லாஸா என்கின்ற மாயக்காரி-கட்டுரை-டிசே தமிழன்

ஸ்பானிய நாடோடிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தற்செயலாய் Lhasa De Sela வைக் கண்டடைந்தேன். ஸ்பானிய பாடல்களுக்குள் ஒரு ஆங்கிலப் பாடல், மனதைப் பிசையக்கூடிய கசியும் குரலில் ஒலித்தபோது லாஸாவின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினேன். லாஸாவின் முதல் அல்பம் ஸ்பானிஷில் வெளிவந்தது. பின்னர் இரண்டாவது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச் என எல்லா மொழிகளையும் இடைவெட்டியபடி மொழியின் எல்லைகளைக் கடந்தபடி வந்திருக்கின்றது.

‘குண்டு வெடிப்புக்களிடையிலும் அன்பே உனக்காய் காத்திருக்கின்றேன். விரைவில் வந்துவிடு. நீ வராத இந்தநாட்களில் நான் இன்னும் உறுதியாகிக்கொண்டு வருகின்றேன். ஆனால் என்னால் இனியும் காத்திருக்கமுடியாது, இப்போதே வந்துவிடு, இல்லாவிட்டால் போய்விடுவேன்’ என்று லாஸா பாடுவதைக் கேட்கும்போது, ‘பிரியமே, இனியும் தாமதிக்கமாட்டேன், இப்போதே வந்துவிடுகின்றேன்’ எனக் கேட்பவரையும் சொல்லச் செய்து, உள்ளிழுத்துச் செல்லக்கூடிய குரல் அவருடையது.

லாஸாவின் பாடல்களின் ஈர்ப்பில் அவர் யாரெனத் தேடத்தொடங்கியபோது, அதிர்ச்சியான ஒரு செய்தி காத்திருந்தது. 37 வயதிலேயே (2010ல்) லாஸா மார்பகப்புற்று நோயின் நிமித்தம் காலமாகிவிட்டார் என்பது. வாழ்ந்த வாழ்வு என்பது வருடங்களில் அல்ல, அதை எப்படி வாழ்ந்தோம் என்பதில் அல்லவா இருக்கின்றது எனத் தேற்றிக்கொண்டேன்.

லாஸாவின் வாழ்வைப் பற்றித் தேடத்தேட இன்னும் சுவாரசியமான விடயங்கள் வந்துகொண்டிருந்தன. மெக்ஸிக்கோ தகப்பனுக்கும், அமெரிக்கா தாயிற்கும் பிறந்தவர் லாஸா. அவரின் பெற்றோர் ஹிப்பி வாழ்க்கையை வாழ்ந்ததால் அவரின் குழந்தைப் பருவம் (caravan) வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்ததாய் அமைந்ததோடு அல்லாமல், வெளியே பாடசாலைக்கு அனுப்பப்படாமலே வீட்டு பாடசாலையிலே கல்வி கற்றல் நிகழ்ந்திருக்கின்றது.

லாஸா தொடக்க காலங்களில் அமெரிக்காவிற்கும் மெக்ஸிக்கோவிற்கும் என மாறி மாறி வாழ்ந்தாலும், பின்னர் லாஸாவின் பெற்றோர் அவரின் 13 வயதில் பிரிந்தபோனபோது தாயாருடன் அமெரிக்காவில் வாழத் தொடங்கியிருக்கின்றார். லாஸா என்கின்ற இந்த வித்தியாசமான பெயர் கூட, அவரின் தாயார் வாசித்துக்கொண்டிருந்த திபெத் பற்றிய புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு அமெரிக்காவில் வாழ்ந்த லாஸா, அவரின் சகோதரிகள் மொன்றியலில் சேர்க்கஸ் கம்பனியில் பயிற்சி பெற வந்தபோது அவர்களோடு கனடாவிற்கு வந்து, மொன்றியலில் இருந்த கிளப்புக்களில் பாடத்தொடங்குகின்றார், அதன் நிமித்தம் கவனம் பெற்று முதலாவது அல்பமான ‘La Llorona’ ஐ வெளியிடுகின்றார். ஆனால் அதில் என்ன சுவாரசியம் என்றால், ஆங்கிலம் நன்கு பேசும் லாஸா, பிரெஞ்சு மொழி பேசும் நகரில் இருந்துகொண்டு அவரின் முதலாவது அல்பத்தை ஸ்பானிஷிலேயே வெளியிடுகின்றார், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இந்த அல்பம் நன்கு விற்பனையாகின்றது. கனடாவில் இசைக்கென பிரசித்தம் பெற்ற ஜூனோவிலும் இது விருதைப் பெறுகின்றது.

பின்னர் அவரது சகோதரிகள் சேர்க்கஸ் நிமித்தம் பிரான்சிற்கு இடம்மாறுகின்றபோது, அவர்களோடு கூடவே செல்கின்றார். அவரும் அவரது சகோதரிகளும் எப்படி தம் குழந்தைப் பருவத்தில் (கரவான்) வானில் வாழ்ந்தார்களோ அப்படியே  tarilerல் வாழ்ந்தபடி பல்வேறு இடங்களுக்கு அலைகின்றனர். பிரான்சிலும் இந்த சேர்க்கஸ் கம்பனியின் பாடகராக இருந்து லாஸா பாடுகின்றார்.

இந்தக்காலத்திலேயே அவர் தனது இரண்டாவதான ‘The Living Road’ ஐ, ஆங்கிலம்/ஸ்பானிஷ்/பிரெஞ்ச் மொழியில் இருக்கும் அல்பத்தை வெளியிடுகின்றார், மூன்றாவது அல்பம் ‘Lhasa’ என்ற பெயரிலே வெளியிடப்படுகின்றது. முற்றுமுழுதாக ஆங்கிலப்பாடல்களினால் உருவாக்கப்பட்ட லாஸாவின் முதலாவது அல்பம் இது. ஏற்கனவே புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு, நோய் தீவிரமாகியதால் ‘Lhasa’ வெளியிட்டபின் அதன் நிமித்தம் இசைக்கச்சேரிகள் செய்யமுடியாது போகின்றது. நோயின் கடுமையில் சில மாதங்களுக்குள்ளேயே லாஸா காலமாகின்றார்.

லாஸாவின் பாடல்கள் மட்டுமில்லை, அவரது அலைந்து திரிந்த வாழ்வும், பல்வேறு மொழிகளில் அவருக்கு பாடுவதற்கு இருந்த தேர்ச்சியும் அவரைப் பற்றி அறியும் எவரையும் கவராது அவ்வளவு எளிதில் விட்டுவிடாது.

“When my lifetime had just ended
And my death had just begun
I told you I’d never leave you
But I knew this day would come”

என ‘I’m going in’ பாடலில் சொல்வதைப் போல எமக்கெல்லோருக்கும் முடிவதற்கென வாழ்வு ஓரிடத்தில் காத்திருக்கின்றது. ஆனால் லாஸாவைப் போன்ற அரிதானவர்களே தம் வாழ்வை அதன் எல்லைவரை வாழ்ந்துவிட்டும், நமக்கு கற்றுக்கொள்வதற்கான பாடங்களாய் தம் அனுபவங்களை விட்டுவிட்டும் செல்கின்றார்கள்.

டிசே தமிழன்

டிசே தமிழன்

(Visited 46 times, 1 visits today)