பின்நவீன ஊடல்-றியாஸ் குரானா

 

றியாஸ் குரானா

அருகருகே அமர்ந்திருக்கிறோம்.
நடுவில் வளர்கிறது தனிமையின் அச்சமூட்டும்
பெருஞ்சுவர்.
பார்வைகளை எடுத்து கீழே வீசுகிறோம்
பள்ளத்தாக்கில்
மழை சண்டையிடுகிறது.
நம்மைக் கடந்து போகும் போது
சில துளிகளை தந்திருந்தது
உடையாமல் இன்னும் நீ
உள்ளங்கையில் வைத்திருக்கிறாய்.
என்னிடமிருந்தவை
கரைந்திருந்தன.
உன்னிடமிருப்பதில் ஒன்றைக் கேட்கிறேன்
மறுக்கிறாய்,
வீட்டில் இப்படி பல மழைத்துளிகளை
சேகரித்து வைத்திருப்பதாக சொல்கிறாய்
எறிந்த பார்வைகள் நம்மிடம்
திரும்பி வருகின்றன.
அந்தப் பார்வைகளையும் எடுத்துக்கொண்டு
அவரவர் வீட்டுக்கு செல்கிறோம்.
ஜன்னலை திறந்து
வெறித்தபடி இருக்கிறேன்.
உனது வீட்டிலுள்ள மழைத் துளிகளைத்
திருடுவதற்காக,
மரக்கிளைகளில் நின்றபடி
திட்டமிடுகிறது காற்று.
அதை அறிந்த மரம்
காற்றை துரத்தியே விட்டது.
மீண்டும் சந்திக்கும்போது
இந்தக் கதையை அவளிடம் சொல்ல
நினைத்தபடி உறங்குகிறேன்.

0000000000000000000000000000

பூனைச் சவாரி

ஒரு புல்வெளியை
அழைத்து வருகிறேன்
வரும் வழியில்
குறுக்கிட்ட சிலர்
அதில் உலவிய
மெல்லிய காற்றை
எடுத்துச் செல்கின்றனர்
குதிரையில் சவாரி செய்யும்
ஒரு மனிதன் மட்டும்
தொடர்ந்து வருகிறான்
ஓரு குளிர்காலம்
புல்வெளியைக் கடந்து
திரும்பிப்பாராது செல்கிறது
களைத்துவிட்ட நான்,
புல்வெளியை ஒரு ஓரமாக
நிறுத்தி வைத்துவிட்டு
தெருவோரக் கடையில்
தேநீர் குடிக்கச் சென்றேன்
அங்கு சிலர் நகுலனின்
பூனையை துரத்திக் கொண்டிருந்தனர்
யாருடயது என பூனை
அவர்களிடம் தன்னைப்பற்றி
சொல்லவேயில்லை
மீண்டும் புல்வெளியைக்
கூட்டிக்கொண்டு புறப்பட்டேன்
என்றுதான் நினைப்பீர்கள்
உண்மையில் அது நடக்கவில்லை
இருவரும் கைகோர்த்து
உலவத் தொடங்கினோம்.
என்னை அதற்கு பிடித்திருக்க வேண்டும்
என்னிடமிருந்து
தப்பித்துவிட ஒரு தந்திரமாக
இப்படி நடந்து கொள்ள வேண்டும்
அக்கணமே புல்வெளி
மறைந்திருந்தது.
குதிரை வீரன் நடுத்தெருவில்
ஓட்டிக்கொண்டு செல்கிறான்
ஒரு சிறிய கல்லை எடுத்து
அவன் மீது எறிகிறேன்
திடுக்கிட்டு எழுந்தான்
பூனை மீது சாவரி செய்வதை
அறிந்து ஓட்டம் பிடித்தான்
மீதிக் கற்களை வைத்துக்கொண்டு
அங்கே நிற்கிறேன்
யாரும் குதிரைச் சவாரி
வருவதைக் காணவில்லை.

றியாஸ் குரானா- இலங்கை

றியாஸ் குரானா

 

(Visited 148 times, 1 visits today)