு படுகின்ற உறவுகளின் நெருக்கப் பிணைப்பே காணப்படும். அது ஆறுதல் வார்த்தைகளாகவோ அல்லது பாதுகாப்புச் செயற்பாடுகளாகவோ அமைந்து விடலாம். இவ்வாறான தன்மைகளினை மிகத்திறமாகக் கட்டமைத்துக் கொண்டதாகவும், அதன் மூலம் மனித மனங்களுக்கு ஒருவகையான நிம்மதி, நம்பிக்கை, பாதுகாப்பு, அமைதி, மன நிறைவு, மகிழ்வு என்பவற்றைக் கொடுப்பதாக அமைந்து விடுகின்றமையினை இவ்வகையான வழிபாடுகள் மூலம் அவதானிக்க முடிகின்றன. அதாவது ஒருவர் உடலுள பாதிப்புக்களின் நிமித்தம் நிலைகுலையும் போது அவருக்குச் சார்பாக அவர் சார்ந்த உறவுகளினை விட வேறு எவராலும் அவருக்கு துணை புரிய முடியாது என்பதே இவர்களின் நம்பிக்கையாகும். தமது தந்தைமார், தாய்மார், அண்ணன்மார் மற்றும் அதனோடு தொடர்புடையவர்களின் ஆவிகள் என்பனவே தமது பிரச்சினைகள், பாதிப்புக்கள் சார்ந்து கவலைப்படுவதாகவும், அவற்றைத் தீர்க்க உதவுவதாகவும் நம்பப்பட்டே இவர்களின் மூதாதையர் வழிபாட்டு முறைகள் அமைந்து விடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் வேறு சமூகத்தினரும் தமது தேவைகளினை நிறைவேற்றிக் கொள்வதற்காக வேடர்களின் சடங்காற்றுகைகளில் கலந்து கொள்கின்றமையினை களுவன்கேணி வேடுவர் சடங்காற்றுகையிலே காணமுடிந்தது.

இவர்களுடைய சடங்காற்றுகையின் போது உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாடொன்றின் அவதானிப்புக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன:

க.பத்திநாதன்சடங்கு நடவடிக்கைகள் செவ்வனே ஆரம்பமாகி உத்தியாக்களின் வழிபாட்டின் அரையிறுதியில் இருந்து பக்தர்களின் வேண்டுகோளிற்கான, காத்திருப்புக்கான நேரம் வந்தது. அங்கு சிலர் பல பொருட்கள் தாங்கிய ஓலைப்பெட்டியுடன்(பழவகைகள், உணவுப் பண்டங்கள், மற்றும் சில பொருட்களுடன்) காத்துக் கிடந்தனர். அதில் ஒரு சிலரே ஆண்கள். அவர்களின் இருப்பிடம் நோக்கி உருவாடுகின்ற தேவாதி (கலையாடுபவர்) அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு கொட்டு வாத்திய ஒலி மற்றும் பாடல்களின் மூலம் உருவேற்றப்படுகின்றார். அந்த உருவேறல் முறையானது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதாவது உருவேற்றப்பட்ட தேவாதி அழத்தொடங்கினார். பின்பு அழுகை அதிகரித்து விம்மி விம்மி அழத்தொடங்கினார். அவருடைய குரல் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. அந்த குரலினைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த நடுத்தர வயதான பெண் “எண்ட மகனே” என அழைத்த வண்ணம் அழுது கொண்டு அவர் தனது பெட்டியுடன் முன்னோக்கி வந்தார்.

அவ்வாறு வந்தவுடன் தேவாதியும், குறித்த அப்பெண்ணும் மாறி மாறி அழுத வண்ணம் ஒருவரையொருவர் கட்டித்தழுவிய படி தமது உறவுக்கான சம்பாசனைகளைச் செய்து கொள்கின்றனர். அவை ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்த பின்னர் தேவாதி அப்பெண் கொண்டு வந்த பெட்டியினுள் இருந்த உணவுகளை எடுத்து புசிக்கின்றார். அதனுள் இருந்த சேட்டை எடுத்து தோளில் போட்டுக் கொள்கின்றார். அதனைத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கின்றார். “அம்மா நான் செத்துட்டன். நிறைய நாள் என்ன அடைச்சி வைச்சு சித்திரவத செய்தவங்க. நான் நிறைய துன்பப்பட்டுதான் செத்துப் போனனான். வீட்டுல இருக்குற எண்ட பொருட்களை எல்லாம் எரிச்சிடுங்க. நான் இனி வரமாட்டன் அம்மா” என்று கூறிக்கொண்டு ஓவென்று அழுது படிப்படியாக அழுகை குறைந்த பின்னர் தேவாதி மயங்கி விழுகின்றார். பின்னர் வேறொருவருக்காக உரு ஏற்றப்படுகிறது.

