காடுலாவு காதை-பாகம் 10-தமிழ்க்கவி

தமிழ்க்கவிகந்தப்பு இரவு பிலவுக்காவலுக்கு போயிருந்தான். பாக்கியம் அவனை அனுப்பிவிட்டு பிள்ளைகளுக்கு பாய்போட்டு படுக்க வைத்து விட்டு அடுப்படிக்குள் சென்று தான் சாப்பிட்டாள். அவளுக்கு ஞானமணியின் நினைவு வந்தது என்னதான் பேத்தியெண்டாலும் நெற்பங்கெட்ட கிழவி. அவளோட விடுறது சரியில்ல. என்ற எண்ணம் வந்தாலும் ஒர ஏக்கருக்கு அங்கால இருக்கிற விட்டுக்கு போய் கதை சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது.

‘ச்சாய்………… போல்முழுக்க அந்த வேலிக்கரையப்பாத்து எங்கட டேக்கர் நாய் குலைச்சுக் கொண்டே இருந்தது. அதுக்க ஒரு முத்திக்குறுத்த புடையன் கிடக்குது. அங்கால காட்டுக்க கக்கூசுக்கு போகேக்க ஒருநாள் வேலிக்க வழிமறிச்சும் கிடந்தது. வெட்டைக்க வரட்டும் எண்டும்  அடிக்க வாகா இல்ல எண்டும்  விட்டிட்டார். இப்ப அங்ஙினதான் மேச்சலுக்கு திரியும் . போகட்டும் நாளைக்கு பகலோட சொல்லுவம்’ என்று யோசித்தாள். அப்படியே போய் படுத்து நித்திரையாயும் போட்டாள்.

கந்தப்பு வழமைக்கு மாறாக அதிகாலையிலேயே  வந்து விட்டான். “ லெச்சிமி, ஓடிப்போய் சேனாதி நிக்கிறானோ எண்டு பார். வரச்சொல்லு. டேய் மணியம் பங்க சந்தியில துரையிங்கன் நிப்பான் கூட்டிக்கொண்டு ஓடிவா.” என்று கட்டளைகள் போட்டான். பாக்கியம் தேத்தண்ணியக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்னப்பா மானோ பண்டியோ ?” அவளின் கேள்வியை கண்டு தன் கொடுப்புக்குள் சிரித்தபடி கந்தப்பு ரெண்டுமில்ல என்றான்.

“அப்ப என்னப்பா வந்த வரத்தில பப்பரிக்கம் போடுறியள்.”

“மரையப்பா, உவங்கள் எங்க தனியத் துர்க்கப் போறாங்கள் அதுதான் காட்டுக்கயே வச்சு உரிச்சாத்தான். என்றவாறே தன் கோட்டையும் துவக்கையும் மறுபடி எடுத்துக் கொண்டு, “டேய் மணியம் என்னடா மிலாந்திறாய். வண்டிலப்பூட்டு.

“மெய்யேப்பா நான் போறன் நீங்கள் கெதிப்பண்ணி வந்து சேருங்கோ. சமையல பிலவில வைக்கலாம்.” என்றவாறே கந்தப்பு தயார்.

“சேனாதி கொம்புக்கத்திய எடு”என்றவாறே வில்லுக்கத்தியை தனது கோட்டுப்பைக்கற்றில் போட்டவன் ஒரு சன்னத்தோட்டாவையும் எஸ்எம்ஜி தோட்டா இரண்டையும் தனது கோட்டுப்பையுள் போட்டுக்கொண்டான்.

“துரையிங்கா… ரெண்டு சாக்கெடு தம்பீ. அப்பிடியே கண்டங்கோடாலி”(பொலித்தீன் அப்போது இல்லை) என்றான்.

“அப்பூ நான் ஆறுமுகத்தார் வீட்டிலயிருந்து சீமெந்துப்பக்கற்று ரெண்டு கொண்டுவந்து வச்சிருக்கிறன் ‘என்றாள்.

“ஆ…அ. அதையுங் கொண்டுவா என்ன நீயும் வாறியோ?”

“பின்ன நான் வராட்டி ஆர் சரை சுத்திற ?” எப்பவும் மேலுக்கு சட்டைபோடாம பாவாடை மட்டுமே கட்டிக் கொண்டு திரியும் லெச்சிமி, ஓடிப்போய் மேல் சட்டையை போட்டுக்கொண்டு புறப்பட்டாள். அதற்குள் பாக்கியம் கண்டுவிட்டாள்.

“எங்கடி வெளிக்கிடுறாய் ஆம்பிளையளோட ? நீ அடங்க மாட்டியே……..?” கந்தப்பு தலையைக் கவிண்டு கொண்டு லெச்சிமியின் பதிலை எதிர் பார்த்தான்.

