பக்தி இலக்கியங்களும் ஆபாசக் கருத்துக்களும்-கட்டுரை-க.பத்திநாதன்

அன்று தொடக்கம் இன்று வரையிலே மானுடப் போக்கினையும், அதன்பால் உண்டான வினைப்பொருள்களினையும் பகுத்தறியா மனிதத் திரள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன்?, எதற்கு?, எப்படி?, எதனால்? என்ற மெய்பொருள் காணும் கேள்விகளினைக் கேட்க வேண்டிய நேரத்தில் யாரும் கேட்டதில்லை. தீர்க்கமான முடிவுகளினை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்பதில்லை. நடந்தேறிய, நடக்கின்ற, நடக்க இருக்கின்ற எல்லாம் விதியே அல்லது இறைவனின் சித்தமே காரணம் என்ற உப்புச்சப்பின்றிய காரணங்களினைச் சொல்லி விட்டு இருந்துள்ளனர். இருக்கின்றனர். இருப்பார்களா?

இவ்வகையான வினைகளினை ஆற்ற மறந்த மனித கூட்டத்தினை, கேள்விகளைப் பகுத்தறிந்து கேட்க முடியாத சுயமற்ற கூட்டத்தினை தமது சுயலாபப் பண்டமாகக் கொண்டு, பார்ப்பனீயத் தீவிரத்தினால் உண்டாக்கப்பட்ட பக்தி இலக்கியங்களிலே காணப்படுகின்ற ஆபாசக் கருத்துக்களினையும், அதன் மூடத்தனமான மிதமிஞ்சிய பாலியற் சிந்தனைகளையும், அதனால் உண்டாக்கப்பட்ட, படுகின்ற பால்நிலைக் கொடுமைகளினையும் சற்று எடுத்துச் சொல்லலாம் என்ற நோக்குடன் இனங்காணப்பட்ட  கருத்துக்களைத் தொகுத்தளிப்பதே இப்பத்தியின் நோக்கு. உலகின் மிகவும் மோசமான மனித அவலங்களினையும், கொடுமைகளினையும் மதத்தின் பெயரால் மேற்கொண்ட, கொள்கின்ற பெருமையும், பொறுப்பும் பார்ப்பனீயத்துக்கும், இந்துத்துவத்திற்குமே உண்டு. சாதியம் என்ற கொடுமனித சிந்தனைகளினை தமக்குச் சாதகமாக வகுத்து அதனடியாக பாலியற் தீண்டல்களினை கட்டமைத்து வடிவமைத்துள்ளன.

அவ்வகையிலே மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில ஆபாசக்கருத்துக்களின் சீத்துவத்தினைச் சற்றுப் பார்க்கலாம். இந்த மனுதர்ம சாஸ்திரத்தினை பிரம்மாவானவர் மனுஸ்மிருத் சாஸ்திரமாக உண்டு பண்ணி பின்னர் அதை விதிப்படி பிருகு ரிஸிக்கு ஓதுவித்தார். (மனு.அத்-1-சு58) இவ்வாறான மகானின் சீத்துவம் எத்தகையது என்று பார்த்தால் மிகக் கேவலத்தனமாகவும், உச்ச ஆபாசமாகவும் காணப்படுகின்றன. அதாவது பரமசிவம் பார்வதி போன்றவர்களின் திருமணத்திலே பிரம்மா ஐயராக இருந்து ஓமம் வளர்க்கின்றார். அவ்வேளை பார்வதியானவர் ஓம குண்டத்தைச் சுற்றி வருகையில் இடது கையினால் முந்தானையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு வருகின்றார். அதன் போது அவரது இடையினை ஒட்டியத் தொடைப்பகுதி பிரம்மாவின் கண்களுக்குப் படுகின்றது.

