காடுலாவு காதை-பத்தி-பாகம் 07-தமிழ்க்கவி

இப்படி மாதம் ஒரு முறை பேதி குடிப்பது விட்டு வழக்கமானாலும் பாடசாலை மட்டத்திலும் ஒவ்வொரு தவணையிலும் சகல மாணவர்களுக்கும் பேதி கொடுப்பது வழக்கமாக இருந்தது. புதிய காடுகள் பதிய குடியேற்றங்கள் சுகாதாரப் ;பழக்க வழக்கம் இல்லை மக்கள் வேலைகள் மட்டுமல்ல உணவையும் காடுகளிலேயே பெற்றனர் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களாக சோப், துணிமணி. ஏன்பனவே இருந்தன.

அன்றைக்குப் பிள்ளைகள் எல்லோருக்கும் புழுங்கலரிசிச் சோறும் ரசமும் மட்டும்தான் சாப்பாடு. அதுவும் நல்லா வயித்தால போச்சுதா? என்று கேட்டபின்தான் சாப்பாடு. “டாக்குத்தர் குடுத்த மருந்துக்கு வயித்தால போகாம விடுதே” லெச்சிமி வயித்தால போன களைப்பில தொங்கிப்போய் வந்தாள். பழுத்துக்கிடந்த பலாப்பழம் அவளை வா வா என்று கூப்பிடுவது கேட்டது.

“அப்பு இனி எதெண்டாலும் சாப்பிடலாம்தானே?” என்று கேட்டாள்.

“கொஞ்சம் பொறம்மா. மத்தியானம் சாப்பிட்டபிறகு எதெண்டாலும் சாப்பிடலாம்.”

‘பச்சத்தண்ணி அளைய வேண்டாம்.’ பாக்கியம் சத்தம் போட்டாள்.

“அப்பூ………….. தண்ணிக்கபோட்ட மாவரையை எடுத்து பாத்தனான் சிதம்பிக்கிடக்கு.”

“அதெல்லாம் நான் செய்வன். நீயென் எல்லாத்திலயும் கைவைக்கிறாய்?.” கந்தப்பு பேசினாலும் அவனுடைய கை நாளாந்தம் கொண்டுவந்து சேர்த்த கரையாக்கண்ணி தடிகளை சீவி அடுக்குவதில் கவனமாக இருந்தது. சின்னிவிரலுக்கும் குறைவான மொத்தமே உள்ள தடிகள் அவை. சுமார் மூன்றடி உயரமானவை. கவனமாக அவற்றை சீவி அதன் அடிப்பகுதியில் ஒரு கெத்து வைத்து அடுக்கினான். அடிப்பக்கத்தடிக்கு சின்ன கூர் சீவப்பட்டது. லெச்சிமி அவற்றை எண்ணி அடுக்கினாள்.

“எல்லாமா எண்பத்து நாலு.”

“இன்னும் நாப்பது தடி வேணும்” என்று கந்தப்பு தன் கொடுப்புக்குள் அதக்கி வைத்திருந்த வெற்றிலையை எட்டி முற்றத்தில் துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தான். பாக்கியம் கொண்டுவந்த தேநீரை குடித்தவன் அடிக்கோப்பையில் கொஞ்ச தேநீரை மீதம் வைத்து அதை லெச்சிமியிடம் கொடுத்தான்.

‘கந்தப்பு இப்படித்தான் தேத்தண்ணியோ சாப்பாடோ அவளை விட்டிட்டு சாப்பிடமாட்டார். அவர் மிச்சஞ்தாறதுக்காக அவள் பக்கத்திலேயே நிப்பாள். பத்து வருசங்கழிச்சு பிறந்த அவளின்ர தங்கச்சிக்கு ரெண்டு வயசாகின பிறகு அவளும் கந்தப்புவுக்கு பக்கத்தில வந்து நிப்பாள் லெச்சிமி. அவளுக்கு விட்டுக் குடுத்திட்டாள்.

