தேவகாந்தனின் “ஆதித்தாய்” சிறுகதைத்தொகுதி முன்னோட்டம்

ஜென்மாவும் உடைந்த விலாவெலும்புகளும்…- சிறுகதை

 

தேவகாந்தன்அது தொல் புவிக்காலம். பூமி தோன்றி சுமார் ஒரு கோடி வருஷங்கள் ஆகியிருந்தன.

வெப்பம் சிறிது அடங்கிக் கிடந்திருந்த ஓர் அதிகாலை வேளையில பரந்த ஒரு மரத்தின் அடியோடு சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஜென்மா கண் விழித்து எழுந்தது. சோம்பல் முறித்தது. வானம் தெரிகிறமாதிரி வெளியில் வந்து நின்றது. கீழ்த் திசையிலிருந்து மரக்கிளைகளினூடு பளீரிட்ட சூரியக் கதிர்களை ரசித்து நோக்கியது. எல்லாம் புதிது புதிதாய்த் தோன்றினபோல் ஒரு பரவசம் அதில் ஏறியது. எனினும் உள்ளே எழுந்துகொண்டிருந்த நிம்மதியீனம் அதன் பரவச மனநிலையை அதிகநேரம் தொடரவிடவில்லை.

0000000000000000000000

அணில், ஆடு, மாடு, கரடி, கழுதை, பன்றி, சிங்கம், யானை இன்னும்…. பாம்பு…. எதுதான் இணையுடன் கலவி செய்யவில்லை? உறுப்பு விறைத்தெழுவதை விந்தையாய்ப் பார்த்து அனுபவிக்க ஒரு பருவம்வரை முடிந்தது. பின்னால்… தவனங்கள், தினவுகளாகிவிட்டன. உடம்பு மதர்ப்பெடுத்து அது கானகமெங்கும் அலைந்து திரிந்தது. அதன் இணை அதற்குக் கிடைக்கவில்லை. இப்பொழுதெல்லாம் கனவுகள் தோன்றின. அவற்றில் அதுபோலவே ஒரு பெண் ஜென்மா. அங்க அசைவுகள் கண்டு அதன் மனம் கொதித்துப் பொங்கியது.

புணர்ச்சி விழைச்சு இயற்கை. இன உற்பத்திக்கு அது அவசியம். ஆனாலும் வம்சம் பெருக்குகிற எண்ணமேதும் ஜென்மாவுக்கில்லை. அது குட்டிகளை, போத்துகளை, பிள்ளைகளைக் கண்டிருந்தும் அப்படியொரு தவனமில்லை. அதன் அத்தனை பெரிய மூளையில் அந்தச் சிந்தனை இன்னும் வளர்ந்திருக்கவில்லை. அதனால் புணர்ச்சியே விடாயாயிருந்தது. ஒருமுறை, ஏறக்குறைய புணர்ச்சிவரை ஒரு துவந்த யுத்தத்தின் வெற்றி அதனை இட்டுச்சென்றது. சில வருஷங்களுக்கு முன், பெண் கரடி ஒன்றோடு பெரிய யுத்தம் புரிய நேர்ந்தது அதற்கு. அந்தச் சம்பவம் ஒரு வறண்ட கால்வாயில் அது நடந்து போய்க் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. கானாறு பாய்ந்ததால் ஏற்பட்ட ஆழ்ந்த தடம் அது. தடத்தில் மணல் வழிந்து கொண்டிருந்தது. பாதம் மணலுள் புதையப் புதைய சுகம் கிளர்ந்து கொண்டிருந்தது ஜென்மாவுக்கு. அப்படியான வேளைகளில் கைகளையும் கால்களாய்ப் பாவித்துத் தாவித் தாவி ஓட அதற்கு ஓர் உந்துதல் பிறக்கும். அவ்வகை உந்துதல்களை அது திட்டமாய் மறுத்திருந்தது. தன் இனக் கூட்டத்திலிருந்து தன்னை அது ஓர் அதிசயமாய் எண்ணியது. அதன் வித்தியாசங்களால் அதன் கூட்டமே அதனைக் குழந்தைப் பிராயத்திலிருந்தே ஒதுக்க ஆரம்பித்துவிட்டிருந்தது. குறுகிய முன்னங்கால்களோடும், இன்னும் அழகான முகவமைப்போடும், இன்னும் ரோமம் குறைவான மேனியோடும் அது பிறந்தபோதே அந்த வெறுப்பும், அதன் நிமித்தமான ஒதுக்கமும் அதன்மேல் விழத் துவங்கிவிட்டன. பின்னால் அது வளர்ந்து வளர்ந்து நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த வேளையிலே அதை ஒதுக்கித் தள்ளின. பிறகு அதுவே தன் கூட்டத்தைத் துறந்து தனியாய்ப் புறப்பட்டுவிட்டது. அது காரணமாகவே அவைபோல் எதையும் செய்ய அது பிரியப்படாதிருந்தது. பிரிந்த பின்னால் தன் இனக் கூட்டத்தை அது எப்போதும் எதிர்ப்பட்டதில்லையெனினும், ஒரு வெறுப்பு அதனிடம் தடிப்பாய் இருந்தே வந்தது.

