மனித மணங்களும், மனங்களும்-கட்டுரை-க.பத்திநாதன்

க.பத்திநாதன்இன்று இருப்பதை அழிக்கவும், இல்லாததைத் தோன்றவும் செய்யக்கூடிய புவிவாழ் உயிரியாய் சகல விலங்குகளையும் மிஞ்சிக் கொண்டுள்ளது மனித விலங்கு. பூமியின் குழந்தையாய் இயற்கையின் இருப்போடும் துழாவியும் திரிந்த நாமின்று மனிதநெறி மறந்த மனிதமிருகல்லவா? செய்யக்கூடாத நேரத்தில் செய்யக்கூடாததைத் செய்வதும், செய்யக்கூடிய நேரத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யாமலிருப்பதும் எமக்கு மிகப்பொருத்தமான ஒன்று. எம்மிடையே இயற்கையாகவும், செயற்கையாகவும் உண்டாகும் மணங்களையும் அதை எடுத்தாட்கொள்ளும் மனங்களையும் ஒத்து நோக்கி அலச என்பேனைக்கு சற்று ஆவல்.

பூமிவாழ் உயிரியான மனிதர் நாம் மட்டும்தான் எமது இயற்கைக் கோலத்தை படிப்படியாய் மறைத்துக் கொண்டோம். கற்காலம் தொடங்கி கம்பியூட்டர் காலம் வரை நிலமையிதே. இவ்வாறான மனிதரெம்மில் பிறப்பு முதல் இறப்பு வரை எம்முடல் கொண்ட மணங்களின் வாயிலாக பல விடயங்களை அறிய முடிந்தது: அறிவிக்க முடிந்தது. குழந்தை பிறக்கும் போது தண்ணீர் குடம் கிழிந்து குருதி கலந்த மணம், ( சில இடங்களில் அதன் பெயர் வெடுக்கு) குழந்தை தரையில் புரண்டு மண் சுவைக்கும் போது: எச்சில் கலந்த மணம். குருதி திரண்டு புரண்டு வரும் போது அது மற்றொரு வெடுக்காய் அறிவிக்கும்: அது பெண்ணின் பூப்பெய்தல் மணம், ஒருவித மிலேச்சச் சுகவுணர்வு கொண்ட இன்னுமொரு வெடுக்கு, அது ஆணின் கைத்துய்மை மணம். ஓருடல் ஈருடலாகும் இன்பவேளையில் ஒரு மணம்: அது சந்ததி பெருக்கும். உழைப்பில் திளைத்து நோயில் வாடும் போது ஒரு மணம்: அது மரண வாடை, உயிர் பிரிந்த பின் உடல் கெட்ட ஊனத்தின் மணம்: அது வயிற்றைக் குமட்டும். இவ்வாறாக மனிதர்களாகிய எம்மிடையே இயற்கையில் காணப்படும் மணங்களை ஒரு பொது விதியில் பார்க்கலாம்.

ஆனால் எனது பேனை இன்னும் கொஞ்சம் உட்சென்று பார்க்க நினைத்தது. மனிதர்களாகிய எமது ஒவ்வொருவரிடையேயும் ஒரு வகையான மணம் காணப்பட்டே தீரும். அது பல விடயங்களை எமது நாளாந்த வாழ்வில் எம்மையறிந்தோ அல்லது அறியாமலோ  எமக்குக் கற்றுத்தரும். பல்லனுபவங்களை எமக்கு உண்டாக்கி மறையும். உதாரணமாக பலவற்றை நோக்கலாம்.

‘ஒன்று தொடக்கம் மூன்று வரையான குழந்தைகள் தமது தாயின் வியர்வை வாசத்தை நுகரத் தவறும் போது தமது பருவ வயதிடையே பல்வேறு  வகையான பாரிய குற்றங்களைப் புரிய தானாகத்தூண்டப்படுகின்றனர்’ என்கின்றனர் உளவியல் முன்னோர்கள்.

இது முற்றிலும் உண்மையான ஒன்று. இன்று சொல்லிலடங்காத தீய பழக்கங்கயையும், குற்றங்களையும் புரிகின்றவர்களைப் பார்த்தால் அவர்கள் சிறுபராயத்திலே தனது தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.(விதிவிலக்குண்டு.)

ஆனால் மனிதர் எல்லோருக்கும் பொதுவான சில மணக்குணங்கள் மனிதரிடம் காணப்படுகின்றமை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே. அதாவது மனித எச்சில் மணம், வியர்வை மணம், அக்குள் மணம், மலத்தின் மணம், சலத்தின் மணம், வாந்தியின் மணம், தடிமன் சளியின் மணம், இலிங்க உறுப்புக்களின் மணம், கூந்தலின் மணம், தாடி மீசையின் மணம் போன்ற பல மணங்கள் காணப்படுகின்றன. (இவை பெரும்பாலும் துர்மணங்களாகவே இருக்கும்.) இவற்றைக் கையாளுகின்ற எமது மனங்களின் நிலையையும், அறியாமையையும் சற்றுப் பார்க்கலாம்.

