வாழ நினைத்தால் வாழலாம்-கட்டுரை-தமிழ்க்கவி

வாழ நினைத்தால் வாழலாம்ருவர் வாளை ஊயர்த்திப் பிடிக்கும் போது அதை பிடித்தவர் அதன் நிழலின்கீழ் வந்து விடுவார் . எதிராளியும் ஒளியின் எதிரில் நின்றால் அவரும் வாளின் நிழலில் வந்துவிடுவார். ஆயினும் இருளில் நிற்கும் ஒருவர் அந்த நிழலில் வர முடிவதில்லை. அது கூர்வாளின் நிழலாயினும்.

போராளி தமிழினி எழதிய கூர் வாளின் நிழலில் பல நூற்றுக்கணக்கான பெண்கள் இருந்திருக்கிறோம். இதில் வாளை ஓங்கியவர்களும்  , ஓங்கிய வாளின்  எதிர் நின்றவர்களும் அடக்கம்.
போர் காலங்காலமாக அழிவையே தந்து கொண்டிருந்தது. அந்த அழிவுகள் அனைத்தும் பெண்களையே நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கியது. விடுதலைப் புலியாக நான் இருந்தபோது ஆட்சேர்ப்புக்காக நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பின்வரம் கருத்தைப் பேசுவதுண்டு

“ எதிரி இந்த மண்ணுக்குள் நுழைந்தால் என்ன செய்யப்போகிறான் . பொன்னைத்தேடுவான் பொருளைத்தேடுவான் பெண்ணைத்தேடுவான் . நான் பெண்ணாக இருப்பதால் அதை பின்னால் சொல்கிறேன் ஆனால் அவன் வந்த உடனே பெண்ணைத்தான் தேடுவான்.ஆக முதலில் அகப்பட்டு அழிந்து போகப்போவது பெண்களே அகப்பட்டு அழிந்து போகாமல். ஏதிர்த்து போரிட்டு எம்மைக் காத்துக்கொள்ளலாம். வாருங்கள்”

பெண்கள் போராட்டத்தில் இணைந்தார்கள். நிறையவே இணைந்தார்கள். ‘அடிமைத்தளை அறுக்கப் போராடுவோம்’ ; சுதந்திரப்பறவைகளாக வானில் பறப்போம்’ என்பலப்பல கனவுகளை இவர்கள் கண்டுமிருக்கலாம். ஆனால் சமுதாயத்தில் அவர்கள் எதிர்நோக்கிய  அடக்குமுறைகளுக்கும் அடிமைத்தளைகளுக்கும் சற்றும் குறையாத ஒருபடி மேலான  தளைகளுக்குள்ளேயே இவர்கள் வாழவேண்டியிருந்தது. காரணம் இங்கே இராணுக் கட்டமைப்பே நிலவியது.

எண்ணற்ற கனவுகளுடன் வீடுகளைத்துறந்து வெளியேவந்த பெண்கள் ஒரு இயக்க முகாமுக்குள் புகுந்து விட்டால்,அத்தோடு அவளுடைய கனவுகள் கற்பனைகள் சுக நலன்கள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அப்படித்தான் வாழ்ந்தார்கள் போராளிகள்.

கூர்வாளின் நிழலில் தமிழினி குறிப்பிட்டது போல் முகாம் வாழ்க்கை எல்லோருக்கும் துன்பம் தருவதுதான். அதிலும் பயிற்சி முகாம் என்பது சித்திரவதைக்கூடம்தான். அங்கே உடல்வலுவும் திறமையும் உள்ளவர்கள் மட்டுமே நுழைவதில்லையே. நேற்றுவiரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பிள்ளைகளே அதிகம். வெயிலுக்குக்காட்டாமல் வளர்த்த பிள்ளைகள் காடுகளைக் காணாத பிள்ளைகள் அதிகம். இயலாது என்ற வார்த்தை அங்கே தணிக்கை செய்யப்பட்ட வார்த்தை. நாம் மாடுகளை எப்படி வேலைக்கு பழக்கினோமோ அதே நடைமுறைதான் இங்கேயும்.

