காடுலாவு காதை-பாகம் 13-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
பிருந்தாஜினி பிரபாகரன்

வெளிமாலில் வெள்ளைத்துணி விரித்து கிடத்தப்பட்டிருந்த குழந்தையை கந்தப்பு கிட்டப்போய் பார்த்தான். அவன் மௌனமாக திரும்பிய போது அவனது கண்ணிலிருந்து நீர் லெச்சிமியின் கையில் விழுந்தது. குழந்தை பிறந்தபோதே மிக அழகனாக இருந்தான். ஆரம்பத்தில் மூன்றும் பெண்ணாகப் பிறந்துவிடவே கந்தப்பு கவலையில் இருந்தான். நான்காவதாக ஒரு ஆண்குழந்தை. அது நான்கு நாட்களே உயிர் வாழ்ந்தது. அடுத்து வந்து பிறந்தவனே ராமன். அதன்பிறகு ஒரு பெண்குழந்தை ஒன்றரை வயதில் அதன் கடனும் முடிந்து  செத்துப்போயிற்று. அதன் பின் பிறந்தவன் லட்சுமணன் என்ற பெயரோடு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான். தொடந்து பிறந்தவள் சூப்பி. அடுத்தவன்தான் இவன். இவனுடைய வருகையில் மனம் மகிழ்ந்து வரிசை தப்பாமல் பரதன் என்ற பெயர் பெற்றான்.

கிணற்றில் மண்அள்ளிக் கொட்டும்போதெல்லாம் தன் மூன்று பையன்களும் வளர்ந்து விட்டால் தன் துன்பமெல்லாம் போய்விடும்என்று நினைத்தானே. ‘பாலன் பஞ்சம் பத்துவரியம்’ அங்கால அதுவும் ஒரு தடி கொண்டு மாடுசாய்க்க வந்திடும். நினைக்க நினைக்க கந்தப்புவின் தொண்டைக்குழிக்குள் பந்து போல எதுவோ திரண்டு அடைத்தது. ஒரு பக்கீஸ் பெட்டியை உடைத்து ஒரு சின்ன சவப்பெட்டியை தயார் செய்தான். பெட்டி நிறைவடைந்தபோது தன் புறங்கையால் கண்ணை துடைத்துவிட்டு அதன்மீது வெள்ளை பேப்பரை ஒட்டினான். மூன்று மணிக்கெல்லாம் அவன் பிள்ளையை எடுத்துக்கொண்டு சுடலைக்கு நடந்தான் பெருமாள். மௌனமாக ஊரார் பின் தொடர்ந்தனர்.

பாக்கியம் பெருங்குரலெடுத்து அழுதாள். லெச்சிமியும்கூட அழுது கொண்டிருந்தாள். அவள்தானே அவனின் செவிலித்தாய். ஏப்பொழுதும் மடியில் கிடக்கும் பரதன் இனி இல்லை. சாணைத்துண்டு கழுவவும் இரவில் எழும்பி தொட்டிலாட்டவும் இனி பரதன் இல்லை. அவனுடைய தங்க நிறத்தில் மின்னும் அழகும் சிரிப்பும் இனி இல்லை. இப்போது மாமியார் பொன்னிப்பெத்தா,

“ம்…ம்… காணும் அழாத. அதுகளும் பட்ட கடன வாங்கத்தான் வந்ததுகள். கடனும் முடிய புறப்பட்டிட்டுதுகள். ம்..இன்னும் வயசிருக்கு,  திரும்பவும் வந்து பிறந்தாலும் பிறப்பான். கண்ணைத்துடை” என்றவள் வாயை மூடுமுன்,

“கிழடி வாய மூடுறியே………. சாகக் குடுத்தவளுக்கு வலி இருக்குந்தானே, அவள் ஆற அமர இருந்து அழுது ஆத்தட்டும் விடு”. ஏன்றாள் மூக்காயி.

செத்துப்போனது குழந்தைதான் என்றாலும் இரவு இரண்டு மூன்று பேர்வந்து ஆறுதலாக பேசிக்கொண்டிருந்துவிட்டு போனார்கள்.

மறுநாட்காலை, தன் நான்கு பவுண் பூட்டுக்காப்பைக் கொண்டுவந்து கந்தப்புவிடம் கொடுத்தாள் பாக்கியம். வவுனியாவில் அடைவு வைக்கக்கூடிய கடை தம்பிஐயா கடைதான். அவர் நெழுக்குளத்தில் இருந்தார் எட்டுமணிக்கு வந்து கடை திறந்திடுவார். கந்தப்பு வேட்டியைக் கட்டிக்கொண்டு சால்வையை தோளில் போட்டுக்கொண்டான். அவன் மட்டுமல்ல அந்த கிராமத்தில் இன்னும் பலர் மேலே சட்டை போடப் பழகவில்லை.

தம்பிஐயா நகையை புரட்டிப் பார்த்துவிட்டு ‘நூற்றி இருவது ரூவாத்தரலாம். இப்ப பவுணும் விலை இறங்கீட்டுது தெரியுந்தானே. இதே அதிகந்தான’; என்றார்.

‘என்ன செய்யிறது ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’வேற அடைவு கடை இல்லையே. கந்தப்பு மௌனமாக நின்றான். தம்பிஐயா நூற்றி இருபது ரூவாக் காசை மேசையில் போட்டவர் ஒரு துண்டை எழுதி ஒப்பம் வாங்கிக் கொண்டார். காபன்தாள் வைத்து எழுதிய ஒரு பாதியை கந்தப்புவிடம் கொடுத்தார். பணத்தை அப்படியே கொண்டுவந்து பாக்கியத்திடம் கொடுத்தான். இரண்டாம் நாள் குழந்தையை புதைத்த இடத்திற்கு பாலூற்றும் சடங்கை செய்தார்கள். மூன்றாம் நாள் கிணற்றில் இறங்கினான். ஒரு மாத உழைப்பில் பன்னிரண்டு முழம் இறங்கியிருந்தது. கடு வைரம் எனவே பிள்ளைக்கிணறு வகிரத் தொடங்கினான். என்றாலும் சுற்றுக்கரையின் படியிலேயே மண்ணை சுமந்து கொண்டு ஏறி இறங்கினான். இரண்டு நாட்களாக மனக்கிலேசமின்றி வேலை செய்தான். இடையிடையே செத்துப்பொன குழந்தை நினைவுக்கு வந்தாலும்,

“பாவம் அதுகும் பிறந்தகாலம் முதலே நோயில அழுந்திக் கிடந்தது. இனியாகிலும் எங்கயும் நல்ல பிறப்பு பிறக்கட்டும்” என்று தேறிக் கொண்டான்.

குழந்தை செத்த ஏழாம் நாள் கிணற்றின் இறுக்கமான மண்ணில் பிக்கானை போட்டு நெம்ப போளைக்கற்கள் உருளத் தொடங்கின.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

 

 

 

 

 

 

 

 

(Visited 94 times, 1 visits today)