காடுலாவு காதை -பாகம் 23-தமிழ்க்கவி

இரவு முழுதும் அயலவர்கள் உறங்காமல் விழித்திருந்தனர். இதை இழவுகாத்தல் என்பார்கள்.

“அப்பு ஏன் ஆரும் செத்தா இப்பிடி முழிசிக்கொண்டு இருக்கினம்? ஆம்பிளையள்’ பந்தலுக்க காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.”

“அவை முழிசிக்கொண்டிருக்கேல்ல முழிச்சுக்கொண்டிருக்கினம்.”

தமிழ்க்கவி“இல்ல அப்பு. நான் பாத்தனான். செல்லம்மாக்கா வீட்டுக்கு பிறகால ஒண்டுக்கிருக்கப்போக, ஆரெண்டாலும் கூட வாறியளோ எண்டு கேக்க, நானும் நானும் எண்டு நாலைஞ்சு பேர் போகினம். அப்ப வள்ளிப்பிள்ளையக்கா..எனக்கு அப்பவே வந்தது. பயத்தில அடக்கிக் கொண்டிருந்த நான் எண்டவா, அப்ப பயந்தானே?”

“அடி போடி, உயிரோட இருக்கேக்க கைகால் எல்லாம் அசைக்க ஏலயுக்கயே ஒண்டும் செய்யேலாத அப்பாத்தை, இப்ப செத்துக் கிடக்கிறா. இப்ப என்ன செய்யேலும். சனத்துக்கு பயம். அதில்ல வந்து செத்த உடல்லயிருந்து கெட்ட மணம் வருமெல்லோ, நாய் நரியள் வந்து பிணத்தை இழுத்துக் கொண்டு போயிடும். அதுக்காகத்தான் இந்த காவல். பின்ன பேய்பிசாசெண்டதெல்லாம் சும்மா” லெச்சிமிக்கு திருப்திதான்.

அதிகாலையிலேயே மினாசி பறையடிக்க வந்துவிட்டான். பறையொலி கேட்கக் கேட்க ஊரவர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். படலையடியில் நின்ற பூவரசு மரத்தடியில் ஒரு சாக்குப்போட்டு அவர்களை உட்கார வைததிருந்;தார்கள். ஆட்கள் தெருவில் வருவதை கண்டதுமே பறையை ஒலிக்க தொடங்கி அவர்கள் அழுது கொண்டிருக்க நிறுத்திவிடுவார்.

பரியாரி வாய்க்கரிசி போடவும் பந்தம் சுற்றவும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, வீட்டின் பின்புறம் சென்றான். அவனே பின்னர் பன்னாங்கும் பின்ன வேண்டும். கந்தப்பு பெரிய பக்கீஸ் பெட்டியொன்றை வாங்கி வைத்திருந்தான். இப்போது அதைப் பிரித்து ஒரு சவப் பெட்டியை தயார் செய்தான். பெட்டி தயாரானதும் சேனாதி, மார்கண்டு, கதிர வேலு எல்லோருமாக அதன்மீது வெள்ளை ரிசியூஸ் பேப்பரை ஒட்ட ஆயத்தம் செய்தனர். பாப்பாத்தியும் ஞானமணியும் கூப்பன் மாவை சுடுதண்ணியை கொதிக்க வைத்து அதில் கொட்டிக்கிளறி பசை தயாரித்து அவர்களுக்கு கொண்டு வந்து கொடுத்தனர். வெள்ளைப் கடதாசிகளை குஞ்சம் குஞ்சமாக வெட்டி அதன் ஓரங்களை அழகுபடுத்திய பின்னர் மினுங்கல் கடதாசியில், பூக்கள் நட்சத்திர வடிவங்கள் என வெட்டி வெட்டி இடையிடையே ஒட்டி அதை பூர்த்தி செய்தனர். அதிகாலையில் ஒரு கமுக மரத்தை தறித்து அதை பிளந்து பாடை கட்டும் வேலையில் சில ஆண்கள் ஈடு பட்டனர். சின்னத்தம்பி வாசலில் நின்று வருபவர்களுள் ஆணாக இருந்தால் ஒரு சுருட்டை கையில் கொடுத்து வரவேற்று மாமர நிழலில் கோண்டுபோய் விட்டான். ஆண்கள் அங்கே குழுமி இருந்தார்கள்.