அதைப் பார்த்தவுடன் பிரம்மாவிற்கு மோகம் அடங்காமல் வெளிவர பிரம்மாவின் விந்து பீறிட்டு சிதறுகின்றது. அதைப் பிரம்மா ஓமகுண்டலத்தில் சுற்றியிருக்கும் கலசத்தில் விடுகின்றான். உடனே அதில் அகஸ்தியன் பிறக்கின்றான். இவ்வாறான கேவலம் கொண்ட பிரம்ம மகானுக்கோ மீண்டும் மீண்டும் காமம் மேலெழுந்து செல்லச் செல்ல தனது விந்தை மரம், செடிகளில் விட ரிஸிகள் பிறக்கின்றார்கள். தொடர்ந்து பறவைகள், சுடுகாடு, தவளை போன்றவற்றிலும் மீண்டும் மீண்டும் விடுகின்றார். பின்னர் இறுதியாக ஒரு குளத்தில் உள்ள தாமரைப் பூவில் விட அதில் ‘பத்மை’ என்ற அழகிய பெண் பிறக்கின்றாள். பின்னர் அந்த பத்மை என்ற மகளாகிய பெண்ணின் மீது மோகம் கொண்டு அவளுடன் உடலுறவு கொள்ள பிரம்மன் கேட்கின்றான். ஆனால் மகளோ மறுக்க அவளைச் சமாதானப்படுத்தி தன் ஆசையினைப் போக்கிக் கொள்ள பின்வரும் கேடுகெட்ட (வேத) வாக்கியங்களைக் கூறுகின்றான்.

“மாதர முபைத்ய கஸாரமுபைதி புத்ரார்தீத
சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீக
ஸர்வம்பரவே விந்துவது தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதரம், ஸ_ரஞ்சத், ரோஹதி”

இதன் பொருள் ஒரு மகனைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆண் தாய்,தமக்கை,மகள் யாரோடேயாயினும் கூடலாம் என்பதாகும். (மனு நீதி: ஜாதிக்கொரு நீதி- பெரியார்)

ஒருமுறை சிவபெருமான் பார்வதி சகிதம் விஸ்ணுவின் மோகினி அவதாரத்தினைப் பார்க்க நந்தவனத்திற்குச் செல்கின்றனர். அங்கு விஸ்ணு பந்தாடிக் கொண்டிருக்கும் பெண்ணாகத் தோன்றுகின்றார். அப்போது அக்குறித்த பெண்ணின்(விஸ்ணுவின்) ஆடை சற்று நழுவி விடுகின்றது. உடனே அதனைக் கண்ட சிவனோ பார்வதியையும், தன் சிவகணங்களினையும் மறந்து மோகினியின் பின்னால் காம வெறிபிடித்து ஓடுகின்றான். ஓடிய சிவன் மோகினியின் கூந்தலினை இழுத்து அவளை வலுக்கட்டாயமாகப் பிடித்து இரு கைகளினாலும் ஆலிங்கனம் செய்து கொண்டு பலவந்தம் செய்கின்றான்.( பாகவத மூலம்- 8வது ஸ்கந்தம்- 12ம் அத்தியாயம் 1-37)

இவ்வாறான பிற்போக்குத் தனமான பாலியல் எண்ணங்களினையும், பெண்களுக்கு எதிரான பால்நிலைக் கொடுமைகளினையும் மேம்படுத்தும் வகையிலான பக்தி என்ற போர்வை கொண்ட இலக்கியங்களினைப் படைதத்தவர்கள் எத்துணை மூர்க்கத்தனமான கீழ் நிலைச் சிந்தனைப் போக்கு கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்துக்களையும், கடவுளரையும் வணங்கி சீர் தூக்கும் மனிதர்களின் எண்ண நிலைகள் எவ்வாறு இருக்கும். இல்லா விட்டால் தனது கடவுளின் இடத்திலேயே சின்னஞ் சிறுமி ஒருத்தியை வைத்து ஐவர் சேர்ந்து ஐந்து நாட்கள் பலவந்த துஸ்பிரயோகம் செய்த கொடுமையும் இந்துதுவத்தைப் பாதுகாக்கும் மகான்களினால் ஈடேறாமல் இருக்குமா என்ன?

