மர்யம்-கவிதை-அட்டாளை நிஸ்றி

மர்யம்

அட்டாளை நிஸ்றி
ஓவியம்: டிஷாந்தினி நடராசா

தானிய இறகு முளைத்த கதவுகள்
பறப்பதும்
தரிப்பதுமாய் மேகங்கள் ஊஞ்சலாகின,
சாம்பல் நிறப் பறவைகளின் சிறகு
முளைத்திடக் கனவு காண்பாய்.

பொன்னவரையின் பிசுபிசுப்பு
காசித்தும்பை நரம்புகளில் வெட்கம்
மேலேறும்;
மை நனைத்த விரல்களில் எனதுலகம்
கொழுவியிருக்கும்.

சிறு மேடுகளாய்த் துளாவிய கோபம்
முன்னறையெங்கும் விரியும்
குறுக்குநெடுக்காய் நகர்கிறது பூனை
குவளைகளில் நிரப்பிய நேசத்தைப் பரிமாறு.

பெருக்கெடுத்த கடல்
கரைகள் உடைந்திட இசைக்கிறது
நெற்றி வழி கசிகிற வியர்வையை
பத்திரப்படுத்துகிறேன்.
பதினாறு நட்சத்திரங்கள்
ஒற்றைப் படகில் மிதக்கும் நொடிகளில்
ஆடைகளை இன்னும் வேகமாய் அழுத்தத்
தொடங்கினாய்.
ஆவி பறந்த மின்னழுத்தி
அறையின் ஒளியை கௌவிக் கொள்கிறது.

ஊர்ந்த படி நெருங்கிடத் துடிக்கிறது மைனா
கோபம் தீர்ந்ததும்
ஒரு பாட்ட மழையின் தூறலேனும் அனுப்பிடு
மர்யம்.

000000000000000000000000

மீதமிருக்கும் சொற்களில்
உறைந்திருக்கிறது ஜீவிதம்.
அகற்ற மறந்த பாசியில்
கடிகார முட்களில்
ஒட்டியபடி மெதுவாகப் படர்கிறது.

இரண்டு வௌவால்களின் வேட்டையில்
கொறித்துப் போட்ட கத்தா விதைகள்
பழுப்பேறிய ஜன்னல்
இலைகளை மென்று ஊர்ந்திடும் நத்தை – எப்போதும்
கதவுக்கு வெளியில் நின்றிருக்கிறது மகிழ்ச்சி.

குமட்டலால் நிரம்பிக் கிடக்கும்
கோணாவத்தையின் ஊறல்
கரையான் தின்று தேய்ந்த
கிளிசரியா
பொலிவிழந்திருக்கும் வாழ்வை
அசை போட்டு நகர்கிறது.

000000000000000000000000

தொன்மம் தோய்ந்த பறவையானவன்
மிடுக்குகள் உடைத்து
உன்னிடமே மீட்சியானேன்.
துயர் தணிந்த கதைகளைக் கூறு
சராசரங்கள் அலைந்தேனும்
செழுமை பரிமாறு.

மஞ்சமுனா பூத்த பருவங்கள்
எப்போது வருமெனக் கேட்பாயா?
நங்கன அலகில் சொறுகிய
ஆதியைத் தேடி அலைகிறேன்.

பாசி முளைத்த கிணற்றடியில்
பேய்களின் அழிச்சாட்டியம்
அத்தி மரத்து ஆறு
ஆரவாரம் அடங்கி உமிகிறது.

பெருந்தொற்றுக் கெடுபிடி
நாசி மணக்காத கோடை.
நன்னாரி படர்ந்து வரம்பு
கால் ரோமம் மீதேறி உரசுகிறது.

நுரைகள் மணக்கும்
பொழிவைத் தேடி
மண்டியிடுகிறது வேர்கள்.

அட்டாளை நிஸ்றி-இலங்கை

அட்டாளை நிஸ்றி

(Visited 52 times, 1 visits today)