இராணுவ நடைமுறை என்ற பெயரில் எல்லா நடவடிக்கைகளும் இருக்கும். அக்காக்கள் வரும்போது என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் போட்டுவிட்டு எழுந்து நின்று ‘வணக்கமக்கா” என்று கூற வேண்டும். அப்போது கைகளைப் பின்புறமாக  வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு விசேட உணவு. இவர்களுக்கு சாதாரணமான உணவு. அதுவும் சாப்பாட்டுக்கு மணியடித்ததும் நின்றால்தான் பிந்தினால் முழுமையான கறிவகை கிடைக்காது. என்னதான் நியாயமான கருத்தானாலும் எதிர்த்து பேசக்கூடாது ‘உத்தரவுக்குக் கீழ்ப்படி’ என்பதே வேதம்.

இது பற்றி பயிற்சிமுகாமில் ஒரு கதை கூறப்படும். ஓரு ராணுவத்தின் வேவு அணி வேவுக்காக தொலைவுக்கு சென்றது. அதன் தளபதி வேறொரு மாநிலத்தில் நின்றான் அங்கே திடீரெனப் பெரிய மழை பிடித்துக் கொண்டது. அப்போது அவனுக்கு தனது அணியொன்று வேவுக்கு சென்றிருப்பது நினைவுக்கு வரவே வாக்கிடோக்கியில் அவர்களது தலைவனை தொடர்பு கொண்டு,
“அனைவரும் மழைக்கோட்டை கொண்டு போனீர்களா?” என்று கேட்டான்.

“ யெஸ் சார் “ என்றான் அவன்.

“ சரி உடனே அதைப் போட்டுக்கொள்ளுங்கள் ”; என்றான். வேவு அணி நின்ற இடத்தில் கொடும் வெய்யில் கொழுத்திக்கொண்டிருந்தது. ஆயினும் அவர்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து மழைக்கோட்டை அணிந்து கொண்டார்களாம்.

தவறுஎதாவது நடந்து விட்டால் ஒருவரே செய்தாலும் ‘குரூப் பணிஸ்மென்ற்’ அனைவருக்கும் தண்டனை . இது அனைத்துலக  இராணுவ நடைமுறைதான்.

இந்தப்பயிற்சியின் பின் வெளியேறி வரும் பெண்களுக்கு முகாமை விட்டு வெளியே செல்லும் சுதந்திரமில்லை. அனுமதி பெற்று வாசலில், வெளியே செல்லும் நேரம், காரணம், இடம் என்பவற்றை பதிவு செய்துவிட்டு அதன்பிறகே வெளியே செல்ல முடியும். சண்டையில் நிற்போருக்கு அதுவும் இல்லை.

ஏன்னதான் திறமை இருந்தாலும் அதைபொறுப்பாளருக்கு மிஞ்சியதிறமையாகக் காட்டிக்கொள்ளக்கூடாது. மீறினால் பின்தங்கிய பிரதேசங்களுக்கு மாற்றம் கிடைக்கும். அரசியற்துறையில் இதெல்லாம் சகஜமப்பா. பிறக்கும் போதே அதிர்ஸ்டசாலிகளாகப் பிறந்துவிட்டவர்கள் உண்டு. இயக்கத்திலும் நுழையும்போதே பொறுப்பிலுள்ளவர்களைக் கவரும்வண்ணம் வந்தவர்களும் உண்டு. இயக்கத்துக்கு வந்ததிலிருந்தே ஒவ்வொரு துறையாக மாறி மாறி கல்விகற்றுக்கொண்டே இருந்தவர்களும் உண்டு.

இது தமிழினி பற்றிய ஆய்வு அல்ல என்றாலும் போருக்குப்பின் பெண்களின் நிலை பற்றிய ஆய்வை செய்யப்புகும்போது என்னைப்பற்றியோ தமிழினினியைப்பற்றியோ கூறாமல் விலகமுடியாது இதுவும் இன்னு போராளிப் பெண்களின் நிலைபற்றி பலவிதமான கருத்துக்களை மின்னல் வேகத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் விட யமறிந்த நாம் மௌனமாக இருத்தலாகாது எனவே எழுத விளைகிறேன்.

