காடுலாவு காதை, பாகம் 26-தமிழ்க்கவி

தமிழ்க்கவிகாலையில் பல்லில் கரியைப்போட்டு அதை கறகறவென விளக்கியவாறே கிணத்தடிக்குப் போன கந்தப்பு, ஏற்கெனவே கிணற்றடிக்கு வந்திருந்த நாட்டு டாக்குத்தரின் மாட்டுவண்டிக்காரனிடம்,
“இண்டைக்கு எந்தப்பக்கம் வேலைக்குப்போறியள்” என்று கேட்டான். “கொக்குவெளியண்ணன். நேரம் போட்டுது வெயிலுக்கு முன்னம் போகோணும்” என்றான். கந்தப்பு விலகி நின்று அவனை முதலில் தண்ணீர் அள்ள உதவினான்.

அவன் தண்ணீரை அள்ளிக் கொண்டேஅண்ணை தமிழரசுக்கட்சி மாநாடாம். ஏதோ கூட்டம் போடப் போறமெண்டு சின்ன ஐயா சொல்லிக் கொண்டிருந்தார்.
“அப்பிடியோ, மாணிக்கம் இஞ்சால பறையேல்லயே… பின்னேரமா சொல்லுவினம் போல கிராமச் சங்கம் கூட்டப்போகினயாம்”அவன் சொல்லிக் கொண்டே இரண்டு கைகளிலும் வாளிகளைச் சுமந்தவாறு போனான்.கந்தப்பு வந்து திண்ணையில் அமர்ந்தான். பாக்கியம் தேநீரைக் கொண்டுவந்து வைத்தாள். அதை எடுத்து ஊதி ஊதிக் குடித்துவிட்டு கொட்டப்பெட்டியைத் திறந்து. ரெண்டு பாக்குப் பிளகை வாயில் போட்டான். நிதானமாக கொடி வெற்றிலையின் காம்பைக்கிள்ளி புறநரம்பையும் வருடுவதுபோல சுரண்டி அதில் சுண்ணாம்பைத் தடவினான்.

“அப்பு ஏனப்பு வெத்திலைக்கு காம்பைக்கிள்ளி நரம்பைசுரண்டி போடுறாய்.” கந்தப்பு சிரித்தவாறே ஒரு செய்யுளைச் சொன்னான்.

“நீற்றிலையின் மூக்கு நெடிய நரம்புடனே
தீற்றும் புறவுரியும் தின்றக்கால்-  மாற்றலரை
வெல்லப்போர் செய்யும் விர நெடுமாலாயிடினும்
செல்லப் போய் நிற்பாள் திரு”

அதில ஏதும் தீமை இருக்கோ தெரியாது. ஆனா அப்பிடி செய்யாம போட்டா வருத்தம் வரும். உழைக்க ஏலாது. அப்ப வறுமை வரும். வறுமை வந்தா லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்தானே. விளக்கம் சொன்னா விளங்காது எண்டாலும் , மூத்த அறிஞர்கள் பாடி வச்சதை பின்பற்றுறம் அவ்வளவுதான். லெச்சிமி அப்போதுதான் நினைவு வந்தவளாக,
“அப்பு அண்டைக்கு உதில போட்ட சுகாதாரப்படத்தில வெத்திலை போட்டா புத்து நோய் வருமெண்டு காட்டினவங்கள். அய்யேக் எவ்வளவு கொடுமையான புண்கள்.”
“சரிசரி விடு நான் போகோணும் என்னப்பா சாப்பாட்டை வரக்கை கொண்டு வாங்க நான் போறன்.”கந்தப்பு வழமைபோல துவக்கை தோளில் வைத்துக் கொண்டு தோட்டாக்கள் கொட்டப்பெட்டி என்பவற்றை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான்.

படலைக்குள் வைத்திலிங்கத்தார் நின்றார். “கந்தப்பு நாலுமணிக்கு வந்திடு கூட்டம் போட்டிருக்கு.”
கந்தப்பு அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு நடந்தான்.’இந்த வரியம் எப்பிடியும் ஒரு சைக்கிள் வாங்கிப் போடோணும் எத்தினை நாளைக்கெண்டு நடக்கிறது.’அந்த ஊருக்குள் பரவலாக நாலைந்து பேர் சைக்கிள் வாங்கி யிருந்தார்கள். கந்தப்புவும் தன் நண்பனின் சைக்கிளை வாங்கி ஓடக்கற்றுக் கொண்டான்.