மனிதர்களிடம் இருந்து வெளிவருகின்ற மணங்களின் மூலம் அவரவரின் தொழில்களை அறிந்து கொள்ளமுடியும். உதாரணமாக மீன் வியாபாரியிடம் மீனோடு கலந்த ஓர் மணம், மேசன் தொழிலாளியிடம் ஒரு மணம், மரக்கறி வியாபாரியிடம் ஒரு மணம், கசாப்புக் கடக்காரரிடம் ஒரு மணம், சகதி குளிக்கும் விவசாயிடம் ஒரு மணம், சந்தையில் வாடும் செருப்புத் தொழிலாளியிடம் ஒரு மணம், தனக்கு கீழ் ஆட்கள் கொண்டு வேலை வாங்கும் முதலாளியிடம் ஒரு மணம், பூசை வைக்கும் ஐயரிடம் ஒரு மணம், தூஆ செய்யும் மௌலவியிடம் ஒரு மணம் என இவ்வாறு இப்பட்டியலை நீண்டிக் கொண்டே போகலாம்.

ஒரு நபருக்கு தான் எச்சில் துப்பினால் அருவருப்பாகத் தெரியாது, தான் வாந்தி எடுத்தால் அருவருப்பாகத் தெரியாது, தான் வாயு விட்டால் அருவருப்பாகத் தெரியாது, தனது மலத்தின் மணம் அருவருப்பாகத் தெரியாது, தனது வியர்வை மணம் அருவருப்பாகத் தெரியாது. ஆனால் இவற்றை எல்லாம் தனது சகபாடி ஒருவர் அருகில் இருந்து செய்யும் போது மிக மிக அருவருப்பாகவும், குறித்த நபர் கேவலமானவராகவும், மரியாதை தெரியாத நபராகவும், தீண்டத் தெரியாதவராகவும் வெகு சுலபமாக அவர் பட்டம் கொடுத்து விடுகின்றார். இது எத்துணை தூரம் நியாயமானது என்று தெரியவில்லை. அதிலும் இவ்வாறான செயற்பாடுகளை வசதி படைத்தவர்கள் சடுதியாய் புரிந்தாலும் அவர்கள் அவ்வளவு பாரதூரமானவர்கள் ஆக கருதப்பட மாட்டார்கள். உதாரணமாக கோட் சூட் அணிந்த நன்கு நேர்த்தியாக உடுத்திக் கொண்ட நறுமணங்களை திறம்பட பூசிக் கொண்ட ஒருவரும் அவருக்கு முற்றிலும் மாறுபட்ட அழுக்கான தோற்றமுடைய ஒருவரும் ஓர் பொதுவான இடத்தில் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அவ்வேளை முன்னைய நபர் வேறு வழியின்றி ஓர் வலுவான வாயுவொன்றை விட்டு விடுகின்றார். துர்மணமோ சொல்லத்தேவையில்லை. ஆனால் அருகில் இருக்கும் அனைவரும் இரண்டாமவரையே அந்த செயற்பாட்டை செய்தவராக அவரவர் மனதில் எண்ணிக்கொள்வர். இவ்வாறான மனநிலையை நாம் எவ்வாறு ஏற்படுத்திக் கொண்டோம் அல்லது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது?. இவற்றைப் பார்க்கும் போது ஒன்றைத் திடமாக எண்ணத்தோணுகின்றது, இவ்வாறான தன்மையுடையதால்த்  தான் இந்தச் சாதிப்பிரிவினைகளும் உண்டுபண்ணப்பட்டன போலும்.