தமிழினியும்  தன் புத்திசாதுரியத்தாலும் அறிவாலும் சிறந்த துறைகளில் கடமையேற்று கஸ்டமின்றி வாழ்ந்தவள். இயக்கத்தின் தொடக்க காலப் போராளிகள் பொறுப்பிலிருந்து பின்தள்ளப்பட்டு பதவிக்கு வந்தவர்களில் தமிழினியும் அவளுடைய கல்விக்குழுவினரும் அடங்குவர். வந்த ஒருசில வருடங்களுள் உந்துருளி கிடைத்ததும். கடைசிக் காலங்களில் நாலு சில்லு வாகனப்பேறும் கிடைத்த இளைய போராளி அவள். அவளுக்குமுன் அந்தப் பொறுப்பிலிருந்த எந்த பெண்ணுக்கும் அந்தப்பதவியை வகித்தபோது பிஸ்டல் வழங்கப்படவில்லை தமிழினிக்கு வழங்கப்பட்டது. இப்படி எல்லாம் தமிழினி பெற்றமைக்கு முக்கிய காரணம் இயக்கத்துக்கு வாகனங்களும் பொருட்களும் அதிகரித்தமையே காரணம். அல்லாது குறித்தவரின் தேர்ச்சியல்ல.

இயக்கத்தின் சாதாரண வரையறைக்குள்தான் அவளும் செயற்பட்டாள் எனினும். மற்றப் போராளிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பிலும் இருந்தாள். தன்னளவில் அவள் பாரபட்சமின்றி செயற்பட்டாளா என்பது பெரும் கேள்விக்குறியே. அவள் தனது நூலில் தலைவர் பற்றி எழுதிய விடயங்களை அவளிடம் நெருங்கிப் பழகிய என்னால் ஏற்க முடியாதுள்ளது. அதில் அவள் குறிப்பிட்டுள்ள சம்பவத்தின்பின்  நான் அவளைச் சந்தித்து உரையாடியுள்ளேன். நாங்கள் பல மணிநேரம் உரையாடும் வழக்கமுள்ளவர்கள் .பாலாஅங்கிள் போனபின் நடந்த உரையாடல் தேநீருடன் தொடங்கி மத்தியான உணவுடன்தான் முடித்தேன்  அப்போது அவள் தலைவரின் முடிவை வரவேற்றே பேசினாள். தலைமைக்கும் அவளுக்கும் இடையேயான பிளவு வட்டுவாகலின் பின்பே ஏற்பட்டது. போராட்ட விதிமுறைகளின் படி பயிற்சி எடுத்த பல போராளிகள் கடைசி யுத்த முடிவில் இதேமுடிவுக்கே வந்துவிட்டனர்.

பெண்கள் எந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராட வாருங்கள் என்று பிரச்சாரம்பண்ணி அழைக்கப்பட்டார்களோ…. அதைவிட மோசமான அடக்கு முறைகளுக்குப் பழக்கப்படுத்தப் பட்டார்கள். சமுதாயத்தில் கணவனாலோ தாயாலோ அயலவர்களாலோ மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு இது குறைந்ததல்லவே.

பயிற்சிக்கென முகாமுக்குள் வந்துவிட்டால். பின் வெளியே போக முடியாது. பெண்களாக இருந்தாலும் பெண்களே அடித்து உதைத்து மிதித்து பயிற்சி கொடுத்தே ஆவார்கள். பதினைந்து பதினாறு வயதுமுதல் இந்த வாழ்க்கையைப் பயின்று வெளியேவரும் பெண்கள், களத்தில் அடி, வெட்டு, குத்து, சுடு, என்பதையும் ‘நில்’ என்றால் நிற்கவும் ‘ரண்’என்றால் ஓடவும் பழகியவர்கள்தான். இதெல்லாம் அவர்கள் களத்தில் சாவதற்காகவே பயின்றனர். வாழப் பழகவேயில்லை என்ற உண்மையை நாம் மறக்காமல் வைத்திருப்போம். நடந்தது என்ன? யுத்தம் முடிந்தாலும் போராளிகள் மீதமிருந்தனரே !! இவர்களுக்கு எப்படி வாழ்வது என்ற சூட்சுமம் புரியவில்லை.

கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்த சாதாரணப் பெண்களைப்போல. கட்டி மேய்க்கப்பட்ட இந்தப்பெண்களால் வாழ முடியவில்லை. கட்டுக்குள் வாழவும் முடியாமல் கரையை உடைக்கவும் தெரி-யாமல் தவிக்கிறார்கள்.

இயக்கத்தில் திருமணமான பெண்கள் இருந்தார்கள். இவர்களுக்கென சட்டதிட்டங்களும் இருந்தன. இயக்கத்தில் திருமணம் செய்வதற்கும் செய்தபின் வாழ்வதற்கும் கொடுப்பனவு இருந்தது. அவர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. கணவன் ஒரு போராளி மனைவியும் போராளி. அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் வீடிருந்தால் தினசரி இரவு எட்டுமணிக்குப்பின் வீட்டுக்குச் செல்லலாம். இல்லையேல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கணவன்மனைவி சந்தித்துக்கொள்ள முடியும். சில கணவன்மார் களமுனைப் பணியில் இருந்தால் வேறு பிரதேசங்களில் இருப்பர். நேரங்கிடைக்கும் போது வீட்டுக்கு வந்து மனைவிக்குத் தகவல் அனுப்புவர் மனைவியும் தன் கடமையை விட்டுவிட்டு வீட்டுக்குப் போவாள். இது ஒருகட்டத்தில் திருமணமானவர்களுக்கான கூட்டத்தில் பிரச்சனைக்கு வந்தபோது  பொறுப்பாளர் தமிழினி கூறியதாவது,

“ உங்களுக்கு ஓதுக்கப்பட்ட நாளில்தான் நீங்கள் போக முடியும். மற்ற நாட்களில்  ஏன் போக வேண்டும் ? பின்னால் இதையே எல்லோரும் கடைபிடிக்கத் தொடங்கினால் கஸ்டமாகி விடலாம்.”
“ இல்லைத் தமிழினி அவர் மட்டக்களப்பால வந்தவர் திரும்பியும் போகப் போறார் அதுதான்….”

“அது சரியக்கா எந்த வகையிலும் அவர் உங்களக் கட்டுப் படுத்த ஏலாது. ஓண்டை நீங்கள் நல்லா விளங்கிக் கொள்ள வேணும். உங்களுக்கும் அண்ணைதான் பொறுப்பு அவருக்கும் அண்ணைதான் பொறுப்பு”

கூட்டம் முடிந்தபின் திருமணமான பெண்கள் பேசிக் கொண்டதாவது,

“அண்ணைக்கு உப்பிடியான கருத்தில்லை  இது தமிழினிக்கு கலியாணமாகேலை  எங்கட பிரச்சனை எங்க விளங்கப்போகுது” ? இன்னும் சில விடயங்களை நான் கூறியாக வேண்டும். திருமணமான தம்பதிக்கு மாதம் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு. பிள்ளைகள் இருந்தால் ஒரு பிள்ளைக்கு ஆயிரத்து ஐநூறு.ரூபா. பிரசவ செலவுக்கு பத்தாயிரம் ரூபா. அதன்பின் வருத்தம் துன்பம் வந்தால் இயக்க ஆஸ்பத்திரியில்தான் காட்டவேண்டும், அது எவ்வளவ தூரத்தில் இருந்தாலும். தனியாக மருந்தெடுத்தால் அந்தச் செலவை இயக்கம் ஏற்காது. போராளிகள் வேலை செய்யும் இடத்திலேயே உணவை உண்பர். ஆக, ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சமைப்பர். உடை இயக்கம் கொடுக்கும் யூனிபோம். சிவில் உடைகள் அவர்களே வாங்கிக் கொள்ளவேண்டும்.