பெண்களில் வள்ளி நவமணி புளொறா ஆகியோர் வரும் பெண்களை பந்தலிலேயே எதிர் கொண்டு நின்நிலையில் கட்டியழுது பின்னர் அவர்களை சவம் கிடத்தப்பட்ட இடத்துக்கு கொண்டுபோய் விட, அங்கே உறவுக்காரப் பெண்களுடன் உட்கார்ந்து குந்தியிருந்து அழுதார்கள். பெரிய வட்டமாக அவர்கள் மெல்லிய  ஆட்டத்துடன் ஒப்பாரி சொல்லி அழுவது லெச்சிமிக்கு மட்டுமல்ல அவளையொத்த பெண்பிள்ளைகளை கவர்ந்தது. அநேகமாக அடுத்த வாரம் அவர்களுடைய கூட்டாஞ்சோறு விளையாட்டு மாறி செத்தவீடு செய்து விளையாடினாலும் ஆச்சரியமில்லை. அழுது ஆறிய பெண்களுக்கு வெற்றிலைத்தட்டம் கொண்டு வந்து வைத்தார்கள். தட்டத்தில் வெற்றிலையை கவிழ்த்து வைத்திருந்தார்கள். ஆண்கள் இருக்குமிடத்தில் சுருட்டு பீடி தீப்பெட்டி என்பவை இந்த தட்டத்தில் வைத்திருந்தனர். இந்த தட்டங்கள் வைப்பதற்கென நேற்றிரவே இருவர் நியமிக்கப்பட்டு விட்டனர்.

பாடை கட்டி முடிந்ததும் சடங்குகள் ஆரம்பமாயின. பிணத்துக்கு உரித்துக்காரர்கள் அரப்பெண்ணை வைத்தார்கள். பின்னர் மூன்று குடங்களில் எடுத்து வரப்பட்ட நீரில் பிணத்தை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்தார்கள். பெண்கள் சந்தனத்தை அரைத்து வில்லைகளாக தட்டி பிணத்தின் கண்களில் அப்பினார்கள். பிணத்தை பெட்டியில் வைத்து பந்தலுக்கு கொண்டு வந்தனர். பேரப்பிள்ளைகள் பந்தம் பிடிக்க, வாழைத்தடலில் கற்பூரம் கொழுத்தி பிணத்தை சுற்றி எரியவிட்டார்கள். ராமலிங்கம் அப்பா, தேவாரம் திருவாசகம் என ஐம்புராணம் பாடினார். தேவாரம் பாடும் போது யாரும் அழவில்லை. பாடிமுடிந்ததும் அழுகை தொடர, பெண்களும் பிள்ளைகளும் வாய்க்கரிசி போட்டார்கள். பிரேதப் பெட்டியை மூட அழுகையோலம் உரத்தது. அதற்கேற்றாற்போல பறையும் விறுவிறுத்தது.

பெட்டியை பாடைக்கு கொண்டு சென்று வைத்தனர். பெண்கள் பாடையை சுற்றி மாரடித்து அழுதார்கள் பாடை வேலியைப்பிரித்து வெளியே தூக்கிச் சென்று தோளுக்கு மாற்றினார்கள். மினாசி சன்னதம் வந்தது போல மேளத்தை இறுக்க அடிக்க, பிணம் சுமந்தவர்கள் சுடலையை நோக்கி திரும்ப, சின்னத்தம்பி புதுப்பானையில் கொள்ளியொன்றை வைத்து தோளில் எடுத்துக்கொண்டு முன்னேவர, இரண்டு கட்டாடிகள் ஓடிப்போய் ஒரு வெள்ளை வேட்டியை இரு கம்புகளில் கட்டி  மேலே பிடித்தபடி நடந்தார்கள். நிலபாவாடை விரிக்க மூன்று கட்டாடிமார் ஓடியோடி பின்னுள்ளதை எடுத்து முன்னே விரிக்க பாடை நகர்ந்தது.  கீழே நிலத்தில் வெள்ளை வேட்டியையும் விரித்தான்.

“அப்பு இதென்ன சுடலைக்கு போறவரைக்கும் இப்பிடி விரிக்கிறதே”. லெச்சிமியுடன் மலரும் கேட்டாள்.

“இந்த கொடி நிலபாவாடைவிரிப்பு எல்லாம் மாப்பாணமுதலி பரம்பரைக்கு கைலைவன்னிய ராசனால வழங்கப்பட்டது.” என்ற கந்தப்புவை லெச்சிமி ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 82 times, 1 visits today)