அகவிழி துழாவும் தடம்-கோ.நாதன்

கோ.நாதன்

புலர் காலை ஒவ்வொன்றிலும்
எங்கோ ஒரு தெருவிலிருந்து
மரணத்தை காவு கொடுத்த உறவின்
ஒப்பாரி ஓசை
என்னுடைய செவியை கடந்து செல்லுகிறது .

00000000000000000000000000000

மின் கம்பியில் தொங்கும்
வௌவாலின் மரணமும்,
சந்தி மரத்தில் இருக்கும்
ஆந்தையின் அலறலும்,
வீதியில் திரியும் நாயின் ஊளையும்,
வளவில் அலையும் பூனையின் உறுமலும்,
பயத்தின் அச்சத்தை
என்னுடைய உடலெங்கும் புழுவாய் ஊறுகிறது.

00000000000000000000000000000

இராணுவ வாகனத்தின்
இரைச்சல் கேட்கும் வேளை
என்னுடைய வாயை மூடி
நிறுத்தப்படும் இடத்திலிருந்து
வீரர்களின் சப்பாத்து அதிர்வுகளை
செவிப் புலன் சேமிக்க தொடங்கியது.

00000000000000000000000000000

கருமை நிறமுடைய ஆடைகளும்,
நீட்டப்பட்ட துப்பாக்கிகளும்,
என்னுடைய ஊரின்
அமைதி குழையும் இரவுகளை
பெரும் பயங்கரவாதத்தை நிர்ணயித்தது.

0000000000000000000000000000

ஏதொரு கடலின் கரையில்,
ஏதொரு ஆற்றின் கரையில்,
ஏதொரு குளத்தின் கரையில்,
ஏதொரு வாவியின் கரையில்
தமிழ் மகனின் சாவை
தினம் எழுதிச் செல்லும் காலம்.

00000000000000000000000000000

மனித நடமாட்டம் முடக்கிய
சாலை எல்லாவற்றிலும் எழுந்திருக்கும்
சாவடிகளின்
மண் குவியல்களுள் புதைந்த
என்னுடைய
பரம்பரையின் எலும்பு எச்சங்கள்
எந்த நூற்றாண்டில் வெளிவருமோ?

(ஈழ தேசத்து தற்போதைய அரசியல் நிலையின் பின் மீளும் சிவப்பு எழுத்து )

00000000000000000000000

அழுகையின் முறைப்பாடு

இராணுவ முகாம் வாசலில்
கைது செய்யப்பட்டவள்
எல்லாக் காவலரணுக்கும்
தூக்கிச் செல்லப்படுகிறாள்
மாதத்தின் விடாய் பெருக்கிலும்
வலி உடலில் வன்மப்படுத்தப்பட்டவள்
அதிகாரம் செலுத்தப்படும்
நிலத்தில் அழுகுரலை மட்டும்
கருணை மனுவாக கொடுக்க முடிகிறது.

தனது மார்வில் வடியும்
குழந்தையின் பாலை
கனிகளை சுவைப்பதாய் ருசிக்கிறார்கள்
இரத்தம் கசியும்
கரங்களிலிருந்து புத்தருக்கான
பூக்களை கொய்து கொண்டிக்கிறார்கள்
அங்கொரு
மண்டிய புதரிடையே
அழுகிய பிணமாக்கப்பட்டவள்
தெரு நாய்களின்
கடைவாய்களும் கிழிபடுகிறாள்.

கோ. நாதன்-பிரான்ஸ்

கோ நாதன்

(Visited 62 times, 1 visits today)