“என்ன ஆம்பிளை ? அவங்களுக்கும் ரெண்டு கையும் ரெண்டு காலுந்தான்.” சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் படலைக்கு வெளியே முதலில் ஓடினாள். பாக்கியம் பொருமினாள். கந்தப்பு வேகமாக வெளியேறினான். போகும் போதே “சுணங்காம வந்து சேருங்கோ” என்றுவிட்டு நடந்தான். புலவுக்கு ஓருமைல் அப்பால் காட்டுக்குள் அரைமைல் போக வேண்டும்.

அதிகாலையில் அவன் புலவுக்குள்ளிருந்தபோதே அதல் கேவல் சத்தம் கேட்டே காட்டுக்குள் போனான். அந்த அப்பாவி மிருகம் தண்ணீர் தேடி அவன் வீட்டருகே இருந்த குளத்துக்கு வந்திருக்கிறது. குளமும் வற்றிக் கொண்டிருந்தது. அதனால் அதன் சேறுபட்ட காலடித்தடத்தை கவனமாக ஓசையின்றி தொடர்ந்த கந்தப்பு, அது நீரந்திய களைப்பு தீர பொட்டலையே நாடிப் படுக்கும் என்பதை கணித்திருந்தான். சுடலைக் காட்டைக் கடந்த அந்த பொட்டல் வெளிக்கு நாம் முன்னர் ஒருதடவை கதிகால் வெட்ட வந்திருக்கிறோம்.

கூமா மரத்தின் அடைசலில் ஒழித்திருந்த கந்தப்பு, நெல்லி மந்துகளின் ஊடே கால்களை நீட்டி சோம்பல் முறித்த மிருகத்தை கண்டான். அவன் நினைத்தபடி அது மரைதான். இளம் விடலைப்பருவமான அதன் சாம்பல் நிற மேனியின் கழுத்தை குறிவைத்தான். அழகான அதன் கொம்புகள் கிளைவிட்டு வளர்ந்து அதன் தலை நிலத்தில் சாய்வதை தடுத்தது. மந்துகளின் அணைப்பு அதற்கு அவசியமாக இருந்தது. எனவே அதன் கழுத்து உடலைவிட்டு சற்றே உயரத்தில் கிடந்தது.

அவனது சொட்கண்ணின் வில்லை இழுத்து அதன் குழல் முனையில் இருந்த குறிகாட்டியில் அவனால் சுற்றப்பட்டிருந்த தேயிலை கட்டிவரும் ஈயக்கடுதாசி இலக்கை துல்லியமாக சுட்ட மெதுவாக முழந்தாள் நிலையில் நின்று விசையை ஆட்காட்டி விரலால் இழுத்தபோது, மரைக்கு நகரும் அவகாசம் இருக்கவில்லை. அவ்விடத்திலேயே தனது பாரிய கொம்புகள்நிலம் தோய தலையை சரித்து இருமுறை துடித்து அடங்கியது. குழை கொப்புகளை முறித்து அதன் உடலை மூடி வைத்து விட்டே வீட்டுக்கு வந்திருந்தான் கந்தப்பு.

பன்னைக் குழைகளை முறித்து பரப்பிவிட லெச்சிமி ஓடியோடி குழைகளை முறித்தாள். மரையை மல்லாத்தி பிடிக்க துரைசிங்கமும் சேனாதியும் உதவ அதன் கழுத்துப்பகுதியில் சுற்று வட்டமாக தோலை கீறினான் கந்தப்பு. பின் அங்கிருந்து நேராக வயிற்றின் மீது தொடங்கி அதன் பின்னங்கால் அந்தம் வரைக்கும் ஒரு நேர் கீறல் அவனது வில்லுக்கத்தியின் கூர்மை அங்கே மிகவும் பிரசித்தம். கீறல்களின் வழியே அனது வலிமையான கைகள் புகுத்த முட்டியால் குத்தி உடலிலிருந்து லாவகமாக தோலை உரித்தான்.

“அப்பூ………. அடுத்த முறை மான் வெடிவச்சால் தோலை எனக்கு தந்திடோணும். அது எங்கட சுப்பிரமணியம் வாத்தியாருக்கு குடுக்கோணும். இப்பவே சொல்லிப்போட்டன்.”

“ஏன் உங்கட வாத்தியாருக்கு கதிரை இல்லையோ ?” சேனாதி கிண்டலடித்தான்.

“அவர் யாழ்ப்பாணத்தில ஐயருக்கு இருக்க அவற்ற வீட்டில வச்சிருக்கவாம் எண்டு கேட்டவர்.”அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியம் வந்துவிட்டான். வண்டிலை வெட்டையில் நிறுத்தியிருந்தான். ஆளும் பேருமாக  கூறுபோட்ட மரை இறைச்சியை வண்டியிலேற்றினார்கள்.

காடு விரியும்

தமிழ்க்கவி -இலங்கை

தமிழ்க்கவி

(Visited 88 times, 1 visits today)