ஒரு வயோதிப பெண்மணி இன்று அசைபோட்ட ஒரு நினைவு-கவிதை-றியாஸ் குரானா

ஒரு வயோதிப பெண்மணி இன்று அசைபோட்ட ஒரு நினைவு

றியாஸ் குரானா
ஓவியம்: டிஷாந்தினி நடராசா

சன நடமாட்டங்களில்லை
ஓரங்களில் கட்டிடங்களும் இல்லாது
வெறிச்சோடிக்கிடக்கிறது வீதி
அந்த வீதியில்தான்
மரணச் செய்தியைக் கொண்டு செல்வதைப் போல்
வேகத்தில் இரைந்து வருகிறது ஒரு பேருந்து

பசுமையான புல்வெளிகளிலிருந்து
பேருந்துக்குள் நுழைந்த காற்று
தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது
சில நொடிகளில் மோதிவிடக்கூடிய தூரத்தில்
எதிர்பாராமல் வந்து நிற்கிறான்
நீலச் சட்டை அணிந்த ஒரு இளைஞன்
திடுக்கிட்ட சாரதியும் பயணிகளும் பெருங்குரலெடுத்துக்
கத்துகின்றனர்
வந்த வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்
பேருந்து திணறிக்கொண்டிருக்கிறது
பயணிகளைக் காப்பாற்றுவதா?
எதிரே நிற்கும் நீலச் சட்டை போட்ட
அந்த இளைஞனைக் காப்பாற்றுவதா?

தற்கொலை செய்வதற்காகத்தான்
அந்த இளைஞன் பேருந்தின் எதிரில்
குதித்திருக்கிறான்.
அவனுடைய கதையை அறிவதெனில்,
பேருந்து பின்னோக்கிச் செல்ல வேண்டும்
ஒரு மணிநேரத்தின் முன்பு
தேநீர் இடைவேளைக்காகப்
பேருந்து நிறுத்தப்பட்ட நேரத்தில்தான்
அவனுடைய காதலும் தோற்றுப்போனது
அவனுடைய காதலியின் குரலைக்
கடைசியாகக் கேட்டதும் அப்போதுதான்
மரணத்தைத் தெரிவுசெய்யும் முடிவைக்
கடைசியாக வந்த தொலைப்பேசியின்
சொற்கள்தான் தூண்டின
இதற்குச் சற்றுமுன்,
மதிய உணவிற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது
அப்போதும், அவர்கள் காதலில் இருந்தார்கள்
இழைந்து கொஞ்சும் சொற்கள்
ஆழமான காதலின் வெளியை
என்றென்றைக்குமான முடிவற்ற இந்த அன்பை
உறுதிப்படுத்தியபடி இருந்தது
முதன்முதலாக இருவரும் சந்திக்க நேர்ந்தபோது
காதல் பெரும் நிலப்பரப்பாக இருந்தது
சுதந்திரத்தின் நீரோடைகள் அவர்களிடையே
உருண்டு கொண்டே இருந்தன
மாசற்ற கோபமும் அன்பும்
கூச்சலிட்டுக் கத்திக்கொண்டிருக்கச் செய்தது
இவர்களுடைய காதலை
அலைகளும் புரிந்துகொள்வதாக நம்பினர்
தங்கமாக அவள் மாறிக் காதலில் சிக்கினாள்
ஆனந்தம், வாழ்வை தலைகீழாக நடனமிடச் செய்தது
பிறகொரு நாள்,
அவளின் கண்கள் என்ற வனாந்தரத்தில்
அந்நியர்களின் சப்தங்கள் கேட்பதாகச்
சொல்லத் தொடங்கினான்
அவளின் அழகு, உள்ளேயும் வெளியேயும்
அந்நியர்களை உணர்வதாகச் சந்தேகித்தான்
காதலின் உள்ளே இருந்து
சிலர் கதவுகளைத் தட்டிக்கொண்டிருப்பதாகக்
குற்றம் சாட்டினான்
நீண்ட நாட்களாக இத்தனையும் சகித்துக்கொண்டிருந்தவள்
நேரில் அவனைச் சந்தித்து இறுதி முடிவெடுக்க,
இன்று பேருந்தில் புறப்பட்டாள்

இன்னும் சில கணங்களில்
யார் மீது பேருந்து முட்ட வாய்பிருக்கிறதோ
அந்த நீலச் சட்டை அணிந்த இளைஞனின் காதலி
அந்தப் பேருந்தினுள்ளேதான் இருக்கிறாள்
இந்தத் தருணத்தில் அவள் என்ன உணர்ந்திருப்பாள்?
பேருந்து முட்டி அவன் இறந்தானா?
முட்டினால் அது கொலையாகுமா?
இல்லை தற்கொலையாகுமா?
உங்கள் ஒவ்வொருவரின் பதிலும்
இந்தக் கவிதையின் முடிவாக மாறும்.

19/10/2021
றியாஸ் குரானா-இலங்கை

றியாஸ் குரானா

 

(Visited 183 times, 1 visits today)