இன்னொரு பக்கம் பார்ப்போமானால் இராமாயணத்திலே கந்தனின் பிறப்புப் பற்றி இவ்வாறான கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று வேண்ட சிவன் கலவி செய்ய ஆரம்பிக்கின்றான். 1000 வருடங்கள் கலவி செய்தும் பயனேதுமில்லை. தேவர்கள் சிவனிடம் மீண்டும் சென்று போதும் நிறுத்துங்கள் என்று சொல்லியும் சிவன் ஆரம்பத்தில் நிறுத்தாமல் பின்பு சொல்கின்றான் நான் கலவியை நிறுத்தினால் என் விந்து வெள்ளமாகப் போகும் அதனை எவரால் தாங்க முடியும் என்றான். பின்பு சிவன் தனது விந்தை தேவர்களின் கையில் விட்டு பின்வருமாறு சொன்னான். “தனித்த முத்த உருக்கியென்ன வெண்புனல்”

உடனே தேவர்கள் விந்தைக் குடித்து கர்ப்பம் ஆகி விடுகின்றனர். பின்னர் தேவர்கள் பயந்து மனம் நோக சிவன் ஓர் குளத்தைக் காட்டி அதிலே போய் குளிக்கச் சொன்னான். அவர்கள் குளித்து விட கர்ப்பம் கலைகின்றது. அவ்வேளை கீழே சிந்திய இரண்டொரு துளி விந்துத்துளிகளில் இருந்து கந்தன் பிறந்து விடுகின்றான். கந்தன் என்பது சமஸ்கிருத அர்த்தப்படி ஸ்கந்தன் என்று பொருள். ஸ்கந்தன்; ஸ்ரீஸ்கந்தம்ஸ்ரீஸ்கலிதம் ஸ்ரீவிந்து ஆகவே விந்தில் இருந்து வந்தவந்தான் கந்தன்.(சிந்தனையும் பகுத்தறிவும்-பக்-30) இப்படியான சீத்துவம் கொண்டவன் தான் தமிழ்க் கடவுளான கந்தன் என்றும் சொல்லிவிட தமிழினமும் இன்றும் சீர் தூக்கிக் கொண்டுதானே உள்ளன . இதை என்னவென்று சொல்வது.

மேற்கண்டவாறான காமச் சிந்தனை இழிவு கொண்ட பக்தி உணர்வினை இந்துத்துவ பக்தி மரபிலே மிகையாகக் காணமுடிகின்றது. உதாரணங்கள் பலவுண்டு. ஆழ்வார்கள் பாடலிலும் சரி, நாயன்மார்களின் பாடலிலும் சரி இவ்வகையான காம இச்சை உணர்வுகள் அபரிமிதமாகவே காணப்படுகின்றன. ஆண்டாள் பாடலானது ஒரு பெண் ஆண் மீது கொண்ட காம விரகதாபத்தின் கொடிமுடியாகும். ஆண்டாளின் பாடல்களிலே அனேக இடங்களில் பாலியற் சிந்தனைகளே கிளர்ச்சியாக பொங்கி வழிகின்றது. உதாரணமாக பின்வரும் பாடலிலே அதைக் காணலாம்.

“குற்றம் அற்ற முலை தன்னை குமரன் கோலப்பனைத் தோளோடு
அற்றம் குற்றம் அவை தீர அனைய அமுக்கிக் காட்டரே”

“கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென அழலைத் தீர்வேன்”

இப்பாடல் வரிகள் இச்சை உணர்வின் உச்சத்தையே காட்டுகின்றது. அங்கு ஒரு பெண் என்ற ரீதியில் ஆண்டாளின் பாலுணர்வை இவ்வளவு கொச்சையாக வெளிப்படுத்தி விடுகின்ற அளவில் இயற்றி அதைப் போற்றச் செய்துள்ளனர் வைணவர்கள். (அடிப்படை உளவியல் – மணியம் சிவகுமார்)

இவ்வாறே ஆலவாய் அழகாரம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண்டர் புராணத்திலே மிகமோசமான பாலியற் கருத்துக்கள் பொதிந்துள்ளன. பிறர் மதத்து மனைவிமாரை வன்புணர வேண்டும் என்ற காம இச்சையும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றி கழுவேற்றிக் கொன்ற கயமத்தனங்களும் பெரியபுராணத்தில் உண்டு.

“மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாய் அருள்
பெண்ணே கத்தொழில் சாக்கியப் பேய் அமண்
தெண்னர் கற்பழிக்கத்திரு வுள்ளமே”

(3ம் திருமுறை – ஞானசம்பந்தர். திருவாலவாய்ப்பண் – கவுசிகம் – 3 வது பாடல்)

இவ்வாறு பிறர் மனைவியைக் கற்பழிக்கத் திருவுளமும் சக்தியும் கொடுக்குமாறு தனது இறைவனை வேண்டுகின்றார் இப்புனிதர். இவ்வாறு செய்யும் இவரது யோக்கியம் எத்தகையது? இதை என்னவென்று சொல்வது ஒரு பெண்ணைக் வன்புணர்வு செய்வதற்கு ஒருவர் தன் கடவுளிடம் ஆசி பெறுகின்றார் என்றால் அவரது கடவுளின் யோக்கியம் எத்தகையது?. சரி இவர்களின் கடவுளரின் திறம்தான் இவ்வளவு சிறப்பானது என்றால் இக்கடவுளரை வழிபடுபவர்களின் சீத்துவத்தினைச் சற்றுப்ண பார்க்கலாம்.

அக்கினிக்கும் சுதானைக்கும் பிறந்த மகனாகிய சுதரிசனன் போகவதி என்னும் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தான். அவ்வேளை ஒரு நாள் அவன் தனது மனைவியிடம் கண்டதெல்லாம் வென்றிட வேண்டுமென்ற எண்ணங் கொண்டு குருசேத்திரம் சென்று ரிஸிகள் முதலியவர்களுக்கு உபசாரம் செய்து இல்லற தர்மத்தினை நடத்தினான். அங்கு தன் மனைவியிடம் பெண்ணே! நீ இந்த ஆச்சிரமத்திற்கு வருபவரை அன்பு பாராட்டி அறுசுவையன்னம் வருந்தியுண்பித்து ஆசிர்வாதம் பெறவேண்டும். அதிதி பூசையே மேலானது. அதிதிகள் எதைக் கேட்டாலும் கொடுப்பதே உன் கடமை. ஒரு வேளை அவர்கள் ஆனந்தமாய் உன்னை விரும்பினால் அதற்கு நீ கட்டுப்பட வேண்டும் எனக்கூறி கட்டளையிட்டான்.

ஒருநாள் சுதரிசனன் மனையில் இல்லாத தருணம் ஓர் பிராமணன் ஆச்சிரமத்திற்கு (பிச்சை எடுக்க) வருகின்றான். உடனே போகவதி அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்கின்றாள். எல்லாம் முடிந்த பின்பு பிராமணன்- பைந்தொடியே! கந்தர்வன் கணையால் நொந்தயானுன்னை வந்தடைந்தேன்;;. உன்னமுத முலையும், அதரக்கனியையும் அலைந்து கெட்டோடி வந்த எனக்கருதி மோகத்தை சேருநீ தீரும்.

போகவதி – முனிவரே! தீமைக்கேதுவாகிய காரியங்களிற் பெரியோர்கள் விருப்பங் கொள்ளார்களே. பெண்ணின்பந் தவிர்த்து வேறொன்று கேளுமையா!

பிராமணன் – பெண்ணே! நீ என்ன தந்தாலும் தீண்டேன். நான் மோகவிகாரங் கொண்டுள்ளேன். தடை செய்தால் என் பிராணன் போய்விடும் உனக்கு பாவமும் பழியும் வரும்.

