தமிழ்க்கவியின் ‘இனி ஒரு போதும்’- நூல் முன்னோட்டம்

 

தமிழ்க்கவி மீனா தன்னந்தனியாக இருளில் செல்வது எமக்குப்  பதற்றத்தை ஏற்படுத்தியது நான் அதை வெளிக்காட்டவில்லை. எமக்கு வெளியே நிற்கவே பயமாக இருந்தது. சீறிவரும் ஒவ்வொரு ரவை ஏதாவது ஒரு உயிரையோ உடல் உறுப்பையோ கொண்டுபோகத் தவறவில்லை. காரிருளில் பேரொளியாக வெடித்துக்கொண்ருடிக்கும் வெடிப்பொருட்கள் இதுதான் என்று சொல்ல முடியாத தன்மை கொணடவையாக மனதை உலுக்கிக் கொண்டீருந்தது.

சற்று நேரம் கழித்து மீனாவும் வேறும் இரு போராளிகளும் வந்தனர். நாம் எதுவும் பேசவில்லை. எங்கே போனாய்? ஏன்போனாய்? என கேட்க நினைத்தாலும் அவை ராணுவ ரகசியங்களாக இருக்கலாம்,எனவே பேசவில்லை.பேசவில்லைத்தானேயொழிய மனம் அறிந்து கொள்ள அங்கலாய்த்தது.சற்று நேரம் பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்த மீனா  மெதுவாக “புலியழகன் வீரச்சாவு“ என்றாள்.

 “என்ன… ?” நான் அதிர்ந்தேன்.

“ம்…ரின்மீன் எடுக்கப் பங்கருக்குப் போனவங்கள். பங்கருக்கு மேல செல்விழுந்திட்டுது.புலியழகன் வீரச்சாவு. கதிர் காயம், மற்றவன் எடுத்த சாமானோட விட்டிட்டு ஓடிவந்திட்டான்.”

 “பிறகு…பொடியன் என்ன…”

“அதுதான் கப்பல்ரோட்டுக்கு போனனான். துயிலுமில்லக்காறர் யாருமில்லை.பொடிய பங்கருக்கயே புதைச்சிட்டு… கதிரத் தூக்கிக்கொண்டு வந்தம்.மெடிக்சும் இல்லையாம். வேற பொடியளிட்ட குடுத்திட்டு வாறன்.”

“கடவுளே…. ரெண்டு நாளா சாப்பிடேல்ல புட்டவிச்சுத்தா எண்டு கேட்ட பொடியன் ….இப்ப புட்ட என்ன செய்ய ?”

“இந்தா மீன் கொணந்திருக்கு. டக்கெண்டு கறி வையுங்க.இருக்கிற பிள்ளையளுக்கு குடுங்க” என்றாள்.

நான் விரைந்து கறிவைத்தேன்.நான்கு ரின்மின்களை  உடைத்துப்  பெரிய கறியாகவே வைத்தேன். புட்டை கோப்பைகளில் போட்டேன்.பிள்ளைகளுக்கும் போராளிப்பிள்ளைகளுக்கும்  கொடுத்தேன்.சாப்பிட்டார்கள் என்றாலும் அது பேரளவுக்கான உணவுதான்.எங்களாலும் சாப்பிட முடியவில்லை.

உணவு பெருமளவு மீதமாகி விட்டது.பக்கத்திலிருந்த போராளிகளையும் காணவில்லை.முன்புறமாகக்  காயமடைந்தவர்களைத்தூக்கிக் கொண்டு ஒரு அணி போய்க்கொண்டிருந்தது. உணவை பெட்டியோடு அவர்களிடம் தூக்கிக் கொடுத்தேன். பிரித்த மாமூட்டை அதிலேயே கிடந்தது.அதை இழுத்து காப்பரணுள் போட்டோம். குழந்தைகள் தூங்கிவிட்டன. இந்த போரோசைக்குள் அசையாமல் தூங்குமளவுக்கு அவர்கள் இசைவாக்கம் அடைந்திருந்தார்கள்.ஏனையவர்கள் எதுவும் பேசத்தோன்றாதவர்களாக விழித்திருந்தோம்.

