காடுலாவு காதை, பாகம் 25-தமிழ்க்கவி

தமிழ்க்கவிநாலு நாட்களுக்குப் பிறகு காணியைப் பார்க்கப்போன மணியன் வந்து ‘கம்பி நாலுபட்டும் அறுத்துக் கொண்டு கள்ளர் பூந்து மரவள்ளியப் புடுங்கிப் போட்டிட்டாங்கள்’ என்றதைக் கேட்டதும், “வடிவாப் பாத்தியோடா ஏதும் காலடித்தடங்கள் கிடக்கோ”

“இல்லையத்தான் நான் வடிவா தோட்டத்துக்கை பாத்தநான். அங்ஙின அங்ஙின உரல் போட்டுக் குந்தியிருக்கிறாங்கள் போல. உரல் வச்ச அடையாளம் பரவலா கிடக்கு.”

இப்ப கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயாத்துரை சுந்தரம் எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள்.

“எட பேயா எப்பிடிப்பட்ட மோட்டுச்சாம்பிராணியடா….கள்ளன் வரக்க குந்தியிருக்க உரலக் கொணந்தானாம். எப்பிடிக் கந்தப்பு நீ இவனை வச்சு தொழில் செய்யிறியோ.” சுந்தரம் அலுத்துக்கொண்டார்.

“மெய்யே கந்தப்பு. உந்தக்காட்டுக்க ஆனை நிக்குதோ, எப்பிடியப்பா?”

“இல்லையண்ணன். ஆனை இதுக்க இல்லை. கொஞ்சநாளா கடும் வெப்பம்தானே குடிதண்ணி தேடி ஊர்மனைக்க வந்திருக்கு. பங்க வேலுப்பிள்ளையர் மாட்டுக்கு இறைச்சு விட்ட தண்ணியையும் உதுகள்தான் குடிச்சிருக்கும். இனி எங்கட தொட்டிவழியவும் தண்ணி கிடக்குத்தானே… போய்ப்பாத்தாத்தான் தெரியும. தனியனோ கிளையோண்டு. கிளையெண்டா போயிருக்கும. மழையும் பெய்திட்டுதுதானே. உது செத்த வீட்டுக்க முதல்நாள் வந்திருக்கும் எண்டில்ல அப்பிடி முன்னம் வந்திருந்தா தடம் அழிஞ்சிருக்கும். அண்டைக்கு ராத்தான் வந்திருக்கும். இனி மழை பெஞ்சதால அங்கால மோட்டையளுக்கு தண்ணி பத்தியிருக்கும். தனியனெண்டா கொஞ்சம் பயந்தான் எங்கயும் மந்துகளுக்க கிடந்திட்டு கலைக்கப்பாக்கும்.”

“உவ்வள பெருங் காடு கிடக்க மந்துக்க ஏனப்பா வந்து கிடக்குது.”

“என்னண்ணை நீ பெருங்காட்டுக்க அது நீட்டி நிமிந்து படுத்தெழும்ப அதுகும் கிளையெண்டா ஏலுமோ. எப்பவும் ஆனையள் படுக்கைக்குப் பொட்டல் காட்டுக்கோ மந்துக்காட்டுக்கோதான் வரும். பேசாம நாங்கள் கடந்து போனாலும் கிளையெண்டா கிடந்திருங்கள். ஆனா நாங்கள் கொஞ்சம் பயத்தில, அது கிடக்கெண்டறிஞ்சா விலகிப் போறதுதான். ஆனா உந்தக் குட்டியள் ஏந்துமட்டம் தள்ளுமட்டத்தில இருந்தா தாய் யானை ஒரு சீறல் சீறும். அந்தப்பக்கமா போனா ஆள் சம்பல்தான். உழக்கிப்போடும். அதில கவனமா இருக்கோணும்.”

“அதென்னப்பு ஏந்துமட்டம் தள்ளுமட்டம்” லெச்சிமி கேட்டாள்.

“யானைக்குட்டி மனிசரப் போலதான் எழும்பிப் பால்குடிச்சாலும் பிறந்த கையோட மற்றமற்ற விலங்குகள் மாதிரி நடக்காது. தாய் யானை அதின்ர கவட்டுக்கால பின்பக்கம் தும்பிக்கையைக் குடுத்து தூக்கிக் கொண்டுதான் போகும். மேயுற இடத்துக்கருகில மறைவா படுக்க வச்சிட்டு மேயும். பிறகு கொஞ்சம் வளர அதேமாதிரி கவட்டுக்கால தும்பிக்கையை போட்டுத் தள்ளத்தள்ளிக் கொண்டு போகும் அது தள்ளுமட்டம்”

“அதுகள் கிடக்கிறதை எப்பிடி கண்டுபிடிப்பாய்.?” இது சுந்தரம்.

“எல்லாம் வாடைதான் சுந்தரம். யானை உன்ர உறண்டல் சுருட்டு மணக்குமே ஒரு சிணி நாத்தம். ஙா… அதுபோலதான் யானை நிண்டா அந்தச் சிணிமணம் கட்டாயம் வரும். மான் மரையள் உலாவிற இடத்தை ஒரு பால்மணம் கலந்த காத்து வரும். எங்கட ஆட்டுப்பட்டிக்கால வாறமாதிரி. பண்டியும் ஒரு நாத்தம்தான் வேலங்காய் மணக்குமே அதுமாதிரி.  அடிக்குடல்வரைக்கும் தாக்கும். இனி அவயட நடமாட்டத்தையும் வச்சு பிடிக்கலாம். உதெல்லாம் சொல்லி விளங்கிறேல்ல. அனுபவம், அனுபவத்தில வரவேணும்.”