கால்வாயில் ஒரு உயர்ந்த கரைப் புதரிலிருந்து அந்தக் கரடி ஓடி வந்து திடீரென்று அதன் மீது பாய்ந்தமை அப்போதுதான் நடந்தது. நிழல்போல் ஒரு அசைவை அது கண்டுகொண்டாலும், தற்காத்து ஓடவோ எதிர்த் தாக்குதல் நடத்தவோ வெகுவாய்த் தாமதித்துப்போனது. அதன் பிடி மிக்க இறுக்கமாயிருந்தது. வெறியின் கோரம் தெரிந்தது. சிலவேளைகளில் மலைச் சரிவுகளில் பாறை விழுந்து நசுங்குமே, அதுபோல் இருந்தது. அப்போதுகூட பாறையானது மேலும் மேலும் ஆக்ரோஷமாய் நெரிக்க முயலாது. அதன் நசிப்பு அதன் பாரமளவானதாகவே இருக்கும். ஆனால் கரடியோ வரவர மூர்க்கம் பெற்றுத் தாக்கியது. ஒருபொழுது தன் நீண்ட முகவாயை விரித்து அதன் புஜத்தில் கவ்வியும் விட்டது. தசை கிழிந்துபோனது. ரத்தம் ஒழுகியது. அந்த மரண அவஸ்தை வேளையில் கரடியோ தன் முன்னங் கால்களால் கண்களைப் பிராண்டவும் முயன்றுகொண்டிருந்தது. வசதியான ஒரு பொழுதில் முகத்தையும் அது பிராண்டி விடுகிறது. தாள முடியாத வலி ஜென்மவுக்கு. வலிமையும் மனத்திண்மையும் நேரமாக ஆக வடிந்து வருவதாய்த் தோன்றிற்று. அந்த மிருகத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டாலென்ன என்றுகூட அதற்கு யோசனை வந்தது. ஆனால் ஒப்புக்கொடுத்து விடுவது வாழ்க்கையில்லையே. அவ்வாறான ஜீவ மரணப் போராட்டமும் அதற்கு அது முதலாவதில்லை. சண்டை செய்தே ஆவதென்று தீர்மானித்த பிறகு யுத்த நிலைமை முற்றாக மாறிப் போய்விட்டது. பலஹீனத்தில் ஆழ்ந்து வந்த ஜென்மா, புதுப் பலம் பெற்றதுபோல் ஆனது. திடீர் திடீரென்று அது யுக்திகளையும் மாற்றிற்று. எதிராளி திகைத்தது. தன்னைவிட, கூடிய உன்னதங்களையுடைய ஜென்மம் அதுவென்று அப்போது நினைத்தது. கரடியைக் கீழே அமுக்கிக்கொண்ட ஜென்மா, அதை நொருக்கிவிடுகிற ஆக்ரோஷத்தோடு கையில் அகப்பட்ட கல் ஒன்றை எடுத்து ஓங்குகின்ற வேளையில்தான் அதன் மார்புத் திரட்சிகளை உணர்ந்தது. அடுத்த கணம் கல்லை வீசிவிட்டு நிலத்தோடு நிலமாய்க் கரடியை நசித்தபடி அதன் மேல் கவிந்தது. பெண் கரடி பலமெல்லாம் இழந்து தடுமாறியது. ஜென்மாவின் ஆணாகிவந்த தாக்குதலுக்கு அதனால் தாக்குப்பிடிக்க முடிவில்லை. உர்… உர்… என்று உறுமி அச்சுறுத்தி விலக்கமட்டும் முயன்றுகொண்டிருந்தது. ஜென்மாவின் பொறி கலங்கி வந்தது. அதன் வீரியம் கரடியைத் துளைத்து விடுவதுபோல் ஆனது. அப்போதுதான் யாரோவின் கட்டளைபோல் வானத்தில் இடி இடித்தது. உடனயே பெண் கரடியைக் கைநெகிழ்த்தி தப்பியோடவிட்டது ஜென்மா. அன்று தூண்டல் பெற்றதுதான் அதன் புணர்ச்சி விடாய். பசிக்கு இரைபோல், காமத்துக்கு ஒரு துணையை அது தேடியது. தவித்தது. ஜீவிதம் வெறுத்தது. தன்னைப் பிழியும் தனிமையையும் அது அழித்தாக வேண்டுமென்கிற எண்ணமும் எழுந்தது. அப்போதுதான் அது தன் முதலாவது ஓட்டத்தைச் செய்தது.

எல்லாம் நினைவாகிக் கொண்டிருந்தன.

நினைவென்பது அதனளவில் அறிவுதானே.

அப்போ… அது யோசித்துக் கொண்டிருந்தது. என்ன தோன்றியதோ, விறைப்பாய் சூரிய ஒளித் தொகுப்புகளிலிருந்து தன் பார்வையை அது திருப்பியது. ஓட அவசியங்களும் தீர்மானமும் ஏற்பட்ட பிறகு, ஆரண்யத்தின் மீதான பிரியம் அதைத் தடுத்துவிடப் போவதில்லை.

அது தன் ஓட்டத்தைத் துவக்கிற்று. ஓட்டம் நடையாகிய அளவில் அது தன் பழைய இடத்தைவிட்டு வெகுதூரம் வந்திருந்தது.

அது களைத்திருந்தது. இருந்தும் பயணத்தை நிறுத்த அது யோசிக்கவில்லை. ஓடுவது எவ்வளவு சிரமமானது, ஆபத்தானது என்பது அதற்குத் தெரியும். ஒரு புவிப் பகுதியின் வளம்போல் இன்னொரு பகுதி இருக்காது. ஒரு ஆரண்யத்தின் மிருகங்களது மூர்த்தண்யம்போல் இன்னொரு ஆரண்யத்தில் இருக்காது. ஆனாலும் தவிர்க்கவியலாத புறப்பாடாதலால் எச்சரிக்கையோடு தொடர்ந்தது.

மிகுதி “ஆதித்தாய்”-யில் சந்திப்போம்………….

நடு லோகோ

(Visited 48 times, 1 visits today)