ஆறாயிரம் ரூபாவில் குடும்பம் நடத்திவாழ்ந்த இயக்கப்போராளிகளுக்கு இப்போது தமது வாழ்க்கையை நடத்த தொழில் செய்ய முடியவில்லை. மாற்றுத்திறனாளிகள் பலர் திருமணம்செய்து குடும்பம் நடாத்தி குழந்தைகளையும் பெற்றனர். இவர்களுடைய வாழ்க்கைச் செலவை இயக்கம் கொடுத்தது. இயக்கம் இருந்தபோது இவர்கள் வேலையின்றியும் இல்லை. எலக்ரோனிக், தையல,முகாம் பொறுப்புகள், ஓலிப்பதிவு, ஒளிப்பதிவு, எடிட்டிங்.என பலதுறைகளில் பயின்று வேலையும் செய்தார்கள். இருகைகளையும் இழந்த போராளிப்பெண் தன்கால்களால் நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யும் வேலையிலிருந்தாள். இருகண்களை இழந்தவர்களும் பிரெய்லர் முறையில் கற்றார்கள், இசைத்துறையில் மிளிர்ந்தார்கள்.

இவர்களுக்கு குடும்பத்தை நடத்த தேவையான எந்த அறிவும் வழங்கப்படவில்லை. இதைவிட ஏழைப்பட்ட போராளி மாவீரர் குடும்பங்களுக்கு மாதாந்த நிவாரணமும் பிள்ளைகளுக்கு கல்வி வசதியும் செய்திருந்தனர் . தலைவரின் மறைவுக்கும் போர் முடிவுக்கும் வந்தபின் என்ன வாயிற்று ?? கிராமத்தில் பழமொழி ஒன்று உண்டு.

“அரிவாளும் ஆடக் குடுவையும் ஆடும்.; அரிவாளும் நிக்க குடுவையும் நிக்கும்” நெல் அறுவடை செய்யும் அரிவாள் வேலை செய்யச் செய்ய சோற்றுக்குடுவையும் இயங்கும். அந்த நெல் அறுவடை நின்றுவிட்டால் சோற்றுக்குடுவையும் ஓய்ந்து போகும். இது போல போர்க்காலம் முடிந்த போது போரினால் பாதிக்கப் பட்டவர்கள் கைவிடப்பட்டார்கள்.

போர் முடிந்துவிட்டது கொடுப்பனவும் நின்றுவிட்டது. ‘பசியால் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே தூண்டிலைக்கொடு’ எனபது பொன்மொழி. ஆனால் இயக்கம் தூண்டிலைக் கையாளக் கற்றுக்கொடுத்தது  உழைப்பை பொதுவில் விட்டுவிட்டு குடும்பக் கொடுப்பனவை வழங்கியது. இப்போது துர்ண்டிலும் இல்லை மீனும் இல்லை.

குறிப்பாக ஏராளமான குடும்பங்களுக்கு குடும்பத்தலைவர்கள் இல்லை. அவர்கள் பெரும்பாலம் இறந்தோ, சிறைப்பட்டோ, காணாமற்போயோ உள்ளனர். பெண்கள் என்ன செய்ய முடியும் ? கூலிவேலை செய்து குடும்பத்தைக் காக்க முடியாது. ஒருஆண் கூலிவேலைக்குப்போனால் மாலையில்  அவனுக்கு ஆயிரம் ரூபாசம்பளம் அதுவே பெண் கூலிக்குப் போனால் ஐநூறு, அல்லது அறுநூறுரூபாதான் கிடைக்கும். ரோட்டுப்போடும் தொழிலும் ,பண்ணை வேலைகளிலும் கல்வியறிவற்றோர் வாட, ஏனையவர்கள் கவர்ச்சிகரமான ஊதியத்துக்காக இராணுவம் பொலீஸ் வேலைகளுக்கும் கண்ணிவெடியகற்றும் வேலைகளுக்கும் செல்கின்றனர். மீதமுள்ளோர் ‘காமென்ரு’களில் தையல் தொழில் செய்கிறார்கள்.