கந்தப்பு தனது துவக்கை எடுத்து அதற்கு எண்ணைப் பூசி துடைத்து அதன் பெரலுக்குள் துணித்துண்டுகளை விட்டு இழுத்தபடியே பேசிக்கொண்டிருந்தான். அடிக்கடி துவக்கு குழலைத் தூக்கி வெயிலுக்கு நேராகப் பிடித்து, தன் ஒரு கண்ணை மூடி, மறு கண்ணால் குழலுக்குள் பார்த்துக் கொண்டான். இப்படியாக ஒரு அரைமணிநேரம் கடந்த பிறகு அந்தக்குழலினுள் வெயில்பட தகதகவென மின்னியது. அதன்பின் திருப்தி கொண்டவனாகத் துவக்கின் குழலோடு பாத்தியை பொருத்தி களக்கென்ற ஓசையெழ அதை அணைத்துப் பூட்டினான். பின்னர் தான்  பிஸ்கால் ராசதுரையிடம் அஞ்சு ரூபாவுக்கு வாங்கிய கோட்டைப்போட்டுக் கொண்டான். மேசைலாச்சியைத் துளாவி ஒரு குண்டுத் தோட்டா இரண்டு ‘எஸ்ஸெம்ஜி’ இரண்டு சன்னாத்தோட்டாக்கள் என்று பார்த்து எடுத்து, கோட்டின் கீழ் பைகளில் ஒன்றிலும் மற்றதில் தனது வெற்றிலை பாக்குஅடங்கிய கொட்டப்பெட்டியையும் போட்டான்.  போவதன் முன் நண்பர்களுடன் உரையாடியபடியே பாக்கியம் கொண்டு வந்த தேநீரைப் பருகியபின் ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக்கொண்டான். அவனது அவசரம் புரிந்தவர்களாக ஐயாத்துரை,

“சரி கந்தப்பு அப்ப நீ வெளிக்கிடு நானும் மரமேத்த போகோணும். பெடியள் வந்திருப்பாங்கள்” என்றபடி புறப்பட மற்றவர்களும் விடை பெற்றுக் கொண்டனர்.

கந்தப்பு வீதிப்படலையை எட்டியபோது லெச்சிமி படலையை திறந்து விட்டாள். அப்பு நானும் வரட்டே பிலவுக்குத்தானே போறாய். என்றாள்.

“ம்…….சரி போய்க் கொம்மாட்ட சொல்லிப் போட்டு வா. பிறகு காணயில்லயெண்டு தேடுவாள்” என்றான் கந்தப்பு. லெச்சிமி படலையடியில் நின்றவாறே,

“அம்மோய்…… நான் அப்புவோட பிலவுக்குப் போறேன்” என்று கூச்சலிட்டாள். அதை வாசலில் நின்ற திருப்பாத் தாய்க்கு கேட்கும்படி மறு ஒலிபரப்பு செய்தாள்.

அம்மா “டியேய் நில்லடி நில்லடி” என்று கூவும் முன் லெச்சிமியும் கந்தப்புவும் சந்தி திரும்பி மறைந்துவிட்டனர்.

மணியன் சொன்னபடி மரவள்ளித் தோட்டத்துக்குள் யானை புகுந்து தான் தின்ன வேண்டியதை தின்று விட்டு மீதியை தன் மகிழ்ச்சியை கொண்டாட வீசி மகிழ்ந்திருக்கிறது. ச்சைக் அநியாயம் அவன் மாரிமுத்து அப்பவும் றாத்தல் எட்டுச்சதமா எடுக்கிறன் எண்டு கேட்டவன். இல்லை விடு நான் மன்னாரான் வந்தா பத்திச்சேமா வித்துப் போடுவன் எண்டு குடாம விட்டது பிழை. பாவி பெருமூச்சு விட்டிருக்கிறான். இப்ப அவ வந்தியாப்போச்சு. வேலிக்கு வெளியால பக்கத்தில் காடு வெட்டிக் கொண்டிருந்த ராமநாதன் எட்டிப்பாத்தான்.

“என்னண்ணை ஆனை பூந்திட்டுது போல”

“ஓமப்பா வேசமோன்ர திண்டாலும் பரவாயில்லை. சும்மா புடுங்கி வீசியிருக்குப்பார்” என்றான். சலிப்பாக.

வேலிக்கம்பி இரண்டு புறமும் புகுந்தபாதையும் வெளியேறியபாதையும் அறுந்து கிடந்தது.  அதற்குத் துண்டுக்கம்பிகளைப் பொறுக்கி வந்து பொருத்து வைத்து, இழுத்துக் கட்டி அந்த இடத்துக்கு அலம்பல் வைத்துச் சிக்காராக அடைத்தான். லெச்சிமி முகம் முழுக்க வியர்வை வடிய வடிய அலம்பல்களை இழுத்து வந்து தகப்பனிடம் கொடுத்தாள்.

ஒரு தாயும் குட்டியுமாகவே வந்து போயிருந்தது யானை. முதல் முதலாக யானையின் காலடித் தடங்களைப் பார்த்த லெச்சிமி தான் பாடப் புத்தகத்தில் படித்த யானையைப்பார்த்த குருடர்களின் கதையைத் தகப்பனுக்கு சொல்லி மகிழ்ந்தாள். இந்த யானைகளோடு கூடவே வாழப் போகும் காலம் வரப்போவதை அவள் அப்போது அறியவில்லை.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 43 times, 1 visits today)