அவர் அவ்வாறு உரைத்தது தான் தாமதம் குறித்த பெண் உரத்த குரலில் அழத்தொடங்கினார். மார்பில் அடித்தடித்து அழுதார். அவரோடு வந்திருந்தவர்களும் சேர்ந்து அழுதனர். பல நிமிடங்களுக்கு இச்செயல் நீடித்தது. சில மணித்தியாளங்களின் பின்னர் அவர்கள் சடங்கு நடடிக்கைக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டனர். குறித்த அப்பெண்ணுடன் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு கூறினார்:

க.பத்திநாதன்“ எண்ட மகன 2014-ம் ஆண்டு சி.ஐ.டி புடிச்சுப்போன. அவரத் தேடாத இடமில்லை. தெரிஞ்ச எல்லாரிட்டையும் கேட்டுப்பாத்தும் பலனில்லை. பிறகு தான் இஞ்ச வந்தனாங்க. மூண்டு வருசமா சடங்குக்கு வந்தனாங்க. இந்த முறதான் எண்ட மகன் வாக்குத்துறந்து இருக்காரு. இவளவு நாளும் உண்ம என்னெண்டு தெரியாம நாங்க செரியான துன்பப்பட்டனாங்க தம்பி. இந்த முற மனசுக்கு கவலைய விட கொஞ்சம் ஆறுதால இருக்கு. எண்ட புள்ள செத்துப்பொனது தெரியாம இருந்திட்டம். என்ன செய்ய முடியும் நம்மளால. எல்லாம் கடவுள் தான் பாத்துக் கொள்ளனும்” என்றார்.

உண்மையில் இச்சந்தர்ப்பத்தினை என்னால் குணமாக்கலின் உச்சகட்ட விளைவு நடவடிக்கையாகவே பார்க்க முடிந்தது. மனிதருடைய மனப்பாதிப்புக்களைப் போக்குவதென்பது அவ்வளவு இலகுவான காரியமன்று. ஆனால் இவ்வகையான வேட்டுவச் சடங்கின் அடியாக, ஒரு குறிப்பிட்ட கண நேரத்தினுள் உளவிடுபடு நிலையினை முற்றிலுமாகக் கொடுத்து விட முடிக்கின்றமையானது வேட்டுவ வழிபாட்டின் உத்தியாக்கள் சடங்கின் ஊடாக ஈடேறுகின்றமை மிக வலுத்திறமான நோய் நீக்கல் நடவடிக்கை ஆகும். குறித்த அப்பெண்ணின் மகன் இறந்த விடயத்தினை அவருடைய உறவுகளோ அல்லது கொலை செய்யப்பட்டதை நேரில் கண்டவர்களோ கூறியிருந்தாலும் அவரால் விடுபடு நிலையினை அடைந்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை. சடங்கு, வழிபாடு, இறை நம்பிக்கை என்பவற்றின் அடியாக விளைந்த சடங்காசார நிகழ்வுகளின் மூலமே அது சாத்தியம் எனலாம். இன்றைய எமது தமிழ் சூழலில் போரின் தாக்கம் மற்றும் அதனோடு இணைந்த நடவடிக்கையினால் எமது மக்கள் பட்ட, படுகின்ற சொல்லொன்னா மன அழுத்தங்களினைப் போக்கிக் கொள்வதற்கு இச்சடங்கு ஆற்றுகை நிகழ்வுகள் மிகவும் பிரயோசனமான நடவடிக்கை எனலாம்.

