பாலை மணல்-கவிதை-கோ நாதன்

பாலை மணல்

கோ  நாதன்

 

கடு வெப்ப மணல் படுக்கையில் கொம்பு
முளைத்த பாம்பு உள்ளிழுத்த நீள் குவியம்
மணல் கோடுகளூடே
குழியமைத்து இரைதேடும் விசப் பூச்சிகளை
திறன் மிக்க பதுங்குதலில் விசமெறிந்து கொல்கிறது.

வறண்டு வற்றிப்போன நதி பள்ளத்துள்
ஈரக்களி மண்ணிலிருந்து கசியும் நீர்
கரித்துண்டு வடிக்கட்டி வழிப்போக்கன்
அலையும் தாகம் தொண்டைக் குழி நனைக்கிறது.
காய்ந்த மரப்பொந்தின் விளிம்பில்
ஈர மண் சுமந்து கூடு கட்டும் ஒற்றைக் குளவி.

தனித்துக் கிடக்கும் கள்ளிச் செடியில்
காற்று விழுந்து உடைந்த கிளைப் பால் சொட்டு
நிலவொளியில் தவித்தலையும் மிருகத்தின் கண்களை
நீரின் கட்டுக்குள் தூரத்திலிருந்து பக்கம் இழுக்குகிறது.

வெயில் வெப்பத்தில் உருகும் மலைகள்
தளரும் மலைத் துண்டுகளில் புழுதி மணலும்
அடிவாரத்து ஆழ் நீர் நிலையில் கரையும்
நீரின் ஈர்ப்பில் மலை முகட்டில்
தேனீக்கள் ரீங்கார ஓசையில் தேன் வார்க்கும்.

விலங்கின் மலத்தை ஈரக் கோளவடிவம்
ஒவ்வொரு சுடுமணல் வெளி
மேடுகளிலும் தள்ளித் திரியும் வீரக்கருவண்டு.
மலைப் பொந்தில் குச்சிக் கூடு
முட்டை மேல் அடைதல்படும் கரிக்குருவி.

கோ நாதன்-பிரான்ஸ் 

 

 

கோ நாதன்

 

(Visited 276 times, 1 visits today)