1956ம் ஆண்டு, கந்தப்பு வீட்டுக்கு முன்னால கிட்த யார்க்காட்டுக்க( அளந்து ஒதுக்கப்பட்ட அரசகாணி) ஒரு சின்ன மைதானம் பந்தடிக்கிற இடம். கொஞ்சம் இளந்தாரியள் வலைகட்டி பந்தடிக்கிற இடம்  முத்தம் போல கிடந்தது. இப்ப அந்த காணியில பெரிய கட்டிடம் கட்டப்போறம் என்று கந்தப்புவிடம் வந்து கட்டிட வேலைக்கு தண்ணி கேக்கினம். கிணத்தடியில இருந்து பைப் போட்டு தண்ணி எடுக்கினம். பென்னம் பெரிய கட்டிடம் கடடி ஒரு வழியா முடிஞ்சிது இன்னும் வெள்ளை அடிக்கேல்ல. அங்க விவசாயப்படம் காட்டுகினமாம் எண்டு வீடு வீடா வந்து சொன்னார்கள்.

கந்தப்புவுக்கு, இறைச்சி வாங்க வந்த வைத்திலிங்கத்தார் சொன்ன கூட்டம் இன்றைக்குத்தான். அதை நாலாம்பேருக்கும் தெரியாம நடாத்தத்தான் இந்த விவரணம்படக்காட்சி எண்டது பலருக்கும் தெரியாது பாக்கியமும் கடைசியாப் பிறந்த பொடியனையுங்கொண்டு படம்பாக்க வெளிக்கிட்டாள் பக்கத்து வளவுக்கதானே பிள்ளையள் ஒடீப்போறதும் அங்கதிரை கட்டிற்றாங்கள், ஒலிபெருக்கி வச்சிட்டாங்கள் சனம் வரத் துவங்கீட்டுது என்று அடிக்கடி வீட்டுக்கும் படங்காட்டுற இடத்துக்குமா ஓடி ஓடி நேரடி அஞ்சல் செய்து கொண்டிருந்தாள்.

மண் சட்டியில உமிபோட்டு அதை நெருப்பு மூட்டி அதில பால் சட்டியவச்சு அதை உறிமாதிரி தூக்கிக் கொண்டு சாணைத் துண்டுகளையும் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு லெச்சிமி நடக்க மலர் போர்வைய தூக்கிக் கொண்டு நடக்க பால் பாத்திரத்தை பாக்கியம் எடுக்க திருப்பா பாயை எடுத்துக் கொண்டு படம் பாக்கிற இடத்துக்கு போனார்கள்.

படத்தில் புற்றுநோய் எப்படி வருகிறது கைகளை சோப்போட்டு கழுவுவது.எபபோது என்பது. நெல் எப்படி யப்பானில் பயிர்செய்கிறார்கள் என்பதுடன் விவி வைரமுத்துவின் அரிச்சந்திரா மயான காண்டம் வேல் ஆனந்தனின் நடனம் என்று  பதினொரு மணிவரை காட்டினார்கள். அதேநேரம் மாணிக்கம் வீட்டில் நடந்த அரசியல் கூட்டமும் முடிந்து ஆண்கள் வீடு திரும்பியிருந்தனர்.

“என்னவாமப்பா கூட்டம்?” பாக்கியம் கேட்டாள்

“நீ சோத்தப்போடப்பா, ஏதோ மாநாடு நடத்தப் போகினமாம்.”

“உங்க பிலவுக்க வேலை கிடக்கு எண்டு சொல்லுங்கப்பா சும்மா உதுகளுக்க போய் மாட்டுப்பாடாம” பாக்கியம் சோத்துக் கோப்பையை கொடுத்தவாறே சொன்னாள்.   ‘அப்பிடி பொண்டுகளின்ர சொல்லுக்கேக்கிற ஆம்பிளையள் ஆரும் இருக்கினமே? தமிழ் சனத்துக்கு காடு காட்டப் போறாங்களாம்.” பாக்கியம் சலித்தாள்.

காடு விரியும்

தமிழ்க்கவி -இலங்கை

(Visited 91 times, 1 visits today)