குமாரர் வழிபாட்டு முறைமை. (Kumarar Worship Process)

மட்டக்களப்பு பாரம்பரிய வழிபாட்டு முறைகளுள் குமார தெய்வ வழிபாடும் அடங்கும். இது இம்மாவட்டத்தில் வாழ்கின்ற வேடர்களின் பரம்பரையில் இருந்து வந்த வேட வெள்ளாளர் மத்தியில் நிலவும் பிரதான வழிபாட்டு முறையாகும். இவ்வழிபாடு சடங்காகவே நிகழ்த்தப்படுகின்றது. இவ்வழிபாட்டு முறையானது ஆதியில் களுவன்கேணியில் இருந்தே ஏனைய இடங்களான தளவாய் முதலிய
இடங்களுக்குப் பரவியுள்ளமையினை ஆய்வின் ஊடாக அறிய முடிந்தது.

“இஞ்ச இருந்த குமாரரத்தான் களுவர் ஆக்கள் தளவாய்க்குக் (களுவன்கேணிக்கு அருகிலுள்ள கிராமம்.) கொண்டு போனவங்க. இஞ்ச இருக்குறவங்க இத வழிபட மாட்டாங்க எண்டு.”

(களுவன்கேணி வேட்டுவ மதகுரு) இத்தகவல் அதை உறுதிப்படுத்தும். இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட குமாரர் வழிபாடு எவ்வாறு வேடர்களுள் ஏற்பட்டது என்பது பற்றி பல புராணக்கதைகள் உலாவுகின்றன.

இது போன்றே ஓர் முற்றிலும் மாறுபட்ட புராணக்கதை ஒன்றினை வெ.கிருஸ்ணப்பிள்ளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்:

“குமார தெய்வம் எண்டுறது சிவன்ட மகன் குமாரர். புறந்து வளந்தது எல்லாம் காட்டுலதான். எரு முனிக்கு சிவன் வரம் கொடுக்கார். எரு முனிட வரம் என்னெண்டா ,

‘நான் கைவைக்கிறவன் எல்லாம் எரிஞ்சி சாம்பலாகனும்’.

வரம் கிடச்ச உடனே எரு முனி சிவனுல சோதிக்க சிவன திரத்திப் போறான். அப்ப விஸ்ணு மோகினி வடிவம் கொண்டு ஒரு கெங்கைய அமைச்சி படகோட நிண்டார். அப்ப சிவன் அந்த இளம் பொண்ணுட்ட அடுத்த கரைக்கு உடக் (விடுவதற்கு) கேக்க, விஸ்ணு அடுத்த கரைக்கு சிவன கொண்டு விட்டார். புறகு எரு முனி வந்து அந்த பொண்ணுட்ட உதவி கேட்டாரு. ஆனா விஸ்ணு ஒத்து வரல. ‘நான் அடுத்த கரைக்கு கொண்டு போய் விடக்குள்ள என்ன நீ கெடுக்க மாட்டா எண்டுறதுக்கு என்ன நிச்சயம். அப்புடி நீ செய்ய மாட்டா எண்டா உண்ட தலையில கைய வைச்சு சத்தியம் பண்ணு.’ உடனே எரு முனி தலையில கைய வைச்சார் பத்தி சாம்பலாப் போனார். அந்த நேரம் சிவன் மோகினி பொண்ணுல விருப்பத்துல இணையுராரு. அதுல தான் குமாரர் வந்தவர். அவர காட்டுளையே விடுறாங்க. அந்த புள்ளைய கண்டு எங்கட ஆட்கள் தான் அவர வளத்து வழிபட்டு வந்தவங்க. அதாலதான் எங்கட வேட கலைக்குள்ள குமாரர் வந்தவர். இவ்வாறு பல கதைகள் குமாரர் வழிபாடு பற்றி வேடர்களிடம் புழங்கி வருவதைக் காணமுடிகின்றஅதேவேளை வேடவெள்ளாளர் என்போரும் இவ்வழிபாட்டினை அதிகமாக கொண்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. அவ்வகையில் குமாரரில் பல வகைகள் காணப்படுகின்றன. செல்லக்குமாரர், வீரக்குமாரர், காலிக்குமாரர், கொழும்புக்குமாரர், கண்டிக்குமாரர், சங்கிலிக் குமாரர், முத்துக்குமாரர், வதனக்குமாரர், புள்ளிக்குமாரர், பொல்லுக்குமாரர், ஆதிக்குமாரர், முதலிய குமாரர் கலைககள் வழிபாட்டில் இடம் பெறுகின்றன. ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழிபாட்டுச் சூழலில் நம்பமுடியாத வண்ணம் குணமாக்கல் திருப்தியைக் கொடுக்கும் விதமாக இக்குமாரர் வழிபாடானது காணப்படுகின்றமையை கள ஆய்வின் ஊடாக அவதானிக்க முடிந்தது. அதாவது பிள்ளைப் பேறுக்கான மிகவும் ஆத்மாத்தமாக நம்பப்படுகின்ற சடங்கு முறையாக இது காணப்படுகின்றது.