மீனா என் மடியில் சாய்ந்திருந்தாள்.சிவந்த உடல்.நொய்த தோற்றம், அழகிய முகம், சில்லறைகளைக் கவிழ்த்துக் கொட்டியது போன்ற  அவளுடைய சிரிப்பு ஒருபோதும் ஓயாதசுபாவம் அவளுக்கு. அவளுடைய பொறுப்பாளர் என்னைச் சந்தித்த போது ஒருதடவை சொன்னார்.

“எப்ப பார்த்தாலும் சிரிக்கிறாளம்மா பணிஸ்மென்ற்ற குடுத்திட்டு வந்தாலும் சிரிப்புத்தான்.”

“அவள் வீட்டிலும் இப்பிடித்தான் எங்களோடையும். ஆனா அவள் போனதோட எங்கட சிரிப்பையும் கொண்டு போயிற்றாள். போகட்டும் எங்களுக்கு பெருமையக் கொடுக்கிற மாதிரி இருந்தாப் போதும் மாஸ்டர். இப்ப அடிபாடு பிசகினதே இந்த விருப்பமில்லாத படையளாலதான் என்று பரவலாக் கதையிருக்க நானும் இவள் விரும்பாம போனவள்…எண்டுதான் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன். எப்பிடி முரண்படாம….”

என்பேச்சை இடை வெட்டிய மாஸ்டர்,

“பாக்கிறவை பிடிபட்டுவந்த பிள்ளையெண்டு சொல்ல மாட்டினம். அவ்வளவு திறமையா வேலை செய்யிறாள்.”

மாஸ்டர் போன பிறகும் அந்த வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்hன.

நாள் குறித்தபடி திருமணம் நடந்திருந்தால், இன்றைக்கு  அந்த குடும்பத்தில் ஓருத்தியாக அவள் புருசனுடைய ஆடை கழுவவும் சமைத்துப் போடவும் சல்லாபம் செய்யவுமாக காலம் போயிருக்கும். இன்றைக்கு….பாராட்டும்படியாக தேசத்துக்காக போராடுறாள் என்று கேட்க, மகிழ்ச்சியாக இருந்தாலும்…இந்த அனல் மழையில் அவள் தனியே அலைவது யாருக்காக?.

மீனாவை அவளுடைய வீட்டிலிருந்து நான் கூட்டிவந்த அந்த நாள் ..அவளுடைய தகப்பன் வசை பாடியதையும் நான் கருத்தில் கொள்ளவில்லையே. அடைக்கலமாய் வந்தவளை காப்பாற்ற முடியாமல்…..எனக்குள் விக்கித்து வெலவெலத்து….என்ர  நெஞ்சில வெளியில எரியிற நெருப்பு எட்டிப் பிடிச்சமாதிரி எரியுது.

அவள் பிறந்த ஓரு வருடத்தில் தாய் மத்திய கிழக்கு நாட்டுக்கு வேலைக்குப் போய்விட்டாள். தாய் போன ஏக்கத்திலோ என்னவோ குழந்தை சரியாக உணவேற்காமல்  மெலிந்து கொண்டே போனாள்.எல்லாப் பிள்ளைகளும் போல உற்சாகமாக இருந்ததால் அதை நோய் என்றும் சொல்ல முடியவில்லை. அப்படியே வளர்ந்தாள்.

தன்னால் கடிதம் எழுத முடிந்த போது எனக்கொரு கடிதம் போட்டாள்.

“அம்மம்மா அக்காவையள் உங்கட செலவில படிக்கினம். என்னையும் படிப்பியுங்கோ எனக்கு இஞ்ச இருக்க விருப்பமில்ல. அம்மம்மா கட்டாயம் வருவீங்கதானே…” என்று இன்னும் பரிதாபமாக எழுதியிருந்தாள்.

இந்தக் கடிதம் வந்தபோது அவள் ஒன்பதாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தாள்.அந்த வகுப்பை அவள் ஆரம்பித்த பாடசாலை வேறு. மாறி மாறி வந்த சமர்களால் பாடசாலைகளும் இடம் மாறமாற, அவளும் மாறிமாறி, இப்போது நெடுங்கேணியிலிருந்து இடம் பெயர்ந்து, அவர்களுக்கு  அருகில் நிலை கொண்டிருந்த, குளவிசுட்டான் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தாள். இது அவள் ஒன்பதாம் ஆண்டைப் படிக்கும் ஆறாவது பாடசாலை.