மாலை நான்கு மணிக்கு மாணிக்கத்தின் வீட்டில்தான் கூட்டம் ஓழுங்காகி இருந்தது.அவர்கள் பந்தடிக்கும் அரசி காணியில் கூட்டுறவுச் சங்கத்துக்கென ஒரு பெரிய நெற் களஞ்சியமும் பண்டகசாலையும் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. களுஞ்சிய வேலை முடிந்தாலும் ஏனைய வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

நாங்கள் கூட்டத்துக்குள் போவோம் தமிழரசுக்கட்சி ஒரு மாநாட்டை நடாத்த முடிவெடுத்துள்ளது. வவுனியா நகரசபை மைதானத்தை அதற்காக ஒழுங்கு செய்திருக்கிறார்கள. இதற்காக யாழ்ப்பாணம் மட்டக்களப்பு முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து வரும் தொண்டர்கள் தங்குவதற்காக புதிதாக கட்டப்பட்டிருந்த நெற் களஞ்சியம் ஒழுங்கு செய்யப்பட்டது. அவர்களுக்கான உணவு குடிநீர் வசதிகளை கந்தப்புவும் மாணிக்கமும் சந்தியாவும் செய்வதாக ஏற்றுக் கொண்டனர். பொருளுதவி வவுனியா வர்த்தகர்கள். மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்திற்கு தொண்டர்களின் ஊர்வலங்களும் ஏற்பாடு செயட்யப்பட்டிருந்தது. முழுமையாக பெரும் அரசியற் தலைவர்களின் உரைகள் மூன்று நாட்களும் நடைபெறவிருந்தது. நகரம் முழுதும் பச்சை மஞசள் சிவப்புகலந்த மூவர்ணக்  கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது. ஆங்காங்கே பெரிய கடைக்காரர்கள் வளைவுகளை அமைத்தார்கள்.
தொண்டர்கள் சின்னப்புதுக்குளம் கூட்டுறவு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு ஊரவர்களாலேயே சமைத்துக் கொடுக்கப்பட்டது.கந்தப்பு ஐயாத்துரை மாணிக்கம் வைத்திலிங்கம் சந்தியா என எல்லொருமே மகிழ்ச்சியாக உபசரித்தனர்.

முதல்நாள் ஊர்வலம் மாமடுச்சந்தியிலுருந்தும் வாண்டிக்குளம் சந்தியிலிலுருந்தும் ஆரம்பமாகி இரு குழுவும் ஆயிலடி எனப்படும் ஆஸ்பத்திரிச் சந்தியில் ஒன்றாகி கண்டிவீதி வழியாக நகரசபை மைதானத்தை அடைந்தது. யாழ்ப்பாணம்,மன்னார்,முல்லைத்தீவு வவுனியா என பல இடங்களாலு பெருமளவு இளைஞர்கள் கூடி மிதிவண்டிகளில் மூவர்ணக் கொடிகளை பறக்கவிட்டவாறு சென்ற காட்சி அதியற்புதமாக இருந்தது.ஊர்வலம் மைதானத்தை அடைந்தபின் சொற்பொழிவுகள் திறந்தவெளியரங்கில் நடந்தன.