ஒரு தம்பதியினர் பல காலமாக தமக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வைத்தியசாலை மற்றும் ஏனைய பல முறைகளை எல்லாம் தம்மில் நடைமுறைப் படுத்திப் பார்த்து விட்டும்,குழந்தைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்னும் மனக்கசப்பான தகவல் அவர்களுக்கு கிடைக்கின்றது. தமது உறவுகள், அயலவர்கள் உட்பட அனைவரின் வசையினாலும் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தவிக்கின்ற வேளையிலே குமாரர் வழிபாடு பற்றி அறிந்து இங்கு வருகின்றனர். பலனும் அடைகின்றனர்.

“தங்களுக்கு புள்ள இல்லண்டு தம்பதியள் வந்தால், உடனே நான் பெரிய சாமிக்குள்ளால (சிவன்) குறி பாப்பன். அதுல சொல்லும் என்னால முடியாது குமாரருக்கு உள்ளால வேல செய்யனும் எண்டு. புறகு நான் தம்பதிகளுட்ட எத்தின புள்ள வேணும் எண்டு கேட்பன். ஒண்டா, ரெண்டா எண்டு. ஏனெண்டால் குமாரருட்ட முதல் தரம் கேட்குற மாதிரிதான் புள்ளையள் புறக்கும். ஒண்டு எண்டால் ஒண்டுதான், ரெண்டு எண்டால் ரெண்டுதான். கேட்டுத்து குமாரருக்கு உள்ளால அஞ்சி வாழப்பழத்த அந்த பொண்ணுக்குக் ஓதிக்குடுப்பன். நான் ஓதிக்குடுக்குற அஞ்சி பழத்தையும் காலையில பச்சத்தண்ணியும் குடிக்காம சாப்புடனும். அப்புடி செஞ்சா அடுத்த மாதம் துவால (மாதவிடாய்) மாறி மாறி வரும். அதாவது முன்னுக்கு வரும், பின்னுக்கு வரும், பட்டும் படாத மாதிரி வரும். (அதாவது குறித்த அப்பெண்ணின் மாதவிடாய் ஆனது வழமைக்கு மாறாக சிறு அளவு வெளியேறல்) அதுதான் புள்ளைக்கான முதல் அறிகுறி, அதோட சேந்து அந்த பொண்ணுக்கு உடலுறவு சார்ந்த கனவுகளும் வரும். அத அந்த பொம்புல ரகசியங் காத்து என்னட்ட சொல்லனும். அப்படி சொன்ன புறகு நான் உடலுறவு கொள்ள அவங்களுக்கு விருப்பம் சொல்லுவன். அதுவரைக்கும் கூடாது. அப்படி அவங்க உடலுறவு செய்யக்குள்ள அந்த ஆண்ட ரூபத்துல குமாரர் போவாரு. இப்படி செய்தால் அடுத்த வருடம் இந்த ஆலயத்துக்கு புள்ளயோட வருவாங்க. இதுக்கு சடங்கு காலத்துலதான் வரணும் எண்டில்ல. எப்ப வந்தாலும் குமாரர் செய்து கொடுப்பாரு.18

