சமீராவும், ரோசலினும்-கவிதை-கார்த்திகா

சமீராவும், ரோசலினும்

கார்த்திகா
ஓவியம்: டிஷாந்தினி நடராசா

பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
ரோசலின் என்னிடம் கேட்பாள் இந்தக் கர்த்தர் வருசத்துல
ஒருதடவ மட்டும்தான் பொறக்கணுமா,
இன்னொரு தடவகூட பொறந்துருக்கலாம்…

நோன்புக் கஞ்சியை குடித்துவிட்டு
அம்மாவுக்கு எடுத்துட்டு போகக்கூறும்
சமீரா வீட்டுலதான்
ரம்ஜான் விருந்து
எங்க எல்லாருக்கும்…

தீபாவளிப் பட்டாசு
வெடிச்சுட்டு வீடு போற ரோசலினும்,
சமீராவும் அடுத்த
ஒரு வாரத்திற்கு
பட்டாசை
நிரப்பிவிடுவார்கள்
வகுப்பறை முழுக்க…

மருத்துவம் படித்த
ரோசலின் அமெரிக்காவிலும்,
சமீரா துபாய்க்கும்
பறந்தபின்னர்
எப்போதும் என்றிருந்த பேச்சு,
எப்பவாவது என்றாகிப் போனாலும்,

எப்போதெல்லாம்
பாங்கொலியும்,
தேவாலய மணியோசையும் ஒலிக்கிறதோ
அப்போதெல்லாம்
நினைவடுக்கில்
தவறாமல் வந்து போகிறார்கள்
சமீராவும், ரோசலினும்…

இப்படித்தான்
என்னையும்
நினைத்துக் கொண்டிருப்பார்கள்
அவர்களும்
கோவில்
மணியோசையிலும்
பட்டாசுச் சத்ததிலும்.
00000000000000000000000000
இரவைக் கழுவி
பனிதூவிய அந்த
அதிகாலைக்குத் தெரியாது
அந்தச் சந்திப்பின் கதகதப்பு
அவ்வளவு சுகந்தமாய் இருக்குமென…

நுனிகொய்து
காய்ந்த பாலிதீன்
சரமேறிய அந்த
தேயிலை அறிந்திருக்காது
அந்தக் கோப்பைகளின் வடியும் நேசத்தின்
திறவுகோலை…

களம்காய்ந்து
ஆலைநெய்து
உளுந்துடன் உறவாடி
ஆவியடங்கிய அந்த
காலைச் சிற்றுண்டியும் கண்டிருக்காது
இதழொழுகியவை
எல்லாம் இதமானதாய்
இருக்குமென்று…

யாருமறியா நேரம்
நட்பில் நனைந்த
சொற்கள் மட்டும்
நிமிடங்களை நகர்த்தியது
அற்புத
கணங்களென…

எதிர்
இருக்கைகள் எத்தனையோ
நிரம்பியிருந்தாலும்
அங்கெலாம் நிரம்பியிருந்தது
இருக்கைகள் மட்டுமே…

எங்களுக்கு மட்டும்தான்
நிரம்பியிருந்தது
இதயங்கள்.

கார்த்திகா-இந்தியா

கார்த்திகா

(Visited 27 times, 1 visits today)