கடிதம் கண்ட மறுநாளே  நான் மல்லாவிக்குப் போனேன்.மல்லாவியிலிருந்து பனங்காமம் செல்லும் ஒரு நீண்டவீதி துணுக்காயை அண்மித்ததாக இருந்தது.அவ்வீதி தெற்கே வவுனியா மன்னார்வீதிவரை செல்லும் பிரதான வீதியாகும். இந்த வீதியில் துணுக்காயிலிருந்து திரும்பினால் சுமார் இரண்டு கிலேமீட்டர் தொலைவில் பாலியாறு வரும். இவ்வீதியைக் குறுக்கறுத்துப் பாயும் இவ்வாற்றுக்கு மேலாக பெரிய பாலமொன்று கட்டப்பட்டு அதற்கு பாலியாத்துப் பாலம் என்ற பெயரும் நிலைத்திருந்தது. வீதியில் திரும்பியதுமே எதிர்வரும் கமநலசேவை நிலையத்தைக் கடந்தால் ஒருபுறம் விளாமரங்களும், மறுபுறம் வயல் வெளிகளும் மிக ஆழகாக இருக்கும் வெணிற மண்கொண்ட பிரதேசமாகும். பாலியாற்றின் பாலத்தின் வலது மேட்டில் பாலியம்மன் கோவில்கொண்டிருந்தாள்.

நான் பனங்காமம் சந்தியிலிறங்கி ஒட்டங்குளம் நோக்கி நடந்தேன். மத்தியானம் கடந்த பொழுதாயினும் காரமான வெயில் கொழுத்திக் கொண்டிருந்தது.கொஞசம் தண்ணீர் குடித்தால் நல்லது போல இருந்தாலும் அக்கம்பக்கம் வீடுகளும் இல்லை.இருந்த ரெண்டொரு தற்காலிக அகதிக் குடும்பங்களும் தொலைவிலிருந்தே தண்ணீர் கொண்டுவருவது நினைவுக்கு வரவே விடாயை அடக்கிக் கொண்டு நடந்தேன். பாலியாற்றை அடைந்ததும், கீழே இறங்கி பாலியாற்றின் குளிர்ந்த நீரையள்ளி முகம் கை கால்களை நன்றாக அலம்பிக்கொண்டேன்.பின்னர் மேடேறி பாலியம்மன் கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த  மண்பானையிலிருந்து சில்லென்ற நீரை வயிறாரக் குடித்தேன்.வயிறு ஜில்லெனக்குளிர்ந்தது. தட்டிலிருந்த விபூதியை விரலால் எடுத்து நெற்றியிலிட்டேன்.  “ஸ்ஸ்ஸ்ஸப்பா…” பெருமூச்சு விட்டவாறே சற்றே பாலை மர நிழலில் குந்தினேன்.

“தாயே ஈஸ்வரி…ஒருபிரச்சனையுமில்லாம பிள்ளையக் கூட்டிக் கொண்டு போயிடவேணும். நீதான் துணை.”  பிரச்சனை வராமற் போகாது. அதை எதிர் கொள்ளும் தைரியத்தையும் அதால மற்றவைக்கு கேடுவராமலும் விட்டா சரிதான்

“ஈரப்புழுதியும் தாரமிரண்டும் தனக்குப்பகை” என்றொரு பழமொழி உண்டு. வயலில நெல்விதைக்கிறபோது இரு வகை விதைப்புண்டு.ஒன்று புழுதிவிதைப்பு மற்றது பலகையடிப்பு.அதாவது சேற்று விதைப்பு. இதையே நஞ்சை புஞ்சை என்று குறிப்பார்கள் நன்செய் நஞ்சையாகவும் புன் செய் புஞ்சையாகவும் மருவியது. நீர் பாசன வசதியுள்ளது நன்செய். மழையை நம்பி விதைப்பது புன்செய்.இந்த புன்செய் மழையை நம்பி விதைப்பது நிலத்தைபுழுதிபட உழுது காய்ந்த நிலத்தில் விதைப்பர் மழை வந்தபின் நெல் முளைக்கும்.அந்த  நிலத்தை ஈரத்தில் விதைத்தால் முளை ஒன்று குத்தியாகிவிடும். இதேபோல ஓருவன் இரு தார மணம் புரிந்து கொண்டாலும் வாழ்நாள் முழுதும் அவனுக்கு பிரச்சனைகள் தொடரும். ஏன்பதையிட்டு வந்ததுதான் மேற்கண்ட பழமொழி.