இவ்வாறாக குமாரர் வழிபாட்டின் ஊடான குணமாக்கல் செயன்முறையினை அம்மதகுரு விளக்கினார். இங்கு பல விடயங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவையாகும். மனித மனங்களின் ஒருமித்தசக்தி, ஒன்றை அடைய வேண்டும் என்ற தீவிர செயற்பாடு, தமக்கு தம்மை மிஞ்சிய சக்தி பாதுகாப்பு அளிக்கின்றது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதலான குணமாக்கல் உத்திகள் என்பன குறித்த பாதிப்படைந்தவர்களிடம் இவ்வழிபாட்டின் மூலம் ஈடேறி விடுகின்றமையே இங்கு கவனிக்கப்பட வேண்டிய குணமாக்கல் நிலைமையாகும். அதுவரை காலமும் வைத்தியசாலைகள் மற்றும் இதரபல இடங்களிலும் சிகிச்சை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து சாத்தியம் இல்லை என்று கைவிட்ட பின்னர் இது எவ்வாறு சாத்தியம் ஆகின்றது என்பது வியப்புக்குரிய விடயமாகும். இவ்வாறு மனத்தாக்கங்களுக்கு ஆளாகி பின்னர் குமாரர் வழிபாட்டின் ஊடாக பிள்ளைப்பேறு பெற்ற பெண்ணொருவர் தந்த தகவல்கள் வருமாறு:

“நான் குழந்த பாக்கியம் இல்லாம நிறைய கஸ்டப்பட்டனான். போகாத இடமில்ல. ஆக்களுட்ட வாங்காத பேச்சுகள் இல்ல. ஏன் எண்ட சொந்தங்களே என்ன பிழையாதான் கதசவங்க. ஒரு கட்டத்துல நானும் இவரும் நல்லா மனமுடைஞ்சி போய் இருந்தம். நான் நிறையத்தடவ சாகப்போயிருக்கன். இப்படி மனமுடைஞ்சி இருக்கக்குள்ளதான் இந்த சடங்கு பற்றி கேள்விப்பட்டு இங்க வந்தனாங்க. வந்து பூசாரி ஐயா சொன்ன மாதிரி எல்லாம் செய்த நாங்க. முதல் தடவ சரிவரல்ல. ரெண்டாவது மாதத்துள்ளதான் சரி வந்தது. எங்களுக்கு அடுத்த வருசமே எங்கட செல்லம் பிறந்தவள். ( இவ்வேளை அவரது கண்கள் நீரால் கலங்கிங்கொண்டது.) எங்கட செல்லம் வந்த பிறகுதான் வீட்டுல நிம்மதியே. வீட்டுக்கு வராத சொந்தம் எல்லாம் வரத்தொடங்கினாங்க. இத நான் உங்களுக்கு சிம்பிலா சொல்லுறன். ஆனா நாங்க பிள்ள இல்லாமல் பட்ட கஸ்டம்,பிள்ள வந்த பிறகு அடைஞ்ச சந்தோசம் எல்லாம் வார்த்தைகளால
சொல்ல முடியாது.” என்றார்.

இவர் வேட்டுவ குல பெண்ணன்று. வேடுவர் அல்லாதவர்களும் இவ்வழிபாட்டினுடே பயன் பெறுகின்றமைக்கு இவரது கதை சான்றாகும். அவ்வேளை அவர் குறித்த வழிபாட்டுத் தலத்திற்கு இன்னுமொரு குழந்தைக்காக மறுபடியும் வேண்டுதல் செய்ய கணவருடன் வந்திருந்தார். அவரின் உரையாடலின் போது அவதானித்ததில் அவர் பெற்றுக் கொண்ட மன நிறைவு, திருப்தி, மகிழ்ச்சி, சாதித்த தன்மை முதலிய குணமாக்கல் விளைவுகள் அவரை ஆட்கொண்டிருந்ததை நன்கறிய முடிந்தது. இச்சமயம் ஒரு தம்பதியினர் தமது பெண் பிள்ளையுடன் வழிபாட்டித் தலத்திற்கு வந்திருந்தனர். அவர்களைப் பார்த்தலில் அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை நன்கறிய முடிந்தது. அவதானித்ததில் அவர்கள் காலியில் இருந்து வந்திருந்திருப்பதாகவும், அவர்களின்பெண் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்ய இருப்பதாகவும் அதற்கு இந்த மதகுருவிடம் அறிவிப்பதற்காக வந்திருந்தனர். காரணம் அப்பெண் பிள்ளை குமாரர் வழிபாட்டின் மூலம் பிறந்த குழந்தை என்பதை அறிய முடிந்தது.