இவ்வாறு கேவலங் கெட்ட அந்த கிழட்டுப் பிராமணன் வலுக்கட்டாயமாக அப்பெண்னைப் பயமுறுத்தி சம்மதிக்க வைக்கின்றான். அவ்வேளை வெளியில் சென்ற சுதரிசனன் வீடு வந்து அவர்களது திருக்கோலத்தைப் பார்க்கின்றான். உடனே அந்த பிராமணப் புண்ணியவான்,

பிராமணன்:

“ஓய் பிராமணனே கவலைப்படாதே, கண்கலங்காதே, மயக்கமுறாதே, உன் மனைவி அதிதி பூசை பண்ணுகின்றாள்” என்றான்.

அதற்கு சுதரிசப் புண்ணியவான் ஆனந்தமாய் உள்ளம் புளாகித்து மனங்குளிர்ந்து நின்றான். இவ்வாறான கேவலங்களைப் பார்த்துதான் பெரியபுராணமும், இயற்பகை நாயனார் சரித்திரம் முதலியனவும், பக்த லீலாமிர்தத்திர் கபீர்தாஸ் சரித்திரம் முதலியனவும் எழுதப்பட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (27.11.1943. குடியரசு)

மேற்கண்டவாறு இன்னும் பல வக்கிர காம சிந்தனை கொண்ட கதைகளைக் கொண்டே இந்துத்துவத்தின் பல பக்தி இலக்கியங்கள் ஆக்கப்பட்டுள்ளமை தெளிவு. ஒருவன் மிகப் பெறுதியாக நினைத்து மக்கி மண்ணாகிப் போன கடவுளரிலேயே இவ்வாறான இழி செயல் காமத்தீண்டல்கள் மிதமிஞ்சி இருப்பதினையும், அதனையே புனிதம் என்று, கடவுள் சித்தம் என்று அறியாமைக் கூட்டங்கள்(மந்தைகள்) இருக்கும் வரை எதுவும் தெளிவு பெறாமல் இருக்கும் என்பது தெளிவு. இந்துவத்தின் மேன்மையினைப் போற்றுவதாகச் சொல்லப்படுகின்ற மனுதர்ம சாத்திரம், பாகவத மூலம், பெரியபுராணம், ராமாயணம், மகாபாரதம், ஆழ்வார்கள் பாடல்கள், தேவாரப்பாடல்கள் போன்ற இன்னும் பலவும் ஒரு சாதாரண மனிதன் கற்பனை கூட பண்ணமுடியாத அளவுக்கு ஆபாசச் சிந்தனைகளினை தன்னுட்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன என்றால் அதைப் படைத்;தவர்களின் மனித எண்ணக்கோலங்கள் எத்துணை கீழ்த் தனமானதாக இருந்திருக்க வேண்டும். பெத்த மகளையே படுக்கைக்கு அழைப்பவன் படைத்தல் கடவுள். பெண் கோலம் பூண்ட ஆணையே வன்புணர்ந்தவன் முழுமுதற் கடவுள். சிதறிய விந்தில் விளைந்தவன் தமிழ் கடவுள், பிறர் மனைவியுடன் படுக்க வலு கேட்டவன் புனிதன், தன் மனைவியை மாற்றனுக்குப் பங்கிட்டவன் புனிதன் இன்னும் எத்தனை. ஏன் தமிழையும் தமிழரையும் கட்டிக்காத்த சோழன் கூட மனு நீதி கண்ட சோழன் தானே. இவற்றை எல்லாம் பகுத்தறியாமல் எத்தனை காலம்தான் எமது சந்ததிகள் இருக்கப் போகின்றன என்பதே கவலை.

க.பத்திநாதன்- கிழக்குப்பல்கலைக்கழகம்

இலங்கை

க.பத்திநாதன்

(Visited 348 times, 1 visits today)