நானொரு கெட்டவன், நீங்கள்…………..? -கட்டுரை-க.பத்திநாதன்

நான் கெட்டவன் பேசுகிறேன். எல்லோரைப் போலவே நானும் குடமுடைந்து பிறந்தாலும், எல்லோரைப் போலவே நானிருக்கவில்லை ஆதலால்தான் நான் கெட்டவன். ஹோர்மோனின் ஆழுகையைத் தாண்டிய காலங்களில் இருந்து நான் கெட்டவன். ஆனால் நானொரு நல்ல கெட்டவன். பல்லாயிரக்கணக்கான நல்ல கெட்டவர் மத்தியில், எடுத்து வந்த சிந்தனைப் பதிகையாளும், எடுத்துக் கொண்ட கருத்தேற்ற நிலமையினாலும் நானின்று நானாக இல்லை என்பதனையும், எனக்காய் ஒரு அடி கூட இதுவரைக்கும் நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்த கெட்டவன் நான். நீங்கள்……….? நான் யார்? எதற்காக எனக்கு உயிரையும் உடலையும் தந்தன அவ்விரு உயிர்கள்? நான் ஏனிங்கு வாழ்கிறேன்? நான் ஏன் உடையணிகின்றேன்? நான் ஏன் நாகரிகப் போர்வையைப் போர்த்திக் கொள்கின்றேன்? நான் ஏன் காதலிக்கின்றேன்? நான் ஏன் காமத்தூண்டலுக்கு உட்படுகிறேன்? நான் ஏன் கைதுய்மை செய்கிறேன்? நான் ஏன் தூற்றுகிறேன்? நான் ஏன் போற்றுகிறேன்?, நான் ஏன் வணங்குகின்றேன்?, நான் ஏன் உண்மையை மறைத்தும், உரைக்காமலும் திரிகிறேன்? இப்படியான பல வினைகளை என் சுயவினயப்பாடுகளுடன் ஆற்ற முடியாமல் புலம்பப் பட்டமையினால் நானொரு கெட்டவன். நீங்கள்………? நான் எனக்காக எதையுமே செய்யவில்லை, எனது கருத்தை நானாக சொல்லவுமில்லை, நானாக எதையும் கொடுக்கவும் இல்லை வாங்கவும் இல்லை. எல்லாமும் என்னோடு வலம் வருகின்றன. எல்லாமும் என்னோடு போட்டி போடுகின்றன. எல்லாமும் என்னை வெறுக்கவும் செய்கின்றன, விரும்பவும் செய்கின்றன. இவைகளை உணர்ந்த படியினால் இன்று கெட்டவனாக நான். நீங்கள்…….?

கலாசாரம் அது அழகான சொல். ஆனால் அழுக்கைப் பாதுகாக்கும் சொல். இனம், மதம் , மொழிப் பேதங்களை இறுக்கமாகக் கட்டிக் காக்கும் சொல். பல் பேதங்களுக்கான மிகப்பொருத்தமான வெளிக்காட்டுகைச் சொல். பேத வெளிப்பாடுகளை கைக்கொட்டி உணர்த்திட மனிதரால் மனிதருக்கு வழங்கப்பட்ட சொல். உள்ளதை உள்ளவாறன்றி உண்மையை மறைத்தாட வகைக்கோரப்பட்ட சொல். ஆண், பெண் என்ற பேதமும், உயர் குல, தாழ் குல பேதமும், ஏழை பணக்கார பேதமும் என பதர் நாற்றுக்கீடான பல வகையான பேதங்கள் என்பன ஊர்ந்து செல்லும் பேரூந்துப் பயணங்களில் எங்கே? அடைக்கப்படும் அகதி வாழ்வில் எங்கே? உயிர் காக்கும் (சில வேளைகளில் போக்கும்) வைத்தியசாலைகளில் எங்கே? அடிபட்டு வீதியில் உயிருக்காக்கப் போராடும் தருணத்தில் எங்கே? இவைகளை உணர்ந்து கொண்டதால் நான் கெட்டவன். நீங்கள்……..? மரபில் மாற்றம் காண வேண்டும் என்று மாற்றான் கொள்கையோட்டஙக்ளைத் தனது இயைந்த வாழ்வியல் வினைத்தொகுதிகளோடு வலிந்து புகுத்தி அதற்கு நவீனம் என்னும் மரவுரி கொடுத்து அதனையே பிதட்டி பாராட்டி விட்டுப் பின்னர் மரபுக்கே மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்ற மாந்தர்களையும், உலகியல் அயர்ச்சிகளையும் உணர்ந்து கொண்டு வருகிறேன். ஆகவே நானொரு கெட்டவன். நீங்கள்……….?

உடைநடை, உணவுமுறை, வாழ்வியற் கூறுகள், கலை நோக்கு, கல்விமுறை, கலவி நிலை, விஞ்ஞான அணுக்குப் பார்வை, இலக்கியத்தேற்றம் இல்லறத்தோற்றம் நகரமயமாதலில் இருந்து கிராமமயமாதல் என இங்கு விடுபட்டும் போகின்ற பல்லுலக நடைமுறைகளிலும் மீண்டும் மரபினையே நாடுவதையும், அவ்வாறு மாறுவதைத் தற்புகழ்ச்சிக்கோ அல்லது வேறு தேவைக்கோ எழுத்து மூலக் கல்விக் காப்பகம் செய்வதனையும் உணர்ந்து கொண்டு வருகிறேன் ஆதலால் நான் கெட்டவன். நீங்கள்……..?