இனமத பேதங்கள் கடந்தும் இவ்வழிபாட்டு முறையில் குணமாக்கல் விளைவு பரவியிருந்ததை அறிய முடிந்தது. நம்பிக்கை என்னும் கூட்டுணர்வு என்பதற்கு முன்னால் இவர்களிடம் எதையும் கொண்டு செல்ல முடியாது. காரணம், இவ்வழிபாட்டு முறைகள் மிகவும் ஆழ்ந்த, மரபுசார் உணர்வு பூர்வமான, அதியுச்ச நம்பிக்கை நடவடிக்கையாகும். இவ்வாறான சடங்குகளுடன் பேயோட்டல், திரு நீறு போடல் (உடற்சோர்வு முதலியவற்றிற்;கு), தண்ணீர் ஓதிக்கொடுத்தல் (செரிமானப் பிரச்சினை, தலைவலி முதலியவற்றிற்கு), நூல் கட்டுதல்,கூடு போடுதல் (கெட்ட ஆவிகள் நெருங்காமல்), குறி பார்த்தல் முதலான வழிபாட்டு வழி குணமாக்கல் நடைமுறைகளும் களுவன்கேணி வேடர் வழிபாட்டில் அவதானிக்கக் கூடியவையாகும்.
இவர்கள் சடங்குகளினை மேற்கொள்கின்ற போது தமது சிந்தனைக்கு எட்டாத கற்பனைக் கடவுளரினை வைத்துக் கொண்டு நெருக்கமில்லாத வழிபாட்டு முறைகளினைச் செய்வது கிடையாது. மாறாக தமது தெய்வங்களுடன் தமது சொந்த உறவுகள் போன்று ஒட்டி உறவாடுவர், தொட்டுப் புழங்குவர், தமது கஸ்ட நடவடிக்கைகளினை, தமக்கு உண்டாகின்ற தடங்கல்களினை சொல்லிப் புலம்பவர். எவ்வாறு ஒரு குழந்தை தன் தாயுடன் ஒட்டியுறவாடுமோ அவ்வாறு தமது தெய்வங்கள் வரப்பெற்ற தேவாதிகளுடன் பழகுவர். அத்தேவாதிகள் பாதிப்புற்ற மனிதர்களின் பிரச்சினைகளை முதலில் காது கொடுத்துக் கேட்பர். பின்பு அனைத்தையும் ஆய்ந்தறிந்து விளக்கம் கொடுப்பர். அரவணைப்பாகத் தொடுவர். தற்காலிக மருந்துகள் கொடுப்பர். இந்த நடவடிக்கைகளினைப் பார்த்த பொழுது ஆற்றுப்படுத்தலின், குணமாக்கலின் ஆரம்ப கட்ட நிலைகளினை நன்குணர முடிந்தது.

இதை வேறெந்த சடங்காற்;றுகைகளிலும் காண்பதரிது எனலாம். ஆகவேதான் இங்கு காணப்படுகின்ற வேட்டுவ வழிபாட்டு முறைகளானது இயற்கையுடன் பின்னிப்பினைந்த தன்வயப்படுத்தல் உறவுமுறை சார் செயல் வினையாகும். கொட்டாவி விடுவதற்கும் மருந்து மாத்திரைகளுடன் அலையும் தற்காலச் சூழலில் இவர்கள் நோய் நொடிகளிகன் பொருட்டு வைத்தியசாலைகளுக்குச் செல்வது மிகமிக அரிதான விடயமாகும். பல உடல் நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகை மருந்து நடவடிக்கைகளும் இவர்களுக்கு இன்றும் கைதேர்ந்த விடயம். அது போலவேதான் பித்தலாட்ட, அயோக்கியத்தனமான பார்ப்பனீய வழிபாட்டு முறைகளுக்கு முட்டுக்கட்டை கொடுத்தும் அவற்றை நன்கு பகுத்தறியவும் வல்லவர்களாகவும் காணப்படுகின்றனர். காலனியம் மனிதரை மடமையாக்க இவர்களும்,அவர் தம் வழிபாடுகளும் மனித குலத்தைக் காக்கும் வழிபாட்டு மானுடவியல் மரபை இன்றும் என்றும் பாதுகாக்கும் அரணாகக் காணப்படும் என்பது தெளிவு.

க பத்திநாதன் -இலங்கை

க.பத்திநாதன்

(Visited 517 times, 1 visits today)