மனிதர்கள் ஆகிய நாம் எப்போது எமது குறைகளை மறைக்கவும், அவற்றை சரியென வாதிடவும் முற்பட்டோமோ அன்றில் இருந்தே  நாம் மனித பிறவியை மதிக்கவில்லை மிதித்து புதைத்து விட்டோம். சரி இவ்வாறான நிலைமைகளை மிஞ்சியும், மணங்களை தமது மனதால் அழகாகக் கையாளும் மனிதர்களும் எம்மத்தியில் உண்டுதான். உதாரணமாக குழந்தையைப் பெற்ற தாயொருவர் தனது குழந்தையின் மேற்சொன்ன அனைத்து விதமான மணங்களையும் மகிழ்வாக மனங்கொள்ளுவார். தான் சாப்பிடும் போது தனது குழந்தை தனக்கருகில் மலமோ சலமோ கழித்தால் கூட தாயானவள் அவற்றைப் பொருட்படுத்தாமல் தனது குழந்தைக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்வாள். ஆனால் தனது குழந்தையை ஒத்த அயல் வீட்டுக் குழந்தை என்றாலும் அவள் மனம் சற்றுத் தயங்கும். (விதிவிலக்குண்டு). இன்னுமொரு உதாரணத்தை நோக்குவோமானால் அமரர் அறையில் வேலை புரியும் ஒருவர் இறந்த உடலினை பாகம் பாகமாகப் பிரித்து அவ்வுடல் இன்னும் சற்று நேரத்திற்கு இருக்கும் படியாக துப்பரவு செய்வார். அங்கு அவர் மனித உடலில் அனைத்து வகையான மணங்களையும் கையால் தொட்டு நுகர்ந்தும் கொள்ளுவார். ஆனால் அதே நேரம் அன்றிரவே தன் வீட்டுக்குச் சென்று அறுசுவை விருந்தும் சுவைப்பார்., அதுபோலவேதான் வைத்தியர்களின் மனநிலையும் . இவ்வாறான சூழ் நிலையிலும் குறித்த அந்நபர்களின் மனநிலையின் பக்குவம் எத்தகையது என்பது ஆராயத்தக்கதே.

இன்னொரு வகையில் பார்த்தால் மனிதரின் மனவேறுபாடுகளும் அவர்களிடம் வெளிவரும் மணவேறுபாடுகளை தீர்மானிப்பதையும் உணர முடிகின்றது. வழிபாட்டுத் தலங்களையும் அங்குள்ள மனிதர்களையும் பார்ப்போமானால் அவர்களிடம் அவர்களை அறியாமலேயே நல் மணம் ஒன்று தானாக சூழ்ந்து கொண்டிருக்கும். வழிபாட்டிடங்களின் அனைத்து நல்லெண்ணங்களும் அவர்களுள் புகுந்து விடும். இங்கு மனதினால் மணம் தீர்மானிக்கப் படுகின்றது. ஆலயத்திற்கு செல்லும் போது அனைவரும் தம்மிடமுள்ள கெட்ட வாடைகளை துரத்திவிட்டுத்தானே செல்வோம்.  தெய்வ வழிபாட்டிலே பக்தர்கள் தமது கடவுளருடன் ஒட்டி உறவாடி வழிபடுவர். அங்கு எல்லோரிடமும் ஓர் தெய்வீக வாடை உட்புகுந்து விடுகின்றது. இங்குதான் மிகப்பெரும் குணமாக்கல் சிகிச்சை இடம் பெறும். அந்த ஆலயத்தின் கற்பூர வாடை, அன்றே பறித்த வேப்பிலை வாடை, சந்தன குங்கும வாடை, ஊதுபத்தியின் உள்ளீர்க்கும் வாடை, மனிதக் கூட்டங்களின் நல்லெண்ணங்களின் வாடை என எல்லா மணங்களும் சேர்ந்து அந்த மாபெரும் குணமாக்கலைப் பண்ணி விடுகின்றன.

இவ்வாறான தன்மைகளைக் கொண்டதாக மனிதரிடையே இயற்கையாகவோ, செயற்கையாகவோ தோன்றும் மணங்களையும் அதை எடுத்தாளுகின்ற மனித மனங்களின் பக்குவத்தினையும் எம்மால் நோக்க முடிகின்றது. மனிதரிடையே இயற்கையாகவே தோன்றுகின்ற மணங்களின் பால் ஒருவருடைய பால், வயது, அந்தஸ்து, வேலை, உடலியல் நிலைமை, சுற்றாடல் தாக்கம், வாழ்வியல் சூழல் என பல வகையான விடயங்களை அறிந்து கொள்ள முடியும். உழகைக்கும் மக்களின் வலிகளை உணர்ந்திட முடியும். மனித மணமானது செய்யும் வேலையைப் பொறுத்தும், இருக்கும் சூழலைப் பொறுத்தும், பழகுகின்ற மனிதர்களைப் பொறுத்தும், தனது சுயலாபத்தைப் பொறுத்தும் மனவோட்டங்களையும் அவர் தம்மிருப்புக்களையும் தீர்மானித்துக் கொண்டேதான் இருக்கும். சிலருக்கு மதுவாசம் பிடிக்கும், சிலருக்கு மாது வாசம் பிடிக்கும், சிலருக்கு பண வாசம் பிடிக்கும், சிலருக்கு மண்வாசம் பிடிக்கும், சிலருக்கு குருதி வாசம் பிடிக்கும். ஆனால் எவருக்குமே  இன்று மனித வாசம் பிடிக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். ஆகவேதான் மனிதருக்கு மனித வாசம் பிடிக்குமானால் பலரின் மனம் வாசமாக வீசும்.

க.பத்திநாதன்-இலங்கை

க.பத்திநாதன்

 430 total views,  1 views today

(Visited 161 times, 1 visits today)