இங்கே உழைக்க வலுவற்றவர்களும், உழைக்க விரும்பாதவர்களும், பாசத்துக்கு கட்டுப்பட்டு உழைப்பதை உறவினர்களிடம் தோற்றுவிட்டு முதிர்கன்னிகளாகவே வாழும் பெண்களும் ஏராளமாக உள்ளனர். கொஞ்சம் அழகும் இளமையும் உள்ள பெண்கள் மேல்நாடுகளுக்கு மணப்பெண்ணாக ஏற்றுமதியாகின்றனர். அண்மையில் ஒரு பெண்ணை பெற்ற பெருமாட்டி கூறினார்.’
‘விவாகரத்தாகி ரெண்டொரு பிள்ளையள் இருந்தாலும் பரவாயில்லை. வெளியில மாப்பிளை பாருங்கள் இஞ்ச வேண்டாம்.’

ஒரு போராளி புனர்வாழ்வு முகாமிலிருந்த போதே அவளுக்கு முப்பத்தைந்து வயது கடந்துவிட்டது திருமணமாகவில்லை.பெற்றோர் இறந்து விட்டனர். சித்தப்பாதான் பொறுப்பேற்றான். விடுதலையானபின் போராளிகளுக்கென வழங்கப்பட்ட கடன் ஓன்றரைலட்சம் எடுத்து சிற்றுண்டிக்கடை போட்டாள். நல்ல வருமானம். ஆனால் என்ன சித்தப்பா அவளுக்கு விவாகம் செய்ய முற்படவில்லை. நாற்பது வயது கடந்தும் அவர்களுக்காக உழைக்கிறாள்.

காலில் பாரிய காயத்துடன் வெளியே வந்த போராளி ஒரு கடையை வழிநடாத்தி சம்பாதிக்கிறாள். இன்னுமொரு பெண் தையல் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தியவள் வயது ஏற ஏற திருமணமாகாத நிலையில் சுவிசேச சபையொன்றில் சேர்ந்துவிட்டாள்.

சண்டைக்களங்களில் சாதனை படைத்த பல பெண்கள் மனமுடைந்து போனார்கள். காரணம் தாம்ஒரு சிற்றரசாக அதிகாரம் பண்ணி நூறு நூற்றைம்பது பேரை வழிநடத்தி, அவர்கள் பணிந்து கடமை செய்ய வாழ்ந்தவர்கள். இப்போது வீட்டில்கூட மற்றவர்கள் மதிக்காத  வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

நாட்டைவிட்டு வெளியேறி இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுடன் இந்தியாவுக்குப்போய் முகாம்களில் வாழாமல் வெளியே வாடகைக்கு வீடெடுத்து தங்கி வாழும் பெண்கள் ஏராளம். இவர்களிலும் குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் அநேகர். தமது பிள்ளைகளின் கல்விக்காகவே இப்படி வந்து தங்கியுள்ளதாக கூறும் இவர்களுக்கு எங்கிருந்தோ மாதாந்தக் கொடுப்பனவு வருகிறது. சில பெண்கள் தமது பத்துமுதல் பதினைந்து வயதான பிள்ளைகளைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு லண்டன் சுவிஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டனர். ஏற்கெனவே தந்தையை இழந்த பிள்ளைகள் இதனால் தாயையும் இழந்துள்ளனர். ஏனக்குத்தெரிந்த பெண்ணொருவர் அப்படி வெளியே போய் மறுமணம் செய்து கொண்டுள்ளார். இவரது கணவன் சரணடைந்தவர். என்ன நிலையிலுள்ளார் என்பது தெரியாது.

திருமணமாகி இருபதே நாட்களில் கணவனை போரில் இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்க இயக்கம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இருபது நாள் வாழ்க்கையில் ஒரு குழந்தை பிறந்திருந்.து. கடைசி சண்டைக்குப் பின், பையனுக்கு எட்டுவயதாகிறது. அவனுக்கு ஒரு தம்பி பிறந்திருக்கிறான். அப்பா தெரியாது. அவள் இன்னும் தனியாகத்தான் வாழ்கிறாள்.