இதையெல்லாம் இப்போது நான் நினைத்து மறுக காரணம் உண்டு.ஒட்டங்குளம் மிக அழகிய கிராமம். இங்கே கைவிடப்பட்ட ஒரு நிலத்தை பெற்று பயிரிட்டு சிறுகொட்டில் போட்டு வாழ்ந்தான் குமார். ராசாத்தி அவன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவி.இரண்டுவருடங்கள் சென்றதும், அவளுடைய தங்கை கவிதாவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.ராசாத்தி பொறுமைசாலி கவிதாவை ஏற்றுக்கொண்டாலும் கணவனையும் விட்டுக் கொடுக்கவில்லை.கவிதா அந்த வீட்டில் ரெண்டாந்தாராம் மட்டுமல்ல ரெண்டாந்தரமும்தான்.

ராசாத்தி நிலைமையைப்புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தன் பிரசவ வாய்ப்பை நிறுத்திக் கொண்டாள்.கவிதா தன் முதல் பேற்றில் ஆண் குழந்தையையும் மேலும் மூன்று பெண்களையும் பெற்றாள். இருந்தும் என்ன?அவளும் அவள் பிள்ளைகளும் அங்கு ஒண்டிக்கொண்டவர்களாகவே இருந்தனர்.குமார் தன் மூத்தாள் சொல்லையும் அவள் பிள்ளைகளையுமே தனதாகக் கொண்டு நடந்தான். கவிதாவின் பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால்கூட அவள்தான் வைத்திசாலைக்கு தூக்கிச் செல்லவேண்டும். அதற்கான அனுமதியும் உடனே கிடைக்காது. பொறுத்துப் போகலாம் என்பதே பதிலாக இருக்கும்.

இதெல்லாம் அயலவர்களே அறியாத  உண்மை. “எப்பிடியோ ரெண்டு பொம்பிள கட்டினாலும் ரெண்டையும் ஒற்றுமையா ஒருவிட்டில வச்சு சந்தோசமா வாழுறானே” என்ற கதையே வெளியே உலவியது.

கொஞ்சம் மனிதாபிமானம். கொஞ்சம் திமிர். நிறைந்த உழைப்பு. நான் என்ற அகங்காரம். மொத்தத்தில் கிராமப்புறங்களில் சொல்வார்களே ‘ஒத்தைப்போக்கு’ அதற்கு உதாரணம் இவன்தான்.

நான் வீதியால் இறங்கி வீடு செல்லும் ஒற்றையடிப்பாதையில் கால்வைத்தபோதே சின்னவள் அம்பிகா கண்டுவிட்டாள். “அம்மம்மாவாறாவே….அம்மம்மா வாறாவே…” எனக்கூச்சலிட்டவாறே என்னை நோக்கி ஓடிவந்தாள். கையில் கொண்டுவந்த தின்பண்டங்களை அவளிடம் கொடுத்தேன். மூத்த பேத்தி கதிரையைக் கொண்டுவந்து போட்டாள்.

“ இஞ்சவிடு பயங்கர வெக்கையாக்கிடக்கு வெளியில போடு” என்று கதிரையை முற்றத்தில் போடுவித்தேன். ஆதில் உட்கார்ந்தபடியே சுற்றாடலை நோட்டமிட்டேன். வயல் விதைப்பதற்கான வேலைகளே அநேகமாக நடந்தன.சுற்றாடலில் உள்ள வயல்கள் எல்லாம் நீர் நிரம்பித் தெரிந்தன.

“எங்கடி கொப்பர் ?” என்றேன்.

“வயலுக்க நிக்கிறார். உழவு நடக்குது.”என்றாள் முத்தவள். இவள் இப்போது க.பொ.த. உயர்தரம் படித்துக் கொண்டிருந்தாள்.மற்றவள் என்னோடு புதுக்குடியிருப்பில் நின்று படித்தாள்.

“வா…போய் வயலப் பாப்பம்” என்று எழுந்தேன்.