சுதந்திரன் ஈழநாடு வீரகேசரி அனைத்திலும் இந்தச் செய்திகள் முதன்மையாக வெளியாகின. இரண்டாம்நாள் மாதர் மாநாடு  புதிதாக நகர சபைக்கருகே கட்டப்பட்ட சைவப்பிரகாச பாடசாலைக்கட்டத்தில் .நடந்தது. சைவப்பிரகாசாவின் ஒரு கட்டடமே அப்போது கட்டப்பட்டிருந்தது. அதனுள்ளே காலைவேளை மாதர் அரங்கில் மன்னார்.யாழ்ப்பாணம்.திருமலை மட்டக்களப்பு..வவுனியா முல்லைத்தீவு என பல இடங்களிலிருந்தும்பெண்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
லெச்சிமி மிக ஆர்வமாக அவற்றை கேட்டுக் கொண்டிருந்தாள். இதற்குள் பாக்கியத்தின் மடியிலிருந்த சூப்பி அழ ஆரம்பித்தாள். “வெளியில கொண்டு போங்கோ ஒண்டும் கேக்கேலாமக்கிடக்கு” என்று அருகில் இருந்தவர்கள் சினக்க ஆரம்பித்தார்கள்.
“இந்தாடி லெச்சிமி தங்கச்சியப் பிடி வெளியால கொண்டு போ3 என்று அவளை வெளியே துரத்தினாள் பாக்கியம்.
“ஙா…. அக்காச்சியிட்டக் குடு நான் மாட்டன் “என்றாள் லெச்சிமி. பாக்கியம் அவளை எரிப்பது போல பார்க்கவே, ஒரு குலுக்கு குலுக்கி பிள்ளையை வாங்கிக் கொண்டு வெளியே போனாள் அவள் மனம் வெப்பியாரத்தில் நசிந்தது. கோபமும் இயலாமையும் அழுகையாக வெடித்தது. தமக்கையான மலர் எந்த பாதிப்பும் இல்லாமல் தாயுடன் உட்கார்ந்து கூட்டத்தை ரசிப்பதே அவளுக்கு பெரிய தாக்கம்.
அம்மா…? இதில் அம்மா நேற்றே அப்பு கூட்டத்துக்கு போகும்படி சொல்லும் போதே,
“நான் போகேல்லயப்பா பிள்ளையளக் கொண்டே வச்சுக் கொண்டு இருக்கேலாது.” எண்டு சொன்னாளே…….கட்டாயம் போகத்தான் வேணும். பிறத்தி ஊரால சனம் வந்திருக்கு, உள்ளுக்க இருந்து கொண்டு மூஞ்சய நீட்டாம போப்பா…..எண்டு அப்பு கரைச்சல் பண்ணித்தான் அனுப்பினவர். ‘எல்லாத்துக்கும் நான்தான் அவைக்கு கண்ணுக்க குத்திற….’அவளுடைய அழுகையும் வெப்பியாரமுமாக கண்ணீர் வடிந்தது. சூப்பி வெளியே வந்ததும் அழுகையை நிறுத்தி விட்டாள். பேச்சு வெளியே தெளிவாகவே கேட்டது. என்றாலும் அதை பேசுவது யாரென்று தெரியவில்லை. சற்று நேரத்தில் சூப்பி நித்திரையாகிவிட அவள் உள்ளே போனாள். கூட்டமும் முடிந்துவிட்டது.

தாயிடம் பிள்ளையை கொடுத்துவிட்டு அவள் யாரிடமும் பேசாமல் வெளியே வந்து விட்டாள். அன்று முழுதும் அவள் யாருடனும் பேசவில்லை. சகுந்தலாதான் அப்புக்கு கோள் மூட்டினாள்.
“அப்பு லெச்சிமி இஞ்ச ஒருத்தரோடயும் கதைக்கேல்ல.”
“ஏனாம்?”
“என்னண்டு தெரியா…….அம்மா சாப்பிடக் கூப்பிட வேண்டாமெண்டு தலைய ஆட்டிற்று வடிவேலண்ணை வீட்டபோய சாப்பிட்டவள்.”

கந்தப்பு எதையும் பொருட்படுத்தாதவனாக வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான்.லெச்சிமி வீட்டுக்கு பின்புறமிருந்த மாமரத்தில் ஊஞ்சல் கட்டும் முயற்சியிலிருந்தாள். கீழ்கொப்பில் கயிற்றை வீசி அதை கீழிருந்தவாறே சுருக்குத்தடம் போட்டு அதை கொப்புடன் இறுக்கினாள். அடுத்த முனையை வீச முறன்று தோற்றுக்கொண்டிருக்க கந்தப்பு வந்தான்.
காடு விரியும்
தமிழ்க்கவி -இலங்கை

தமிழ்க்கவி

(Visited 33 times, 1 visits today)