இந்தியாவில் வாழும் இந்த விதவைப் போராளிகளுக்கு தையல் பயிற்சி தையல் எந்திரம் என்பற்றையும் அந்த கொடுப்பனவு செய்வோர் வாங்கி உதவியுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் எத்தொழிலும் செய்யாமல் பிள்ளைகளை பாடசாலைக்கு விடவும் ரியூசனுக்கு விடவுமாக பொழுது போனாலும் சலவைமெசின், குளிர்பதனப்பெட்டி, ஏசீ போட்ட படுக்கையறை, வெளியே போவதானால் முச்சக்கர வண்டி என வசதியாகவே வாழ்கிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் பரவாயில்லை சலவை மெசின்கூட இருக்குப்போல என்றதற்கு, அப்பெண் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாகவிருந்தது.
“ நான் கிளிநொச்சியிலயே இதெல்லாம் வச்சிருந்த நான்தானே” ?

சில பெண்கள் கவரிங்நகை செய்தல், சேலைகளுக்கு அலங்காரம் செய்தல், தையல் போன்ற வேலைகளை செய்கிறார்கள். பழைய ஆண்போராளிகளும் இதேவேலைகளை செய்கிறார்கள். என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஒரு இயக்க முக்கியஸ்தரின் மனைவி அவர் மாவீரர் . இவள் முதலில் இரண்டு கடைகளில் ஓடர் எடுத்து இடியப்பம் வடை என்பவற்றை செய்து கொடுத்தாள் பொருள் தரமாக இருந்ததால் இன்று பல கடைகளுக்கு போடுகிறாள். ஒரு சின்ன உந்துருளி எடுத்துக் கொண்டு ஒரு உதவியாளையும் வைத்திருக்கிறாள்.

இன்னொரு பெண் கணவனைக் காணவில்லை. இரண்டுபிள்ளைகள். தையல் தொழில் செய்து வாழ்கிறாள் பிள்ளைகள் படிக்கிறார்கள்.

இந்த வகையில் மாவீரர் போராளிகளைக்கண்டு உதவி வழங்க இலங்கையில் யாருமில்லை. இதனால்தான் இங்கே இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்த சாதாரணப் பெண்களைப்போல கட்டி மேய்க்கப்பட்ட இயக்கப் பெண்களால் முடியவில்லை. கட்டுக்குள் வாழவும் முடியாமல் கரையை உடைக்கவும் தெரியாமல் தவிக்கிறர்கள். சரியான வழிகாட்டலில்லை. மற்றவர்களின் அறிவுரைகள் வழிகாட்டல்களை இவர்கள் ஏற்கும் மன நிலையிலும் இல்லை.

ஆனாலும் திருமணமாகி குடும்பம் நடத்தும் போராளிப்பெண்களும் நிறையவே உள்ளார்கள். இவர்கள் விவசாயம், கால்நடைவளர்ப்பு, சிறுவியாபாரம் கைத்தொழில் என்றபலதரப்பட்ட தொழில்களையும் செய்கிறார்கள். தாம் ஒருகாலத்தில் போராளியாக இருந்தோம் என்பதை இவர்கள் சொல்ல விரும்பவில்லை.அமைதியாக வாழ்கிறோம் பழைய கதை ஏன்? விட்டுவிடுங்கள். என்கிறார்கள்.

இந்த நிலையில் கோபுரத்தில் ஏற்றிவைத்து குப்புறத்தள்ளிவிடப்பட்ட தமிழினி என்ன எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறோம் ?? அவளுக்காக வாதாட ஒரு தமிழர்கூட முன்வரவில்லையல்லவா? அவள் தொடர்ந்தும் இந்த மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டாள். தான் யாரை எதிரிகள் என மனனம் செய்திருந்தாளோ அவர்களிடம் தன் அதிகாரத்தின் கீழ் நின்ற பிள்ளைகளுடன் சமதையாக மணியடித்தால் லைனில் நிற்கவும். வேலைகள் செய்யவுமான நிலை வந்தபோது அவளுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் ?? அதெல்லாம் அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

இன்னமும் நான் புலியாகவெ வாழ வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் அது ஆணோ பெண்ணோ நாட்டைவிட்டு வெளியே போய்விட்டனர் மற்றவர்களும் போகவே விரும்புகின்றனர். ஏன்பதுதான் உண்மை.

தமிழ்க்கவி

தமிழ்க்கவி
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 143 times, 1 visits today)