“இருங்க தேத்தண்ணி ஊத்தியாச்சு குடிச்சிட்டுப்போங்க” என்று உள்ளேயிருந்த மகள் தடுத்தாள். நான் மீண்டும் அமர்ந்து தேநீரைக் கையிலெடுத்தேன்.சின்னவள் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.

“பிள்ளை எல்லாம் தனியத் தின்னிறதில்ல அக்காக்களும் வரட்டும் … வச்சிட்டு வா வயலுக்குப்போவம்” என்று அவளையும் சேர்த்துக்கொண்டேன். தேநீர் குடித்தபின் வயலில் நிற்பவர்களுக்கான தேநீரையும் எடுத்துக்கொண்டு சின்னவளும் நானும் வயலுக்குப் போனோம்..

சேற்றுழவு முடிவை நெருங்கிவிட்டது.இன்னும் இரண்டுமூன்று நாட்களில் விதைக்கலாம். எங்களைக் கண்டதும் குமார் மாடுகளை அவிழ்த்து மேய விட்டுவிட்டு வரப்பிற்கு வந்தான். சின்னவள் தேநீரைக் கொடுத்தாள்.கவிதா மாடுகளைப் பிடித்து வாய்க்காலில் கழுவினாள்.கழுவாது விட்டால் சேற்றுவேலை செய்த மாடுகள் உலர உலர சேறு மயிரைப்பிடித்து இழுக்கும்.பாவம் அதனால் சேற்றில் வேலைமுடிய மாடுகளை கழுவவேண்டும். கழுவிய மாடுகளை சற்று மேய விட்டு விட்டு வரப்புகளுக்கு மண் சாற்றிய கவிதா வீட்டுக்குப் புறப்பட்டாள்.நாங்களும் அவளுடன் திரும்பினோம். மாடுகளும் மேட்டுக்கு வந்நுவிடவே அவற்றை கட்டையில் கட்டினாள் கவிதா.பட்டி கூட்டாமல் சாணியள்ளாமல் கிடந்தது.

“ஏன்ரி பட்டி கூட்டுறதில்லையே வெள்ளெணவே கூட்டியிருந்தா எப்பன் காஞ்சிருக்குமே ?” என்றேன் நான்.

“கூட்டத்தான் வேணும் இப்பானே வயலுக்கால வாறன். இதுகள் இஞ்ச ஒருதரும் செய்யாகினம். இனிப் போய் ராச்சோத்துக்கு நெல்லுக் குத்தோணும்.”புறுபுறுத்தவாறே அவள் கூடவந்தாள். இங்கே எல்லா வேலையும் தானே செய்ய வேண்டியிருப்பதை எனக்குணர்த்தவே அவள் புறுபுறுத்தாள் என்பது எனக்கு விளங்கியது என்றாலும் நான் எதுவும் பேசவில்லை. ‘எல்லாம் நீங்களாத்தேடிக்கொண்ட வாழ்க்கைதானே’என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.

இரவு பேத்திகள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். என்ன புதினம் கேட்க இல்லை அவர்களிடம் எனக்குச் சொல்ல வேண்டிய புதினங்கள் நிறைந்திருக்குமே. ஒருத்தி ஆரம்பிப்பாள் மற்றவள் குறுக்கிட்டு ‘பொறு இஞ்சவிடு நான் சொல்லுறன் என்று தான் தொடர்வாள். கேட்ககேட்க முடியாத கதைகளாயிருக்கும். அதிலும் சின்னவள் தகப்பனின் கையைப்பிடித்துக்கொண்டு கடைதெருவெல்லாம் சுற்றுவாள்.அங்கே பெரியவர்கள் பெசிக் கொள்வது சண்டைசச்சரவு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு வந்து அக்காக்களிடம் அவிழ்த்துக் கொட்டுவாள். அவளுடைய மழலையில் இதிலுள்ள தப்பெல்லாம் மறந்து மறைந்து போய்விடும்.

அந்த ஊர்த்துளவாரங்களைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு கதையோடு கதையாக,

“நான் மீனாவைக் கூட்டிக் கொண்டு போப்போறன்.” என்றேன். திடீரெனப் பேரமைதி அங்கே புகுந்து எல்லோருடை பேச்சுக்களையும் அள்ளிச் சென்றது.

(பேசுவோம்)

நடு லோகோ

(Visited 82 times, 1 visits today)