நூற்றுக்கு நூறு வீதம் நடந்தே தீரும் என்று அனைவராலும் தெரியப்பட்ட, கட்டாயம் ஏற்க வேண்டிய விடயம் என்றால் அது மரணம் மட்டுமே. ஆனால் எவருமே இங்கு நான் சாகத்தான் போகிறேன் என்று, நாளொன்றிலோ அல்லது தனது வாழ்நாளிலோ எவ்வித வினைகளையும் ஆற்றாமல் இருப்பதும் இல்லை, ஆற்றுவதும் இல்லை. உலகம் இல்லாமல் போனாலும் நானிருப்பேன் என்ற முரண்நகைச் சிந்தனைத் தாக்கத்தினால் சொத்துச் சேர்த்தல், சுகம் காணல், பணமோகம், பொறாமை, போட்டி, அடக்கியாழ்தல், கொள்ளை, கொலை என பல அபத்தப் பாதகம் செய்து கொணடு இறுதியில் அடங்க ஆறடி நிலமும் இன்றி மின்னடுப்பில் வேகுவதையும் உணர்ந்தும் விட்டேன் ஆகையால்தான் நானொரு கெட்டவன். நீங்கள்………….?

தன்னைப் போலவே சக மனிதர்களையும் நினைத்துக் கொள்ளல், நினையாது போதல் போன்ற காரண காரிய நிலைமைகளால்தான் மனித உறவுகளிடையேயும், தன்மைகளிடையேயும் வக்கிரமும், வஞ்சனையும் தீவிரம் அடைந்து கொண்டிருக்கின்றன. உங்களுக்குக் கத்தியால் குத்தும் போது வலிக்கும் என்றால் பிறருக்கும் வலிக்கும், உனக்குள் இருக்கின்ற மாறாத தன்னிலை அனுபவப் படிகங்கள் போன்றே மற்றவருக்கும் இருக்கும். அது ஆணோ, பெண்ணோ பருவ வயதில் நீயொரு ஆணாக என்னவெல்லாம் லிங்கப் பகிடிகள் செய்வாயோ அதற்கு ஈடாக உனது பெண்ணுறவும் செய்யும், செய்திருக்கும். உங்களுக்கு பிறர் நடத்தைகளை விமர்சிக்க உரிமையும், தைரியமும் உண்டானால், பிறருக்கும் உங்களை விமர்சிக்க உரிமையும், தைரியமும் உண்டு. நரகாசுரப் படுகொலையை தீபமேற்றி கொண்டாட எம்மால் முடிந்தால் ஏன் எம்மினப் படுகொலையைப் பால்ச்சோறுண்டு கொண்டாட அவர்களால் முடியாது?. இவ்வெண்ண நிலைக்கு மாறாக எந்தவொரு நபரையும் எந்தவொரு இடத்திலோ, நேரத்திலோ நமக்கான பார்வை மட்டத்திலும், அனுபவச் செருக்கிலும் பாரத்தலோ, பழகுதலோ, புரிந்து கொள்வதோ வடிகட்டிய தவறு என்பதனையும் புரிந்து கொண்டதால் நானொரு கெட்டவன். நீங்கள்…..?

ஆணாதிக்கம், பெண்கொடுமை, சிறுவர் கொடுமை, கொலை பாதகம், கொள்ளை நிகழ்வு, வன்புணர்வு, வேசி வாழ்வு, துரோகம், பேராசை, இழிந்து பேசல், பாலியல் லஞ்சம், போதையடிமை, புறங்கூறல், பொய்பேசல் போன்ற பாரதூரமான இழி செயல்கள் என்று சொல்லப் படுகின்ற அனைத்தையும் இங்கு எவருமே மார்தட்டி சொல்லிக் கொடுக்கவில்லை, பிரத்தியேக வகுப்புக்கள் கொண்டு பாடம் புகட்ட வில்லை, கற்கை கூடங்கள் அமைத்து நடைமுறைப் படுத்தவில்லை, எந்த ஊடகமும் காணொலி, கேட்டொலி விழிப்புணர்வு செய்யவில்லை. ஆனால் உலகவாழ் அங்கிகள் அனைவராலும் நிமிடத்திற்கொருமுறையாவது மேற்சொன்னவைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மேற்சொல்லப் பட்டவைகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள், எழுத்து வடிவப் போராட்டங்கள், மனித வடிவப் போராட்டங்கள் என பலவற்றினாலும் உண்டாகின்ற பயன்களோ சிறிதளவே என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் நானொரு கெட்டவன். நீங்கள்………..?

நீங்கள் பண்டிகைக்கும் , கொண்டாட்டத்திற்கும் வீட்டில் ஆடு வெட்டினால் பரவாயில்லை, மாடு வெட்டினால் பரவாயில்லை ஆனால் தனது தொழிலுக்காக ஒருவன் ஆடு,மாடு வெட்டினால் உயிர்கொலைப் போராட்டம். தன்னைப் போல் சக உணர்வும், உடலும் கொணட் பிறர் தெய்வத் தேரிழுத்தல் மாபாதகம் ஆனால் உயிரற்ற எரிபொருள் வாகனம் இழுத்தல் மிகப் பொருத்தம். வரைந்து வைத்த தனிநபர் ஓவியங்களும், நடிக்கப்பட்ட சாமிப்பட நடிகர் பிரதியும் வீட்டின் புனிதவறையில். ஆனால் பழுதில்லாமல் பெற்றெடுத்த நிஐத்தெய்வங்கள் கழிவறையில். இவ்வாறு இன்னும் பல விடயங்களையும் பச்சையாகச் சொல்வதற்கும், சொன்ன விடயங்களையே முரண்நகையாகச் செய்து கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பதனாலும் நானொரு கெட்டவன். நீங்கள்…………..?

க.பத்திநாதன்
சு.வி.அ.க. நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

(Visited 193 times, 1 visits today)